articles

img

சோசலிசமே மாற்று.. (சிறப்புக் கட்டுரை)

 பெருந்தொற்றின் இரண்டாம் அலைவேகமாக  பரவிக்கொண்டிருக்கிறது.  முதல் அலையை விட இரண்டாம் அலையில்  பாதிப்புகள்  முற்றிலும் வேறுவிதமாக உருமாறியுள்ளது. அத்தனை பாதிப்பிற்குபின்னாலும் இருப்பது அரசியல் காரணிகளே.  இரண்டாம் அலையின் எச்சரிக்கை 2020 டிசம்பரில் விடுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு 5  மாநிலசட்டமன்றத்  தேர்தல்களில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தியது.  முதல் பரவலுக்கு சிலநூறு பேர் பங்கேற்பாளராக இருந்த தப்லீக் ஜமாத்தை குற்றம் சுமத்திய இந்துத்துவ பாசாங்குத்தனம் இரண்டாம் அலையின் உயிர்ச் சேதத்திற்கு பெரிதும் காரணமான 8 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய கும்பமேளா நிகழ்வு குறித்து கள்ள மவுனம் சாதித்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற மேற்குவங்க தேர்தலில் மோடி-அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டங்களினாலும் அப்பட்டமாக பெரும் விலை கொடுக்க வேண்டி இருந்தது.

தடுப்பூசி அரசியல்
ஊடகங்களை நேரடியாக சந்திக்க எப்போதும் தைரியமில்லாத நமது பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் மன் கி பாதில் உரையாற்றியபோது “புதுமைக்கான முன்மாதிரியான உற்பத்தியை சுமுகமாக மேற்கொள்ளும் இத்தகைய தனியார் மருந்து துறை கிடைத்து இருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம்” என்று தனியார்களை புகழ்ந்து பேசிபுல்லரித்துக் கொண்டார். மேலும் தடுப்பூசிதயாரிக்கும் இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்கள் பணம் ரூ.4500 கோடிகளை வழங்கினார். ஆனால் எதார்த்த நிலைமை வேறு விதமானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் பெரும்பகுதி இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் சூழலில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி அறிவிப்பு மோடியின் மீது நாடு முழுவதும் அதிருப்தியினை ஏற்படுத்தியது. 

இதுவரை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.4 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 1.4 சதவீதம் பேருக்குமட்டுமே இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் அலை எச்சரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன. அதற்குள் 60 சதவீதமானோருக்கு தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியினை நிறைவு செய்வதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதே இப்போது உள்ள நமது நிலைமை.  தடுப்பூசி ஒருபொதுமைப்பொருள் என்பதே இதுநாள் வரையிலான வரையறை.  சோசலிச நாடுகள் மட்டுமல்லாமல் சந்தை பொருளாதாரத்தை பின்பற்றும் முதலாளித்துவ நாடுகளும் கூட தடுப்பூசியை அனைவருக்கும் தந்துள்ளது. இப்போது இந்தியா அதிலிருந்து தடம் மாறுகிறது. மோடி அரசைப் பொறுத்தவரை தடையற்ற வர்த்தகம் மக்களின் உயிரை விட மேலானதாகக் கருதுகிறது. வெவ்வேறு விதமான விலைக் கொள்கைகளை வைத்து இதனை நாம் விளக்கிவிட முடியும். இந்தியா பொருளாதாரத்தில் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் வேலையின்மையால் வருமானத்தை இழந்து உள்ளனர். உணவுக்கான செலவினங்களை இந்தியர்கள் கைவிட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் இழந்துபோன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. இது அறிவியல் கூறும்பேருண்மை.

சோசலிச மக்கள்சீனமும், முதலாளித்துவ அமெரிக்காவும்
இந்தியாவின் சீரம் நிறுவனம் உட்படஉலகெங்கும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மார்ச் மாதம் இறுதியில் உற்பத்தி சிக்கலைப் பற்றிவிவாதித்தனர். தடுப்பூசி உற்பத்தியில் ஏற்படும்நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணம் மூலப்பொருட்கள் பற்றாக்குறையே. மூலப்பொருட்களை பெரும் பகுதி வைத்திருக்கும் அமெரிக்கா அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. 1954 இல் உருவாக்கப்பட்ட “பாதுகாப்பு உற்பத்திச் சட்டம்”  மூலம்அமெரிக்கா உற்பத்திக்கான மூலப் பொருட்கள் ஏற்றுமதியைதடை செய்துள்ளது.  மேலும்  தான் உற்பத்தி செய்த தடுப்பூசிகளை  நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் அஸ்ட்ராஜெனெகா என்ற தடுப்பூசியினை 40 மில்லியன் அளவுக்கு இருப்பு வைத்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் இதன் அளவு300 மில்லியனாக இருக்கும் என்கிறது ஒரு அறிக்கை.  ஆனால் மூன்றாம் உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். 
ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, பயோஎன்டெக் போன்ற மேற்கத்திய நாடுகளின்தடுப்பூசிகளுக்கு  மட்டுமே உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான ஒப்புதலை முதலில் வழங்கியது.  மேலும் அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமை மூலம் கார்ப்பரேட் ஏகபோகங்களை பாதுகாத்து வந்தது. இது அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கைக்கு பெரும் தடையாக இருந்தது.  இந்த ஒப்பந்தத்தில் உள்ளசில அம்சங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் கடந்த 2020 அக்டோபரில்  உலக வர்த்தகஅமைப்பில் கோரின. ஆனால் அன்று அமெரிக்காஇதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது.  இதனால் பைடன் அரசிற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 108 பேர் இந்தியாவின் முன்மொழிவை பரிசீலிக்கும் படி கடிதம் எழுதினர். இது ஏதோ மக்கள் மீதான பரிவால் அல்ல என்பது  அந்த கடிதத்தில் அவர்கள்கூறிய காரணத்தின் மூலம் தெரியும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு ஆபத்து உள்ளதாக எச்சரித்தனர். இதன் பின்னர் ஏழு மாதத்திற்குபின்பு கடந்த மே மாதம் அமெரிக்கா சில தளர்வுகளை அறிவித்து சொத்துரிமையில் உள்ள சில பிரிவுகளை நீக்கியது. மேலும் இது தற்காலிகமானதே என்றும் அறிவித்தது.

