articles

img

அடையாறின் இன்னொரு ‘ஆலமரம் மருத்துவர் சாந்தா’...

சென்னை அடையாறு என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது புற்றுநோய் மருத்துவமனை. லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திய இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவர் மருத்துவர் சாந்தா என்றால் அது மிகையல்ல.

உலகமே இதுதான்!
1954 ஆம் ஆண்டு குடிசையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தன்னையும் இணைந்து கொண்ட சாந்தா, இதற்காக அரசுப் பணியையும் கைவிட்டார். தனது 93 ஆண்டுக்கால வாழ்க்கையில் 68 ஆண்டுகளை புற்றுநோய் நோயாளிகளை கவனிப்பதிலேயே செலவிட்ட மருத்துவர் சாந்தாவின் உலகமே இந்த புற்றுநோய் நிறுவனம்தான். நிறுவனத்தை விரிவுபடுத்துவது, நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தத் திட்டமிடல் போன்ற பணிகளுடன், தினந்தோறும் மருத்துவ சிகிச்சையும் வழங்கிவந்தார்.

இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் இன்றைய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர் சாந்தா. தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக ஆசியாவின் உயரிய விருதான ‘மகசேசே’ விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றவர்.அடையாற்றின் மற்றோர் ஆலமரம்போல புற்றுநோய் நிறுவனத்தை விருட்சமாக உருவாக்கினார் மருத்துவர் சாந்தா.

யார் இந்த சாந்தா?
மருத்துவர் சாந்தா 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் - பாலாபார்வதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். பள்ளிப்படிப்பிற்கு பிறகு, 1949ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்தினார். 1952 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் மகளிர் மருத்துவத்தில் டிப்ளோமா படித்தார். அதனை தொடர்ந்து, 1955-ல் மருத்துவத்தில் முதுகலை பட்டப் படிப்பை முடித்தார்.
ஒரு வருடம் கனடாவில் பணிபுரிந்தார். பின்னர், மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவருமான ‘முத்துலட்சுமி ரெட்டி’ மூலமாக தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

சேவையே உயிர் மூச்சு!
 1955 ஆம் ஆண்டு தொடங்கியது அவரின் மருத்துவ சேவை. அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். திருமணமே செய்துகொள்ளவில்லை. மருத்துவர் சாந்தா பணிக்கு சேர்ந்த காலத்தில் வெறும் 12 படுக்கைகளை கொண்ட சிறிய மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளை கொண்டு வந்து, புற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்து சர்வதேச அளவில் வளர்த்தெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் மருத்துவர் சாந்தா. புற்றுநோயியல் என்ற துறையில் ஆழ்ந்து படித்து, தனிப்பட்ட படிப்பாகவும், ஆராய்ச்சி படிப்பாகவும் மாற காரணமாக இருந்தவர்.

1980ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனையை உலகளவில் பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன் பெறும் மையமாகவும் மாற்றினார். சுமார் 1,000 மருத்துவ பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் அடையாறு மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் இடமாக மாற்றியுள்ளார்.

கொரோனா காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும், எந்த மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றும், எந்த நோயாளிக்கும் சிகிச்சை தருவதில் தடங்கல் இருக்கக்கூடாது என அயராது பாடுபட்டார்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது. தமிழக அரசின் திட்ட குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ சஞ்சிகைகளில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் ஒளவையார் விருதையும் பெற்றுள்ளார். தனக்கு கிடைத்த பணம் முழுமையும் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு வழங்கிவிட்டார்; தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில், என்றைக்கும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார்.

;