articles

img

சிங்காரவேலர் கனவு கண்ட சமதர்ம சமூகம்... பிப்.11. சிங்காரவேலர் நினைவு நாள்....

புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகளை ஆதரித்த தொடக்ககால முக்கியதலைவர்களில் ஒருவராக இருந்தவர் ம.சிங்காரவேலர். சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியவை. சிங்காரவேலர் கனவு கண்ட சமதர்ம சமூகத்தில்மக்களுக்கு என்ன நன்மைகள் இருக்குமென்பதைப் பற்றி அவர் மிகத் தெளிவாகப் பல கட்டுரைகளில் வெளியிட்டிருந்த கருத்துக்களின் சாராம்சம் இதோ:-

o சகலவிதப் பொருள்களிலும் லாபம் சம்பாதிக்கும் மனப்போக்கு சமதர்மத்தில் இல்லாமலிருக்கும். இந்த மனப்போக்கால் உழைத்தவனுக்கு ஒன்றுமில்லாமல், உழைக்காத சோம்பேறிகளுக்கு எல்லா லாபமும் கிடைக்கும் திட்டம் சமதர்மமில்லை.

o சிலரே, சகல பொருள்களையும் கைப்பற்றி,சொந்தமாக்கிக்கொள்ளும் இலட்சணமும் சமதர்மத்தில் இல்லாமல் இருக்கும்.

o விளையும் பொருள்களும், செய்யும் பொருள்களும், விளைவிக்கச் செய்யும் சமூகத்தாருக்கு, ஏற்றத்தாழ்வின்றி விநியோகம் செய்யப்படும் இலட்சணம் சமதர்மத்தில் விசேடமாக பொருந்தி உள்ளது.

o சமதர்ம சமூகத்தில், நிலத் தீர்வை வாங்கும்நிலச்சுவானும் குடிக்கூலி வாங்கும் சொந்தக்காரனும் இருக்கமாட்டார்கள். லாபம் சம்பாதிக்கும் வர்த்தகனும், வட்டி வாங்கும் வணிகனும் இருக்க மாட்டார்கள். அவசியமாக வாங்கவேண்டிய நிலத்தீர்வையும், குடிக்கூலியும், வீட்டு வாடகையையும் வர்த்தக லாபமும், கடனுக்கு வட்டியும், சகலவித லாபங்களும் பொதுமக்களுக்கே உரித்தாகி, பொதுமக்களுக்கே அவர்கள் உண்ணஉணவு, தங்க வீடு வாசல், அணியும் ஆடை, கற்கும்கல்வி முதலிய வாழ்விற்கு வேண்டிய அத்தியாவசியங்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.

o தற்கால சோம்பேறிகளாகிய நிலச்சுவானும், வர்த்தகனும், வணிகனும், வாடகை வாங்குவோனும், சமதர்ம சமூகத்தில் உழைத்து எல்லாவித சமதர்ம சுகபோகங்களைப் பெறுவார்கள்.

o  சமதர்ம சமூகத்தில் சொத்து வைத்திருக்கும் சாதியென்றும் சொத்து இல்லாத சாதியென்றும் இனவேற்றுமை இருக்காது. எஜமான் சாதியென்றும் வேலை செய்யும் சாதியென்றும், சமதர்மத்தில் கிடையாது. தற்கால உலகத்தில் இருக்கும் இரண்டு சாதியாகிய பொருளாளி, தொழிலாளி என்போர் இருக்கமாட்டார்கள். சமதர்மத்தில் ஒரே இனம்தான் இருக்கும். அதாவது உழைக்கும் இனம் ஒன்றுதான்.

o சமதர்மத்தில் ஒவ்வொருவனும் உழைப்பதுவே சமதர்மக் கொள்கையாகும்.

o “உழைக்காதவனுக்கு உணவில்லை” என்பதே சமதர்மக் கொள்கையாகும்.

o தற்காலத்தில் உழைப்பின்றிச் சோம்பேறிகளாக வாழ்ந்து வரும் சில மக்களுக்குச் சமதர்மத்தில் வாழ இடமே இல்லை.

o சமதர்மத்தில், சோம்பேறிகள் வாழவும் முடியாது.

