articles

img

பொது இன்சூரன்ஸ் தனியார்மயம் - எதிர் வியூகம்....

இந்தியா முழுவதும் பொது இன்சூரன்ஸ் துறையில் எல்லாப் பிரிவு ஊழியர்களும், எல்லா அமைப்புகளும் கை கோர்த்த வேலை நிறுத்தம்ஆகஸ்ட் 4 அன்று நடந்தேறியுள்ளது. இந்த எதிர் வினைமுக்கியமானது. பாராட்டத்தக்கது.

முடிவல்ல; மறு துவக்கம்
இவ்வளவு நியாயங்கள், எதிர்ப்புகள் இருந்தும் அரசுபொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தனியார்மயம் நோக்கி ஒன்றிய அரசு நகர்ந்துள்ளதே! தொழிற் சங்கங்கள் எப்படி எதிர் கொள்வது? இந்த கேள்வி இப்படிதாக்குதலுக்கு உள்ளாகிற எல்லா பொதுத் துறை ஊழியர்கள் மத்தியிலும் எழுகிற காலம் இது. ஆனாலும் இவ்வேலை நிறுத்தம் பெரும் நம்பிக்கையை தருகிறது. 1999 ல் இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணைய சட்டம்(ஐ.ஆர்.டி. ஏ) நிறைவேறியவுடன் எல்லாம் முடிந்து விட்டதா என்ற கேள்வி எழுந்தது. தனியார்கள், அந்நியமுதலீடுகள் மீண்டும் உள்ளே வர கதவுகளை அச்சட்டம்திறந்திருந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர்  என்.எம்.சுந்தரம் கூறிய வார்த்தைகள் எதிர் காலத்திற்கான வழி காட்டலாக அமைந்தது.

“சட்ட நிறைவேற்றம் முடிவல்ல; அது மறு துவக்கம்”என்பதே அது.சட்டங்கள் நிறைவேறியவுடன் அரசு அடுத்த கட்டத்திற்கு உடனே நகர்ந்து விட முடியாது. மக்கள் கருத்து என்கிற சாலைத் தடை உருவாக்கப்பட்டால் அரசின் நகர்வை தடுக்க முடியும்; வேகத் தடை போடமுடியும்; எதிர்கால நகர்வுகளை கேள்விக்கு ஆளாக்க முடியும். இதுவே போராட்டத்தின் தாக்கம். விவசாயிகள்போராட்டம் கண் முன் நிற்கும் உதாரணம். 250 நாட்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியை சுற்றி அமர்ந்துள்ளார்கள். ஆனால் இப்படிப்பட்ட உறுதி மிக்க தொடர்இயக்கங்களுக்கு பெரு முயற்சியும், விரிந்த வியூகமும்தேவைப்படுகின்றன. 

அரசே இது வெற்றி அல்ல
நாடாளுமன்றத்தில் இப்போதும் கூட இந்த சட்ட வரைவின் மூலம் செய்வது “தனியார் மயம் அல்ல” என்றுநிதியமைச்சர் சொல்கிறார். அது பொய். “பங்கு விற்பனை என்றால் தனியார் மயம் அல்ல” என்று முன்னர் சொல்லி வந்தார்கள். “விவரம் அறிந்த” சிலர்கூட அப்போது அதை நம்பினார்கள், 51% அரசின் கைகளில் இருக்கிறதே என்று... இன்றோ தனியார் மயமே தனியார் மயம் அல்ல என்று புது “விளக்கம்” தருகிறார் நிதியமைச்சர். அமைச்சர் இப்படி பேச வேண்டிஇருப்பதற்கு காரணம் உண்மையான “சமூக ஒப்புதல்”அரசின் நகர்வுகளுக்கு பெறப்படவில்லை என்பதுதான்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கிறோம். நேசிக்கிறோம். காரணம், இந்த உன்னதமான ஜனநாயகத்தைஇந்த நாட்டிற்கு தந்திருப்பதே உழைப்பாளி மக்களின்எழுச்சிதான். ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் தங்களின் அவைப் பெரும்பான்மையை பயன்படுத்தி, நாடாளுமன்றம் வேறு ஒரு பிரச்சனையில் முடங்கி நிற்கிற நேரத்தில், கோவிட் சூழல் காரணமாகமக்கள் வீதிகளில் விவாதிப்பதற்கான வாய்ப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில்,  நாடாளுமன்றமே விரிந்த விவாதங்கள் நடந்தேற வைத்திருக்கிறதெரிவுக் குழு - நிலைக் குழுவின் பரிசீலனைக்கு கூடஅனுப்பாமல் சட்டங்களை நிறைவேற்றினால் அரசே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கிறது என்பதுதான் பொருள். அதனால்தான் விவசாயிகள் சட்டம் வீதிகளில் இன்றும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவேஇன்சூரன்ஸ் துறை தாக்கப்படுகிறது என்பதையும் கடந்து நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு தாக்கப்படுகிறது என்று அர்த்தம். அரசு மக்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தரவே இல்லாத ஒரு பொய்யை சொன்னதன்மூலம் தார்மீக ரீதியாக தோல்வி அடைந்திருக்கிறது.இந்த நிலையில் பொது இன்சூரன்ஸ் துறையில் இருக்கிற அத்தனை அமைப்புகளும் - தொழிற் சங்கங்கள், நலச் சங்கங்கள் - இணைந்து எழுச்சிமிக்க வேலை நிறுத்தம் வாயிலாக எதிர் வினை ஆற்றி இருப்பது பாராட்டத்தக்கது. பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்தம் முடிவல்ல; இன்னொரு கட்ட போராட்டத்தின்மறு துவக்கம் என்ற தெளிவை, உறுதியை பதிவு செய்துள்ளார்கள். 

