articles

img

முறைசாராத் தொழிலாளிக்குக் கிடைக்குமா முறையான பாதுகாப்பு?

இந்தத் தொழிற்களத்திற்குப் பெயர் என்னவோ “முறைசாராத் துறை” என்பதுதான். ஆனால் நாடு முழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவந்திருப்பதும் இந்தத் துறைதான். இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் அதிகமானவர்கள் வேலைகளை இழந்துகொண்டிருப்பதும் இதே துறையில்தான். பட்டறைகள், கடைகள், சிறிய பரிசோதனைக் கூடங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் எனப் பலவகைத் தொழில்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிற இவர்கள் குறிப்பாக இரண்டாவது அலை கோவிட்-19 காலத்தில் பெரிய அளவுக்கு வேலையையும் வருவாயையும் இழந்திருக்கிறார்கள்.

“வீட்டில் பிள்ளைகள் சாப்பிடறதுக்காவது ஏதாவதுசெஞ்சு கொடுக்க வேண்டியிருக்கு. ஒரு ஐநூறு ரூபாய்கொடுங்க… அடுத்த மாசம் திருப்பிக்கொடுத்திடுறேன்,” என்று உதவி கேட்கிறவர் மிகப்பெரும்பாலும் இப்படிப்பட்டதொரு முறைசாராத் தொழிலாளியாகத்தான் இருக்கிறார். “அடுத்த மாசம்” என்பது அதற்குள் பொதுமுடக்கம் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுத் தனக்கு மறுபடி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அவருக்கு உதவுகிறவர், அடுத்த மாதம் அந்தத் தொழிலாளியின் கையில் பணம் புழங்கும் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் பரிவோடு கொடுக்கிறார். அவரால் இப்படி எத்தனை காலத்திற்குக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?  இவரால்இப்படி எத்தனை காலத்திற்குக் கொடுத்துக்கொண்டிருக்க முடியும்?

இரண்டாவது அலையால்
இது குறித்து ஆய்வு நடத்தியுள்ள இந்தியபொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ),“கோவிட்-19 இரண்டாவது அலை காரணமாக ஒருகோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் வேலைகளை இழந்துவிட்டார்கள்,” என்று தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 97 சதவீத குடும்பங்கள் வருமானஇழப்பை எதிர்கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்1 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்டஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“இவ்வாண்டு ஏப்ரலில் வேலையின்மை விகிதம்8 சதவீதமாக இருந்தது. மே இறுதியில் இது 12 சதவீதமாக அதிகரித்திருக்கக்கூடும்,” என்கிறார் சிஎம்ஐஇ தலைமை நிர்வாகி மஹேஷ் வியாஸ். “சுமார் 10 மில்லியன் அல்லது ஒரு கோடி இந்தியர்கள் இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது,” என்கிறார் அவர்.பொதுவாகவே வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தாத, இருக்கிற வேலைகளைப் பாதுகாக்காத இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளால், முறை சார் தொழில்களில் கூட வேலைவாய்ப்புகள் கடந்த பல ஆண்டுகளாகச் சரிவடைந்து வந்திருக்கின்றன. உற்பத்தி சாராத நிதி முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டது போன்ற காரணங்களால் அந்தச் சரிவு ஏற்பட்டது.அதன் தொடர் விளைவாக முறைசாராத் துறையிலும்பல சிறு தொழிலகங்களின் கதவுகள் மூடப்பட்டன. ஒருபெரிய நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கை சுருங்குகிறபோது, அந்த நிறுவனத்தையொட்டி இருந்த சிறு உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை தொடர்ந்து செயல்பட இயலாத நிலைமை ஏற்பட்டது. இந்தப் பொதுவான காட்சி ஒருபுறமிருக்க, தற்போது ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளுக்கு மையமான காரணம் கோவிட்-19 இரண்டாவது அலைதான் என்கிறார் வியாஸ்.

