articles

img

நெடுங்காலமாய் உறைந்திருக்கும் மகா தொற்று....

அரசாங்கங்கள் மகா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெண்களின் பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.  

அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும்
உலக சுகாதார அமைப்பு , லாக்டவுனின் காரணமாகபெல்ஜியம், பல்கேரியா, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள்மீதான பாலியல் வன்கொடுமைகள் 60% அதிகரித்துள்ளன என்கிறது.  யுஎன்எப்பிஏ எனும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்கு இந்த லாக் டவுன் நீடிக்குமேயானால் 31 மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து லட்சம்) பாலியல் வன்கொடுமைகள் மேலும் கூடுதலாக நிகழும் என கூறியுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 256 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியுள்ளன.  2020ல் தேசிய புள்ளிவிவரம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுகிறாள் என்றும் 0.3% (அதாவது10,000 பேரில் 30 பேர் மட்டுமே) மட்டுமே தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கிறது. 2020ல் மட்டும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் 2960 பதிவாகியுள்ளன.  1780 வழக்குகளில் குற்றவாளிநெருங்கிய உறவினர் அல்லது நன்கு பரிச்சயமான நபராக இருக்கிறார்.  பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்ததற்காக, மழையில் நனைந்ததற்காக, பாடியதற்காக, கை தட்டியதற்காக, சமூக வலைதளத்தில் பதிவுபோட்டதற்காக, விவாகரத்து கோரியதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.  ஆண்கள் அவர்களுடைய பெருமைக்கும், மரியாதைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய செயல்களாக பார்த்ததால் நடத்தப்பட்ட கொலைகள் இவை.  
ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் அத்து மீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஐரோப்பா முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது.  பிரான்சில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல்வாரத்திலேயே குடும்ப வன்முறை வழக்குகள் 30% அதிகரித்துள்ளது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு பெண் அவரது தற்போதைய அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணையால் கொல்லப்படுகிறார்.  ஸ்பெயினில் மார்ச் 19 அன்று ஒரு பெண் அவளது குழந்தைகளின் முன்னிலையில் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கனடாவில், சராசரியாக ஆறு நாட்களுக்கொரு முறை பெண்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களால் கொல்லப்படுகின்றனர்.    இத்தாலியில் இக்காலத்தில் குடும்ப வன்முறை குற்றங்கள் மும்மடங்காகியுள்ளன.பிரேசிலில் 40% குடும்ப வன்முறை உயர்ந்துள்ளது.  ஜப்பானில் 2020ல் 1,30,000 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.  2019ல் இது 1,19,276 ஆக இருந்தது.  குடும்ப வன்முறையில் ஆப்கானிஸ்தானில் 11 பெண்கள், அர்ஜெண்டினாவில் 6 பெண்கள்,  துருக்கியில் 21 பெண்கள் இந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற பணியிடமாக மாறிப் போயுள்ளது என்று ஆஸ்திரேலியப் பெண்கள் கூறுகின்றனர்.  இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் அவர்களுடைய தற்போதைய அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.   

பாதுகாப்பற்ற இந்தியா
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைகளில் முதல்இடத்தை பிடிப்பது குடும்ப வன்முறைகளே.  2019ல் தேசியகுற்றப்பிரிவில் பதிவாகியுள்ள 4.05 லட்சம் குற்றங்களில் 30 சதத்திற்கு மேல் அதாவது 1.26 லட்சம் குற்றங்கள் குடும்பவன்முறை சார்ந்தது.  இதில் ராஜஸ்தானில் மட்டும் 18,432குற்றங்களும், உத்தரப் பிரதேசத்தில் 18,304 குற்றங்களும்பதிவாகியுள்ளன.  உண்மையில் பாதிக்கப்படும் பெண்களில் 77 சதமானம் பேர் யாரிடமும் சொல்வதில்லை, 86 சதமானம் பேர் யாரையும் உதவிக்கு அழைப்பதில்லை.  கொரோனா ஊரடங்கில் 68 நாட்களில்,  கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன.  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் 2020ல் 5000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.  2020 மார்ச் 1 முதல்செப்டம்பர் 18ற்குள் பதிவாகியுள்ள புகார்களில் 13244 புகார்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்தது.  குடும்ப ஆரோக்கியம் குறித்து தேசிய அளவில் 4 லட்சம் குடும்பங்களில் ஆய்வு நடத்திய போது, கணவனால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கர்நாடகாவில் 5 வருடங்களுக்கு முன்பு 20.6 சதமாக இருந்தது தற்போது 44.4 சதமாகவும், அசாமில் 24.5 சதமாக இருந்தது தற்போது 30 சதமாகவும் உயர்ந்துள்ளது என்கிறது.  

