articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்.... மூன்று தலைமுறைகளாய் இயக்கத்தில் பங்களிப்பு....

சென்னை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிக்கு அடித்தளமிட்ட பல தோழர்களில் ஒருவர் எம். லோகநாதன். அவர் வீட்டில்  லெனின், ஸ்டாலின்,  பி.ராமமூர்த்தி, சங்கரய்யா,  கேப்டன் லட்சுமி,  பாப்பா உமாநாத் ஆகிய தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கின்றன.  கல்கத்தா நகரத்திற்கு அவர் சுற்றுலா சென்ற போது, ஜோதிபாசுவுடன்  எடுத்துக்கொண்ட படமும் உள்ளது.

தற்போது 81 வயதாகும் தோழர் லோகநாதன் சென்னைமாநகரில்  தரமணி, கானகம் பகுதியில்  ஒரு ஏழைக் கொத்தனார் குடும்பத்தில் பிறந்தவர். அவர் 9ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதற்கு மேல் பெற்றோரால் அவரைப் படிக்கவைக்க இயலவில்லை. ஆரம்பத்தில் கிண்டி தொழிற்பேட்டையில் ஒரு இன்ஜினியரிங் கம்பெனியில் வேலையில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் சில ஆண்டுகளே வேலை செய்தாலும் அப்பணி அவருக்கு தொழில் பயிற்சியை அளித்தது.  பிறகு என்ஃபீல்ட் கம்பெனியில் சேர்ந்து அங்கு பல ஆண்டுகள் வேலையில் இருந்தார். அக்கம்பெனி மூடப்பட்டதால்  வேறு கம்பெனியில் சேர்ந்துஓய்வு பெறுகிற வரையில் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

என்ஃபீல்ட் கம்பெனியில் வேலையில் இருந்தபோது தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் லோகநாதன் ஆர்வத்தோடு கலந்து கொண்டார். நிர்வாகத்தினுடைய பழிவாங்கும் போக்கு, வேலைநிறுத்தத்தை உடைக்க கருங்காலிகளை பயன்படுத்துவது போன்றவைகளை நேருக்குநேர் கண்டார். அவற்றை  எதிர்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். இத்தகைய போராட்ட ஈடுபாடு அவருக்கு ஓர் அரசியல் பாடமாக அமைந்தது. ஜீவா என்ற தோழர்  தொடர்ச்சியாக அரசியல் விவாதம் நடத்திய பின்னணியில், துவக்கத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த லோகநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1977ல் உறுப்பினரானார்.

கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த அதேநேரத்தில் தாம் வசிக்கும் தரமணி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை உருவாக்கினார். கட்டபொம்மன் உடற்பயிற்சி மையம் துவக்கி, இளைஞர்களுக்கு கம்பு விளையாட்டு, களறி பயிற்சி அளித்தார். அவற்றை ஆர்வத்தோடு பயின்ற இளைஞர்களோடு அரசியல், சமுதாயப் பிரச்சனைகளைப் பேசினார். அவர்களின் பலரைக் கட்சிக்குக் கொண்டு வந்தார். பொங்கல் விழா, கோவில் விழாக்களில் புலி வேடம் கட்டி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதால் அவரது இயக்கப்பணி பாதிக்கிறது என சக தோழர்
கள் சிலர் புரிதலின்றி விமர்சித்திருக்கிறார்கள்.  

“இது பற்றிவி.பி.சிந்தன் அவர்களைச் சந்தித்து ஆலோசனை கேட்டேன். அவர் நான் நடத்திய நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்துவிட்டு, தொடர்ந்து நடத்துங்கள் என கூறினார். அதுமட்டுமல்லாமல், தோழர் வி.பி.சி.  கேட்டுக்கொண்டதற்கிணங்க 1979ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய மாநாட்டுப் பேரணியிலும் அந்த நிகழ்ச்சியை நடத்த வாய்ப்புக் கிடைத்தது,” என்று அன்றைய அந்த மகிழ்ச்சியை உணர்வுப்பூர்வமாக இன்றும்பகிர்கிறார் லோகநாதன்.தரமணியில் கட்சிக் கிளை துவங்கியபோது எதிர்ப்பு வந்தது. கம்யூனிச எதிர்ப்பாளர்களுடன் தயக்கமின்றி கருத்து மோதலையும் நடத்தினார். நேரடி அச்சுறுத்தல்களையும்  பயமின்றி எதிர்கொண்டார். இவருடைய உறுதியான செயல்பாட்டால் கட்சிக்கு வந்த எதிர்ப்பு  மட்டுமல்லாமல், அப்பகுதியில் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளும் குறைந்தன.

ஒரு கட்டத்தில் கட்சிக் கிளையின் செயலாளராக பொறுப்பேற்றார். அக்காலத்தில் எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலை உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டிருந்த கட்சி இடைக்குழுவுக்கு தோழர் எஸ்.கே.சீனிவாசன் செயலாளராக இருந்தபோது, லோகநாதன் இடைக்குழு உறுப்பினராக இருந்தார்.  கானகம் பகுதியில்கட்சியைக் கட்டுவதிலும், பல இளைஞர்களை கட்சிக்குகொண்டு வருவதிலும் லோகநாதன் முக்கிய பங்காற்றியிருக்கிறார். தனது பிள்ளைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சீர்திருத்தத் திருமணத்தை நடத்திவைத்திருக்கிறார். கட்சியில் சேர்ந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக ‘தீக்கதிர்’ வாங்கிப் படிக்கும் வாசகர் இவர்.

