articles

img

ஜி 7 மாநாட்டின் உள்நோக்கமும் முதலாளித்துவ - சோசலிச முரண்பாடுகளும்....

திட்டமிட்ட பொருளாதாரத்தை அரசியல் எனவும், அரசியலின் நீட்சியை போர் எனவும்  புரிந்து கொள்ளலாம் என மாமேதை லெனின் மிக எளிதாகவிளக்கியிருப்பார். நூறாண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த விளக்கத்தை இன்றைய உலக அரசியல், பொருளாதார நிலைமைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அது எத்துணை துல்லியமானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்றத் தாழ்வுகளும், முரண்பாடுகளும் நிறைந்த நிகழ்கால உலகில் கடுமையாக எழும் பொருளாதாரபோட்டியினால் அரசியல்முரண்பாடுகள் கூர்மையாக வளர்ந்து கொண்டிருப்பதை நாம் தற்போது காண்கிறோம். அண்மையில் கூடியஜி7 எனும் வளர்ந்த நாடுகளின் மாநாடும், நேட்டோவில் நடைபெறும் விவாதங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ நாடுகள் தங்களை உலகப் பொருளாதார தளத்தில் முன்னிறுத்திக் கொள்வதற்கான முயற்சியை கூட்டாக எடுத்தாலும் கூட அவற்றிற்கிடையே எழும் உள்முரண்பாடுகளால் பின்னடைவையே சந்திக்கின்றன. தற்போது உலக அளவில் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்பத்திலும் வேகமாக வளர்ந்து வருகிற சீனாவை குறி வைத்தே உலக அரசியல் நிகழ்வுகள் உள்ளன என்பதையும் நாம் பார்க்க முடியும்.

அமெரிக்காவின் அணுகுமுறையும் யதார்த்த நிலையும்

உலகப் பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற அமெரிக்காவின் விருப்பத்திலிருந்து இத்தகைய அணுகுமுறைகளை அந்நாடு கையாண்டாலும், உண்மையில் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அமெரிக்க சமூகம் இன்றளவும் இரண்டாகபிளவுபட்டே நிற்கிறது. ஜனநாயக கட்சியின்சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜோ பைடனுக்கு எதிர்ப்பென்பது நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து தன்னை முழுமையாக மீட்டுக் கொள்ள முடியாமலும், தொற்று நோய் பிரச்சனையாலும் அந்நாடு திணறிக் கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் கடுமையான உள்நாட்டு நெருக்கடி ஏற்படுமோ அப்போதெல்லாம் சர்வதேச பிரச்சனைகளில், தலையீடு செய்வதன் மூலம் நாட்டு மக்களின் அதிருப்தியைமடை மாற்றம் செய்ய முடியும் என நம்புகிற அமெரிக்காதற்போதும் அதே அணுகுமுறையத்தான் கையாள்கிறது. தற்போது பிரிட்டனில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில், சர்வதேச பிரச்சனைகளின் மீதான விவாதங்களின் போது அமெரிக்காவின் குரல் பெரியண்ணன் மனோபாவத்தோடு எதிரொலித்திருக்கிறது.

அதேபோல அண்மையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற  நேட்டோ அமைப்பில் ராணுவத் தலைவர்களின் சந்திப்பிலும் அமெரிக்காவின் அணுகுமுறை சீனாவுக்கு  எதிராக உள்நோக்கங்களை கொண்டதாகவே இருந்ததை காண
முடிகிறது.  தனக்கு போட்டியாக உலகில் பல நாடுகளும் குறிப்பாக சீனாவும் வளர்ந்து வருகிறது எனும்உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கும் அமெரிக்கா இதரநாடுகளின் ஒத்துழைப்போடு சீனாவை தனிமைப்படுத்தவும், அதன் மூலமே தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் முடியும் என கருதுகிறது. உண்மையில் அமெரிக்காவின் பொருளாதார சரிவு இன்று துவங்கியதல்ல. அது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்பதே யதார்த்தமாகும். உதாரணத்திற்கு இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, 2019ல் ஜி 20 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்க அர்ஜெண்டினா சென்ற போது, அந்நாட்டின் தலைநகர் போனஸ் அயர்சில் நடைபெற்ற அம்மாநாட்டில் உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இதை சுட்டிக் காட்டினர். உலக அளவில் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வருவதையும், சீனா வளர்ந்து வருவதையும் அம்மாநாட்டின் விவாதங்கள் பல்வேறு தரவுகளோடு எடுத்துக் காட்டியது.

