articles

img

ஒடுக்கப்பட்ட மக்களின் கனவுகளை சிதைக்கும் நீட்....

உயர்கல்வியில் பெரும் பாகுபாடையும், ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற வகையில் நான்கு ஆண்டுகளாக அமலாகி வந்துள்ள நீட் நுழைவுத் தேர்வின் தாக்கத்தை பரிசீலிப்பதற்காகவும் உரிய தீர்வுகளை உருவாக்குவதற்கும் தமிழக அரசால் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதும், ஒரு மாத காலத்திற்குள்அதன் அறிக்கை வெளியிடப்படும் என்ற வகையில் பணிகள் உடன் துவங்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது. 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாதிய ஒடுக்குமுறை, வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழகம் முழுக்க களத்தில் உறுதியாக செயலாற்றி வரும் அமைப்பு.நீட் மீதான எங்கள் கருத்துகள் இவை.நீட் தேர்வின் பாதிப்பால், பயத்தால் மாணவர்கள் தற்கொலைக்கு இரையாவது 2020 வரை தொடர்ந்து வருகிறது. மதுரையில் 2020 ல் உயிரை நீத்த ஒரு மாணவியின் தற்கொலைக் குறிப்பு “நான் மிக நன்றாக படித்தேன். கடைசி மாக் டெஸ்டில் (MOCK TEST) 590+ மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் அப்பா, நான் இந்த தேர்வை நினைத்து அச்சப்படுகிறேன்”  என்று எழுதப்பட்டிருந்ததாக ஊடக செய்திகளில் கண்டோம். இது ஒரு மாணவரின் உணர்வு மட்டுமல்ல. மிகுந்த சிரமப்பட்டு, நன்கு படித்து மேல் நிலைக் கல்வியை முடிக்கும்மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை இந்த மதிப்பெண்கள் தீர்மானிக்காது; இன்னொரு தேர்வை எதிர்நோக்க வேண்டுமென்ற சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதே காரணம். அதிலும் குறிப்பாக அடித்தட்டு குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் அவர்களுடைய வாழ்க்கை சூழலில் எவ்வளவு அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்கிற சமூக அறிவியல் நோக்கும், உளவியல் அணுகுமுறையும் தேவை எனக் கருதுகிறோம். 

தமிழகம் பெண் கல்வியில், சமூக நீதியில் முன்னேற்றம்கண்ட மாநிலம் என்பதால் இயல்பாகவே கனவுகளும் எதிர்பார்ப்புகளுடன் குழந்தைகள் வளர்கிறார்கள். நீட் அவர்களின் கனவுகளை சிதைப்பதாக உணரும் போதும், பாதிக்கப்படும் போதும் இத்தகைய முடிவுகளுக்கு போய் விடுகிறார்கள். தற்கொலைகள் மட்டுமின்றி மன அழுத்தத்திற்கும் பலர் ஆளாகிறார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது.இரண்டாவது நீட் முறைமை பெரும் அசமத்துவப் போட்டியை  உருவாக்குகிறது. நாடு முழுக்க ஒரே தேர்வு என்பது எப்படி வளர்ச்சியில், சமூக முன்னேற்றத்தில், பொருளாதார நிலைமைகளில், கல்விப் பாடத் திட்ட முறைமையில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு தேசத்தில் பொருத்தமாக இருக்க முடியும்? ஒரு சமதள ஆடுகளம் இல்லாத சூழலில் ஒற்றைத் தேர்வு முறை என்பது ஒவ்வொரு மட்டத்திலும் பாரபட்சங்களுக்கே வழிவகுக்கும் என்பதே உண்மை. 4 ஆண்டு அனுபவமும் நமக்கு உணர்த்துவது அதைத்தான். 

