articles

img

பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் பேராபத்து....

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்பட எட்டு அண்டை நாடுகளைக் கொண்டுள்ள ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைப்பது ஆபத்தானது. 1965 மற்றும் 1971 போர்க்கள வீரரும் முன்னாள் விமானப்படை உயர் அதிகாரியும் ராணுவ பொருளாதார பகுப்பாய்வாளருமான (Defence & Economic Analyst) ஒருவர் மனம் திறந்து இவ்வாறு கூறினார்.

சீனாவின் தற்காப்பு உற்பத்தி 1949 புரட்சிக்குப் பிறகு சோவியத் தற்காப்பு உற்பத்தி மாடலை ஏற்றுக்கொண்டது. பின்னர் உலகமய சந்தைகளை பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யமான சொந்தக் கொள்கைகளை தனது நாட்டின் தேவைகளுக்கேற்ப அரசுத்துறையில் உருவாக்கி கொண்டது. இதன் தொடர்ச்சியில் 1990களிலும் அதன் பின்னரும் சைனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன், சைனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் நொரின்கோ, சைனா ப்ரிசிசன் மெசினெரி கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான ஒன்பது முதன்மை நிறுவனங்கள் மற்றும் அவைகளின் ஏராளமான துணை நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் சீன அரசுத்துறையாக உருவாக்கப்பட்டதால் அதன் முன்னேற்றம் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்தது. அரசின் மிகச்சிறந்த மேற்பார்வை மற்றும் கண்காணிப்புத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் தான் சீனத்தின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் குறுகிய காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை நம் தாராளமய மோதாவிகள் உணர மறுக்கின்றனர். ஒரு நேரிடையான கேள்விக்கு ‘அது ஒரு கம்யூனிஸ்ட் நாடு’ என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். 

பலமான ராணுவம்-பொருளாதார சமூக உறவுகள்
பலம்வாய்ந்த ராணுவத்தின் இலக்கணம் என்ன என்றால் ஆயுதங்களின் நவீனத்தையும் எண்ணிக்கையையும் பயிற்சி பெற்ற படைகளின் அளவையும் தான் எந்தப் பதவியில் இருக்கும் ராணுவ வல்லுநரும் கூறுவார். இக்கேள்விக்கான உண்மையான பதிலில்தான் நமது பாதுகாப்பு உற்பத்தியின் கோட்பாடு உள்ளது. நமது நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தோராய மதிப்பு மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலராக உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்கீட்டில் தனிநபர் பங்கீடு 2,191 டாலராக உலகத் தரவரிசையில் 144வது இடத்தில் உள்ளது. தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரையில் 1,900.7 டாலராக இந்தியா உள்ளது. 144.5 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனத்தின் மொத்த உள்நாட்டு நடப்பு உற்பத்தி மதிப்பு 14.72 டிரில்லியன் டாலராக உலகத் தர வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. ஒப்பீட்டளவில் நம்மை விட சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தனிநபர் பங்கீடு 5 மடங்கு அதிகமாக 11,819 டாலராகவும் உள்ளது.

தனிநபர் வருமானத்தில் நம்மைவிட ஐந்து மடங்கு அதிகமாக 10,500.4 டாலராகவும் உள்ளது. இந்நிலையில்தான் உலகின் ஆயுத இறக்குமதியில் இந்தியா சவூதி அரேபியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்திலும் 70 சதவீத பாதுகாப்புத் தேவைகளை இறக்குமதி செய்யும் நிலையிலும் உள்ளது. 2016-2020 காலத்தில் உலகில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் சீனா ஐந்தாவது இடத்திலும் . இந்தியா 24வது இடத்திலும் உள்ளன. இந்த புள்ளிவிபரங்கள் நமது பொருளாதார நிலையைப்பற்றிய முன்னுரை சுருக்கத்தை கூறுகின்றன. வங்கி, காப்பீடு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி உள்பட எல்லா கனரக துறைகளிலும் நமது பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி, நிரந்தர வேலைவாய்ப்புகள், சமூகப் பாதுகாப்புடன் கூடிய கண்ணியமான ஊதியம் மற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாங்கும் திறனையும் அதிகரிக்கும். ஆனால் இந்த உண்மையான வளர்ச்சியை தொடர்ந்து புறக்கணிக்கும் கொள்கைகளை அசுர வேகத்தோடு நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது.

