articles

img

தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளிமிகு வாழ்க்கை - ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 1990களில் சாதி மோதல் ஏற்பட்டு துயரமிக்க உயிர்ச்சேதங்களும் பொரு ளிழப்புகளும் ஏற்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளராக இருந்த என்.எஸ். கேட்டுக் கொண்ட தற்கிணங்க அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டினார். இரண்டு நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில் என்.எஸ். அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். அக்கூட்டத்தில் அமைதியை ஏற்படுத்துவது பற்றிப் பேசிய அவர், “நாங்கள் மயான அமைதியைக் கோரவில்லை, எங்கள் கட்சி முன்வைக்கும் முழக்கங்களின் அடிப்படை யில் மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதில் அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்பு களுக்கும் முக்கியமான பங்கு உண்டு” என்று கூறி னார்.

“தீண்டாமைக் கொடுமை ஒழிப்போம்,
சாதி மோதலுக்கு முடிவு கட்டுவோம்
மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்”

என ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இந்த முழக் கங்களை என்.எஸ். அவர்கள் பளிச்சென்று வைத்தார். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர், இந்த ஆலோசனையை வர வேற்றார். இதனடிப்படையில் மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசாங்கத்தின் முன்முயற்சி யாகவே தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள் நடந்தன. அந்த மாநாடுகளில் தோழர் சங்கரய்யாவும் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார். அன்றைய சூழலில் தமிழகத்தில் இயல்புநிலை மீட்கப்பட்டதில் சங்கரய்யாவின் இந்த முழக்கங்க ளுக்கும், முன்முயற்சிகளுக்கும் முக்கியப் பங்குண்டு என்றால் அது மிகையல்ல. 

சாதி மறுப்பை சாதித்துக் காட்டியவர்

இன்று, நேற்றல்ல, மாணவப் பருவத்தி லேயே இத்தகைய பிரச்சனைகளை தோழர் சங்கரய்யா எதிர்கொண்டார். தன்னுடைய அரசி யல் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அறி வியல்பூர்வமாக பிரச்சனைகளை அணுகி வந்துள்ளார். சாதி வேறுபாடு கூடாது என்று உரக்கச் சொன்னது மட்டுமல்ல, தானே சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்து கொண்டதோடு, தனது குடும்பத்திலும் பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தவர். மாணவர் சங்கரய்யா சமூக சீர்திருத்தம், கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்டி ருந்த சுயமரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்தார். தேச விடுதலை என்ற லட்சியத்தை கொண்டிருந்த தேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்த நேரம் அது.

அதே நேரத்தில் அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, பூரண  சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கத்தை கம்யூ னிஸ்ட் கட்சி மட்டுமே முன்வைத்தது. இவைகளை யெல்லாம் உள்வாங்கி சாதி பேதமற்ற, பொருளா தார ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூக மாற்றமே சரியான தீர்வாகும் என்றும், மார்க்சியம் மட்டுமே மனித குலத்திற்கு வழிகாட்டும் என்றும் முடிவுக்கு வந்தார். இதன் அடிப்படையில்தான் அவர் கல்லூரி மாணவராக இருந்தபோதே கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். தோழர் கே.பி.ஜானகி யம்மாள், சங்கரய்யா உள்ளிட்டோர் இடம்பெற்ற கட்சிக் கிளை அமைக்கப்பட்டது. அதுதான் மதுரை மாவட்டத்தில் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை. அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க ரய்யா, மாநில அளவிலும் மாணவர் இயக்கத் தலை வராக உருவெடுத்தார். மாநிலம் முழுவதும் ஆங்கி லேயர் ஆட்சிக்கு எதிராக எழுந்த மாணவர் எழுச்சிக்கு சங்கரய்யா வழிகாட்டினார். அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்து, “மண்டைகள் உடைகின்றன, எலும்பு கள் நொறுங்குகின்றன, அண்ணாமலை பல்க லைக்கழக வளாகத்தில் ரத்தம் ஆறாக ஓடுகிறது” என சங்கரய்யா ஆங்கிலத்தில் எழுதிய துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அது எழுச்சி அலை யைப் பேரலையாக்கியது.

