articles

img

காவிரிப் படுகை குறுவை சாகுபடியும் புதிய அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பும்....

பத்தாண்டு கால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து புதிதாக பதவிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்படுத்தும் மரணங்களும், தொற்றாளர்களின் அதிக அளவிலான எண்ணிக்கையும் அரசாங்கத்தை வழிநடத்தும் ஆட்சியாளர்களுக்கு சவாலாகவே உள்ளது. இந்த நிலையில் புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பும் கடந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற தவறிய நீண்ட கால கோரிக்கைகளும் ஏராளமாக உள்ளன.  

அணை திறப்பும்  நீர் மேலாண்மையும்
16.05.2021 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காவிரி நீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்புக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பான்மை விவசாய சங்க பிரதிநிதிகள் ஜூன் 12ஆம் தேதி காவிரி நீரை டெல்டா பாசனத்திற்கு திறந்து விட வலியுறுத்தினர். இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என்று ஜூன் 3 அன்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் இருப்பை விட தற்போது குறைவாக 61 டி.எம்.சி. இருந்தாலும் கேரளா மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஜூன் 3 அன்று தொடங்கியுள்ள தென்மேற்கு பருவ மழை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் ஜூன் மாதம் 9.19. டி.எம்.சி. நீரும் ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி. நீரும் வழங்க வேண்டும் என்று கூறியது. இதில், கடந்த ஆண்டு 2020ல் ஜூன் மாதம் 6.22 டி.எம்.சி, நீரும் ஜூலை மாதம் 10.92 டி.எம்.சி. நீரும் மட்டுமே, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய நிலையிலும் கூட, 23.29 டி.எம்.சி. குறைவாகவே வழங்கியது. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நடைமுறையாகவே உள்ளது. பற்றாக்குறை உள்ள காலங்களில் நீரை விகிதாச்சாரப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது இருந்தாலும் கர்நாடக அரசு தீர்ப்பை மதித்து நடக்க அழுத்தத்தை தமிழக அரசு கட்டாயம் வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஒன்றிய அரசும் காவிரி நீர் ஆணையமும் கர்நாடகத்தை நிர்பந்திக்குமா என்பது கேள்விக்குறியே. காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர்தான் அடிப்படை என்றாலும் நிலத்தடி நீர், மழை நீர் ஆகியவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நிலத்தடி நீரை நம்பி நடக்கும் ஏறத்தாழ மூன்று லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டியுள்ளது. பொதுப்பணித்துறையின் ஒருங்கிணைந்த நீர் நிர்வாகம் நீர் மேலாண்மையை துல்லியமாக கையாள வேண்டிய அவசியம் உள்ளது. 

தூர்வாரும் பணிகளும் கடைமடையும்
டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆறுகள் மற்றும்ஆறுகளிலிருந்து பிரியும் ஏ கால்வாய்கள், ஏ கால்வாய்களிலிருந்து பிரியும் பி கால்வாய்கள் ஆகியவற்றுக்கு சிறப்புத் தூர்வாரும் பணிகளுக்காக தமிழக அரசால் ரூ. 65 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் 4061 கிலோ மீட்டர் தூரம் 647 பணிகளாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் குடிமராமத்துப் பணிகள் ரூ.35.38 கோடி மதிப்பீட்டில் 109 சிறப்பு தூர்வாரும் பணிகள்; ரூ.22.92 கோடி மதிப்பீட்டில் 165 பணிகள் என 944.97 கிலோ மீட்டர் நீளமும்;  பொதுப்பணித்துறை மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 231 வாய்க்கால் 298.8 கிலோ மீட்டர் நீளமும் தூர்வாரத் திட்டமிடப்பட்டது. இதில் தூர்வார எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் மேட்டூர் அணை திறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு என்பதால் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் உரிய திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றுவதில் சரிபாதி அளவில்தான் என்பதே இன்றளவும் விவசாய அமைப்புகளின் குற்றச்சாட்டு. 
தற்போதும் தூர்வாரும் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலமும் அதுவே. நடப்பாண்டில் இதுவரை 30 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் முதல் பணிகளுக்கான அதிகாரிகள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். 02.06.2021 அன்று தஞ்சையில் தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகளின் ஒருமித்தக் குரலாக வந்தது, எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் உரிய திட்ட மதிப்பீட்டின் படி முழுவதும் நடைபெற வேண்டும் என்பதே. இனி வரும் ஆண்டுகளில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்வள ஆதாரத்துறையே நேரடியாக தேவையான இயந்திரங்களை கொண்டு பணியாளர்களை நியமித்து தேவையான இடங்களில் வாய்ப்பான நேரங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ளலாம். 