நீட் தேர்வு என்பது கல்வி வணிக மயத்தின் நீட்சியாக உள்ளது. இந்தியத் தொழிலதிபர் அமைப்புகளில் ஒன்றான அசோசெம்  (Assochem) ஆய்வு (ஆதாரம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் 05.11.2020) ஒன்று நீட் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் வருமானம் ஒரு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் கோடிகளை விடஅதிகம் என மதிப்பிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இது 35 சதவீதம் அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது  எனில் சாமானிய ஏழை, நடுத்தர குடும்பங்கள்எப்படி சம வாய்ப்புகளை பெற்றவையாக இருக்க முடியும்? 

சமூக நீதி என்பது காலாகாலமாக தகுதிக்கு எதிரானதாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தின் 1921 கம்யூனல் ஜி. ஓ வில்  துவங்கி இன்றுவரையிலான வரலாறு  எவ்வாறு சமூக நீதி ஏற்பாடுகள், வாய்ப்புகளை எல்லோருக்கும் விரிவாக்கி, மறைத்தும் மறைந்தும் இருந்த திறமைகளை எல்லாம் வெளிக் கொணர்ந்துள்ளது என்பதற்கு சாட்சியங்களாக உள்ளன. ஆனால் “நீட்” அத்தகைய வரலாற்றின் சக்கரங்களை பின்னோக்கி சுழற்ற முனைகிறது என்பதே உண்மை. இது ஒரு சேர சமூக நீதி, தகுதி இரண்டையுமே வணிக மயத்திற்கு இரையாக்குகிறது. 2018 ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ரேமா நாகராஜன் என்பவர் தந்த அறிக்கையின்படி, நீட் முறை சமூக நீதி,தகுதிஇரண்டையும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதே. 720 மதிப்பெண் கொண்ட நீட்  தேர்விலிருந்து 57000பேர் தெரிவு செய்யப்பட்டதில் 39000 பேர் அரசு இடங்களிலும் (சராசரி மதிப்பெண் 448) 17000 பேர் தனியார் மற்றும் என்.ஆர்.ஐ இடங்களிலும் (சராசரி மதிப்பெண் 306)தேர்வு ஆகியுள்ளனர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று பட்டியல் சாதி மாணவர்களில் அரசு இடங்களில் தெரிவு பெற்றவர்களின் சராசரி மதிப்பெண் 398 ஆகவும், தனியார் இடங்களுக்கு தெரிவானவர்களின் சராசரி மதிப்பெண் 367 ஆகவும் இருந்துள்ளது. இதோடு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஒட்டு மொத்த சராசரி மதிப்பெண் 306 ஐ ஒப்பிட்டால் சமூக நீதி, தகுதி இரண்டும் ஒரு சேர பலியாவதுதெளிவாக தெரிகிறது.இன்னும் கூட அந்த ஆய்வு ஒரு அதிர்ச்சிகரமான தகவலைத் தந்தது. என்.ஆர். ஐ ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சராசரி மதிப்பெண் 221 மட்டுமே.

அதாவது அதிகக் கட்டணம் எனில் மிகக் குறைந்த மதிப்பெண் என்பதே நீட் வகுத்துள்ள நியதி என்றால் தகுதியின் கதி என்ன? என்ற கேள்வி எழுகிறது.இந்திய சமூகத்தில் ஏழைகள் என்றால் அவர்களில் மிகப் பெரும் பகுதி பட்டியல் சாதி, பழங்குடியினர்,  பிற்படுத்தப்பட்டோர்தான். கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர், அமைப்பு சாரா நகர்ப்புறதொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், கேசுவல் ஊழியம் புரிவோர், குடிசை வாசிகள் ஆகியோரின் சமூக உள்ளடக்கம் இந்த உண்மையை எடுத்துரைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களில் இட ஒதுக்கீடு கிடையாது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் (மார்ச் 2021)  ஒரு ஆய்வுஅகில இந்திய அளவில் 28 சதவீதமான எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான சராசரி கட்டணம் ஒரு ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் எனக் கூறுகிறது. 

