articles

img

உயிர் காக்கும் உத்தம தானம்.... (ஜூன் 14 சர்வதேச இரத்த தான தினம்)

மனித குல வரலாற்றில் மருத்துவம் என்பது உதவியாக தொடங்கி அறிவியல் வளர்ச்சிக்கு பின்பு வணிகமயமாகிய பின்பும் ‘‘தானம்’’ என்ற மனிதநேய சொல்லை தாங்கி நிற்பது  ரத்த தானம் மட்டுமே ஆகும். அதற்கு காரணம் மனித இரத்தம் ஒரு மகத்தானது என்ற அறநெறியும் உலகம் முழுமையும்  இரத்தம் என்பது புனிதத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதுமே காரணம்.ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலோடும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலோடும் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச இரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித உடலில் திரவ நிலை உறுப்பு என்றால், அது இரத்தத்தை தான் குறிக்கும். இரத்தத்தின் குழு மாதிரியை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கார்ல்லேண்ட்ஸ் டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், வருடந்தோறும் ஜூன் 14 ஆம் தேதி சர்வதேச இரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இரத்த தானம் வரலாறு
இரத்த மாதிரிகளை அறிவியல் ரீதியாக கண்டறிவதற்கு முன்பே 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே சிறிய மருத்துவ உபகரணங்கள் கொண்டு இரத்தம் மாற்றப்பட்டதாக   வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. பின்பு 1628 ஆம் ஆண்டு மருத்துவர் வில்லியம் ஹார்லி என்பவர் தன் உடலில் இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தார். பின்பு 1665 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மருத்துவர் ரிச்சர்ட் என்பவர் முதன் முதலாக ரத்தம் ஏற்றுதலை இரண்டு நாய்களுக்கு ஏற்றி வெற்றிகரமாக மருத்துவம் செய்திருக்கிறார். பின்பு மனிதர்களுக்கு 1818 ஜேம்ஸ் புளூடெல் எனும் மருத்துவர் முறையாக ஒரு மகப்பேறு காலத்தில் இரத்தம் ஏற்றி சிகிச்சையை துவக்கினார். பின்பு 1900 ஆம் ஆண்டு ஆய்வாளர் கார்ல் லேண்ட்ஸ்டைனர் தான் முதன் முதலில் ஏ, பி, சி என்ற ரத்த மாதிரியை கண்டறிந்தார். ‘சி’ என்ற பிரிவுதான் பின்பு ‘ஓ’ என்று மாற்றமானது. இரத்தத்தினுடைய பிரிவுகளை கண்டறிந்த பின்பு நடந்த இரத்தம் ஏற்றுதல் என்பது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதன் பின்பு பல ஆய்வுகளின் படி, 1940 ஆம் ஆண்டு ரீசஸ் என்ற குரங்கின் இரத்தத்தின் மூலம் ஒரு புதிய வகை காரணி கண்டறியப்பட்டது. அது மனிதனின் இரத்தத்தின் காரணியை ஒத்திருந்தது. அந்த காரணியை அந்த குரங்கினுடைய  அடையாள பெயரிட்டு, ஆர்.எச். (Rh) காரணியென்றே பெயர்  சூட்டப்பட்டது. அதன்படி இரத்த பிரிவுகள் பாசிட்டிவ், நெகட்டிவ் என வகைப்படுத்தபட்டது. இந்த ரீசஸ் குரங்கிற்கும் மனிதனுக்கும் ஒத்த பண்புகளான ஆர்.எச். (Rh) காரணி கண்டறியப்பட்ட பின்பு தான் இரத்தம் ஏற்றுதலில் பல உயிரிழப்புகள் குறைந்தது. இந்த கண்டுபிடிப்பு என்பது மனிதனும் குரங்கும் ஒரே உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற சார்லஸ் டார்வினுடைய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கு மேலும் வலுசேர்ப்பதாகவே அமைந்தது.

இரத்த வங்கிகள்
இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தில் இரத்த வங்கிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்த வரலாற்றுச் சம்பவம் முதல் உலகப் போர் ஆகும். உலகில் முதல் இரத்த வங்கியை உருவாக்கிய நாடு சோவியத் ரஷ்யா தான். முதல் உலகப் போரில் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு உடனடியாக இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்து இரத்தம் ஏற்றுவதற்குள்ளாக பல   வீரர்கள் மரணமடைந்தார்கள். இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவரான செர்ஜியூதின் என்பவர் தான் ரத்தத்தை சேமிக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்திற்கு வந்தார். இந்த காலகட்டத்தில் தான் ரத்தம் உறையாமல் தடுக்கக்கூடிய ‘சோடியம் சிட்ரேட்’ என்ற வேதிப்பொருள் மூலம் ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற ஆய்வும் கண்டறியப்பட்டது. அதன்படி ரஷ்யா முழுமையும் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ரத்த வங்கி துவக்கப்பட்டது.