விவசாய வேலை வாய்ப்பை உறுதி செய்திட...
2021 மே 16 முதல் மே 23 முடிய ஒரு வார வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களின் படி நகர்ப்புறங்களில் வேலையின்மை உயர்கிற நிலையில் கிராமப்புறங்களில் 14.3 சதவிகிதத்திலிருந்து 13.5 சதவிகிதமாக வேலையின்மை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நகர்ப் புறங்களில் வேலைவாய்ப்பிற்காக சென்று திரும்பிய கிராமப்புற மக்கள்சொந்த கிராமங்களில் சொந்த விவசாய வேலையையும் கிடைக்கும் விவசாயப் பணிகளையும் செய்யும் நிலைஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த பட்ச உணவுத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. இவ்வாண்டு திட்டமிடப்பட்டுள்ள 5,21,000 ஏக்கர் குறுவை சாகுபடி பணிகளுக்கு பெண் தொழிலாளர்களுக்கு எரு கலைத்தல், சேற்றுக் களை எடுத்தல், நாற்று நடவு, களை எடுப்பு உள்ளிட்ட பணிகளில் ஏறத்தாழ ஏக்கருக்கு 50பேர் என்றால் 2கோடியே 50லட்சம் வேலை வாய்ப்புகளும், ஆண் தொழிலாளர்களுக்கு வரப்பு வெட்டுதல், வயல் சீரமைப்பு, டிராக்டர் ஓட்டுவது, நாற்று பறிப்பது, உரமிடுவது, பூச்சிக்கொல்லி தெளிப்பது என சராசரி 30 பேர் என்றால் ஒரு கோடியே 50லட்சம் வேலை வாய்ப்புகளும் மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் ஏற்படவாய்ப்புள்ளது. நடவுப் பணியில் இயந்திரப் பயன்பாட்டினால் வேலை வாய்ப்பில் சற்று குறைவு ஏற்படலாம். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ரூ. 64.86கோடியில் 1325 ஊரக வாய்க்கால்கள் - 5309 கிலோ மீட்டர் தூரம் வேலை உறுதித் திட்டத்தின் படி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு கால்வாய்க்கும் கடை மடை உண்டு. கடைமடை வரை நீர் செல்ல சி,டி,இ பிரிவு கால்வாய்களை இத்திட்டத்தின் படி தூர்வாரப்பட்டால் அதற்கான வேலை வாய்ப்பும் கிடைக்கும். பேரூராட்சிப் பகுதிகளில் செல்லும் சி, டி, இ பிரிவு கால்வாய்களை தூர்வார பேரூராட்சிப் பகுதிகளில் வேலை உறுதித் திட்டத்தைசெயல்படுத்தினால் இக்காலத்தில் அம்மக்களுக்கு நல் வேலை வாய்ப்பாக அமையும். 

