குளோரின் தந்த அதிர்ச்சி!
அந்த அரசுப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் பரவசம் இளைஞர்,துடிப்பு மிக்கவர், தான் வாங்கும் ஊதியத்திற்கு வஞ்சகம் செய்யாமல் பணியாற்றுபவர். கருணை உள்ளம் கொண்டவர். அந்த உள்ளத்தினாலேயே ஏராளமான பொருளை இழந்திருக்கிறார். பெயருக்கு ஏற்றவாறு எப்போதும் பரவசத்தோடு காணப்படுவார். அதைவிட மிக முக்கியமான பண்பு ஒன்று இருந்தது. அதாவது வகுப்பறைக்குச் செல்லும்போது ஏதாவது ஒரு பொருளைக் கையில் எடுத்துச் செல்லாமல் இருக்க மாட்டார். ஒன்றும் இல்லை என்றால் போகும் வழியில் முளைத்திருக்கும் ஒரு செடியைப் பிடிங்கிச் சென்று,அதனுடைய பாகங்களைப் பற்றி மாணவர்களிடம் கேட்பார். கனிவாக நடந்து கொள்வார். மாணவர்களோடு ஒன்றியிருத்தல் அவரின் தனிப்பண்பு. அதுபோல அடிக்கடி மாணவர்களை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பலவகையான வேதியல் கலவைகளைச் செய்து காண்பிப்பவர்.
அன்றைக்கு குளோரின் வாயு தயாரிக்கும் சோதனையைச் செய்து காட்டவிருந்தார். வரிசையாக மாணவர்கள் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்குச் சென்றனர். முதலில் குளோரின் வாயுவை ஆய்வகத்தில் எப்படித் தயாரிப்பது என்பது குறித்து மாணவர்களிடம் விளக்க ஆரம்பித்தார். ”மாணவர்களே இன்று குளோரின் வாயுவை எப்படித் தயாரிப்பது என்பதைச் செயல்முறையில் செய்து பார்க்கப் போகிறோம்.”என்று சொல்லிவிட்டுத் தயாரிக்கத் தேவையானவற்றைச் சொன்னார். “ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மாங்கனீசு டை ஆக்சைடைச் சூடாக்கினால் குளோரின் வாயு வெளிப்படும். அல்லது, சோடியம் ஹைபோகுளோரைட் அல்லது ப்ளீச்சிங் பவுடருடன் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் சேர்க்கலாம். தொழிற்சாலையில், குளோரின் வாயுவை உப்புநீரின் (சோடியம் குளோரைடு கரைசல்) மின்னாற்பகுப்பு மூலம் தயாரிக்கிறார்கள்”என்று சொல்லிவிட்டுச் சோதனையைத் தொடங்கினார். முதலில் சோதனைக் குழாயை எடுத்து அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் அதில் மாங்கனீசு டை ஆக்சைடைக் கலந்து ஸ்பிரிட் விளக்கில் சூடாக்க ஆரம்பித்தார்.மாணவர்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஆர்வமாகக் கவனித்தனர். அப்போது ஒரு கட்டத்தில் சோதனைக் குழாயிலிருந்து குளோரின் வாயு வெளிப்பட்டது. மாணவர்களில் ஒருவன் ”சார்…அந்த வாயுவின் வாசனை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது” என்றான். உடனே அனைத்து மாணவர்களும் அவன் சொன்னதை ஆதரித்து “ஆமாம் சார், ஆமாம்..சார்” என்று சத்தமிட்டனர். அந்த நேரத்தில் எதையும் யோசிக்காமல் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்தார். ஆனால் ஒன்றை மட்டும் சொன்னார். ”அதிக நேரமோ, அதிகமாகவோ உள்ளே இழுக்கக் கூடாது. மூக்கருகில் கொண்டுபோய் லேசாக இழுக்க வேண்டுமென்று சொன்னார். அவ்வாறே அனைத்து மாணவர்களும் செய்தனர். அதில் ஒருவன் மட்டும் அதிகமாக குளோரின் வாயுவை மூக்கின் வழியாக உள்ளிழுத்து விட்டான். அப்படி இழுத்த சில நிமிட நேரத்தில் இரும ஆரம்பித்தான்.தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் மூச்சுத் திணற ஆரம்பித்தது.பயந்துபோன ஆசிரியர் உடனடியாக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர வைத்துப் பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவரிடம் நடந்ததை மறைக்காமல் அப்படியே சொன்னார். மருத்துவர் ஆசிரியரை உள்ளே அழைத்துச் சென்று “சார்..நீங்க அறிவியல் ஆசிரியர் தானே?குளோரினை மூக்கில் இழுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது கூட உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்க, ”டாக்டர் எனக்குத் தெரியும்.அதனால்தான் லேசாக மூக்கில் முகர்ந்துவிட்டு எடுத்துவிட வேண்டும் என்று சொன்னேன்.