articles

img

மியான்மர் மக்கள் எழுச்சிக்கு துணை நிற்போம்... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்) 

மியான்மரில் , ராணுவம் சதி செய்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டதற்கு எதிராக  மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் கொடூரமான முறையில் நசுக்கப்படுவதற்கு எதிராக, கடந்த பதினைந்து நாட்களாக, அனைத்துத் தரப்பு மக்களும், வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மியான்மரின் ஆயுதப் படைகள் (டாட்மடாவ்) பிப்ரவரி 1அன்று ராணுவ சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றின. அன்றைய தினம்தான் 2020 நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் திறக்க இருந்தது. தேர்தலில் ஆங் சான் சூகி  தலைமையிலான என்எல்டி எனப்படும் ‘ஜனநாயகத்திற்கான தேசிய லீக்’ கட்சி  அளப்பரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ராணுவம் இந்தத் தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமானவை என்று அறிவித்து, ஜனாதிபதி வின் மிண்ட்  மற்றும் ஸ்டேட் கவுன்சிலர் சூகியை பதவிகளிலிருந்து அகற்றியது. அவர்களும், இதர என்எல்டி தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

முக்கிய அதிகாரங்கள் ராணுவத்துக்கு...
 1962இல் ஜெனரல் நீ வின் (Gen. Ne Win) ராணுவ சதிசெய்து ஆட்சியைக் கைப்பற்றி, பல பத்தாண்டுகள் ராணுவம்தான் மியான்மரில் ஆட்சியை நடத்தி வந்தது. ஜனநாயகத்திற்கான இயக்கம் 1981இல் வெடித்தது. ஆயினும் ராணுவம் இதனை மிகவும் கொடூரமான முறையில் நசுக்கியது.  சூகிசுமார் 16 ஆண்டு காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.ஒரு கடினமான போராட்டத்திற்குப் பின் , 2008இல் ராணுவத்தால் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கலப்பு ஜனநாயக அமைப்புமுறையைக் கொண்டுவந்து சில அதிகாரங்களை அளிப்பதற்கு ஒப்புக்கொண்டது. இந்த அமைப்புமுறையின்கீழ், ராணுவம் முக்கியமான அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25 சதவீத இடங்களையும் அது பெற்று, ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த இடங்கள்ஒதுக்கப்படும். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களாக ராணுவத்தினரே இருப்பார்கள். நாட்டின் இதர முக்கியமான துறைகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்திடும்.

2015இல் முதன்முதலாக, மக்களவைக்கு  நடைபெற்ற தேர்தல்களிலும், ஒன்றியத்தின் சட்டமன்றத்தை உள்ளடக்கிய தேசிய இனத்தினர் அவை க்கான தேர்தல்களிலும்  என்எல்டி போட்டியிட்டது. என்எல்டி இரு அவைகளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி, வெளிநாட்டிலுள்ளவரைத் திருமணம் செய்துகொண்டிருப்பதால், மியான்மரின் அரசமைப்புச்சட்டத்தின்படி, அந்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது. எனவே அவர், ‘ஸ்டேட் கவுன்சிலர்’  என நியமனம் செய்யப்பட்டார். எனினும் அவர்தான் நடைமுறையில்  பிரதமராக இருந்தார்.

ராணும் ஆதரித்த கட்சிக்கு வெறும் 5.9 சதவீத வாக்குகளே...
2020 நவம்பர் 8 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்எல்டி மக்களவையில் மொத்தம் உள்ள 310 இடங்களில் 258இலும், ‘தேசிய இனத்தினர் அவை’யில் மொத்தம் உள்ள 168 இடங்களில் 138 இடங்களிலும் வெற்றி பெற்று, தன் நிலையை மேம்படுத்திக் கொண்டது.ராணுவம் தூக்கிப்பிடித்த ‘யூனியன் சாலிடாரிடி அண்ட் டெவலெப்மெண்ட் கட்சி வெறும் 5.9 சதவீத வாக்குகளே பெற்று 26 இடங்களையே பெற முடிந்தது.இதனால் விரக்தியடைந்த ராணுவம், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, ராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. ராணுவம் அரசமைப்புச்சட்டத்தின் ஒரு விதியின்கீழ் அவசர நிலைப் பிரகடனம் செய்தது. அவசர நிலை ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும் என்றும் அதன்பின்னர் புதிதாகத் தேர்தல்கள் நடைபெறும் என்றும் ராணுவம் அறிவித்தது. அதுவரை, ராணுவத்தின் தலைவர்  ஜெனரல் மின் ஆங் ஹிலியாங்  நடைமுறையில் ஆட்சிபுரிபவராக  இருப்பார்.

