articles

img

கைப்பேசி!-வம்பன்ஜெபா

யாரக் கேட்டுக் கொடுத்தெ? எனக்கு ஏம்புட்டு பொருள் இப்பவே வேணும். இல்லேன்னா நடக்கிறதே வேற, என்று வாய்க்கு வந்தபடி வையிறது மட்டுமல்ல,கை நீட்டவும் செய்யக் கூடியவராச்சே மூர்த்தி.

யாரக் கேட்டுக் கொடுத்தெ? எனக்கு ஏம்புட்டு பொருள் இப்பவே வேணும். இல்லேன்னா நடக்கிறதே வேற, என்று வாய்க்கு வந்தபடி வையிறது மட்டுமல்ல,கை நீட்டவும் செய்யக் கூடியவராச்சே மூர்த்தி. அவரு வேலை செய்யிறதே குடிக்குத்தான்.நாம பேசுறதுதான் ஞாயம் தர்மமுன்னு நெனக்கி றவரு.

பொதுவா அவர்மேல யாருக்கும் மதிப்பி ருந்ததில்ல கொடுக்கல் வாங்கலிலும், பொம்ப ளைங்க விஷயத்திலேயும் பத்தாத ஆளு, சின்ன  விசயத்துக்குக்கூட பொடியங்க கிட்ட வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்குப் போவாரு. வாயில ஊத்தப் பேச்சுவேற, அது கேக்கிற தூரம் நாறித்தான் கிடக்கும், யாரையும் வச்சு வாங்காம எடுத்ததும் கைய நீட்றப் பழக்கம் உள்ளவரு..

பல இடத்துல பலவாறு வாங்கியுமிருந்தா லும் அவருக்கது வியர்த்ததை துடைச்சு விடுற  மாதிரித்தான். காவல்நிலையத்தில் அவரு பேருல வழக்கு கள் பலவுண்டு.அத்தனை வழக்கும் சல்லித்தன மானவை. அவருக்கு வாழ்வு தந்த நோக்கமே எவன்குடி யைக் கெடுத்தாவது குடிக்கணும்.  

நீயொரு மனுசன்னு பொருள உனக்கிட்ட  கொண்டாந்து கொடுத்தேன் பாரு.மொதல்ல  என்னத்தான் செருப்பால அடிச்சுக்க ணும்பாரே…. நேரமாக நேரமாக வெறிகொண்டு வருமே, கடைத்தெருல சத்தம் போட ஆரம்பிச்சுரு வானே மனுஷன்.

எப்படி சமாளிக்கப் போறோம்னு யோசனையோடே இருந்தான் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை வைத்தி ருக்கும் கதிர். தொடக்க காலங்களில் இந்தப் பகுதியில் சைக்கிள் ரிப்பேர் பாக்குற கடை வச்சுருந்தாரு மூர்த்தி. அதையே சாக்கா வச்சுக்கிட்டு இத்  தனை வயசாகியும் திருந்தாமத்தான் ஏரியாவுல  பினாத்திக்கிட்டுத் திரியுது இந்தப் பெருசு. வயசுதான் பெருசு. செய்யுறது பூராவும் சின்னப்புள்ளத்தனந்தான். இத்தனைக்கும் கதிருக்கு மூர்த்தியை இருபது வருசமாத் தெரியும்.

இருந்தென்ன இப்ப  அது பிரச்சனையில்லையே மூர்த்திக்கு. அன்றைக்கு மதியத்துல கதிரின் கடைக்கு வந்த மூர்த்தி,கையில் வைத்திருந்த ஒரு பொரு ளொன்றை நீட்டினார். எதார்த்தமாக வாங்கிய கதிர் ஏதுண்ணே இத்தத்தண்டி “மொபைலு”னு கேட்டான்.  அட யாருட்டுனு சரியாத் தெரியல.