விறகு கொண்டு வரவில்லை, தண்ணீர் கொண்டு வரவில்லை, சமையல் செய்து கொடுக்கவில்லை என்ற காரணங்களுக்கெல்லாம் மனைவியை கணவன் அடிப்பது நியாயமானது என்று ஆக்ஸ்ஃபோர்ம் நடத்திய ஆய்வில்மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதே போல பெண்கள் மீதான வன்முறைக்கான இன்னொரு அடையாளம் ஆண் பெண் விகிதாச்சாரம். என்எப்எச்எஸ் 2019-20 ஆய்வின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆண் பெண் விகிதாச்சாரத்தில் இருந்து தற்போது எல்லா மாநிலங்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.  

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டல்
பெண்கள் பொதுவாகவே தற்காலிக, பாதுகாப்பற்ற பணிகளில் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.  அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றக் கூடிய பெண்கள் குடும்ப உறுப்பினர்களை கவனிக்கும் பொறுப்பினையும் நிறைவேற்றிக் கொண்டே களத்திலும் கூடுதல் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.  பள்ளிகளும், பிற சேவைகளும் மூடப்பட்டுள்ள சூழலில், கூடுதல் குடும்பப் பொறுப்பினை பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது.  உலகப் பொருளாதார அமைப்பு பொதுவாகவே பெண்கள் 76.2% சம்பளம் கொடுபடா வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பராமரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர் என்கிறது.  ஒவ்வொரு நாளும் 7 மணிநேரத்திற்கு மேல் இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.  அதே நேரம் ஆண்கள் 3 மணி நேரத்திற்கும்குறைவாகவே இந்த வேலைகளில் இருக்கின்றனர் என்று2019ம் ஆண்டு டைம் யூஸ் சர்வே தெரிவிக்கிறது.    பெண்கள் இது போன்ற வேலைகளை செய்து கொண்டிருப்பதால் தான் உலகப் பொருளாதார சக்கரம் நிற்காமல் சூழன்று கொண்டிருக்கிறது.  ஆனாலும் அவை வேலைகளாக மதிக்கப்படுவதில்லை, அங்கீகரிக்கப்படுவதில்லை.  பெண்களின் இந்த 12.5 பில்லியன் மணி நேர சம்பளம்கொடுபடா வேலையின் மதிப்பு ஆண்டிற்கு 10.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்று ஆக்ஸ்ஃபோம் அறிக்கை தெரிவிக்கிறது.   

பெண்கள் மீதான வன்முறையும் வலதுசாரி அரசியலும்
அரசியல் மற்றும் கலாச்சார தளங்களில் ஊடுருவும் வலதுசாரி சக்திகள் அதிகார வர்க்கங்களின் மேலாதிக்க எதேச்சதிகாரப் போக்கினையும், இன வெறியையும், பிரிவினைவாதத்தையும், மத குறுங்குழு வாதத்தையும் தூண்டிவிடுகின்றன.  இந்த வலதுசாரி திருப்பம், பெண் விடுதலை போராட்டங்களின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  இந்தியாவில் பாசிச சக்திகளால் வழி நடத்தப்படும் இன்றைய மத்திய அரசு பெரும்பான்மை மத குறுங்குழுவாதத்தின் கீழ் மக்களை பிளவுபடுத்துகிறது.  இது மதசிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் எதிரான ஒன்று.  “சுத்தமான இரத்தம்” அல்லது “சாதித் தூய்மை”என்ற பெயரில் பெண்கள் மீதுஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன.  இந்தியாவில் பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது சாதிய முறைமையின் உள்ளார்ந்த  அம்சமாக உள்ளது.

