articles

img

எடப்பாடியாரின் அளப்புகளும் எதார்த்த நிலைமையும்....

மோடியின் சவடால் திட்டமான தூய்மை இந்தியாவின் தோல்விக்கும் எடப்பாடியாரின் ஒட்டுமொத்த நிர்வாக தோல்விக்கும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவு மேலாண்மையின் தோல்வியும் ஒரு உதாரணமாகும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 233 தினக்கூலியில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள், செக்யூரிட்டிகள், ஒப்பந்த முறை செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவர்களும் அர்ப்பணிப்போடு சேவை செய்துவருகின்றனர். கொரோனா வார்டுகள், நுரையீரல் தொற்று நோயாளிகளின் வார்டுகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தன என்பது என்னவோ உண்மைதான். ஆனால் பாத்ரூமிற்கு சென்றால் திணற வைக்கும் நெடி ( துர்நாற்றம்) வீசுவதை நாம் உணரமுடிந்தது. பல வார்டுகளிலும் இதே நிலைதான். குறிப்பாக என்ஜிஓ வார்டிற்கும் வார்டு எண் 308-306-க்கும் இடையில் இரண்டாம் தள காரிடாரில் நடந்தபோது அந்த பகுதி முழுவதும் அதே கடுமையான நெடி வீசியதையும் உணர்ந்தோம். இதுபற்றிய விசாரணையில் அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்தன. 

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப் படும் கழிவு நீர் பைப் லைன்கள் தரையில் பெரிய சிமெண்ட் பைப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவு நீர் சிமெண்ட் லைன்கள் மருத்துவமனையின் பின்புறம் தொட்டிகளில் சேர்ந்து அங்கிருந்து கான்கிரீட் சிலாபுகள் போட்டு மூடப்பட்ட பெரிய சிமெண்ட் வாய்க்கால் மூலம், சடலக்கூராய்வு கட்டிடத்திற்கு பின்புறம் கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு திட்ட தொட்டிகளுக்கு வந்து சேர வேண்டும். ஆனால் சுமார் ஆறு ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படவில்லை. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்பின்புறம் வடிவாய்க்கால் மூலம் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட வாலவாய்க்கால் என்னும் பாசன வாய்க்காலில் கலக்கிறது.

இது வயல்களில் பரவி நிலத்தடி நீரையும் அபாயகரமாக பாழ்படுத்துகிறது. மருத்துவமனை உள் வளாகத்திலும் வெளியே பாதை நெடுகிலும் பல இடங்களில் கழிவு நீர் குழாய்கள் விரிசலடைந்து பல இடங்களில் பெருக்கெடுத்தோடும் மழை நீரோடு சகதி மற்றும் இதர திட கழிவுகள்புகுந்து குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. குழாய்கள் சுத்தம் செய்யப்படாததால் ஆங்காங்கேகழிவு நீரும் ஏராளமான திட கழிவுகளும் சேர்ந்துகுழாய்களுக்குள் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு,அம்மோனியா வாயுக்கள் உற்பத்தியாகியுள்ளதாகவும் குறிப்பாக என்.ஜி.ஓ வார்டு மற்றும் வார்டு எண்கள் 306, 308 மற்றும் அதன் வளாக வெளியில்பரவியிருக்கும் வாயு நெடிக்கு காரணம் என தெரிகிறது. மேலும் பைப் லைன்கள் வழியாக நாற்றம் பாத்ரூம்களிலும் பரவி நோயாளிகளை திணறடித்து வருகின்றன. கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டின்வலப்புறம் உள்ள கேட்டிற்கு வெளியில் கழிவு நீர் தேக்கமும் மனிதக் கழிவுகள் அதில் மிதந்து கொண்டிருக்கும்அவலத்தையும் பார்க்க நேர்ந்தது. 

அவலத்தின் உச்சகட்டம்
மருத்துவமனையின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தண்டலை ஊரட்சிக்குட்பட்ட வாலவாய்க்கால் என்னும் பாசன வாய்க்காலில் கலப்பது சீரியசான விஷயம் என்பது ஒருபுறம். சடலக்கூராய்வு கூடத்திற்கும் தெற்கே செல்லும் சாலையில் சராசரியாக சுமார் ஒருஅடி உயரம் பிளாஸ்டிக் பைகள், ஊசிகள், காலி செலைன் மற்றும் மருந்து பாட்டில்கள், ரத்தம் ஊண்நீர்துடைத்த பஞ்சுகள், துணிகள் உள்ளிட்ட தொற்று உயிர் மருத்துவக் கழிவுகள் சுமார் 150 மீட்டர் தூரம் வரை கொட்டப்பட்டு கிடக்கின்றன. மருத்துவக் கழிவுகள் மழை நீரில் நனைந்து ஊறி வேதியல் நஞ்சு கொண்ட அந்த கழிவு நீர் அருகாமையில் உள்ள சிமெண்ட் வாய்க்கால் சிலாபுகளுக்குள் புகுந்து பாசன வாலவாய்க்காலில் கலந்தும் வருகிறது. இந்தச் சுற்றுச்சூழல் பயங்கரத்தைப் பற்றியும் எப்படிப்பட்ட சுகாதாரக் கேட்டை இது விளைவிக்கும் என்பதைப் பற்றியும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித்துறை, எல்லாவற்றிற்கும் மேலாக திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறிதும் அக்கரை இல்லை. 