வேதாள பொய்கள்
அரசு எந்த நியாயங்களையும் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக முன் வைக்க இயலவில்லை. இன்சூரன்ஸ் பரவல் என்கிற எந்த ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிற “வேதாள பொய்யை” நிதியமைச்சர் பேசி இருக்கிறார். உண்மையில் யார் இன்சூரன்ஸ் பரவலாக்கலை செய்திருக்கிறார்கள்? முதல் தட்டு, இரண்டாம் தட்டு நகரங்களை தாண்டி அலுவலகங்களை தனியார்கள் திறக்கிறார்களா? அவர்களின் 98% அலுவலகங்கள் முதல் தட்டு, இரண்டாம் தட்டு நகரங்களில்தான் என்ற “பச்சைப் பசேல் உண்மை” இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய அறிக்கையில் இருப்பது கண்களுக்கு தெரியவில்லையா? ஆறாவதுதட்டு ஊர்களில், அதாவது 5000 க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களில், ஒரு அலுவலகத்தை கூட தனியார்கள் கடந்த 20 ஆண்டுகளில் திறக்கவில்லை என்பது தெரியாதா? இதுவெல்லாம் இல்லாமல்  தனியார்களால் இன்சூரன்ஸ் பரவலை எப்படி செய்யமுடியும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை.மக்கள் மத்தியில் இக் கேள்விகள் பேசப்படவேண்டும். 

மொத்த விற்பனை
ஒரே ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயம் ஆகுமென்பதுதான் பட்ஜெட் அறிவிப்பு. அதையே ஏற்க முடியாது. ஆனால் இன்று ஐந்து அரசுபொதுக் காப்பீடு  நிறுவனங்களையும் - யுனைடெட் இந்தியா, நேசனல், ஓரியண்டல், நியூ இந்தியா, ஜி.ஐ.சி ரீ-  பலி பீடத்தில் ஏற்றுவதற்கான கதவுகளை இந்த சட்டம்திறந்து விட்டுள்ளது. அதுதான் பொது இன்சூரன்ஸ் தேசியமய சட்டம்பிரிவு 10 பி இல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம். இதன்மூலம் ஒன்றல்ல... எந்த அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார் மயமாக்க முடியும். 

பிரிவு 24 இன்னும் தெளிவாக சொல்கிறது. எந்த அரசுபொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அரசின் பங்குகள் 51% க்கும் கீழே போகிறதோ அந்த நிறுவனம் இந்தசட்டத்தின் வரம்பை விட்டே வெளியே போக வேண்டும்.ஆகவே இந்த சட்டம் செய்வது சில்லறை விற்பனை அல்ல. மொத்த விற்பனை. ஒன்றை ருசி பார்த்தால் இன்னொன்றை விட்டு வைப்பார்களா? ஐந்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் சங்க வேறுபாடுஇன்றி ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய புள்ளி இது.

கிலோ என்ன விலை
அரசின் நம்பகத் தன்மையும் கேள்விக்கு ஆளாகிஉள்ளது. இரண்டு அரசின் முடிவுகளை அதுவே காற்றில் மிகக் குறுகிய காலத்தில் பறக்க விட்டுள்ளது. நம்பகத்தன்மை கிலோ என்ன விலை என்று கேட்கிற அளவிற்குதான் அரசின் செயல்பாடுகள் உள்ளன.ஒன்று 2015 ல்தான் இதே ஜிஐபிஎன்ஏ (GIBNA) சட்டத்தில் அரசின் பங்குகள் எந்த நேரத்திலும் 51 % பங்குகள் இருக்குமென்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆறு வருடங்களுக்கு உள்ளாக 51 % க்கும் கீழே போகலாம் என அடுத்த திருத்தம். 2018 ல் தான் மூன்று அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றாக இணைப்போம் என பட்ஜெட் அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அந்த முடிவுகைவிடப்பட்டு விட்டது. அரசை எப்படி நம்புவது?