1980களில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய விவசாயிகள் ஆதரவுப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது, கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சென்னை மத்திய சிறையில் இருந்தார்.1964ல் லோகநாதன் - ஜெயசுந்தரி திருமணம் நடைபெற்றது. இவருக்கு 2 மகன்கள், 6 பெண்கள்.

ஜெயசுந்தரி
லோகநாதனின் இணையர்  ஜெயசுந்தரிக்கு தற்போது 74 வயதாகிறது. இவர் திருப்போரூர், தையூரைச் சேர்ந்தவர். 5ம் வகுப்பு வரை படித்தவர். விவசாய குடும்பத்தை சார்ந்த இவர் திருமணத்திற்கு பிறகு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து மாதர் சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்டார். தோழர்கள் பாப்பா உமாநாத், வாசுகி, பாலபாரதி, நன்மாறன், ஜான்சிராணி போன்றவர்களோடு நெருக்கமான நட்பு உண்டு என பெருமிதத்தோடு கூறுகிறார். கானகம் பகுதியில் நேரு வீதியில்மாதர் சங்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். 1980ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.  600க்கும் மேற்பட்ட பெண்களை மாதர் சங்கத்தில் சேர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்திற்கு அப்பகுதியில் அடித்தளத்தை உருவாக்கியதோடு, பெண்களுக்கான கட்சிக் கிளையை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியவர் ஜெயசுந்தரி.  சொந்தச் செலவிலேயே பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார். வீட்டிலேயே அடிக்கடி மாதர் சங்க கூட்டம் நடத்தி உதவி செய்தவரான இவர் இன்றும் கட்சி, மாதர் சங்கம் இரண்டிலும் உறுப்பினராக உள்ளார்..

மாநிலம் முழுவதும், சென்னை மாநகரத்திலும் வறட்சி- குடிநீர் பஞ்சம் கடுமையான பிரச்சனையாக இருந்தது. 1981ம் ஆண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில் கோட்டையை நோக்கி பெண்கள் பேரணி தோழர்கள் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், மைதிலி உள்ளிட்ட தோழர்கள்தலைமையில் நடந்தது. அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் திடீரென வந்து, பேரணிக்கு முன்னிலையாக நின்ற மாதர் சங்கத் தலைவர்களை சந்தித்து அங்கேயேமனுவை வாங்கிக் கொள்வதாகக் கூறி கோரிக்கை ஆவணத்தைப் பெற்றார். தானும் அந்தப் பேரணியில் பங்கேற்றதை ஜெயசுந்தரி பெருமிதத்தோடு நினைவுகூர்கிறார்.பெரிய குடும்பம் - போதிய வருமானம் இல்லாத சூழலில் இட்லி வியாபாரம், இலை தைத்து வியாபாரம், பால் வியாபாரம் உட்பட சில கைத்தொழில் மூலம் வருமானம் திரட்டி குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றிக்கொண்டே, இயக்கப்பணியிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். இருவரும் தங்கள் உழைப்பில் கிடைத்த வருவாயிலிருந்தே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்ததோடு, சிறியதொரு வீடும் கட்டியுள்ளனர்.

1980-90களில் மாதர் சங்க மாநில, மாவட்ட மாநாடுகளில் தொடர்ந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட அனுபவங்களை நிறையவே பெற்றிருக்கிறார் ஜெயசுந்தரி. பிள்ளைகளுக்கு  மாதர் சங்க தலைவர்கள் ருக்மணி, விஜயாஜானகிராமன், கட்சித் தலைவர் உ.ரா.வரதராசன் தலைமையில்  சீர்திருத்த திருமணம் செய்து வைத்து சடங்குவலைகளை மீறி வாழ்ந்து காட்டிய இணையர்கள் இவர்கள்.

தோழர் ஜெயசுந்தரி தம்முடைய சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் கட்சியில் இணைத்துள்ளது குறிப்பிடப்பட வேண்டியது.   இளைய சகோதரியுடைய மகளும் கட்சியில் இருக்கிறார் மகன்கள், மகள்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். மகள் வழிப் பேத்தி சத்தியபாமா பெண்கள் கட்சிக் கிளையின் செயலாளராக உள்ளார். மொத்தத்தில் லோகநாதன்-ஜெயசுந்தரி குடும்பம் மகத்தான கட்சிக்குடும்பம். இவர்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையும் 22 பேர் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.

இணையர் இருவரும் இன்றளவும் கட்சி உறுப்பினர்களாகத் தங்களால் இயன்ற இயக்கப்பணிகளைச் செய்து வருவதை சக தோழர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.  இருவரும் ‘தீக்கதிர்’, ‘மகளிர் சிந்தனை’ உள்ளிட்டஇதழ்களை வாசிப்பவர்கள்.லோகநாதன் - ஜெயசுந்தரி இரு தோழர்களும் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த முன்னுதாரணங்களாக அர்ப்பணிப்போடு நிறைவேற்றிவரும்  இயக்கப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

கட்டுரையாளர் : ஜி. ராமகிருஷ்னன்  

;