கேள்விக்குறியான தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் ஆணைஅரசியலமைப்பு விதிகள் 243புஇ 243றுஇ 243ணுனு - உடன் திடக் கழிவு மேலாண்மை விதிகள்2016-விதி 15-இன் வெளிச்சத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் பிறப்பிக்கப்பட்ட 15.7.2019 ஆணையின்படி சுற்றுச்சூழல் திட்டம் தயாரிக்கும் குழு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2019 ஆகஸ்ட்டில்அமைக்கப்பட்டது. உயிர் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், அன்றாட கழிவு நீரின் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியின் தலைவர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டங்கள் ; 26.8.2019, 9.10.2019 மற்றும் 15.11.2019 மூன்று முறை கூட்டப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தள தகவல்கள் கூறுகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அந்த ஆணை, ஒவ்வொரு மாதமும் இதன்மாதாந்திர கண்காணிப்பு அறிக்கை அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாதாந்திர கண்காணிப்புக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றதா? அவைகளில் முந்தைய முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டதா? மாதந்தோறும் அரசிற்கு அதன் அறிக்கை அனுப்பப்பட்டதா அந்த அறிக்கைகள் மீது அரசின் அறிவுரை என்ன என்பதை திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் இணைய பக்கங்களில் தெரிந்து கொள்ள முடியவில்லை. 

தூய்மை இந்தியாவும் தோல்வி அதிமுக நிர்வாகமும் தோல்வி தமிழ்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளிலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் இதே நிலைதான் உள்ளது. மகத்தான சேவைசெய்து வரும் மருத்துவமனை மற்றும் துப்புரவுப் பணியாளர்களை அத்துக்கூலி அடிமைகளாக வைத்துக்கொண்டே தூய்மை இந்தியா திறந்தவெளி கழிப்பிடமில்லாத இந்தியா என்று டிஜிட்டல் சக்திமான் மோடிஜி வழக்கம்போல வாயால் அளந்தார். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பல இடங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இருப்பதை இன்றும் நாம் காணமுடியும். 

ஒவ்வாமை, நுரையீரல், தோல், சிறுநீரகம் மற்றும்நரம்பியல் நோய்கள் உள்பட கிராமங்கள் நகரங்களில்சத்தமே இல்லாமல் இவைகள் உருவாக்கும் பிரச்சனைகள் கணக்கிலடங்காதவை. ஆனால் சமீபத்தில் அறிவித்த அம்மா மினி கிளினிக்குகள் பற்றிய எடப்பாடியாரின் அளப்புகள் மட்டும் குறையவில்லை. உண்மையில் கேரளத்தில் கிராமக்கிளினிக்குள் 2008 ஆம் ஆண்டே துவக்கப்பட்டு அமைதியாக வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. மருத்துவக்கழிவுகள் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளின் மேலாண்மை இந்தியாவின் முன்மாதிரியாக கேரளத்தில் நடைபெறுவதுடன் பெருந்தொற்று தடுப்புத் திட்டங்கள் உலகம் போற்றும் வகையில் நடைபெற்று வருகிறது. 

சிஐடியு-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள், செக்யூரிட்டிகள், துப்புரவு பணியாளர்களுக்குகையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. இவர்கள் சராசரி 10 மணி நேரம் வேலைசெய்யும் போது, மருத்துவமனையில் நிலவும் சுகாதாரச் சுற்றுச்சூழல் கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாகவே குடவாசல் சாந்தி வேலுக்குடி காளிமுத்து, குளிக்கரை ஜெயமணி, நடுவச்சேரி பக்கிரிசாமி, விளமல் மணல்மேடு பத்மாவதி உள்ளிட்டோர் அநியாயமாக மரணமடைந்தார்கள். இவர்களுக்கு இழப்பீடு கோரி போராடினோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் அரசும் அசைந்து கொடுக்கவில்லை என்று கூறினார்.

தூய சுற்றுச்சூழலுக்கான உரிமை, வாழ்வதற்கான உரிமை என தேசிய பசுமை தீர்ப்பாயம் 15.7.2019 ஆணையில் வலியுறுத்தியிருந்தது. தமிழக அரசு இந்த உரிமையை மக்களுக்கு மறுத்திருப்பதுடன் பாதிக்கப்பட்ட மரணமடைந்த மருத்துவமனை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தையும் வழங்க மறுத்துள்ளது. இதற்கான தண்டனையை எதிர்வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் அளிப்பார்கள். 

கட்டுரையாளர் :  நீடா சுப்பையா

;