articles

img

ஒரு சங்கி ஒப்புக்கொண்ட உண்மைகள்.... தினமணி கட்டுரைக்கு பதில்....

“அம்பேத்கரும் ஈ. வெ. ரா. வும்” என்று அர்ஜுன் சம்பத் தினமணியில்(6-1-21) கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் ஒரே நோக்கம் தந்தை பெரியாரை மட்டந்தட்டுவது, அதற்காக மட்டுமே அண்ணல்அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பது. வேடிக்கை என்னவென்றால் இதன் காரணமாகஇந்த சங்கியே சில உண்மைகளை ஒப்புக்கொண்டிருப்பது!

“சாதியக் கொடுமைகள் நிறைந்த இந்து மதத்தில் நான் பிறந்தேன். ஆனால் நான் இந்துவாகச் சாகமாட்டேன். நான் மதம் மாறப் போகிறேன்” என்று அம்பேத்கர் கூறியதை மனிதர் மேற்கோள் காட்டுகிறார். இப்படியாக இங்குள்ள சாதியக் கொடுமைகளை ஒப்புக் கொள்கிறார். அதுவும் மதம் மாறுகிற அளவுக்கு அவை கொடூரமானவை என அம்பேத்கர்நினைத்ததையும் ஏற்றுக் கொள்கிறார். அப்படியெனில் அவற்றை ஒழிக்க இவரின் குருபீடமாம் ஆர்எஸ்எஸ் இதுவரை என்ன செய்ததுஎன்பதை விளக்கியிருக்க வேண்டும் அல்லவா? அதுதான் இல்லை.

மாறாக இஸ்லாம், கிறிஸ்தவத்திற்கு மாறாமல் புத்தத்திற்கு அம்பேத்கர் மாறியதைச் சுட்டிதிருப்தி அடைகிறார். ஏதோ தனியராக மதம் மாறவில்லை, அவரோடு லட்சக்ககணக்கான தலித்துகள் மதம் மாறினார்கள். இப்படி மதம்மாறினாலும் பரவாயில்லை, சாதியத்தை ஒழிக்க முன்னெடுப்பு எதையும் செய்ய மாட்டோம் எனப் பிடிவாதமாக இருந்ததுதான் சங் பரிவாரம்.அதனால்தான் இன்றைக்கும் சாதிமறுப்பு திருமணங்களை இவர்கள் ஆதரிப்பதில்லை. மதமறுப்பு திருமணங்களைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்திருப்பது இதற்கான முன்னோட்டம்தான். சாதிக்கொரு மடம் இருக்கிறது, ஆகமக் கோயில்களில் அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாது. இவற்றைஎதிர்த்தும் சங் பரிவாரிகள் வாயைத் திறந்தது இல்லை.

இன்றைக்கே இப்படி என்றால் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும் நிலைமை? அதனால்தான் இந்து மதத்திலிருந்து விலகிபுத்தத்தை தழுவினார் அம்பேத்கர். அது மட்டுமா, அந்த மாபெரும் மதமாற்ற விழாவில்இந்து கடவுளர்களை வணங்க மாட்டோம், புரோகிதர்களைக் கொண்டு சமயச் சடங்குகளைச் செய்ய மாட்டோம் என்று குறிப்பாகவும்உறுதிமொழி எடுக்க வைத்தார். இத்தகையவரை “மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிரானவர் அம்பேத்கர்” என்று அர்ஜுன்சம்பத் குறிப்பிட்டிருப்பதுதான் நகைமுரண்!அடுத்து எழுதுகிறார்: “இருவருக்கும் இரண்டு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. ஒன்று, மநுதர்மம், வருணாசிரம கொள்கைகளை எதிர்ப்பது. இன்னொன்று கம்யூனிசத்தை எதிர்ப்பது”. ஆக அம்பேத்கரும் பெரியாரும் மநுஅதர்மத்தை எதிர்த்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த அளவுக்குசரியே. அவர்கள் எதிர்த்த அந்த மநுசாஸ்திரம்பற்றி ஆர்எஸ்எஸ்சின் பார்வை என்னவோ?

சமீபத்தில் மநு பற்றிய விவாதம் வந்த போது சங் பரிவாரிகளில் சிலர் கொந்தளித்தது ஏன், சிலர் ஓடிஒளிந்தது ஏன்? அம்பேத்கரை மதிப்பதாக இருந்தால் அவர் வன்மையாக எதிர்த்த மநுசாஸ்திரத்தை இவர்களும் எதிர்த்திருக்க வேண்டுமன்றோ? ஏன் எதிர்க்கவில்லை? ஏனென்றால் மநுமீது மாறாக் காதல் கொண்டது ஆர்எஸ்எஸ்.அம்பேத்கர் நவீன அரசியல் சாசனத்தை தயாரித்த போது அதில் மநுசாஸ்திரக் கூறுகள் இல்லை எனக் கண்டித்து எழுதியது அது. அதன் குருஜி கோல்வால்கர் மநுவைப் பிரமாதமாகப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். அதுவெல்லாம் இவர்களது மனக் கண்ணில் வருவதால்தான் மநுவை எதிர்க்கவில்லை.