சிறை வாழ்வை புன்னகையோடு ஏற்றவர்

அமெரிக்கன் கல்லூரியில் அடக்குமுறை எதிர்ப்புக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதற்கெல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டுவது சங்கரய்யாதான் என்று அரசு முடிவுக்கு வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டப்படிப்பு இறுதித்தேர்வுக்கு 15 நாட்களே இருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 18 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலையானார். பின்னொரு நாள் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, “உங்களுடைய தந்தை நீங்கள் வழக்கறிஞராக வர வேண்டுமென்று எதிர்பார்த்தார். பட்டப்படிப்பு இறுதி தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். படிப்பை தொடர முடியாது, பட்டம் பெற முடியாது, நீங்கள் வழக்கறிஞராக வர முடியாது, கைது செய்யப்பட்ட உங்களை அன்றைய அரசு எப்போது விடுதலை செய்வார்கள் என்பதும் தெரியாது. இத்தகைய சூழலில் காவல்துறையினர் உங்களை கைது செய்த போது, உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது” என்று கேட்டேன்.

“தேச விடுதலைக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறேன் என்பது எனக்கு உந்துசக்தியாகத்தான் அமைந்தது. வேறு எதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை” என்று பதிலளித்த அவரது சொற்களில் உண்மை உணர்வு ஒளிர்ந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் 4 ஆண்டு களும், சுதந்திர இந்தியாவில் 4 ஆண்டுகளும் என 8 ஆண்டுகள் சிறையிலும், மூன்று ஆண்டு கள் தலைமறைவு என அர்ப்பணிப்போடு கூடிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்தான் தோழர் என்.எஸ். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான பென்சன் வழங்கும் திட்டத்தை அன்றைய அரசு அறிவித்தது. கட்சியின் முடிவுப்படி சங்கரய்யாவும் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அது பற்றிக் கேட்ட போது, “சுதந்திரத்திற்காக ஜெயி லுக்குப் போனதே பரிசுதான்” என்று சாதார ணமாகப் பதிலளித்தார். தலைமறைவு வாழ்க்கை, சிறைவாழ்க்கை என்பது சோதனை மிக்கது.

மனஉறுதி இல்லை யென்றால் தாக்குப் பிடிக்க முடியாது. கடுமை யானது என்றாலும் அவற்றை கம்யூனிஸ்ட்டுகள் இயல்பாக எதிர்கொண்டனர். மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்களுக்கு தலைமறைவு காலத்தில் நடை பெற்ற ஒரு வகுப்பில் தோழர் ஏ.கே.கோபா லன் கலந்துகொண்டார். வகுப்பு முடியும் நேரத்தில் தோழர் என்.எஸ்.பெயருக்கு ஒரு தந்தி வந்தது. உண்மையில் அது ஏ.கே. கோபாலனுக்கான தந்தி. “உங்களுடைய மனைவிக்கு பிரசவமாகி யிருக்கிறது. மாமனார் வருகிறார்” என தந்தியில் இருந்தது. அதை ஏ.கே.ஜி.யிடம் என்.எஸ். தெரி வித்தபோது,. “உனக்கு புரியவில்லையா? கேரளா விலிருந்து போலீஸ் என்னைக் கைது செய்ய  வாரண்ட்டோடு வருகிறது” என்று சிரித்த முகத்தோடு கூறி விட்டு ஏ.கே.ஜி. தலைமறைவாகிவிட்டார்.

சிறையைச் சீர்செய்தவர்

வேலூர் சிறையிலிருந்த போது அரசியல் கைதிகளுக்கு (காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு கள்) ஏ பிரிவு, பி பிரிவு வழங்குவதில் சிறை நிர்வா கம் பாகுபாடு காட்டியதை எதிர்த்து தோழர் என்.எஸ். உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் உண்ணாவிர தம் இருந்தார்கள். 10ஆவது நாள் உண்ணா விரதத்தின் போது தோழர் என்.எஸ். சிறையில் ‘தாய்’ நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த சிறை அதிகாரி 10 நாள் உண்ணாவிர தத்திற்கு பிறகும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இத்த கைய மன உறுதி இருக்கிறதே என்று வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார். 19ஆவது நாள் உண்ணா விரதத்திற்கு பிறகுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது. மக்கள் நலனை காக்க போராடுகிற போதும், சிறையில் இருக்கிற போதும் கம்யூனிஸ்ட்டுகள் எத்தகைய மன உறுதியோடு அடக்குமுறைகளை எதிர்கொண்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