ஜி 7 நாடுகளும் நேட்டோவும்

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியதே ஜி 7 அமைப்பாகும். 1975 இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் 1997 இல் ரஷ்யா இணைக்கப்பட்டு ஜி 8 ஆக மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் 2014 இல் ரஷ்யா இதிலிருந்து விலக்கப்பட்டு மீண்டும் ஜி 7 ஆகமாறியது. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய இக்கூட்டமைப்பின் நோக்கமும் நிகழ்ச்சி நிரல்களும் பொதுவாக, முதலாளித்துவ நாடுகளை பாதுகாப்பதாகவும், முதலாளித்துவ முறையை ஊக்குவிப்பதாகத்தான் இருக்கும். அண்மையில் இவ்வமைப்பின் 47 வது உச்சி மாநாடு ஜூன் 13 முதல் 16 வரையிலான நாட்களில் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பாளர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டிருந்தன. இதிலும் சீனா எதிர்ப்பு என்பதே பிரதான இடத்தை பிடித்திருந்தது. அதே போல 1949 இல் துவக்கப்பட்ட மற்றொரு அமைப்புதான் நேட்டோ (North Atlantic Treaty Organisation)  என்பதாகும். வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 29 நாடுகள் இவ்வமைப்பில் அங்கத்தினர்களாக உள்ளன. சோவியத் யூனியன் பலமாக இருந்த போது, கம்யூனிச எதிர்ப்பு நிலையிருந்து, அதற்கெதிராக உருவாக்கப்பட்டதே இதுவாகும். சோவியத் யூனியனால் ஒரு வேளை ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வலுவான கூட்டமைப்பு அவசியம் எனவும், ஏதேனும் ஒரு நாடு பாதிக்கப்பட்டால் இதர நாடுகளும் பாதிக்கப்பட்டதாகவே கருதி ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சியிலிருந்தும் உருவாக்கப்பட்டதே நேட்டோ அமைப்பாகும். ஆனால்சோவியத் யூனியனால் உலகில் எந்தவொரு நாட்டிற்கும்பாதகம் ஏற்பட்டதாக இதுவரையிலும் வரலாறு இல்லை. ஆனாலும் அமெரிக்கா ஜி 7 அமைப்பையும், நேட்டோவையும் தனது அரசியல் நோக்கங்களுக்காகவும், சீனாவின் மீதான பொருளாதார நெருக்கடியை உருவாக்கவுமே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறது என்பது தான் உண்மை.

ஒத்திசைவும் முரண்பாடுகளும்

ஜி 7 அமைப்பையும், நேட்டோவையும் தனது அரசியல்நோக்கத்திற்காக அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள நினைப்பதைப் போலவே, முதலாளித்துவ நாடுகளும் சீனாவை எதிர்க்க வேண்டுமென ஒன்றுபட்டே  நிற்கிறது. ஆனாலும் உண்மையில் ஜி 7 நாடுகளுக்கிடையேயும், நேட்டோ நாடுகளுக்கிடையேயும் ஒத்திசைவான அம்சங்களைப் போலவே, பல்வேறு  உள்ளார்ந்த முரண்பாடுகளும் நீடிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளுக்கிடையே மானியங்கள்உள்ளிட்ட வர்த்தக அம்சங்களில் தீர்க்கப்படாத முரண்பாடுகள் உள்ளன. 1975 இல் ஜி 7 நாடுகளின் பொருளாதாரமென்பது உலக அளவில் 80 % எனும் அளவில் இருந்த நிலையிலிருந்து தற்போது வெறும் 40 % அளவில்  சுருங்கிப் போயுள்ளது. ஜி 7 மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் சீனாவோடு பெருமளவு பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாகஜெர்மனிக்கும் சீனாவிற்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக உறவு உள்ளது. ஜெர்மனியின் 5000 நிறுவனங்கள் சீனாவோடு கூட்டு உற்பத்தி மற்றும்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட கேந்திரமான தொழில்களில் இத்தகைய வர்த்தக கூட்டு உள்ளது.