பயிர்க்கடனின் தேவைகள்
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் குறுகியகால பயிர்க் கடன், நகைக்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் ரூ.5000 கோடி அதற்காக ஒதுக்கீடும் செய்யப்பட்டது. சில கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதுகளும் வழங்கியுள்ளனர். தள்ளுபடி செய்த நகைக்கடனில் நகைகளை திருப்பி அளிக்க வேண்டிய கோரிக்கைகளும் தொடர்ந்துகொண்டுள்ளது.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களையும் சில மாவட்டங்களில் சில பகுதிகளையும் சூறையாடியது. வாழ்வாதாரத்தை சீரழித்தது. இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெற்ற குறுகிய கால பயிர்க்கடன் மத்தியக்கால கடனாக அரசால் மாற்றப்பட்டது. மூன்று தவணைகளாக செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. கஜா புயல் மற்றும் தொடர் இடர்பாடுகள் காரணமாக விவசாயிகளால் கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசினால் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடியில் அரசால் மத்தியக்கால கடனாக மாற்றப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் விவசாயிகளால் அதன் பயனை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கூட்டுறவு வங்கியில் எம்.டி.சி. என்றுசொல்லக்கூடிய கடன்தாரர்களாக 15 முதல் 20 சதவிகிதம்பேர் உள்ளனர். எனவே குறுகிய தொகை கொண்ட இத்தகைய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.

அனைத்து சிறு குறு விவசாயிகளும் கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். 2021 – 22 ஆம் ஆண்டு மாநில தொழில்நுட்ப குழுவினரால் அங்கீகாரம் செய்யப்பட்ட கடன் அளவு ஏக்கர் நெல்லுக்கு ரூ.34175 ஆகும். அந்த அளவு கடன்களை அனைத்துப்பயிர்களுக்கும் வழங்கிட வேண்டும். நில உடைமையாளர்களிடம் சான்று பெற்றால் தான் குத்தகை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என தற்போது கூட்டுறவுவங்கிகளால் தெரிவிக்கப்படுகிறது. கோவில், மடம், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சாகுபடி செய்கிற; கிரையம் பெற்றும் பத்திரப்பதிவு அல்லாமல் சாகுபடி செய்து வருகிற மற்றும்; ஒத்திக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் கடன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும். இத்தகைய நடைமுறையை மாநில அரசு கைவிட வேண்டும். 

உரத்தட்டுப்பாடும் விலை உயர்வும்
டி.ஏ.பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் மானியத்தை ரத்து செய்து ஒன்றிய அரசால் கடுமையாக உரம்விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. நாடு தழுவிய விவசாயிகளின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்ட மானியத்தை தற்போது ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக அவ்வப்போது உரத்தட்டுப்பாடு ஏற்படுவதும் இதனால் தனியார் உரக்கடைகளில் உர விலை உயர்வு ஏற்படும் நிலை தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒன்றிய அரசின் போதுமான ஒதுக்கீடு என்பதையும் எந்த உரம் எந்தப்பகுதியில் எந்தக்காலத்தில் தேவை என்பதையும் துல்லியமாக கணக்கிட வேண்டி உள்ளது. 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் வந்த பிறகும் அதற்கான விலையை தீர்மானிக்கும் ரசீது உர நிறுவனத்திடமிருந்து டி.சி.எம்.மிற்கு சென்று பிறகு கூட்டுறவு சங்கத்திற்கு வருவதற்கு ஏற்படும்  காலதாமதம் ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையை கண்காணித்து, விவசாயிகள் கூடுதல் விலை கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போல பூச்சிக்கொல்லி மருந்துகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலேயே விற்பனை செய்யும் நடவடிக்கை எடுத்தாலும் மிகச்சிறந்ததே.

விதைத் தேவையும் தனியார் நிறுவனங்களும்
டெல்டா மாவட்டத்தில் பல வருடங்களுக்குப் பிறகு 5.21 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரு லட்சத்து ஐயாயிரம் டன் விதை நெல் தேவைப்படுவதையும், இதில் அரசு 17 சதவிகித உற்பத்தி மற்றும் மானியம் வழங்குவதையும் புதிய மாநில அரசு அறிந்திருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏறத்தாழ ஒன்பதாயிரத்து ஐநூறு டன்குறுவை விதை நெல் தேவைப்படுகிறது. 110 முதல் 115 நாட்களில் விளையக்கூடிய குறுகிய நெல் இரகங்களான டி.கே.எம்.9, ஏ.எஸ்.டி.16, ஏ.டி.ட்டி36, ஏ.டி.ட்டி37, ஏ.டி.ட்டி43, ஏ.டி.ட்டி.ஆர்.45, கோ51, கோ53, ஏ.டி.ட்டி53 ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் முழுமையாக மானிய விலையில் வழங்கிட வேண்டும். விதைகிராம திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மட்டுமே மானிய விலையில் குறைவான அளவில்விதைகள் வழங்கப்படுகின்றன. வேளாண்மை விரிவாக்க மையங்களில் கூட மானியமில்லாத விதை நெல்தான் கூடுதலாக வழங்கப்படுகிறது.