கேரளத்தில் கண்ணுர் சிறையில் கட்சியின் மற்ற தோழர்களோடு தோழர் என்.எஸ். இருந்த போதுதான் கையூர் தியாகிகளுக்கு தூக்குத் தண்ட னையை நிறைவேற்றினார்கள். அந்தத் தண்ட னையை நிறைவேற்றுவதற்கு முன்னதாக கட்சி யின் பொதுச் செயலாளரைப் பார்க்க வேண்டு மென்று தூக்குத் தண்டனைக்கு உள்ளான நான்கு தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். தோழர் பி.சி. ஜோஷி சிறைக்கு வந்து அவர்களைச் சந்தித்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு “மனித குலத்தின் மலர்கள் ஒரு போதும் கருகாது” என்ற தலைப்பில் பி.சி. ஜோஷி எழுதிய கட்டுரை வெளியானதை என்.எஸ். நினைவு கூர்ந்திருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்த தோழர் என்.எஸ்.அவர்கள் 1943-ஆம் ஆண்டு கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1943-ஆம் ஆண்டிலிருந்து 1947-ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட வர லாற்றில் முக்கியமான ஆண்டுகளாகும். மாவட்டம் முழுவதும் போர்க்குணமிக்க மக்கள் இயக்கத் திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது. ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பிற்காலத்தில் பலமான இயக்கமாக வளர்ந்தது. தோழர் என்.எஸ். அவர்கள் 1995-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகள் கட்சியின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார். மாநிலத்தில் உருவாகும் பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வார்.

மக்கள் ஒற்றுமை முழக்கம்

1998-ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டு கலவரம் வெடித்து 24 பேர் கொல்லப்பட்டனர். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஆர்.உமாநாத் அவர்களை கோவைக்கு அனுப்பி வைத்தார் சங்கரய்யா. மாநில முதலமைச்சரோடு தொடர்புகொண்டு மதக் கலவரத்தை உருவாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்வதோடு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். தோழர் சங்கரய்யா விடுத்த அறிக்கையில், “ கோவையில் நடைபெற்று வரும் வகுப்புக் கலவரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி பெரிதும் கவலை கொள்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் கேந்திரமான இடம் கோயம்புத்தூர். தொழி லாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலியுறுத்தினார்.

தோழர் சங்கரய்யா விவசாயிகள் சங்கத்தினு டைய மாநிலத் தலைவராகவும், அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் பணி யாற்றியிருக்கிறார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியான ‘ஜனசக்தி’ தத்துவ மாத ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின் ‘தீக்கதிர்’ ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இத்தனை பணிகளையும் செய்வதோடு கலை-இலக்கியத் தளத்தின் வளர்ச்சிப் போக்கு பற்றியும் அவர் ஆழமான பார்வை கொண்டி ருந்தார். தமுஎச உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய தோழர் என்.எஸ். இலக்கிய வட்டத்தில் உள்ளடக்கம் மற்றும் வடிவம் குறித்து நடைபெற்று வந்த சர்ச்சை பற்றி தமுஎச மாநாட்டில் மிகக்கூர்மை யாக உள்வாங்கிக் கொண்டவராக அனைவரும் ஏற்றுப் பாராட்டக்கூடிய வகையில் நுட்பமாக உரை யாற்றுவார்.

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் சங்கரய்யா அவர்கள் அர்ப்பணிப்போடு ஆற்றி வரும் பணியை விளக்குவதற்கு ஏடு இடம் கொடுக்காது. அண்ணல் காந்திஜி அவர்கள் மக்களுக்கு சொல்லும் செய்தி என்னெவென்று கேட்டபோது, “என் வாழ்க்கையே நான் மக்களுக்கு சொல்லும் செய்தி” என்று கூறினார்.  இன்று தோழர் என்.எஸ். அவர்களின் வாழ்க்கையும் தலைமுறைகளுக்கான செய்தியாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.



 

 

;