2019 – 20 ஆம் ஆண்டில் உலக முதலீட்டு அறிக்கையின்விபரங்களின் படி ஜெர்மனிக்கும் சீனாவுக்குமானவர்த்தக தொடர்பு 139 % அளவிற்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ் – சீனாவிற்கிடையேயான வர்த்தகம் என்பது உலகில் ஏழாவது பெரும் வர்த்தகமாகும். அதேபோல ஜப்பானுடனான சீனாவின் வர்த்தகமென்பது சுமார் 350 பில்லியன் டாலர்களாகும். இவற்றைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தில் அதிகளவு ஈடுபட்டுள்ளன என உலக வர்த்தக தரவு அறிக்கையும் (Business Confidencial Survey Report) மதிப்பிட்டிருக்கிறது. இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனும் வலுவான வர்த்தக தொடர்பை சீனா வைத்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் இந்த நாடுகள் அமெரிக்கவுடனான வர்த்தகத்தை விட அதிகம் சீனாவுடன் கொண்டுள்ளது. ஒத்திசைவு அம்சங்களைத் தாண்டி இத்தகைய முரண்பாடுகள் உள்ளதாலும், பொதுவாக போட்டியின் காரணமாக முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் நீடிப்பதாலும் சீனாவை தனிமைப்படுத்துவதென்பது அமெரிக்கா நினைப்பது போல எளிதான ஒன்றல்ல. ஜி 7 உச்சிமாநாடு குறித்த ஒரு கட்டுரையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “ஒன்றாக இவர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தாலும் கூட நோக்கத்தை நிறைவேற்றுவதில்  ஒன்றாக இருப்பார்களா என்பதே சந்தேகமே” எனவும் குறிப்பிட்டிருக்கிறது. அதே போல நேட்டோ அமைப்பில் பல மொழிகளை கொண்ட நாடுகள் இருந்தாலும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் மட்டுமே அவற்றிற்கிடையேயான தொடர்பு மொழிகளாக உள்ளன என்பதும் ஒரு சிறு அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகளிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அல்லது அதனுடன் ஒன்றிணைந்து நிற்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் சீனாவை தனிமைப்படுத்த வேண்டுமென்கிற அரசியல் விருப்பம் இருப்பினும், வளர்ந்து வருகிற சீனாவின் உலகளாவிய வர்த்தக வலைப்பின்னல் இவ்விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது என்பதே அது. இதனால் எரிச்சலடைந்துள்ள நிலையில் தான் கோவிட் 19 ஐ சீன வைரஸ் என அழைப்பதையும் அது குறித்து ஆய்வை மேற்கொள்ள தனது உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிற முயற்சியையும் அமெரிக்கா மீண்டும் துவங்கியிருக்கிறது. அதே போல அமெரிக்கா அண்மையில் ரஷ்யாவோடு ஒரு நெருக்கத்தை உருவாக்கவும் முனைந்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதியை ஜெனீவாவில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.  சோவியத் சிதைவிற்கு பிறகு அதிலிருந்து பிரிந்து போன நாடுகளோடும் நெருக்கத்தை உருவாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. உண்மையில் ரஷ்யாவின் வளர்ச்சியை விரும்பாத அமெரிக்கா, தற்போது திடீரென அந்நாட்டுடன் நெருக்கம் காட்டுவதற்கான காரணமும் சீனாவை தனிமைப்படுத்தவே என்பதை விட வேறென்னவாக இருக்க முடியும்.