நான் பலமுறை லேசாக அவ்வாறு முகர்ந்திருக்கிறேன்.எந்த பக்க விளைவும் ஏற்பட்டதில்லை.அந்தத் துணிவில்தான் இதை அனுமதித்து விட்டேன்”என்றார். அதைக் கேட்ட மருத்துவர் “இதற்கென்று ஏதும் மருந்து இல்லை. இருந்தாலும் அவன் உளவியல் ரீதியில் இந்த நிலையில் இருந்து மீள்வான். அதனால் இருமல் மருந்தையும், ஒரு பி காம்ப்ளக்ஸ் ஊசியையும் போடுகிறேன். இருமல் நின்றுவிடும் அப்புறம் அழைத்துச் செல்லுங்கள்”என்று மருத்துவர் சொன்னதும்தான் ஆசிரியருக்கு மனதில் நிம்மதி பிறந்தது. மருத்துவரிடம் இருந்த இருமல் மருந்தில் இரண்டு மூடியை அவன் வாயில் ஊற்றிவிட்டார்.அடுத்து சொன்னது போலவே சத்து ஊசியை இடுப்பில் போட்டார். சிறிது நேரத்திலேயே இருமல் நின்றது.மருத்துவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவர்,எதிரே இருந்த தேநீர்க் கடையில் சூடாக இருந்த வடையில் இரண்டை வாங்கி அவனிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.சாப்பிட்டவுடன் இரண்டு தேநீரை வாங்கி அவனிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு பயந்துபோய் இருந்த அவர் ஒரு தேநீரைக் குடித்தார். அதற்குள் செய்தி பள்ளிக்கூடம் முழுவதும் பரவிவிட்டதுஅவரின் செயல்பாட்டால் மாணவர்களின் நன்மதிப்பைப் பெறிருந்ததைப் பொருத்துக் கொள்ள முடியாமல் அவர்மேல் காழ்ப்புணர்வில் இருந்த இன்னொரு அறிவியல் ஆசிரியர் நடேசனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி,அதுமட்டுமல்லாமல் அந்த வகுப்பு மாணவர்களிடம் போய் குளோரின் வாயுவை முகர்ந்தால் என்ன என்ன விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல ஆரம்பித்தார். “குளோரின் வாயுவை சுவாசிப்பதால் என்னன்ன தீமைகள் ஏற்படும் தெரியுமா? கண்களில் எரிச்சல்,வலியை ஏற்படுத்தும். மூக்கு தொண்டையில் எரிச்சல், வலி, இருமலை ஏற்படுத்தும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமல்ல மார்பு வலி ஏற்படலாம்.அதிக அளவு குளோரின் வாயுவை சுவாசித்தால் நுரையீரல்கூட பாதிக்கப்படலாம், மிக அதிக அளவு குளோரின் வாயுவை சுவாசித்தால், அது மரணத்தை விளைவிக்கலாம். குளோரின் வாயுவினால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி மருத்துவ உதவியை நாடுவதுதான் நல்லது” என்று சொல்லிவிட்டு, ”என்னமோ இவருதான் சிறந்த அறிவியல் ஆசிரியர்னு எல்லோரும் பேசிக்கிறாங்க இதுகூடத் தெரியலியே!”என்று சொல்லிவிட்டு வெளியே வர அதைக் கேட்டிருந்த மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு சிலர் இரும ஆரம்பிக்கிறார்கள், சிலர் கண் எரிகிறது என்கிறார்கள், தொண்டை எரிகிறது என்கிறார்கள், சிலர் நெஞ்சு வலிக்கிறது என்கிறார்கள். பள்ளிக்கூடமே அல்லோலப் படுகிறது. அப்போது அந்த முதல் மாணவனை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டிவிட்டு பள்ளிக்கு வந்தவருக்கு நிலைமையைப் பார்த்துப் பதறிவிட்டார்.எல்லா மாணவர்களையும் அருகில் அழைத்து”யாரும் பயப்படாதீங்க இவனுக்கு சரியாயிட்டுது.நீங்களும் வாங்க டாக்டரிடம் போய் இவனுக்குப் போட்ட ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.சரியாகிவிடும்” என்று சொல்லி அனைவரும் அதே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.அவரும் இருமல் மருந்தை எல்லோர் வாயிலும் ஊற்றிவிட்டு சத்து ஊசியைப் போட்டுவிட்டார். சிறிது நேரத்திலேயே அனைவரும் சரியாகிவிட்டார்கள்.மகிழ்ச்சியோடு பள்ளி திரும்பினார்கள்.மருத்துவரிடம் எவ்வளவு ஃபீஸ் கேட்டார். ஐயாயிரம் ரூபாய் என்றார்.” அவ்வளவு பணம் கையில் இல்லை பள்ளிக்கூடம் போய் வாங்கி வந்து கொடுக்கிறேன்”மருத்துவரும்” மெதுவ கொடுங்க ஒன்னும் அவசரமில்லை” என்று சொல்லி அனுப்பி வைத்தார். இவ்வளவு நடந்தும் மறுநாள் எந்த ஒரு பெற்றோரும் பள்ளிக்கு வந்து சண்டை போடவில்லை. காரணம் அந்த ஆசிரியரைப் பற்றி தன்னுடைய பிள்ளைகள் அளித்திருந்த நற்சான்றிதழே.