ரோட்டுல  போகையில தவறி கீழே விழுந்திருச்சுடா அதை  எப்படி ஓப்பன் செய்யிறதுன்னு தெரியல.நீ கொஞ்சம் பாரு என்றார் மூர்த்தி. செல்லை வாங்கிய கதிர் அதை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு அதன் தொடுதிரையை தொட்டு லேசாகத் தேய்த்தான் அது கைம் மாறாகப் பிரகாசித்தது. இருந்தும் உள்ளே செல்லாமல் லாக்கிலி ருந்தது. சரி நீயே வச்சுரு, யாரும் வந்து கேட்டா லும் அவங்ககிட்ட அவசியம் ஆயிரமாவது வாங்கிரு, இல்லேன்னா பொருளைக் கொடுக்காதே. நானே வந்து வாங்கிக்கிறேன் என்று கட்டளையிட்டவாறு நடையைக் கட்டி னார் மூர்த்தி.

இது தேவையற்ற வேலையாச்சே என்றெண்  ணிய கதிர் திருப்பிக் கொடுத்து விடலாமா ஏதே னும் திருட்டுச் செல்லாக இருந்தால் என்னா வது? அசிங்கமாயிடுமே பலத்த யோசனைக் கிடையில், இருந்தவனிடம் கணக்காக கடைக்கு  ஒருவர் வந்தார். கதிரிடம், மூர்த்தி உங்ககிட்ட செல்லு ஏதும்  கொடுத்தானா என்று கேட்டார்.

ஆமாண்ணே! என்றான் கதிர். அந்த செல்லு ரோட்டுல விழுகையில பாத்துக்கிட்டுதானிருந்தோம். ஆனா பின்னா டியே தொடர்ந்து ரெண்டு மூணு வண்டி போணுச்சு, அதுல யாருடையதுன்னு கவனிக்க  முடியாமப் போச்சு. அப்படியிருந்தும் கையத் தட்டுனோம், சவுண்டும் போட்டோம் போற வேகத்துல கவ னிக்காம போயிட்டாங்க.

நாங்க பாத்ததுனாலத்தான் மூர்த்தி உங்கிட்ட கொண்டாந்து நல்லவன்மாதிரி கொடுத்தி ருக்கான். இல்லேன்னா இந்நேரம் இந்த செல்லு எங்கெங்கப்போயி என்னென்னப் பாடு  பட்டிருக்குமோ. அவனப்பத்திதான் உனக்கு நல்லாத் தெரியுமே,என்றதும்.மெதுவாக தலையை ஆட்டினான் கதிர். சரி ஓங்ககிட்ட வந்ததால பிரச்சனையில்ல “செல்லுக்காரனுக்கு நேரம் நல்லா இருந்தி ருக்கு” சம்பந்தப்பட்ட ஆளு நேருலையோ தொடர்புலையோ வந்தா கொடுத்திடுன்னு அவரு நம்பிக்கையோடு கிளம்பினார்.

இதற்கிடையில் அந்தப்போனிற்கு ஒருமணி  நேரமாகியும் ஒரு அழைப்புகூட வரவில்லை.  இடையில் ஏதாச்சும் தட்டுப்படுதான்னு பார்க்க நினைத்த கதிர்,உறையிட்டிருந்த அந்த  செல்லின் உள்ளறையைத் துழாவினான். வெள்ளைத்தாளொன்று நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.

அதில் முக வரியேதும் தேறுமா என்றெண்ணியவனுக்கு அந்தக் குடும்பப் பின்னணி முழுவதும் தெரிந்தது. அலைபேசியின் முகப்பில் குடும்பப்படமி ருந்ததை முன்பே கண்டிருந்தான். அம்மா அப்பா  வலது இடதுமாக ஆணொன்றும் பெண்ணொன்  றும் மொத்தம் நான்கு பேர் நின்றிருந்தனர்.

இரண்டும் அவர்களுடைய பிள்ளைகளாக இருக்கலாம். தாளில் ஏதோ காதல் கடிதம் எழுதியது போலி ருந்தது. விரித்துப் படித்தவனின் முகம் வாட்ட மடைந்தது.. ஆண்டவா! இத்தனை சோத னைக்கு மத்தியில் என்னை மட்டும் உயிரோடு வைத்திருக்கிறாயே எல்லோரையும் இழந்து தவிக்கிறேனே. இந்தப் பூமியில் நான் மட்டு மிருந்து என்ன செய்யப் போகிறேன். நிர்க்கதியாய் நிற்கிறேனே, இறைவா என்னையும் எடுத்துக்கொள் என்று கண்ணீரு டனான சிறுசிறு ஓவியங்கள் பேனாவால் தீட்டப்பட்டிருந்தது.

