articles

img

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி கோரிக்கை சாசனம்....

ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ‘சமூக நீதி சாசனத்தை’ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான, சமூக நீதி கோரிக்கை சாசனம் வெளியிடும் நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் நினைவு நாளான பிப்ரவரி 11 (வியாழனன்று) சென்னையில் நடைபெற்றது.
தலித் மக்களின் உரிமைகள், வாழ்நிலை மேம்பாடு, சமூக நீதி ஆகியன குறித்த பல்வேறு கோரிக்கைகள் 16 பக்க சிறு நூலாக சாசனம் தொகுக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை - தீண்டாமை ஒழிப்பு, கல்வி வேலை வாய்ப்பு, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்டல், சென்னையில் குடிசை மக்களின் வெளியேற்றத்தை தடுத்தல், நிலச் சீர்திருத்தங்கள், பஞ்சமி நில மீட்பு, பட்டா, பழங்குடியினர் பிரச்சனைகள், சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு, எஸ்.சி.,
எஸ்.டி துணைத் திட்டங்கள், கல்வி உதவித் தொகை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், சமத்துவ மயானம், தலித் தொழில் முனைவோர், தொகுப்பு வீடுகள், கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், பொது விநியோகம், தலித் கிறிஸ்தவர், புதிரை வண்ணார் பிரச்சனைகள், கிராமப் பொதுச் சொத்துக்கள், வாழிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள், பள்ளிகளில் தீண்டாமை, கந்து வட்டிக் கொடுமை ஆணையங்களை ஆற்றல்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

                                                         *********************

அரசியல் கட்சிகளுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்

வன்கொடுமைகளின் நாடு

நிகழ்வை தொடங்கி வைத்து பேசியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், “தலித் மக்களை சாதியாக ஒதுக்கிவிட்டு கட்சிகள் அரசியல் நடத்த முடியாத அளவிற்கு அந்த மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டம் போன்று தலித் மக்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் போராடிபெற்றவை. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதால் இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கு மத்திய ஆட்சியாளர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களால் கூறப்படும் நவீன இந்தியா, வன்கொடுமைகளின் நாடாக உள்ளது. இவற்றிற் கெதிரான போராட்டக் களத்தில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களோடு கம்யூனிஸ்ட்டுகள் இருப்போம்” என்றார்.

மக்கள் மன்றம் அதிர...
முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கோரிக்கை சாசனத்தை வெளியிட்டு பேசுகையில், “ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சந்தித்து கோரிக்கை சாசனத்தைஅளித்து அவர்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்துவோம். தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்து அமைய உள்ளஅரசு இந்த சாசனத்தை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டுமென்றால், மக்கள் மன்றம் அதிர வேண்டும். அதற்கான ஆயுதமாக இந்த சாசனம் இருக்கிறது” என்றார்.

கொலிஜியம் வரை...
“சிங்காரவேலர், அயோத்திதாசர், பெரியார் போன்றோரின் சிந்தனைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் காரணமாகவே சமூக நீதியில் ஓரளவு தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக இந்த சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டுள்ளது” என்றுமுதல் பிரதியை பெற்றுக் கொண்ட திரைப்படஇயக்குநர் ராஜூ முருகன் கூறினார்.“தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள்வியாபார உத்தியாகவும், தேர்தலை பாஜக, மாட்டு வியாபாரமாகவும் மாற்றியுள்ளன. இதிலிருந்து மாறுபட்டு இந்த சமூக நீதி சாசனம்வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி கொலிஜியம் வரை மநுநீதி ஆதிக்கம் செலுத்துகிறது. சாதியஒடுக்குமுறை நடைபெறும் இடங்களில் எல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் நிற்கிறது. தற்போதைக்கு இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள அணி ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். அதிகார அமைப்புகளில் இடதுசாரிகள் அமர்ந்து தீவிரமாக செயலாற்றும் காலம்வரும்” என்றும் அவர் கூறினார்.

சமூக நீதி என்பது...

தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், “இயற்கை நீதிசிதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இயற்கைநீதிக்கும் சமநீதிக்கும் இடையே உள்ள சமூகநீதியை வலியுறுத்துகிறோம். சமூக நீதி என்பதுஇடஒதுக்கீடு மட்டுமல்ல. இயற்கை வளம், பொதுச்சொத்துக்கள், தொழில், வர்த்தகம் என அனைத்திலும் பின்பற்ற வேண்டும்.இந்தியாவில் 47 லட்சம் சாதிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் உள்ளன. 97 சதவீத திருமணங்கள் சொந்த சாதிக்குள்தான் நடக்கின் றன. சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரின் பட்டியலில் தமிழகம் கடைசிக்கு முந்தையஇடத்தில் உள்ளது. கண்ணியமாக பிணத்தைக்கூட அடக்கம் செய்ய முடியாத நிலையில்சாதிய கட்டமைப்பு உள்ளது. இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட நேரடி நியமனம் உள்ளிட்ட பல்
வேறு சதிகளை செய்கின்றனர்” என்றார்.

                                                         *********************

நிர்ப்பந்தத்தை உருவாக்கும் சாசனம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  நிறைவுரையாற்றுகையில், “தமிழகத்தில் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள தலித், பழங்குடியின மக்களின் அரசியல், சமூக,பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்வகையில் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்தி, திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். புதிதாக பதவியேற்கும் அரசு சாசனத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த சாசனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டாலும், போராட்டம் இல்லாமல் அமலாகாது என்பதே கடந்த கால அனுபவம்” என்றார்.“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தால் 120 நாட்களில் தீர்வுகாண வேண்டும். ஆனால் 20 வருடங்கள் கூட வழக்கைநடத்துகிற நிலைதான் உள்ளது. அண்மையில் ஒரு ஆணவக்கொலையில் 15 வருடங்களுக்கு பிறகே வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்வெளியிடப்படும் இந்த கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். களப்போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, கருத்தியல் போராட்டங்களுக்கு படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் பெரும்பங்காற்ற வேண்டும்” என்றார்.

;