சென்ற ஆண்டு மே மாதம், நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் காரணமாக வேலையின்மை விகிதம் அது வரை இல்லாத அளவுக்கு 23.5 சதவீதத்தைத் தொட்டது. இவ்வாண்டு மே மாதம் இரண்டாவது அலைஉச்சத்தை அடைந்துவிட்டது, இனி அது படிப்படியாகக் குறையக்கூடும் என்பதால் மாநில அரசுகள் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பாதிக்கிற கட்டுப்பாடுகளைக் கணக்கிட்ட முறையில் தளர்த்த வேண்டிய தேவை இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரமும் சம்பந்தப்படுவதால் பொதுமுடக்கத்தைத் திட்டமிட்ட முறையில் தளர்த்தத்தான் வேண்டும் என்று அறிவியலாளர்களும் ஒப்புக்கெசாள்கிறார்கள். அதே வேளையில்சரியான கலந்தாலோசிப்புடனும் வழிகாட்டல்களுடனும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

“சாதாரண” வேலையின்மை
குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்கள் தாக்குப்பிடித்துக் கொரோனாச் சூழலையும் குடும்ப நிலைமையையும் எதிர்கொள்ள, மீண்டும் கதவுகள் திறக்கப்பட இப்படிப்பட்ட அணுகுமுறைகள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. “இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் 3 முதல் 4 சதவீதம் வரையில் வேலையின்மை இருக்கிற நிலைமையைத்தான் சாதாரணமானது என்று எடுத்துக்கொள்ள முடியும்,” என்று சிஎம்ஐஇ தெரிவிக்கிறது. பொருளாதாரச் செயல்பாடுகள் மறுபடி வேகம் பிடிக்கிறபோது இந்தப் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும். ஆனால் முற்றிலுமாகத் தீர்வு ஏற்பட்டுவிடாது என்று வியாஸ் கூறுகிறார்.  பொதுமுடக்கம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னரும் கூட, இந்த சாதாரண வேலையின்மை விகிதத்தை அடைவதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதே இதன் பொருள்.

இதிலேயும் ஒரு முன்மாதிரி…
அதுவரையில் இப்படிப்பட்ட முறைசாராத் தொழிலாளர்களின், அவர்களது குடும்பங்களின் நிலை?இவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பாதுகாப்பளிக்கிற கொள்கை சார்ந்த திட்டங்களை வகுப்பது, ஏற்கெனவே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை வலுப்படுத்துவது என்ற ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை. இதற்குக் கேரளம் நல்லதொரு முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே, அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த இயற்கைக் பேரிடர்களைக் கையாண்டதில் கிடைத்த அனுபவங்களிலிருந்தும், மக்கள்நல அக்கறைகளிலிருந்தும் உருவானதே அந்த முன்மாதிரி.இ.கே. நாயனார் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, 1996ல், ‘மக்கள் திட்ட இயக்கம்’ என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் மட்டுமே, மாநில அரசின் பட்ஜெட் நிதியில் 35 சதவீதம் உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிதித்தேவைகளுக்கு அரசையும்அதிகாரக்கட்டமைப்புகளையும் நாடியிருக்கிற நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளே உள்ளூர் வளர்ச்சிக்கான முன்னுரிமைத் திட்டங்களை மேற்கொள்ள வழி செய்யப்பட்டது. குறிப்பாக இது நேரடியாக ஊரக மருத்துவ சேவைகளையும், அதற்கு அடுத்தநிலையிலான மருத்துவமனை சேவைகளையும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு
களை உள்ளாட்சிகளுக்கு அளித்தது.அதே போல் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1998ல் கொண்டுவரப்பட்ட குடும்பஸ்ரீ திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளாட்சிகளோடு இணைந்து செயல்பட வழி செய்தது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறவர்கள்தான். இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளை மதித்து அவற்றிடம் பொறுப்புகளை ஒப்படைத்ததும், சுய உதவிக்குழுக்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தியதும், புயல்கள் தாக்கியபோது விரிவான உதவிகள் எளிய மக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தின. குறிப்பாக, பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு முறைசார் தொழில்களைச் சார்ந்திருப்போருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தோள்கொடுக்கும் திட்டங்களாக இவை அமைந்தன. அதுதான் தற்போதைய பெருந்தொற்றுச்சூழலிலும் இவர்களுக்குத் துணையாக வருகிறது.இதே போன்ற கொள்கைகளை வகுப்பதற்கோ, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கோ, ஏற்கெனவேஉள்ள ஏற்பாடுகளை வலுப்படுத்தி ஒருங்கிணைப்பதற்கோ ஒன்றிய அரசும், பிற மாநிலங்களின் அரசுகளும் பெருந்தொற்று ஓயும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை.

கட்டுரையாளர் : அ.குமரேசன் 

;