என்னைப் பெத்தவங்களோடு சேர்த்துவிடு. கடைசியாக ஐயோ! பிரித்துவிடாதே! பிரித்துவிடாதே என்று ஸ்ரீராமஜெயம் போல் நூறு முறைக்கு மேல் எழுதி யிருந்தது. இப்போது அந்தப் போனிற்கு அக்கா என்ற  பெயரில் அழைப்பு வருகிறது. சுதாரித்த கதிர் அம்புயிட்டு வந்த,அந்தப் பச்சைக்குறியீடை லேசாக தடவினான் பலனில்லை. உடனே அந்த எண்ணை தன் போனில் டைப்செய்து வந்த எண்ணிற்கே திருப்பி தொடர்பு  கொண்டான். எதிரே ஒரு பெண் ‘ஹெலோ’ என்றாள்.

பதிலுக்கு கதிரும் பேசினான். அவள் பேச்சில் பதட்டமும் சோகமுமிருந்த தைக் கவனித்தான். அண்ணா எங்கிருந்துண்ணா பேசுறீங்க? என் போனை எங்கோ தவற விட்டுட்டேன்ணா ‘ப்ளீஸ்’ அண்ணா! என்றாள். புரிந்து கொண்ட கதிர் தன் முகவரியைக்கூறி செல் தன்னிடம்தானிருக்கிறது. வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றான். இதற்கிடையில் என்னாச்சு என்னாச்சுயென பலமுறை வந்து போயிருந்தார் மூர்த்தி. ஒருமணி நேரத்திற்குள்ளாக வந்தவள் கடைமுற்றத்தில் நின்றவாறு கடையை தேடி யிருந்தாள்.

நிச்சயம் இவளாகத்தானிருக்கும் என்ற அனுமானத்தில் கையைக்காட்டி அழைத்தான் கதிர். அவள் மணமாகாத இளம்பெண். அவ ளுக்கான வேலை விஷயமாக இந்தச் சாலை மார்க்கமாக தோழியோடு சென்றிருக்கிறாள். கைப்பையிலிருந்து எப்படியோ இந்த வேகத்தடையில் குதித்து விழுந்திருக்கிறது. வந்தவள் புதிய இடம், புதியநபர் யாசகம் கேட்பதுபோல கடையின் ஓரஒண்டில் நின்றாள். எந்த ஊரும்மா என்பதையெல்லாம் கேட்டுவிட்டு அந்த செல்லுக்கு, அவன் கைப்  பேசியைக் கொடுத்து அழைக்கச் சொன்னான், அழைத்தாள். படக்கென விலையுயர்ந்த அந்த செல்லை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அப்போது அவளை நன்றாகப் பார்த்தவன் தொடுதிரையில் இடதோரமாகப் பார்த்த அதே  முகம். அந்தப் போட்டோவிலிருப்பது நீயாம்மா? என்று கேட்டான் கதிர். ஆ.ஆமாண்ணா! எல்லோரும் நல்லா இருக்காங்களா? என்றான். இதயம் நின்றது போல நிச்சலனமாய் நின்று  பெருமூச்செறிந்தவள், ‘ம்’நல்லாருக்காங் கண்ணா என்றாள். அண்ணா ரொம்பத் “தேங்ஸ்” ணா! என்று மீண்டு மீண்டும் சொல்லிச் சென்ற அந்த அழகு முகத்தில் வெளிச்சமிருந்தும் பிரகாச மில்லை.. இதே போல அம்மா அப்பா தம்பியும் அவ ளுக்கு திருப்பி கிடைத்திருந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

மூர்த்தி வந்தார்.  கதிர் கல்லாவிலிருந்து, தன் ஆயிரத்தை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவர் திருப்பி கேட்டார்? டேய்,கதிரு ஆயிரந்தான் வாங்குனியா இல்ல கூடுதலா வாங்குனியா  உண்மையைச் சொல்லு?