அரசாங்கத்தால் பின்பற்றப்படும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளும், சந்தை கலாச்சாரமும் பிற்போக்குத் தனமான ஆணாதிக்க சிந்தனைகளை அதிகப்படுத்துகின்றன.  பெருமுதலாளிகளின் நலன்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் முதலாளித்துவ அரசுகள் பெண்களுக்கு தேவையான தரமான சேவைகளை அளிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கான வாய்ப்பினையும் சட்டப்பூர்வமாக்கிக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவில் பெண்கள் வர்க்க ரீதியான சுரண்டலுக்கும், பிரஜை என்றமுறையில் பொதுவான சுரண்டலுக்கும், “பெண்” என்றமுறையில் பாலின ரீதியான சுரண்டலுக்கும் மும்முனைகளில் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  உலகில் 104 நாடுகளில் மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் உள்ள பணியாளர்களில் 70 சதமானம் பேர் பெண்கள் என்று தெரிய வந்துள்ளது.  ஹுபை பகுதியில் இந்த கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவத் தொடங்கிய போது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களில் 90 சதமானம் பேர் பெண்கள்.  பெல்ஜியத்தில் மருத்துவமனையில் 80 சதமானம் பெண்களும், ஓய்வறைகளில் 90 சதமானம் பெண்களும் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் அரசின் சேவை திட்டங்களில் பெண்களை திட்டப் பணியாளர்களாக தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த கூலிக்கு பணிக்கமர்த்தி மிகக்கடுமையாக மத்திய மாநில அரசுகள் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.  இந்த கொரோனா காலக்கட்டத்தில் போதுமானபாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி அதிக பாதிப்பிற்கு உள்ளான முன்களப் பணியாளர்களில் இவர்களும்,  தூய்மைப் பணியாளர்களும் அடங்குவர்.  இவர்களை மிகக் குறைந்த கூலிக்கு சுரண்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதே போல, இந்தப் பெண்கள் லேவாதேவிக் காரர்களால் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.  முதலாளித்துவம் ஆண் மேலாதிக்க கலாச்சாரங்களையும் நடைமுறைகளையும் மேலும் பலப்படுத்துகிறது.

நியாயப்படுத்தப்படும்  பாலியல் அத்துமீறல்கள் 
உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறையையும், அவர்களிடையே பிரிவினைகளையும் நியாயப்படுத்தக் கூடியதாக தற்போதைய சமூக பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது.  இழிவான இந்த கலாச்சார கட்டமைப்பின் கீழ் பாலியல் உறவுகளும் பண்டமாக்கப்படுகிறது.  பெண்கள் ஆண்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே மகிழ்ச்சி அடைபவர்களாக, தங்களை தாழ்த்திக் கொள்பவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.  இதன் காரணமாக அவர்கள் மீதான பாலியல் அத்து மீறல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.  அவற்றை அவர்கள் மவுனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை கட்டமைக்கப்படுகிறது.  பெண்கள் ஆண்களால், குழந்தைகள் பெற்றோர்களால், ஆசிரியர்களால், அதிகாரம் செலுத்தும் நபர்களால்,ஒரு குறிப்பிட்ட மத நிறுவனத்தின் வட்டார எல்லைக்குள் இருப்பவர்கள் அவர்களின் சமயக் குருக்களால், கைதிகள்சிறை அதிகாரிகளால், விவசாயக் கூலிகள் நிலப் பிரபுக்களால், தொழிலாளிகள் முதலாளிகளால் என ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தின் பார்வையில் மரியாதையான அந்தஸ்த்துடன் இருப்பவர்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  பாலியல் வன்கொடுமை என்பதும்,  பாலியல் வல்லுறவுஎன்பதும் அதிகார நிலை நாட்டலை சார்ந்தது.  பாலியல் வன்கொடுமைகளை அரசு கண்டுகொள்வதில்லை. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ், குடும்பத்தில் பெண்கள் மற்றும் ஆண்களால் செய்யப்பட வேண்டிய பங்கு பாத்திரங்கள் குறித்த முன்கூட்டிய கருத்து அல்லது பொதுவான பார்வையும் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குக் காரணமாக அமைகிறது.  

சமூக மாற்றமும் பெண் விடுதலையும்
பெண் சமத்துவத்திற்கான உரிமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.  குடும்பப் பராமரிப்பிற்கான உணவு தயாரித்தல்,துணிகளை துவைத்தல், குழந்தைகள் பராமரிப்பு, கல்வி போன்ற அனைத்தும் சமூகத்தின் பொது அமைப்புகளின் மூலம் செய்யப்பட வேண்டும்.  இவை சமூகப் பராமரிப்பாக மாற்றப்படும் போது குடும்பம் என்பது ஒரு பொருளாதார அலகு என்ற நிலை உடைக்கப்படும்.  அதன் வாயிலாக குடும்பம் என்பது உண்மை காதலின் அடிப்படையில் இயங்குவதாக இருக்கும்.  ஆண் அடக்குமுறையை கையாள்வதோ அல்லது பெண்  ஆணிற்கு அஞ்சி அடங்கும் நிலையோ இருக்காது.  அப்போது பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் நிலை மாறும்.  இதன் மூலம் பெண்களும் ஆண்களுக்கு இணையாக பொது உற்பத்தியில் பங்கேற்க முடியும். 

கட்டுரையாளர் : ஆர்.எஸ்.செண்பகம், சிஐடியு நெல்லை மாவட்டத் தலைவர்

;