“சமதர்ம உலகில் மனிதன் மேன்மேலும் தன்வாழ்வை உயர்த்திக்கொண்டே போவான். சதா உயர்ந்துகொண்டே போகும் வாழ்விற்குவேண்டிய பொருள்களை உண்டாக்க, எல்லோருக்கும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.இந்தச் சமதர்ம சமூகத்தில், இறந்து போனவர்களுக்கும், இறந்தவர்களுக்குச் சமமானவர்களுக்குமே ஒழிய, மற்ற உயிர் வாழும் எந்த மனிதர்க்கும் வேலையில்லாமலிராது. சமதர்ம சமூகத்தில், செய்துவரும் வேலையெல்லாம், சிலரின் உபயோகத்திற்கில்லாமல் அனைவருடைய உபயோகத்திற்கும் செய்துவரப்படுமாகையால், அதில் உழைப்பவன் ஒவ்வொருவனுக்கும் வேலை செய்து உழைக்க அவா மேலிட்டுவரும். சமதர்ம சமூகத்தில் ஒருவனுக்காகப் பலர் உழைக்க வேண்டிய அவசியமில்லாதபடியால் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த வேலையை அன்புடன் செய்து வருவான். 8,9,10 மணி நேரம் வேலை செய்யும் தற்கால வேலைகள் சமதர்ம சமூகத்தில் இருக்கவே இருக்காது. வாழ்விற்கு வேண்டிய பொருள்கள்யாவும் உலகிலுள்ள மக்கள் 4 மணி நேரம் உழைப்பதனாலேயே கிடைக்கக்கூடுமென, பொருளாதார விற்பன்னர்கள் ஒரு கணக்கெடுத்திருக்கின்றார்கள். உலகில் கிடைக்கக்கூடிய எல்லா அவசியசுக போகங்களை யாவரும் அனுபவிக்க வேண்டும்என்றாலும், மனிதருடைய 4 மணி நேர உழைப்பே போதுமென மதிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்தச் செல்வாக்கு சமதர்ம சமூகத்தில்தான் கிடைக்கும். மற்ற நேரங்களை எவ்விதம் கழிப்பதென்று கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை யாதெனில், மன உல்லாசம், திரேக உல்லாசம், பொது மக்கள் சேவையில் உல்லாசம், விஞ்ஞான ஆராய்ச்சியில் உல்லாசம் முதலிய சுகப் பேற்றை ஓய்வு நேரங்களில் யாவரும் அனுபவிக்கக் கூடும்... ...சமதர்ம திட்டத்தில் ஓய்வு நேரம் அதிகரிக்குமாகையால், சகலரும் உயர்தர வித்தைகளைக் கற்று வாழ்வை உயர்த்திக் கொள்ள அனுகூலமாகுமன்றோ!.... இது ஒன்றே உலகம் சுகம் உய்யப் போதுமானதாகும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள பொருளாதார வித்தியாசம் தொலைந்த அன்றுதான், பெண்கள் தங்கள் பிறப்புரிமைகளாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பெறுவார்கள். அந்தப் பொருளாதார வித்தியாசம் ஒழியும் வரை பெண்களின் அடிமைத்தனம் நீங்கவே நீங்காது. மற்ற முயற்சிகள் யாவும் காலப் போக்கே. ஆதலின், சமதர்ம சமூகம் ஒன்றில்தான் பெண்கள் ஆணுடன் சரிசமத்துவம் பெற முடியும்.சகலருக்கும் போதுமான சமத்துவ உணவு, ஆடை, வீடு கிடைக்க வேண்டுமானால் அவைசமதர்ம ஆட்சியில்தான் பெற முடியும். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஓய்வு நேரம்சமதர்மத்தில்தான் கிடைக்கும். சகலரும் உயர்தரக்கல்வியைப் பெற்று, மூட சாதி, மூட மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் அது சமதர்ம ஆட்சி மூலமாகத்தான் முடியும். பெண்கள் ஆணுடன் சமத்துவம் பெறவேண்டுமானால் சமதர்மத்தில்தான் அனுகூலப்படும். இனி வரும்சந்ததியாரை, பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும், நோயிலிருந்தும், அகால மரணத்திலிருந்தும் விடுவித்து, உலகை அழகு பெறச் செய்யவேண்டுமானால் அது சமதர்மத்தில்தான் கூடிவரும். நமக்குப் பின்னால் உலகம் முழுதும், துவேசமோகமற்று, சண்டையற்று, போரற்று, உலகமக்கள் அன்புடன் கூடி வாழ வேண்டுமானாலும், சமதர்ம ராஜ்யம் மூலமாகத்தான் முடியும். உலகம்இப்பேற்றைப் பெறத் தற்காலத்தில் நிலவிவரும்கொடிய பொருளாதார வித்தியாசத்தினை முற்றிலும்மாற்றி, சமதர்ம ராஜ்யத்தை உருவாக்குதல் வேண்டும். தற்காலக் கொடிய திட்டத்தை மாற்றும்வகையையும், சமதர்ம ஆட்சியினை அமைக்கும்வழியையும், இனி எடுத்துக்காட்டுவோம்”இப்படிப்பட்ட தெளிவான கருத்துக்களை அன்றைக்குத் தமிழகத்தில் மிக்க மனவுறுதியுடன் ஒருவர் வெளிப்படுத்தினாரென்றால் அவர் சிங்காரவேலர் மட்டுமே.

பிப்.11. சிங்காரவேலர் நினைவு நாள்

- பெரணமல்லூர் சேகரன்

;