என்.ஆர்.ஐ பிரிவினருக்கான கட்டணம் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் எனில் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி.இப்படிப்பட்ட தனியார் இடங்களின் சதவீதம் (28 சதவீதம்)  அகில இந்திய அளவில் உள்ள சாதி ரீதியிலான இட ஒதுக்கீடுகளை விட பட்டியல் சாதி (15 சதவீதம்) பழங்குடியினர் (71/2 சதவீதம்) இதர பிற்பட்டோர் (27 சதவீதம்) அதிகமாக இருப்பதை காணலாம். இது மருத்துவத் துறையின் திறன் மீது பெரும் பாதிப்பை உருவாக்குவது ஆகும். 

கடுமையான கட்டணங்களை யாரால் தாங்க இயலும்?
இந்த இடங்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி/பழங்குடியினர்/மிகவும் பிற்பட்டோர்க்கு மறுக்கப்படுகிற இடங்களே ஆகும்.நீட் முறையானது பொதுப் போட்டியில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், அருந்ததியர் இடம் பெறுவதை பெரிதும் பாதிக்கிறது. உதாரணமாக 2020-21 தேர்வுப் பட்டியலில் முதல் 1000ரேங்க் பெற்றவர்களில் 10 பேர் மட்டுமே பட்டியல் சாதியினர்.(ரேங்க் எண்கள் 281, 466, 594, 689, 812, 835, 846, 904, 910, 995). முதல் 500 பேர் என்று கணக்கு பார்த்தால்இரண்டு பேர் (281, 466) மட்டுமே பட்டியல் சாதியினர். அருந்ததியர் ஆயிரத்தில் ஒருவர்தான். ( 677). பழங்குடியினர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. பொதுப் போட்டியைவிட்டு விளிம்பு நிலை மக்களை வெளித் தள்ளுவதாக நீட் முறைமை உள்ளது.

நீட் கிராமப்புற மாணவர்களை, விளிம்பு நிலை மாணவர்களை வெளித்தள்ளுவதன் மூலம் அவர்களைமட்டுமின்றி இத்தகைய மக்கள் மத்தியில் சேவை ஆற்றும் மனநிலை கொண்ட மருத்துவர்களையும் இழக்கச் செய்கிறது; இது பொது சுகாதாரத்தை, கிராம ஆதார சுகாதார நிலையங்களை  பாதிக்கும்.நீட் முறைமை முதல் தலைமுறை பட்டதாரிகளை காண விழைகிற குடும்பங்களை, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை, உடல் உழைப்பையும் குடும்ப வருமானத்திற்காக செலுத்தி படிப்பையும் தொடரும்மாணவர்களையும், பெற்றோர் உடல் உழைப்பு தொழிலாளர்களாக, அதிகாலையிலேயே துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிற குடும்பங்களை, பெற்றோர்கல்விக்கான வழிகாட்டல்களை வழங்க இயலாத நிலையில் உள்ள குடும்பங்களை, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டகுடும்பங்களை அதிகமாகப் பாதிக்கும்.பள்ளிக்கூடதேர்வுச் சுமையையே வாழ்க்கை சூழலால் எதிர் கொள்ள திணறுபவர்கள், இன்னொரு தேர்வை அதுவும்பயிற்சி தேவைப்படுகிற, மிக அதிகமான செலவினம் கொண்ட ஒன்றை எப்படி கூடுதலாக சுமக்க முடியும் என்பதுதான் கேள்வி. 