இரத்த தானத்தின் அவசியம்
இரத்த தானம் என்பது மனிதநேயத்தின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. விபத்து, பிரசவம், அறுவை சிகிச்சைகள் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் என இரத்த தானத்தின் தேவை அவசியமாகிறது. இரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி செய்யப்படுவதால், இரத்த தானம் மூலம் அவர்களும் ஆரோக்கியமாகிறார்கள்.இந்தியாவில் உச்சநீதிமன்றம் 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் இரத்தத்தின் மகத்துவம் கருதி, இரத்தம் என்பது தானமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதை வியாபாரப் பொருளாக கருதக்கூடாது என்ற வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.உலக சுகாதார நிறுவனம் இரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு, 2004 ஆம் ஆண்டு தேசிய இரத்த கொள்கையை வரையறுத்தது. அதன்படி, இரத்தம் சேகரிப்பு, பரிசோதனை, பகுப்பாய்வு, பாதுகாத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றின் தரத்தை வரையறுத்து கொடுத்தும், தானம் பெறப்படும் இரத்தங்களில் பாலியல் தொற்று நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற  நோய்களை உறுதிப்படுத்தி பாதுகாப்பான இரத்த தானத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்துகிறது.

 வளர்ந்த நாடுகளில் 79 சதவீதமும், இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் 39 சதவீதமும் மட்டுமே இரத்த தானம் அளிக்கப்படுகிறது. இது மனிதர்களின் உயிர் காப்பதில் மிக குறைந்த அளவுதான். இரண்டு விநாடிக்கு ஒரு மனிதருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. ஆதலால் முழுமையான  தன்னார்வ ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை  தூண்டவேண்டும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. நமது இந்தியாவில் சராசரியாக 5 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 2.5 கோடி யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கிறது. இரத்த சேமிப்பு வங்கிகள் பகுப்பாய்வு செய்து நோயாளிகளுக்கு ஏற்றும் போது தொழில்நுட்ப கவனக் குறைபாடுகள் காரணமாக சில வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தது உண்டு. அதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்தையும் அதை கையாளுவோரின் திறனையும் மேம்படுத்துதல் என்பது மிகவும் அவசியமாகிறது. 

கொரோனா பெருந்தொற்று சவால்கள்
இந்த வருடம் கொரோனா பெருந்தொற்றும் அந்த தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் காலச்சூழலில் உள்ளோம். இந்நிலையில், தேசிய ரத்தமேற்றும் கழகம் (NBTC- National Blood Transfusion Council) சில வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது.அதன்படி, காலத்தின் சூழல் கருதி தகுதியும் விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாட்கள் கழித்தும், இரண்டாம் தவணை தடுப்பூசிக்குப் பிறகு 28 நாட்கள் கழித்தும் இரத்த தானம் செய்யலாம். அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டவர்கள் ஆறு  வாரங்களுக்குப் பிறகு மருத்துவர் அறிவுரையின் படி, ரத்த தானம் செய்யலாம் எனவும் வழிகாட்டியுள்ளது.

சர்வதேச ரத்த தான தினம் 2021 கருத்து முழக்கம் 
உலகெங்கும் மாணவர்கள், இளைஞர்களின் இரத்த தான சேவைக்கு இன்றைய நவீன சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளன. இரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் அதிகமாகிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்து முழக்கத்தை மையமாக வைத்து சர்வதேச இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இரத்தம் கொடுப்போம்; உலகத்தை துடிப்புடன் காப்போம் என்ற கருத்து முழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது. இதன் மூலம் ரத்த தானம் அளிக்கும் தன்னார்வலர்களை ஊக்குவிப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், புதிய இரத்த தான தன்னார்வலர்களை உருவாக்க வேண்டும் என்பதுமே இந்த சர்வதேச தினத்தின் கருத்து முழக்கத்தின் பொருள். ஆதலால், இரத்த தானம் செய்வோம்; இன்னுயிர் காப்போம்.

கட்டுரையாளர் : முனைவர் ஜி. சத்தியபாலன், மருந்தியல் உதவிப் பேராசிரியர், மதுரை மருத்துவக் கல்லூரி.

;