நாட்டின் வளங்களைச்சூறையாடிய ராணுவத்தினர்
இத்தகைய கடுமையான ராணுவ நடவடிக்கைக்கான நோக்கம் என்ன? ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர்நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் ஒரு சக்திமிக்க வலைப்பின்னலை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். விலைமதிப்பு மிகுந்த கற்கள், மரங்கள் , கனிம வளங்கள் போன்ற சில இலாபகரமான துறைகளை ராணுவ ஜெனரல்களும், பல்வேறு முன்னாள் ராணுவ அதிகாரிகளும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு அவற்றைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.   

ராணுவத்தினர், தாங்கள் தூக்கிப்பிடித்திருக்கும் யுஎஸ்டிபி, தற்போது  நடைபெற்ற தேர்தலில் போதிய அளவிற்கு வெற்றி பெறும், அது என்எல்டி-யையும், ஆங் சான்சூகியையும் கட்டுக்குள் வைத்திடும் என்று நினைத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனாதிபதியாகவோ மற்றும் இரண்டாவது துணை ஜனாதிபதியாகவோ வரவேண்டுமென்றால் அதற்குதேர்தலில் 67 சதவீத வாக்குகளுக்கும் அதிகமாகப் பெறவேண்டும். எனவே இதன்மூலம் என்எல்டி-யை ஆட்சிக்குவராது தடுத்து வைத்துவிடலாம் என்றும் நினைத்திருக்கிறார்கள். எனினும் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ராணுவம் அல்லாத துறைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் என்எல்டி 80 சதவீதத்திற்கும் மேலான இடங்களைப் பெற்றது.

அரசு அதிகாரிகள் உள்பட... 
என்எல்டி-க்கும் மற்றும் அதன் தலைவருக்கும் தேர்தலில் செல்வாக்கு அதிகரித்திருப்பதால், ராணுவத்தின் துணையுடன் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருந்த பிற்போக்கு சக்திகளுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. ராணுவம், மக்கள் மத்தியிலிருந்து முற்றிலுமாகத் தனிமைப்பட்டிருப்பது கடந்த பதினைந்து நாட்களாக நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சியிலிருந்து நன்கு தெரிகிறது. மக்கள் போராட்டத்துடன் அரசாங்க அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் என அனைவரும் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தங்களை இணைத்துக்கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்பிரிவினரின் உதவியின்றி ராணுவம் மட்டும் அரசாங்கத்தை நடத்துவது மிகவும் சிரமமாகும்.  
அதிகரித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்காகத் தற்போது போலீசும், ராணுவமும் அமைதியாகப் போராடுபவர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஏற்கனவே நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ரத்த ஆறு ஓடக்கூடும் என்கிற அச்சஉணர்வு ஏற்பட்டிருக்கின்றன.

ஒருமைப்பாட்டை தெரிவிப்போம்!
எனினும் மக்கள், ராணுவத்தினை எதிர்த்து வீரத்துடனும் தீரத்துடனும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மர்மக்களுக்கு இந்திய மக்கள் முழு ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டியது தேவையாகும். கடந்த காலங்களில் காலனி ஆட்சிக் காலத்தில் நம் இரு நாடுகளும் ஒன்றாக இருந்தவைகளேயாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள், இந்தியாவிலிருந்து பகதூர் ஷா ஜஃபாரை ரங்கூனுக்கு நாடு கடத்தியசமயத்தில், பர்மாவின் அரசர் திபாவை, மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரிக்கு நாடு கடத்தி இருந்தார்கள். பல பத்தாண்டுகள், மியான்மர் மக்கள் ராணுவத்தின் கொடூரமான சர்வாதிகார ஆட்சியின் கீழ் அவதிக்குள்ளாகி இருந்தார்கள்.  இதுபோன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்பதில் அவர்கள் இப்போது உறுதியாக இருக்கிறார்கள்.

இந்திய அரசாங்கம் புவிசார் அரசியல் கணக்குகள்போட்டுக்கொண்டிருக்காமல், மியான்மரில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுடனும் அவர்களுடைய ஜனநாயக விருப்பங்களுடனும் உறுதியாக நின்றிட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம் 

பிப்ரவரி 17, 2021 

தமிழில் : ச.வீரமணி

;