இதேவேளையில் சோசலிச மக்கள் சீனம்  ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற  நெருக்கடியில் சிக்கி இருந்த இந்தியாவை  தனது ஆதரவுக் கரங்களால் தழுவியுள்ளது. சீனசெஞ்சிலுவை சங்கம்மூலம் 5000 வெண்டிலேட்டர்கள்,  21,569 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 21.48 மில்லியன் முகக்கவசங்கள்,  3800 டன் மருந்துப் பொருள்கள் போன்றவற்றை சீனா வழங்கியுள்ளது.  கடந்த காலங்களில் சீனாவுடனான உறவுகளை மோசமாக கையாண்டமோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang yii) உடன் சீனாவின் இந்த  உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.  எவ்விதமான அரசியல் நோக்கிலும் இதனை செய்யவில்லை நல்லெண்ண நோக்கத்திலேயே செய்யப்பட்டது என்று சீன தரப்பில் சொல்லப்பட்டது. சீன நிறுவனம் தயாரிக்கும்  சீனோஃபார்ம் தடுப்பூசிக்கு மிகமிக தாமதமாகவே மே 7-ஆம் தேதி அன்று உலகசுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது. இதன் அங்கீகாரம் உலக நாடுகளின் சுகாதாரஒழுங்கமைப்பு குழுவிற்கு மிகவும் அவசியமானதாகும் சீனாவின் மற்றொரு தடுப்பூசியான சினோவேக் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டு தரவில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பு கோவேக்ஸ் என்றதிட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தடுப்பூசி என்பதாகும். மேற்கத்திய நாடுகளில் தடுப்பூசிகள் இந்த திட்டத்தின் நோக்கத்திற்கு சிறிதும் நகரவில்லை. இதற்கு மாறாக மக்கள் சீனம் தனது தடுப்பூசியினை பாகிஸ்தான், லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்க உள்ளது. மேலும் நன்கொடை, மானியம், கடன் வழங்கி உதவவும் முன்வந்துள்ளது.  சீனாவின் இந்த செயல்பாடு மூலம் அமெரிக்கா உலகநாடுகளில் இருந்து தனிமைப்பட்டு விடும் சூழலில் தான் தனது கார்ப்பரேட் ஆதரவு நிலையில் இருந்து இறங்கி வர வேண்டி இருந்தது.  அமெரிக்காவின் அஸ்ட்ராஜெனெகா என்னும் தடுப்பூசிசிம்பன்சி குரங்குகளுக்கு சளி பிடிக்க  காரணமானவைரஸை செயலிழக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது. மற்ற தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் மரபணு குறியீட்டில் ஒரு பகுதி உடலுக்குள் செலுத்திஅதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பில் கொரோனாவை  எதிர்கொள்ள பயிற்றுவிக்கிறது. ஆனால்சீனாவின் தடுப்பூசி கொல்லப்பட்ட வைரஸை உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பை உருவாக்குகிறது.  இவ்வகை தடுப்பூசியை 2° முதல் 8° டிகிரிசெல்சியஸ் வெப்பநிலையில் சேமித்தாலே போதுமானது.

அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடு ஆகும். ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு நட்பு இல்லை என்பதை அமெரிக்கா தனது செயல்பாடுகள் மூலம்வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.  உலகளவில் தீவிரமான நோய் பரவலுக்கு மத்தியில் முதலாளித்துவம் லாபம் பார்க்கும் நோக்கத்தால் மரணத்தை மக்களுக்கும் லாபத்தை கார்ப்பரேட்டுகளுக்கும் வழங்கியுள்ளது. ஆனால் அனைத்து நாடுகளுக்கும் உதவ மக்கள் சீனம் முன்வந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சோசலிசமே எதிர்காலம் என்பதை மக்கள் சீனம் நிரூபித்துள்ளது.

கட்டுரையாளர் : சரண் ராஜ் ,மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

 

;