articles

img

‘முன்னத்தி ஏருக்கு’ தமுஎகசவின் நெகிழ்ச்சி மிகு அஞ்சலி.....

காருண்யம் மிக்க மனிதாபிமான எழுத்தாளர் கி.ரா தனது 99வது வயதில் காலமானார்.செவ்வாய் அதிகாலை வந்தசெய்தி பெரும் துயரம் அளித்தது.ஆனால், இந்தக் கொள்ளை நோய் காலத்தில் எப்போது யாரின் இறப்பு செய்தி வருமோ ? எதுவானாலும் ஏற்றுக்கொள்கிற துயரப் பக்குவத்தோடு வாழ நேர்வது கொடுமை தானே.

ஒரு பெரும் வாழ்வு வாழ்ந்துதீர்த்த கலைஞனின், எழுத்தாளனின் பூதவுடல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு அவரின் சொந்தஊரான இடைசெவல் கிராமத்திற்கு வருகிறது. புதனன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்கிற தகவல்தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மூலமாக தெரியவருகிறது.கரிசல் காற்றின் வெம்மையை தனக்குள் வைத்துக்கொண்டு புதுச்சேரி கடல் காற்றோடு சமன்படுத்தி பெருவாழ்வு வாழ்ந்த எழுத்தாளனின் உடல் அவரின் சொந்த ஊருக்கு வருகிற வழியில் அவரின் ஆத்ம  நண்பர் கு. அழகிரிசாமி அவர்களின் கதைக் களமான “திரிபுரம்” நிகழ்ந்த சாத்தூரின் வெம்மை மிகுந்த சாலையில்அவரின் பூ உடலுக்கு அஞ்சலிசெலுத்தலாம் என தோழர்கள் பிரியா கார்த்திக் மற்றும் வழக்கறிஞர் விஸ்வநாதன், கோவில்பட்டி மாரீஸ் ஆகியோரோடு பேசி உடனடியாக அந்த வேலைகளை துவங்கினோம்.

தமுஎகச சாத்தூர் கிளை தோழர்கள், அலைபேசி வாயிலாக உடனடியாக சாத்தூர் நகரின் அனைத்து கலை இலக்கிய செயல்பாட்டாளர்களையும், அரசியல் கட்சி பொறுப்பாளர்களையும் கட்சிவேறுபாடின்றி அழைக்கிறார்கள்.பொது முடக்க காலம் என்ற போதிலும் பல திசைகளிலிருந்து மூத்த தோழர்கள், இளம் வாசிப்பாளர்கள், வாலிபர் சங்க - மாணவர் சங்க தோழர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்.வாட்ஸ்அப் வாயிலாகவும் முகநூலின் வழியாகவும் கிடைத்த செய்தியை பார்த்துவிட்டு இந்தமாலை நேரத்தில் இவ்வளவு பேர் கூடி நிற்பது உண்மையிலேயே மகத்தான கரிசல் இலக்கியத்தின் பிதா மகனுக்கான பெரும் மரியாதை என்று உணர்கிறோம்.

காவல்துறை வாகனம் முன்னே செல்ல..
சாத்தூர் புறவழிச்சாலை தாயில்பட்டி விலக்கில் நின்றஆம்புலன்சில் கி.ரா மெளனமாக தூங்குவதைப் போல படுத்திருக்கிறார்.தமுஎகச கிளைத்தலைவர் ப்ரியா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அவர் மிகவும் நேசித்த எழுத்தாளர் எஸ். இலட்சுமணப் பெருமாள், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத்தலைவரும், எழுத்தாளர் ச.தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வருமான மருத்துவர் அறம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பா.அசோக், காங்கிரஸ் பொறுப்பாளர், தொழிலதிபர் லட்டு  கருப்பசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ந. தங்கவேல்,  அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் எஸ். சண்முகக்கனி, திமுகநகரச் செயலாளர் குருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோரும், தமுஎகச கிளைத் தோழர்கள் அனைவரும் கூடி நின்று ..

விண்ணதிர கோஷமிட்டு  மலர்வளையம் வைத்து மரியாதை செய்தோம்.அதே போல் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கோவில்பட்டி தமுஎகச தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கே.சீனிவாசன், ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளர்கள் கோணங்கி, சாகித்திய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன், கலைஞர் மாரீஸ், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.புதனன்று இடைசெவலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்,தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.இலட்சுமி காந்தன், எழுத்தாளர் பாண்டியக்கண்ணன், ஓவியர் மாரீஸ், எழுத்தாளர் சிவக்குமார், புதுச்சேரியிலிருந்து எழுத்தாளர் பி.என்.எஸ் பாண்டியன், கண்ணை இமை காப்பது போல் இறுதிவரை கி.ராஜநாராயணன் அவர்களை பாதுகாத்த புகைப்படகலைஞர் இளவேனில் ஆகியோர் பங்கேற்றனர்.

பெருந்தொற்றுக் காலமென்றாலும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதி நிகழ்வில் கோவில்பட்டி வட்டார பொது மக்கள் ஏராளமாய் பங்கேற்று நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியது நெகிழ்வாக இருந்தது.“இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் நாம் நம் சமூகத்தைக் காக்க எதைக் கருவியாககொள்வது?”-பத்திரிகையாளர் சமஸ் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இப்படி ஒரு கேள்வியைஎழுத்தாளர் கி.ரா. விடம் கேட்கிறார்.அதற்கு கி.ரா சொல்கிறார் ..

“மனிதாபிமானம் தான் ஒரே கருவி.”

ரொம்ப இக்கட்டான காலகட்டத்துல நம்முடைய முன்னோர்கள் அரசாங்கத்தை பெருசா நம்பினதே இல்லை; அப்படி முழுக்க நம்புனா, முழு மோசம்போயிடுவோம்னு  அவங்களுக்கு தெரியும். சாப்பாட்ட அவங்க சிக்கனமா ஆக்கிக்குவாங்க.  இந்த மாதிரி காலத்துல கையிருப்பு என்னவோ அது மட்டும்தானே  நிதர்சனம்? சம்சாரிங்க அதை எவ்வளவு காலத்துக்கு நீட்டிக்கணுமோ அவ்வளவுக்குப் பாதுகாப்புப் பண்ணிக்குவாங்க. ஆனா, தன்னளவுலதான் சிக்கனம்இருக்குமே தவிர, ஒருத்தருக்குஒருத்தர் உதவிக்கிறது நிக்காது.. கருணை பெருகும்.  அப்படித்தான் மனிதகுலம் இவ்வளவு காலமாக தன்னைக் காபந்து பண்ணிக்கிட்டு வந்திருக்கு. நம்ம வயிறு நெறஞ்சுதான்னு நெனைக்காமா , நமக்குகீழே இருக்கவங்க வயிறு நெறையுதான்னும் பார்த்து, அவங்களுக்கு உதவுற காருண்யம்தான் நாம எப்பவும் கைக்கொள்ள வேண்டிய கருவி!

ஆமாம்.. காருண்யம் மிக்க மனிதாபிமான எழுத்தாளரை நாம் வழி அனுப்பி வைத்திருக்கிறோம். போய் வாருங்கள் எழுத்தாளர் கி.ரா. உங்கள் எழுத்துக்களால் நீங்களும் ..நம் மக்களும் வாழ்வாங்கு வாழ்வார்கள்..

அ.இலட்சுமி காந்தன்,மாநில துணைப் பொதுச் செயலாளர், தமுஎகச.

;