articles

img

அரசின் அலட்சியப் போக்கும் வறுத்தெடுக்கும் பட்ஜெட்டும்....

அரசின் அலட்சியப் போக்கால் எத்திசை திரும்பினும் ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல், பெருந்திரள் முறையீடு, காத்திருப்பு, முற்றுகைப் போராட்டம் என ஊழியர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல்லாண்டு காலமாக கோரிக்கைகளை அரசின் முன்வைத்தும், அவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையைத் தீர்க்காததே இதற்கு முன்முதல் காரணம். இப்படி தமிழகத்தைமுற்றிலும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டு, தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் தமிழக முதல்வர் ஊர் ஊராக கர்ஜனை செய்து கொண்டு வருகின்றார்.

சிக்கலாக்கும் அலட்சியப்போக்கு
பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தி வருகின்றது. இப்போராட்டம் அரசு ஊழியர் இயக்கத்தில் மாறுதலான ஒன்று. மறியலை தொடர்ந்து இரவு பகல் என சளைக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். காவலர்கள் அவர்களை 2ஆம் தேதி கைது செய்து வைக்கப்பட்ட மண்டபத்திலிருந்து பல மாவட்டங்களில் வெளியேற்றி விடுகின்றார்கள். அவர்கள் கடுமையான குளிருக்கும், கொசுக்கடிக்கும் மதியில் வீதியில் மறியலைதொடர்கின்றனர். ஆனாலும் தமிழக முதல்வரின் அலட்சியப் போக்கு சிக்கலாக்குகின்றது.தமிழக அமைச்சர் பேருக்கு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சிறை நிரப்பும் போராட்டத்தை முடித்துக் கொண்டு, 19.02.21 அன்று மாநிலமெங்கும் உள்ள ஊழியர்களை திரட்டி,

சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியான அரசு ஊழியர் - ஆசிரியர்களின் போராட்டத்திற்கு உழைப்பாளி மக்களின் இயக்கங்கள் எப்போதும் போல் இப்போதும் ஆதரவு நல்க வேண்டும்.8.2.21ஆம் தேதியிலிருந்து ஜாக்டோ - ஜியோ 72 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கியது. தமிழகஅரசின் காவல்துறை பந்தலை அகற்றி கைது செய்கின்றது. ஆனாலும் போராட்டம் தொடர்கின்றது. தோழர்கள் செல்வம், மோசஸ், சேகர் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் 72 மணி நேரம்தொடர் உண்ணாவிரதம் கைது, விடுதலை, கைது என நடைபெற்றது. தமிழக ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அரசு ஊழியர், ஓய்வூதியர் கோரிக்கைகள் பற்றி மௌனமாக இருக்கிறது.

ஏற்புடையதல்ல
ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்குகளை வாபஸ்வாங்கி முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் போராடும் அரசு ஊழியர்-ஆசிரியர் அமைப்புகளை அழைத்துப் பேசாமல், போராடாத சங்கத்தின் பேரில் அரசாணை வெளியிடுவது ஏற்கத்தக்கதல்ல. அதே போன்ற அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதும்ஏற்புடையதல்ல.விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். தள்ளுபடிசெய்யப்படும் தொகையினை கூட்டுறவு வங்கிகளுக்குவழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இது ஒருபுறம் இருக்க, பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி அரசின் 8வது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் இடம் பெற்றுள்ள அனைத்தும் பாதிப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது. மாறாககார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் சாதகமாக உள்ளது. இரு மாதங்களுக்கு மேலாக போராடி வரும்விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வேளாண்மைச் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் ரத்து செய்யவில்லை. விவசாயச் சட்டங்களை நியாயப்படுத்த 8 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவழிக்கும் மத்திய அரசு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பது கண்டிக்கத்தக்கது.