அம்பேத்கரும் பெரியாரும் கம்யூனிசத்தை எதிர்த்தார்கள் என்கிறார் அர்ஜுன் சம்பத். அவருக்கு பாவம் வரலாறு தெரியாது.இந்த மூன்று இயக்கங்களுக்கும் இடையேசில வேறுபாடுகள் உள்ள போதிலும் லட்சியம் ஒன்றுதான். அதுதான் சுயமரியாதை, சமத்துவம், சமதர்மம். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலருடன் நட்பு கொண்டு 1932இல்”சுயமரியாதை சமதர்மக் கட்சியை” ஆரம்பித்தவர் பெரியார்.1948-51 காலத்தில் கம்யூனிஸ்டுகள் மீது கொடூரமான அடக்குமுறை ஏவிவிடப்பட்ட போது கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் அவர். அதன் நீட்சியாக 1952 தேர்தலில் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்.அம்பேத்கரின் நெஞ்சிலோ கடைசிவரை நீங்கா இடம் பெற்றிருந்தவர் மாமேதை மார்க்ஸ். தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் “முதலாளியமும் பிராமணியமும்” என்றவர் அவர். அவரது கடைசி காலப் படைப்புகளில் ஒன்று “புத்தரும் கார்ல் மார்க்சும்” என்பது. கம்யூனிசமானது எந்தவொரு மகத்தான சிந்தனாவாதியையும் விட்டுவைத்தது இல்லை. காரணம் அது மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. வேறுபாடு எல்லாம் அதன் உச்சியாகிய கம்யூனிசத்தை எப்படி அடைவது என்பதில்தான்.

இதுவெல்லாம் பிறப்பின் அடிப்படையிலும், அதன் தொடர்ச்சியாக மதத்தின் அடிப்படையிலும் பேதம் பார்க்கிற மனிதகுல விரோதிகளாம் சங்கிகளுக்குத் தெரியாது. அதனால்தான் ஏதோ அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஜென்மப் பகை இருந்தது போல உளறுகிறார்கள்.அதிலும் அர்ஜுன் சம்பத்தின் உளறலுக்கு அளவே இல்லை. “ஈவெரா தீண்டாமை ஒழிய ஒருபோதும் பாடுபட்டதில்லை” என்கிறார். அவரே, வைக்கம் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் பெரியார் தலைமையில்தான் நடந்தது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்! காலம் முழுக்க பெரியார் சாதியத்தை எதிர்த்துப் போராடியவர். “பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது” என்று சூத்திரர்கள் மத்தியிலே பேசியவர்.

அதுசரி, இந்த சங்கிகள் இன்றைக்காவது தீண்டாமையை எதிர்த்துக் களம் காண்கிறார்களோ? உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் நின்றபோது, அதைத் தகர்க்கக் களம் கண்டது கம்யூனிஸ்டுகள் பங்கேற்றுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணிதானே! இவர்கள் அந்த ஏரியா பக்கமே வந்ததில்லையே! சொல்லப்போனால் இவர்கள்ஆளும் வடமாநிலங்களில்தான் தீண்டாமைப்பேயாட்டம் போடுகிறது. மாட்டுக்கறி உண்ணுகிறார்கள் என்று தலித்துகள் வேட்டை யாடப்படுவதும் அந்த மாநிலங்களில்தான். இவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு பற்றிப் பேச எந்த யோக்யதையும் இல்லை.மற்றொரு உளறல் கேளீர்: “கால்டுவெல் பாதிரியாரால் தமிழகத்தில் பரப்பப்பட்ட ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை”. கால்டுவெல் மட்டுமல்ல உலகின் மொழியிய லாளர்கள் அனைவரும் பகுத்துச் சொல்வது ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு என்பது. இந்த பூமியில்பல மரபினங்கள் இருந்தன என்பதற்கு மொழிரீதியான ஆதாரம் இது.அதுமட்டுமல்ல ஆரியர்கள் பற்றி மநுசாஸ்திரம் பேசுகிறது. “மூன்று வருணத்தவரும் பூணூல் போட்டு உபநயனம் செய்யவில்லை என்றால் ஆரியர் சமூகத்திலிருந்து தரம் தாழ்த்தப்படுவார்கள்” (2:39) என்கிறது அது. ஆரியர்கள் ஒரு தனித்த சமூகம் என்றால்மற்றவர்கள் யார்? சிந்து சமவெளி நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் ஆரியரல்லாதார், திராவிடர்கள் எனும் கருத்தை இந்திய வரலாற்றாளர்கள் முன்வைக்கின்றனர். ஏன் திலகரே ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் எனும்கருத்தை முன்வைத்து நூல் எழுதியிருக்கிறார். இதெல்லாம் அறியாமல் “கால்டுவெல்பாதிரியார்” என்று நாசூக் காக மதமாச்ச ரியத்தை புகுத்துகிறார் அர்ஜுன் சம்பத்.

அப்புறம் “ஈவெரா கொள்கைகள் தமிழுக்கு விரோதமாக இருந்தன” என்று அந்த தேய்ந்த பிளேட்டை மீண்டும் போடுகிறார். அவர்தானய்யா தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்செய்து கணினி யுகத்திற்கு ஏற்ப செதுக்கியவர். அதற்கும் மேலே தமிழுக்கு நன்மை செய்வதாக இருந்தால் தமிழை மத்தியில் அலுவல் மொழி ஆக்கட்டும். இவர்கள் போற்றும் மாமன்னர் மோடிதானே அங்கே இருக்கிறார்! அவர் நினைத்தால் முடியாதது உண்டோ?

இறுதியாக ஒன்று. “ஜனசங்கத்தின் ஆதரவோடுதான் அம்பேத்கர் ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று ஒரு போடு போடுகிறார். பம்பாய் மாநிலத்திலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அவரை வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு அதன் சட்டமன்றத்தில் ஜனசங்கத்திற்கு அந்த 1952இல் எம்எல்ஏக்கள் இருந்தார்களா? விக்கிபீடியாவோ ஒரு எம்எல்ஏகூட அதற்கு இல்லை என்கிறது! பிறகு எப்படி...? சங்கிகளுக்கே வெளிச்சம்!

===அருணன்===

;