articles

img

நான் திஷாவின் சகோதரி பேசுகிறேன்...

நான் திஷா ரவியின் சகோதரி பேசுகிறேன். எனது சகோதரி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டதால் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் எங்களது குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் எங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இருந்து குரல் கொடுத்திருக்கும் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சகோதரி திஷா ரவியின் மீதான அரசின் தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். கைது செய்யும்போது முறையான நீதி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஒரு வழக்கறிஞர் கேள்வி எழுப்பக் கூட அனுமதிக்கவில்லை. எனது சகோதரி கைது செய்யப்படுவது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினோம். ஒரு பதில் கூட கிடைக்கவில்லை. இத்தகைய கடினமான தருணத்தில்தான் நாடெங்கிலும் இருந்து எனது சகோதரிக்கு ஆதரவு குவிந்தது. 
நாட்டின் நீதி அமைப்பு மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். என்ன நடந்தாலும் சரி, நாங்கள் உறுதியாக போராடுவோம். திஷா மீதான பொய் குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட வேண்டும். உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.

நாட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது ஒரு குற்றமா? விவசாயிகள், இந்த நாட்டின் உணவு படைவீரர்கள். ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்து வருபவர்கள். எனது சகோதரி எந்தவொரு குற்றமும் செய்யவில்லை. எல்லோரையும் போல அவரும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவ்வளவுதான்.இன்றைக்கு எனது சகோதரி திஷாவை கைது செய்திருக்கிறார்கள். நாளை அவர்கள், நம்மில் யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்வார்கள். சட்டவிரோதமான இத்தகைய கைதுகளுக்கு எதிராக குரல் எழுப்பிதான் ஆக வேண்டும். எதேச்சதிகாரத்திற்கு எதிராக குரல் உயர்த்தித் தான் ஆக வேண்டும்.

எனது சகோதரி கைது செய்யப்பட்ட போது, நண்பர்களுடன் அந்த தகவலை சொல்வதற்காக நடத்திய வாட்ஸ் உரையாடலை கூட சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில், எனது சகோதரி மீது சதி குற்றச்சாட்டுகளை ஊடகங்களே புனைகின்றன. ஆனால் அவை அடிப்படை ஆதாரமற்றவை. எப்படி ஒரு தனிநபரின் தனிப்பட்ட உரையாடல் ஊடகங்களுக்கு கிடைக்க அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. எந்தப் பிரச்சனையிலும் ஊடகங்களே நீதிமன்றமாக மாறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

எனது சகோதரி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெயரில் சமூக ஊடகங்களில் போலியான ஐடிகளை உருவாக்கி சில தவறாக பதிவிட துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய பதிவுகளை நீங்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். திஷா ரவியின் சகோதரியான நானே இப்போது, திஷா ரவியின் டிவிட்டர் பக்கத்தை கையாள்கிறேன்.திஷாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும்.

;