articles

img

இந்து சமய அறநிலையத்துறையை வலுப்படுத்துவதே தீர்வு...

சமீபத்தில் உயர் நீதிமன்றம் 225 பக்க  தீர்ப்பில் 75உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஜூன் 7ஆம் தேதியன்று மேதகு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர். உடனடியாக இத்தீர்ப்பை இந்து சமய அறநிலையத்துறை  அமல்படுத்தி வருகின்றது. இப்போராட்டம் இன்று நேற்றல்ல கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலிருந்து 1863 இலேயேதொடங்கியது.நீதிக்கட்சி மிகத் துணிவாகச் செய்த செயல்களில் ஒன்று அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது
ஆகும். இன்று தமிழகத்தில் மட்டுமல்ல - இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்து அறநிலையத் துறைஇருப்பதற்குக் காரணமே - நீதிக்கட்சிதான்! இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு ஆலயங்களின் சொத்துகளுக்கும், மானியங்களுக்கும் சரியான பாதுகாப்பு இல்லை. சுயநலக்காரர்கள் கோவில்களின் சொத்துக்களைத் தம் வீட்டுச் சொத்து போல் கருதி பயன்படுத்தி வந்தார்கள். நாணயமான தர்ம கர்த்தாக்களினால் சுயநலமிகளின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே நல்லவர்களும், நாணயமானவர்களும்கூட கோவில்களின் சொத்தைச் சூறையாடும் சுயநலமிகளுக்கு அடங்கியே கிடந்தார்கள்.கோவில்களின் நகைகளுக்குச் சரியான கணக்கு இருக்காது. அவை ஒருசிலரின்  வீட்டுப் பொருளாகவே இருந்து வந்தன.

இவற்றைப் பற்றி எவரும் கேள்வி கேட்கக் கூடாத நிலையே இருந்து வந்தது. இதனை எதிர்த்து வழக்காட கோவில்களின் வருமானத்திலிருந்து பெருந்தொகைகள்  வழக்கறிஞர்க்கு வழங்கப்பட்டு வந்ததற்கான பதிவுகள் எல்லாம் இருந்தன. இவற்றிற்கெல்லாம் நீதிக்கட்சி முற்றுப்புள்ளி வைக்கவும், கோவில்களின் சொத்தை மீட்கவும் முடிவெடுத்தது. அதற்கென்று நீதிக்கட்சி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்கியது. அதுதான் அறநிலையப் பாதுகாப்புச் சட்டமாகும்.அறநிலையப் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புக்குரல் சிலரால் எழுப்பப்பட்டது.  அனைவரும் ஒன்றுபட்டு மதத்தில் தலையிடுவதாகக் கூக்குரல் எழுப்பினர். இத்தகைய எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பனகல் அரசர் மசோதாவை நிறைவேற்றுவதிலேயே கருத்தாக இருந்தார். சட்டமன்றத்தில் இம்மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தமக்குத் துணையாக என். கோபாலசாமி அய்யங்காரைச் சிறப்பு உறுப்பினராக பனகல்அரசர் நியமித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அவரது பதவியை “எக்ஸ்பர்ட் மெம்பர் “ என்று கூறினர். கோபாலசாமி அய்யங்கார் மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்தவர்.

பின்னாளில் இவர் பண்டித ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர். காஷ்மீரில் திவானாக இருந்தவர். தனியார் ரயில்வேக்களை இந்திய ரயில்வேக்களாக்கிய ஒருங்கிணைப்பாளர் இவர்.  அவரைத்தான் பனகல் அரசர் ‘எக்ஸ்பர்ட் மெம்பராக’ அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர நியமித்துக் கொண்டார்.இதுமட்டுமன்று மேலும் எல்லாரும் வியப்படையும் படியாகப் பனகல் அரசர் ஒரு செயலினைச் செய்தார். அறநிலையப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு துறை அமைக்கப்பட்டவுடன் அதன் முதல் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த டி. சதாசிவத்தை நியமனம் செய்தார்.   அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி பெருத்த சர்ச்சைக்கிடையே தான்நிறைவேற்றியது. நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில் (1920-23) கொண்டு வரப்பட்ட மசோதா, இரண்டாவது அமைச்சரவையில் (1923-1926)தான் நிறைவேற்றப்பட்டது. இதற்காக இரண்டு முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. 

முன்னதாக சென்னை மாகாண அரசு 1922 ஆம் ஆண்டு ஒரு மசோதாவைத் தயாரிக்கத் தனிக் குழுவை அமைத்தது.மசோதா விரைந்து தயாரிக்கப்பட்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டது. அம்மசோதாவில் குறிப்பாக அறக்கட்டளைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள நிதிகளைப் பொதுவான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அந்த மசோதா கருத்து வேறுபாடுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. மசோதா மீண்டும் திருத்தப்பட்டு புதிய வரைவு ஒன்றைத் தயாரித்தனர். இந்த வரைவில் மூன்று உள்ளடக்கங்கள் இருந்தன.