கழுத்தை நெரிக்கும் முயற்சி
ஐடிபிஐ வங்கி தனியார்மயமாகப் போகிறது. அதேபோன்று தேசியமயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகள் தனியார்மயமாகவுள்ளன. அரசுக்குச் சொந்தமான நான்கு பொது காப்பீட்டு அரசு நிறுவனங்களில் ஒன்று தனியார்மயமாகிறது.ரூ.5 கோடி மூலதனத்தில் தேசியமயமாக்கப்பட்ட எல்ஐசியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.32 லட்சம் கோடி.ஐந்தாண்டு திட்டங்களுக்கு, ரோடு போட, குடிநீருக்கு என பல லட்சம் கோடியை அரசுக்கு வழங்குகிறது. ரூ. 5 கோடி மூலதனத்திற்கு டிவிடெண்ட் ஆக பலஆயிரம்  கோடி வருடந்தோறும் அரசுக்கு வழங்குகின்றது. உலகிலேயே காப்பீடு முதிர்வு பெற்றவுடன் பயனாளிகளுக்கு உரிய பணத்தை வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. இந்த பொன் முட்டையிடும் வாத்தை கழுத்தை நெரிக்க ஏற்கெனவே 49 சதவிகிதம் தனியாருக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதனை தற்போது 74 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார்கள். இப்படி தனியாருக்கு தாரைவார்த்தால் அந்த காப்பீடு நிறுவனம் மக்களுக்காக ஒரு ரூபாயாவது அளிக்குமா?

அது மட்டுமின்றி பிபிசிஎல், ஏர் இந்தியா, ஷிப்பிங்கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, பிஇஎம்எல் என அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு திறந்துவிடுகின்றது இந்த பட்ஜெட்.இந்த பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூ.63246 கோடியும், சாலை விரிவாக்கத்திற்காக ரூ. 1.3லட்சம் கோடியும் ஒதுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் மாநிலத் தேர்தலை முன் வைத்தே செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. 

பைத்தியக்காரத்தனம்
மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இது எவ்வளவு பெரிய தீங்கை அளித்துள்ளது என்பதை வரலாறு கூறும். ஒடிசாவிலும், மகாராஷ்டிரத்திலும் மின் விநியோகம் தனியாருக்கு அளிக்கப்பட்டது. பெரும் புயலால் ஒடிசா கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அத்தனை மின் கம்பங்களும் சாய்ந்து, பல மாதங்கள் அம்மாநிலத்தில் மின்சாரம் இல்லை. மின் விநியோகம் செய்யும்தனியார் நிறுவனம் பழுது பார்க்க மறுத்துவிட்டது. ஒடிசாவின் நிலைதான் மராட்டியத்திலும். அப்போது தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மின் ஊழியர்களின் உதவியினால் சில நாட்களிலேயே சீராக்கப்பட்டது. இதனை கணக்கில் எடுக்காத இந்த பட்ஜெட் மீண்டும் தனியாருக்கு மின் விநியோகத்தை தருவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்?

சென்னையில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது எதற்காக? சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு கடலை தானமாக்கிடவே இந்த ஏற்பாடு. இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில் 2291 ஏக்கர் நிலம் மக்களுக்கானது. 1515 ஏக்கர் டிட்கோவிற்கானது. இத்துடன் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் அதானிக்காக தானம் செய்ய உள்ளனர். இதன் மூலம் இப்பகுதியின் மீன் வளம் சீரழியும். மீனவர் வாழ்க்கை
யை நாசப்படுத்த உள்ளனர்.

மிகப்பெரிய ஏமாற்றம்
மத்தியதர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி வரம்பு உயர்த்தாதது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதே நேரத்தில் 75 வயதுகடந்த ஓய்வூதியம் மற்றும் வட்டி மட்டுமே பெற்று வருபவர்கள் இனி ஆண்டு வருமான வரி அறிக்கை அளிக்க வேண்டாமாம். ஓய்வூதியம் பெறுபவர்களில் இவர்களின் எண்ணிக்கை 0.7 சதவிகிதம்கூட வராது.இப்படி ஏழை மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களை கசக்கிப் பிழியும் இந்த பட்ஜெட்,  இந்த கொரோனா காலத்தில் வருமானத்திலும், சொத்திலும் 35 சதவிகிதம் உயர்வு கண்டுள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கே பயன்படுகிறது. ஆக, விரல் விட்டு எண்ணக் கூடிய சில பெரும் முதலாளிகளுக்காகவே இந்த அரசு செயல்படுகின்றது. மற்றபடி விவசாயிகள், மத்தியதர வர்க்கத்தினர், தொழிலாளிகள், சிறு குறு தொழில் முனைவோர்கள் என அனைவரையும் அரசின் கொள்கை மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது.எனவே, அனைவரும் இணைந்த போராட்டத்தின் கூர்முனை அரசின் கொள்கையை நோக்கியே இருக்க ஒன்றுபடுவோம், போராடுவோம்!

கட்டுரையாளர் : நெ.இல.சீதரன்

;