விதை நெல் பற்றாக்குறையை பயன்படுத்தி பெரும் நிறுவனங்கள் விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றனர். நெல் விதைகள் 80 சதவிகித முளைப்புத் திறனும் 98 சதவிகித புறத்தூய்மையும் இருக்க வேண்டும் என்கிற விதிகளை எல்லாம் மீறி விதை சான்றளிப்புத்துறை மற்றும் அதிகாரிகள் அனுமதி பெற்றும் விதை ஆய்வு அதிகாரிகள் அனுமதி பெற்றும் விற்பனைக்கு வருகின்றன. தனியார் விதை நெல் பயிரிட்ட விவசாயிகளின் மகசூல் இழப்பு, முளைப்பு இல்லை, வேறு ரக விதை நெல், சுற்றுச்சூழல் காலத்திற்கு ஒவ்வாத இரகங்கள் என்கிற ஏராளமான புகார்கள் கடந்த காலங்களில் வந்துள்ளன. இதனால் கொள்ளை இலாபம் நிறுவனங்களுக்கும், இழப்பு விவசாயிகளுக்கும் தான்.

கொள்முதலும் கள நிலவரமும்
தமிழ்நாட்டில் 43.42 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டாலும், இதில் 36 சதவிகிதம், அதாவது, 15.89 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் டெல்டாவில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2020ல் 35 லட்சம் இலக்கைத் தாண்டி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி காலம் ஜூன்- ஜூலை மாதங்களாக உள்ளதால் அறுவடைக் காலம் மழைக்காலமாக உள்ளது. பருவ நிலை காரணமாக நெல்லில் ஈரப்பதம் கூடுதலாகவே காணப்படும். 17 சதவிகித ஈரப்பத நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அறுவடைக் காலங்களில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. 20சதவிகித ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது ஓரளவு விவசாயிகளுக்கு பலனளிக்கும். 
ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் ஏற்பட்டு மழையால் நனைந்து முளைத்துவிடும் நிலை தொடர்கிறது. செம்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 5 வரை குறுவை, சம்பாபருவ மற்றும் விலை மாற்றங்களால் ஏறத்தாழ 10 நாட்கள்அறிவிக்காமல் கொள்முதல் நிறுத்தப்படுகிறது. அக்காலத்தில் ஏற்படும் கூடுதல் தேக்கம் காரணமாக, விவசாயிகள், தனியாரிடம் நெல்லை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படுகிறது. இதில் மாற்றம் வேண்டும். 

ஜூன் 3 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பிறந்த நாளில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 30கோடி செலவில் நெல் கிடங்குகள் மற்றும் உலர் களங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதே. இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் துவங்கும் லஞ்சம் ஊழல் முறைகேடுகள் கடை நிலை முதல் உயர் மட்டம் வரை கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்ததை தடுத்து நிறுத்தி, விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் எதிர்பார்ப்பான நெல் குவிண்டால் ரூ.2500/-க்கு மாநில அரசின் ஊக்கத் தொகைகளை உயர்த்தி கொள்முதல் செய்திட வேண்டும். 

விவசாயம் என்பதில் வேளாண் துறை மட்டும் அல்லாமல், நீர்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மின்துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அனைத்திற்கும் துல்லியமான ஒருங்கிணைப்பும் திட்டமிடுதலும் செயல்பாடும்தான் இலக்கை நோக்கி அரசை பயணிக்கச் செய்யும். விவசாயிகளைக் காப்பாற்றும்! 

கட்டுரையாளர் :பி.செந்தில் குமார், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;