(1) கோவிலுக்குத் தேவைக்கு அதிகமாக வருவாய் உள்ளது என்பதை அறநிலையத்துறை முடிவு செய்யும்.(2) கோவிலின் அதிக நிதியை அதே கோவிலின் கையிருப்பாக வைக்க வேண்டும்.(3) அப்படி கையிருப்பாக வைத்திருக்கும் தொகையைஒத்த கருத்தை உருவாக்கிக் கொண்டு பிற செலவினங்களைச் செய்யப்பயன்படுத்திக் கொள்வது.இவற்றைச் செயல்படுத்துவதற்காக ஒரு மத்திய கட்டுப்பாட்டுக் குழுவையும் ஏற்படுத்துவது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்களுக்கு இடையேஇந்து அறநிலைய மசோதா 1923ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் இம்மசோதாவைச் சட்டமாக்கவொட்டாமல் வைஸ்ராயைக் கையெழுத்திட வேண்டாம் எனச் சமயச் சார்புடைய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. அதோடு இந்துமத ‘பிரதிநிதிகள்’ வைஸ்ராயைச் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். இதனால்வைஸ்ராய் மசோதாவில் கையெழுத்திடக் காலதாமதமாயிற்று.  இறுதியில் வைஸ்ராயால் கையெழுத்திடப்பட்டு 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறநிலையப் பாதுகாப்பு மசோதா சட்டமாயிற்று.  

தொடர்ந்து 1951இல் மற்றும் 1959 லும் சட்டம் திருத்தப்பட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்ததிலிருந்து உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு  முதல்வர் மு.க.ஸ்டாலின்   தலைமையில்  பொறுப்பேற்ற திலிருந்து பல்வேறு அறிவிப்புகளையும் களஆய்வுகளையும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகராக விரைவில் முதல்வர் நியமித்து அறிவிப்பார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். பெண்கள் விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக  நியமிப்போம் என்பதும் தேனாக இனிக்கும் செய்தியாகும். இதனை வரவேற்கும் அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44121 கோயில்களில் பல கோயில்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தவை. அவைகளில் பல கோவில்கள் உடனே திருப்பணி செய்ய வேண்டியுள்ளது. அவற்றின் பழமை மாறாமல் சீரமைக்க உடன் திட்டமிட வேண்டும். கேட்பாரற்று உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமக் கோயில்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கோயில் சொத்துகளை சென்னை போன்ற பல நகரங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து மீட்பதே முதல் கடமையாக இருக்கவேண்டும். சாதாரண ஏழை எளிய மக்கள், பல தலைமுறைகளாக கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் மீது கருணை காட்டவேண்டும். வாடகை உயர்த்தும்போது அவர்கள் குடும்ப வருவாயை கவனத்தில் கொண்டு தீர்மானிக்கவேண்டும். முன்தேதியிட்டு வசூல் செய்யும் முடிவை கைவிடவேண்டும். அறநிலைய சட்டப்பிரிவு 34ன் படி பல தலைமுறையாக கோவில் இடத்தில் தனது சொந்த உழைப்பில்  வீடு கட்டுகுடியிருப்பவர்களுக்கு அந்த இடங்களை அரசே நியாயமான விலையை தீர்மானித்து கிரையம் செய்து கொடுப்பது குறித்து பரிசீலனை செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 318ஐ செயல்படுத்திட சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

செல்வந்தர்கள் பல்வேறு பெயர்களில் ஆக்கிரமித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை தயவு தாட்சண்யமின்றி கைப்பற்றிடவேண்டும். ஏழைகள் குடியிருக்கும் இடங்களுக்கு சட்டப் பிரிவு 34 வழி தீர்வு காணவேண்டும். அதுவே மக்கள் நல அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது. இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ்  தொடர்ந்து அனைத்து ஆலயங்களையும் மடங்களையும் அதனை சார்ந்த கோயில்களையும் கொண்டுவருதல் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகும். ஜக்கி போன்ற சாமியார்கள் இந்த நேரத்தை   பயன்படுத்திக்கொண்டு இந்து ஆலயங்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள்.இந்து சமய அறநிலையச் சட்டத்தை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்கள். இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் வரை அத்துணை பேரும் இந்துக்களே. வேறு மதத்தினர் ஒருவர் கூட இல்லை. அப்படிஇருக்கும் பொழுது யாரிடமிருந்து ஆலயங்களை மீட்கப் போகிறார்கள்?

கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்து நீண்ட நெடியபோராட்டத்தை இத்துறை கண்டு வருகிறது. எனவே இத்துறையை செழுமைப்படுத்த வேண்டுமே தவிர இதற்கு மாற்று வழி ஏதும் இல்லை. எனவே அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற கூப்பாடுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் ஆலயத்தை அறநிலையத்துறை ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அரசு ஏற்று நடத்திய பிறகு நான்கு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தி ஆலயக் கணக்கில் கொண்டு வந்தது.அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தீட்சிதர்களின் வழக்கில் என்ன நிர்ப்பந்தமோ, துறையே சரியாகவழக்கை கையாளவில்லை. அதனால் மீண்டும் ஆலயம் தீட்சிதர் கையில் சேர்ந்தது. மீண்டும் அந்த ஆலயத்தை அறநிலையத்துறையின் ஆளுகைக்கு கொண்டுவர புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் : நெ.இல.சீதரன்

;