“நலம் பறிக்க அவா”
1990 களில் துவங்கி 30 ஆண்டுகளில் எப்படி சமூக நலஅம்சங்கள் காப்பீட்டுத் துறையில் கேள்விக்கு ஆளாகிஉள்ளன என்பது உலகமயத்தால் “நல அரசு” (WelfareState) கருத்தாக்கம் தாக்கப்பட்டதன் வெளிப்பாடே. குடிசை எரிந்தால், பாம்பு கடியில் இறந்தால் இலவசஇன்சூரன்ஸ் திட்டங்கள் ஒரு காலத்தில் இருந்தன. 1990களுக்கு பிறகு அவை கைவிடப்பட்டன. இப்போது வங்கிக் கணக்கு மூலம் அமலாகி வரும் பிரதமர் சுரக்சாபீமா யோஜனா எனும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில்சேரந்துள்ள 17 கோடி பேரில் 16 கோடி பேரை சேர்த்தது அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான். என்ன காரணம்? 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் காப்பீடு வழங்கும் அத்திட்டத்தில் வசூலாகும் பிரீமியம் 204கோடிகள். வழங்கப்படும் உரிமத் தொகை 702 கோடிகள். எப்படி வருவார்கள் தனியார்கள்? லாபம் இல்லா விட்டால்... லாபம் குறைவு என்றால்.... பக்கத்தில் நிற்கமாட்டார்கள். ஆனால் அரசு நிறுவனங்கள் சாமானியமக்களின் கண்ணீர் துடைக்கும் அரசின் விரல்கள்.  தள்ளாடும் போது தாங்கிப் பிடிக்கும் கரங்கள். இதன்
பெயர்தான் “பொருளாதாரத்தில் அரசின் தலையீடு”.

“பிரிக்கிற அரசியல்”
 நவீன தாராளமயம் சமூக நீதிக்கும் எதிரானது. நவீனதாராளமயத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் எல்லா முற்போக்கு கூறுகளையும் ஒரு சேரத் தாக்குகிறது.  தனியார் மயம் என்றால் இட ஒதுக்கீடு இருக்காது. சமூக நீதிஇருக்காது. இன்று பொது இன்சூரன்ஸ் துறையில் எழுந்துள்ள விரிந்த ஒற்றுமையில் நலச் சங்கங்களும் கை கோர்த்து இருப்பது வரவேற்கத்தக்க நிகழ்வாகும். உலகம் முழுவதும் தனியார்மயப்பாதை கேள்விக்கு ஆளாகி இருக்கிறது. அமெரிக்காவில் கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்பட்டு இருப்பதும், பிரிட்டன் பிரதமர்“எங்களுக்கு எங்கு எங்கு அரசின் தலையீடு தேவை என்று கோவிட் கற்றுத் தந்துள்ளது” என்று கூறுவதும்இதன் வெளிப்பாடுகள். ஆனால் இந்திய அரசு இப்பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதை விட அப்பாடங்களை கூட மறக்க, மறைக்க “பிரிக்கிற அரசியல்” (Divisive Politics) கை கொடுக்கும் என்று அரசு நம்புகிறது என்பதே நாம் சந்திக்கும் பெரிய சவால்.

தனியார்மயத்திற்கு தடுப்பூசி
இந்தியாவில் தடுப்பூசி கொள்கையில் தனியார்களின் தோல்வியை தழுவி உள்ளனர் என்பதை ஒன்றியஅரசின் அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கையே ஏற்றுக்கொள்கிறது. “25 % ஒதுக்கீட்டை சண்டை போட்டு வாங்கிய தனியார்கள்,  நாங்கள் குக் கிராமங்கள் வரைசெல்வோம் என்று சொன்னவர்கள் இன்று அதை செய்யவில்லை” என்று கூறியுள்ளார். 25 % ஒதுக்கீட்டை பெற்றும்இதுவரை போடப்பட்டுள்ள ஊசிகளில் தமிழ் நாட்டில் 4.5 % ஐ மட்டுமே, அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 10% ஐமட்டுமே தனியார்கள் போட்டுள்ளார்கள் எனில் இதை விட தனியார்களின் “சமூகப் பொறுப்பு (இன்மை)” க்குஎன்ன சாட்சியம் வேண்டும்?ஆனாலும் தனியார் மயப் பாதையில் இந்த அரசு பயணிக்கிறது. ஆகவே மக்களிடம் செல்வதும், மக்களிடம் சொல்வதுமான முயற்சிகள் பொது இன்சூரன்ஸ் அரங்கில் துவங்க வேண்டும். 

l பொது இன்சூரன்ஸ் துறை தேசிய மயத்திற்கு பின்னர் எட்டி இருக்கும் விரிவாக்கம். 

l சமூக நலன், காப்பீடு பரவலில் அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 

l மாற்று எதுவெனில் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைத்து ஒரே நிறுவனமாக ஆக்குவது 

l தனியார்களின் லாப மோகம் - மக்கள் எதிர் கொண்ட இன்னல்கள்

l அரசின் உள் நோக்கம் - கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார பாதை

l பொதுத்துறை நிறுவனங்கள், சிறு தொழில்கள், விவசாயிகள் மீதான தாக்குதலும் - ஒன்றுபட்ட போராட்டமும்

l திசை திருப்பும் முயற்சிகளும் ஒற்றுமையின் அவசியமும்இவற்றை மக்களிடம், மக்கள் மொழியில் பேச வேண்டும். தனியார் மயத்திற்கான தடுப்பு மருந்து இதுதான். 

கட்டுரையாளர்: க.சுவாமிநாதன், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் 

;