articles

img

கொரோனா தடுப்பூசி... கியூபாவின் முன்னுதாரணம்....

“ஒரு செல்வந்தருக்குச் சொந்தமான சொத்துக்களை விட விலை மதிப்பற்றது ஒரு மனிதனின் உயிர்”.

இந்த வாசகம் கியூபாவின் தலைநகரான ஹவானாவில் உள்ள காலி காஸ்ட்ரோ  கார்ஷியா பொது மருத்துவமனையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம் கியூபா என்ற நாட்டுக்கு சுகாதாரத்திலும், பொதுமக்களின் உடல்நலத்திலும் உள்ள அக்கறையையும், உறுதியையும் வெளிப்படுத்துகிறது. லாபத்தை விட மனிதர்களுக்கே கியூபா முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெளிவாகிறது. காரணம் கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் நான் ஒரு வாரம் காலி காஸ்ட்ரோ கார்ஷியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்தேன்.  கியூபாவின் மருத்துவர்கள் தான் என் உயிரைக் காப்பாற்றினார்கள். இரண்டுமுறை அவர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். அமெரிக்காவுக்கு நான் பறப்பதற்கு முன்னதாக எனது உடல்நிலையை சீராக்குவது வரை அவர்கள் எனக்கு மிகச் சிறந்த கவனிப்பை வழங்கினார்கள். 

வீடுகளுக்கே சென்று...
 விமானக் கட்டணங்கள் உட்பட அனைத்துச் செலவுகளும் இலவச சேவையாகவே வழங்கப்படுகிறது. கியூபா அரசு மிகவும் வேகமாக தனது மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்திட தேவையானவைகளை தயார்ப்படுத்தியுள்ளது. நோய் அறிகுறி இருக்கிற அனைவரையும் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்வதுடன், வீடு வீடாக ஏறி இறங்கி நடவடிக்கை எடுத்து வருவதோடு தேவைப்படுவோரை தனிமைப்படுத்தியும் நோய்த் தொற்றைத் தடுத்தது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை அடைந்த நேரத்தில் கியூபாவில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை.

 சுகாதாரத்தையும் மக்கள் உடல்நலத்தையும் பேணுவதில் கியூபாவின் ஈடுபாட்டைப் பற்றி எனக்கு முன்பே தெரியும். 2013ல் வடக்கு ஹோண்டதொசில் உள்ள இலவச மருத்துவமனையைப் பற்றி நான் ஒரு டாக்குமென்டரி  எடுத்திருந்தேன். கியூபாவின் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியில் இலவசமாக பயிற்சி முடித்த கியாரிவூண என்ற ஆப்பிரிக்க உள்நாட்டு தத்தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே அங்குள்ள மருத்துவர்கள். அவர்கள் அவர்களது நாட்டில் மிகசிறந்த மருத்துவ சேவையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுக்கு உதவித்தொகையும், இலவச தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை கியூபா  அரசு செய்கிறது. 1998ல் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஆரம்பித்த இந்த திட்டத்தில் ஏறக்குறைய 110 நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு இதற்குள்ளாக பயிற்சி கொடுக்கப்பட்டு விட்டது.

ஓட்டப் பந்தயம் போன்றதல்ல
கோவிட்19 பெருந்தொற்றுக்கு கடிவாளம் போடுவதற்காக உலக அளவில் நடக்கிற தடுப்பு நடவடிக்கைகளில் கியூபா தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அமெரிக்க மருத்துவச் சங்க  இதழ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பிரபல மருத்துவர் ஆண்டனி பௌசி, கொரோனா தடுப்பூசியை மேம்படுத்தி கொண்டு வருவது ஒரு ஓட்டப் பந்தயத்தைப் போன்றதல்ல என்றார். ரஷ்யா, சீனா ஆகியவற்றின் தடுப்பூசிகளை விமர்சித்த அவர் உலக  அளவில் மற்ற நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும்; என்ற கோரிக்கையை முன் வைத்தார். ஆனால் எங்கேயும் கியூபாவைப் பற்றி ஒன்றும் விமர்சிக்கவில்லை. 