சீனாவின் வளர்ச்சியும் பங்களிப்பும்

மக்கள் சீனம் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது சீனா வறுமை ஒழிப்பில் முதலிடம் பிடித்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையும் அண்மையில் பாராட்டியிருக்கிறது. பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி என அனைத்து அம்சங்களிலும் சீனா வேகமாக முன்னேறுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவுடனான உறவில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றன. 21 ம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் உலக வர்த்தகத்திலும் சீனாவின் பட்டுப்பாதை (SILK ROUTE) பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது உண்மை. ஜெர்மனி உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இத்தகைய பொருளாதார ஒத்துழைப்பில் தற்போது இணைந்திருக்கின்றன. உலக அனுபவங்களை உள்ளடக்கி சுயேச்சையான பொருளாதார வளர்ச்சியையும், சோஷலிச நிர்மாணத்தையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என அறிவித்திருக்கும் மக்கள் சீனம் 2049 இல் உலகில் பொருளாதார நிலையில் முதல் நாடாக மாறுவோம் எனும் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த மகத்தான தருணத்தில் மூன்று சீன விண்வெளி வீரர்களையும் விண்வெளிக்கு அனுப்பி பல புதிய அறிவியல் ஆராய்ச்சிகளையும் துவக்கியுள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம், சீனாவின் பொருளாதாரத்தின் மீதான அடாவடித்தனமான தலையீடு, சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான முறையில் நாடுகளில் அரசியலாக தலையிடுவது எனும் இரட்டை அணுகுமுறையை முயற்சித்து வருகிறது. 

போட்டிகளல்ல, ஒத்துழைப்பென்பதே வளர்ச்சியாகும்

ஏகாதிபத்தியமென்பது தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு சாகசங்களின் மூலம் போட்டிகளை உருவாக்கினாலும் கூட, இத்தகைய போட்டிகளால் வள்ர்ச்சியை உறுதி செய்ய முடியாது. பரஸ்பரம் ஒத்துழைப்பின் மூலமே வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய முடியும். உலக அனுபவங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன.  ஜி 7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நமது பிரதமர் மோடியோ வளர்ந்த  ஜி 7 நாடுகளுக்கு எப்போதும் இந்தியாவின் ஆதரவு உண்டு என தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார். ஆனால் உண்மையில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு உள்ள நாடுகளோடு உறவாடுவதை விடுத்து, இந்தியா – சீனாவிற்கிடையேயான அரசியல் உறவும், பொருளாதார ஒத்துழைப்பும் வளர வேண்டுமென்ற அணுகுமுறையை இந்தியா கடைபிடிக்கிற போதுதான் அது ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் என்பதோடு, உலக அளவிலும் வலுவான பொருளாதார அமைப்பாகவும் விளங்கும். 
இன்றைய உலகம் என்பது 20 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போல ஒரு துருவ உலகமோ அல்லது இரு துருவ உலகமோ அல்ல. பல்வேறு பொருளாதார முயற்சிகளுடன் கூடிய பல்துருவ உலகமாகவே இருக்கிறது. எனவே நாடுகளுக்கிடையிலான போட்டி என்பதை விட நாடுகளுடனான ஒத்துழைப்பு என்பதே மிக  மிக அவசியமானதாகும்,  கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் அனைவருக்குமானதாக உறுதி செய்யப்பட வேண்டுமென்கிற குரல் வலுத்து வருகிற இந்நிலையில், உலகம் அதை நோக்கித்தான் பயணிக்க வேண்டும்.

சோவியத் யூனியன் பின்னடைவை சந்தித்த போது, உலக அரசியல் நிலைமை குறித்து ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது உலகில்  நான்கு முரண்பாடுகளும் வளர்கிற நிலையில் ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்குமான முரண்பாடேமுதன்மையானதாக மாறி வருகிறது என்ற மதிப்பீட்டைமுன்வைத்தது.  அந்த மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதை தற்போதைய உலக நிலைமைகளும் உணர்த்துகிறது. அத்துடன் கூடவே தற்போது ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளும் வளர்கிறது என்பதையே ஜி 7 மாநாட்டு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன. ஏகாதிபத்தியத்தாலோ, முதலாளித்துவத்தாலோ அனைவருக்குமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது எனும் பேருண்மையிலிருந்து நிகழ்கால உலகம்புதிய அனுபவங்களை பெறுவது அவசியமானதாகிறது. பொருளாதார தளத்திலும், மக்களின் வாழ்நிலையிலும் மிகக் கூர்மையான ஏற்றத்தாழ்வுகள் உருவாகி வரும்நிலையில், முதலாளித்துவ நாடுகளின் தோல்வியடைந்துள்ள கொள்கைகளின் பின்னணியிலிருந்து இந்தியாபாடம் கற்றுக் கொள்வதோடு பொருத்தமானதொரு கொள்கை வழியில் தனது பயணத்தை தொடர வேண்டும்.

கட்டுரையாளர் :  டி.கே.ரங்கராஜன்

;