கல்வியை சமூக, பொருளாதார கோபுரங்களின் உயரங்களில் உள்ளவர்களுக்கான உரிமையாக மாற்ற நீட் வழி செய்கிறது.மாணவர்களின் கல்வி என்பது அவர்களின் சமூக புரிதலை, உளவியல் வளர்ச்சியை உறுதி செய்வதும்ஆகும். அது வெறும் தொழில், வருமானம் சார்ந்ததுமட்டுமல்ல. ஆனால் நீட் மாணவர்களின் படிப்பில் இருந்து கவனத்தை சிதறடிக்கிறது. அவர்களுக்கு மன வளம் தரக் கூடிய விளையாட்டு, நடனம், இசை போன்ற ஆர்வங்களில் இருந்தெல்லாம் விலக்கி வைக்கிறது.வழமையான தேர்வுகளை காட்டிலும் 10 ஆம் வகுப்பில்ஏன் அதற்கு முன்பாகக் கூட நீட் பயிற்சி என அவர்களின் கவனம் திருப்பப்படுகிறது. கடிவாளம் போட்ட குதிரை போல்சமூகத்திலிருந்து “தனிமைப்படல்”  என்ற அபாயம் உள்ளது. 
12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தமிழகத்தில் நடைமுறையில் இருந்த கவுன்சலிங் முறைமிகுந்த நம்பகத்தன்மையோடும், வெளிப்படைத்தன்மையோடும் அமலாகி வந்தது. எந்த புகாருக்கும் இடம் இல்லாத அந்த முறைமை நல்ல மருத்துவர்களை உருவாக்கவில்லையா? தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக வளரவில்லையா?

நாடாளுமன்ற நிலைக் குழு இது பற்றி விவாதித்து“இதில் விருப்பப்படாத மாநிலங்கள் இத்தகைய நுழைவுத்தேர்வு வரம்பிற்குள் வராமல் வெளியே இருக்கலாம்”என்றுதான் தெரிவித்தது. அத்தகைய கூட்டாட்சி மாண்புகளின் அடிப்படையில் தமிழகம் விதி விலக்கு பெற வேண்டும்.நீட்டிற்கு விதி விலக்கு கோருகிற தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டது என்பதும் கூட்டாட்சி விழுமியங்களுக்கு மாறானது.அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூட இது போன்ற ஒற்றை வடிவ பொதுத் தேர்வுகள் அங்கு வறியவர்களுக்கு, விளிம்பு நிலை பிரிவினருக்கு, பெண்கள் - சிறுபான்மையினர்க்கு பாகுபாடு காண்பிப்பதாக இருப்பதாகவே கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (மே 16, 2020 தி இந்துஆங்கில இதழில் அரசியல் சாசன நிபுணர் ஃபைசன் முஸ்தபா). அமெரிக்கா போன்ற வளர்ந்த ஒரு நாட்டின் நிலைமையே இதுவெனில் சாதி எனும் கொடூர பாகுபாட்டின்உறைவிடமாக திகழும் இந்தியச் சமூகத்தில் இது எத்தகைய பாதிப்பை உருவாக்கும்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக,

நீட் அரசியல் சாசனத்தின் அடிப்படை கருது கோள்களில் ஒன்றான சமத்துவ உரிமைக்கு எதிரானது. 

நீட் கல்வி வணிக மயத்தின் நீட்சியாக கார்ப்பரேட் நலன்களுக்கு உதவுவதாகும்.

நீட் எல்லா மாணவர்களின் உளவியல் முன்னேற்றத்திற்கு தடையானது ஆகும். 

நீட் ஏழைகளுக்கு பாகுபாடு காண்பிப்பது. ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் கனவை சிதைப்பதாகும்.

நீட் சமூக நீதிக்கு எதிரானது. இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் சதியாகும்.

ஆகவே நீட் முறைமையை அடியோடு கைவிட்டு முந்தைய கவுன்சிலிங் முறைக்கு - 12 வது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் - மீண்டும் திரும்ப வேண்டும். 

தமிழகம் முழுமையும் நீதி கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எண்ணற்ற மக்களின் உணர்வு இது. ஏக்கம் இது.  

இந்த ஏக்கத்தை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் மனுவாக வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. 

கட்டுரையாளர்:  கே. சாமுவேல் ராஜ், பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

;