கியூபாவின் ஆய்வில் இப்போது நான்கு தடுப்பூசிகள் உள்ளன. அதில் ஒன்றான ஸோபறம் 02 தடுப்பூசி, மார்ச் மாத துவக்கத்திலேயே மருத்துவச் சோதனையின் மூன்றாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. சோதனையில் இருக்கிற மற்றொரு தடுப்பூசியான அப்டலயின் பேஸ் 2 சோதனையும் பிப்ரவரியில் தொடங்கியது. இரண்டு தடுப்பூசிகளையும் மேம்படுத்திக் கொண்டிருப்பது பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், லத்தீன் அமெரிக்காவின் திறமை வாய்ந்த மருத்துவ அறிஞர்கள் மூலமும் ஆகும். ஆனால் மருத்துவர் பௌசி இதைப்பற்றி எந்த கருத்தும் கூறாதது துர்பாக்கியமாகும். அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கியூபாவுடனான பகைமை மன நிலையை மாற்றி தடுப்பூசியை மேம்படுத்துவதிலும், விநியோகிப்பதிலும் உதவ வேண்டும். அதற்கு முதல் படியாக அமெரிக்க தடைகளை நீக்க வேண்டும். இரண்டாவதாக உலக அளவில் கியூபாவின் தடுப்பூசி உற்பத்தி முயற்சியை ஆதரிக்க வேண்டும்.

கியூபாவின் தடுப்பூசி “மக்களுக்கான தடுப்பூசி” என்ற தரத்தில் உயர்வதற்கான சாத்தியமுள்ளது. உலக அளவில் மருத்துவ அறிஞர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் அதற்கான தேவையை வெளிப்படுத்தியுள்ளனர். பெருந்தொற்றின் தொடக்க காலத்திலேயே பலன் தரக்கூடிய தடுப்பூசியை வெளிக்கொண்டு வருவதன் பகுதியாக உலக சுகாதார நிறுவனம் சி டாப் முறையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை ஒரு நாடோ, ஒரு கம்பெனியோ கூட சி டாப் வழியான அனுமதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

மனித உயிருக்கு முன்னுரிமை 
லாபத்தை விட மனித உயிருக்கு முன்னுரிமை வழங்குகிற தெளிவான சிந்தனையுடன் கியூபா ஏற்கனவே செயல்படத் தொடங்கி விட்டது. கியூபா முக்கியமான இரண்டு வழிகளை ஏற்றுள்ளதாக பின்லே தடுப்பூசி இன்ஸ்டிட்யூட்டின், விசின்றெ வேறெஸ் கூறுகிறார். ஒன்று மனிதாபிமான அடிப்படையிலும் சுகாதாரத் தளத்தில் அழுத்தமான அக்கறையைப் பற்றியதாகும். இரண்டாவதாக நாட்டுக்குத் தேவையான  பரியாப்தமாய மருந்துகளின் உற்பத்திக்கு ஊக்கம் கொடுப்பதாகும்.
மிகச்சிறந்த பலன் தரும் சோதனைகளும், உலக பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்நோக்கி இருக்காமல் எளிதாக கிடைக்கப் போகும்  கியூபாவின் தடுப்பூசி கியூபா, ஹெய்தி போன்ற நாடுகளை பாதுகாக்கும். கியூபாவின் தடுப்பூசி மேம்பாட்டு ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்கா உதவ வேண்டும். காரணம் அது நமது நன்மைக்காக மட்டுமல்ல.. உலக நன்மைக்காக. (கட்டுரையாளர் பெத்து கெக்லிய. வாஷிங்டன் டிசியை மையமாக வைத்து செயல்படுகிற ஆராய்ச்சியாளரும், டாக்குமென்டரி தயாரிப்பாளரும் ஆவார். அவர் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மனிதகுல வரலாற்றில் பிஎச்டி பட்டம் பெற்றவர். தற்சமயம் லத்தீன் அமெரிக்காவிலும், அமெரிக்காவிலும் தனியார்மயம் மற்றும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.)                          

தமிழில்: கே.சண்முகம், 

நன்றி: தேசாபிமானி

;