மோடியின் நாசகரமான பாதுகாப்பு உற்பத்திக் கொள்கை
மிக நவீன பொறியியல் மற்றும் மின்னணு தொழிற்நுட்பங்களைக் கண்டறிந்து மேம்படுத்தி உற்பத்தியில் பயன்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களை ஒன்றுக்குள் ஒன்றாய் சங்கிலித் தொடர் போல் நிரந்தரமாக கொண்டிருக்கும் உற்பத்திக் கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாப்பதற்குரிய தொழில்துறை மேலாண்மைக் கொள்கையை உருவாக்குவதும் தேவையான நிதி உதவிகளை வழங்குவதும் அரசின் தலையாய கடமையாகும். இதைச் சிதைத்து பலவீனப்படுத்துவதில்தான் மோடியின் அரசு குறியாக உள்ளது. ‘பாதுகாப்பு கையகப்படுத்தல் கொள்கை 2020 (Deence Acquisition Policy 2020)’- தனியார் மயத்தை பாதுகாப்பு உற்பத்தியில் திணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் விவரிக்கப்பட்டுள்ள பொதுத்துறை-தனியார் பங்கேற்பின் பாதுகாப்பு கூட்டு (Strategic Partnership) சண்டை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிகள், டாங்கிகள் உள்ளிட்ட முன்கள கவச வாகனங்கள் போன்ற மிக முக்கிய நான்கு பிரிவுகளில் அனுபவம் இல்லாத தனியார் நிறுனங்களுடன் பொதுத்துறை நிறுவனங்களை இணைத்துப் பங்கேற்கச் செய்வதன் ’மூலம் பொதுத்துறையையும் பின்னர் விழுங்கி ஏப்பவிட அனுமதிக்கும் நாசகரக் கொள்கையாகும். கடந்த 4.6.2021 அன்று மோடி அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Counsil)’ - பாதுகாப்பு கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.43000 கோடி மதிப்புள்ள ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் திட்டத்திற்கு லார்சன் அண்ட் டர்போ தனியார் கம்பெனி மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான மும்பை மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிட் (Mazagon Dock Shipbuilders Ltd) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

காலப்போக்கில் மசகான் டாக் ஷிப் நிறுவனத்தின் சுயேச்சையான உற்பத்தித் திறன் என்னவாகும் என்பதுதான் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் (DRDO) மற்றும் அதன் உள்நிறுவனங்கள் பொதுத் துறை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் (Public Sector Defence Units) மற்றும் ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (Ordinance Factory Board) அதன் 41 இணைப்பு ஆயுதத் தொழிற்சாலைகள் - இவை அனைத்தின் ஆயுத உற்பத்திகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகள் பாதுகாப்புத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற்று வந்தன. ஆனால் 16.6.2021 அன்று 41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை ஏழு நிறுவனங்களாக மாற்றும் திட்டத்திற்கு மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்து நமது வரலாற்று சிறப்பு மிக்க ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை (Ordinance Factory Board) ஒழித்துக்கட்டும் வேலையை துவக்கிவைத்துள்ளது. பொதுத்துறை ஆயுதச் சாலைகள் முப்படைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் திருப்திகரமாக செயல்படவில்லை என இந்நிறுவனங்களை பலவீனப்படுத்திய மேற்படி ‘போலி தேசபக்தர்கள்’ கூசாமல் கூறுகின்றனர். 

மகத்தான டிஆர்டிஓ – ஏடிஏ – எச்ஏஎல் – பொதுத்துறை நிறுவனங்கள் 
கடந்த கால யுத்த நடவடிக்கைகளில் நேரிடையாக ஈடுபட்ட முன்னாள் போர் விமானிகள், தொழில்நுட்ப நிபுணர்களின் நாட்டுப்பற்று உணர்வில் கலந்துள்ள உலகப்புகழ்பெற்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் 1940 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட 4ஆம் தலைமுறை (4+Gen.) போர் விமானங்களில் மிகச்சிறந்த அதிவேகக் கையாளும் திறன் கொண்ட (Supermaneuverability) மற்றும் வான் மோதல் (Dog fighting ) திறனில் உலகில் மிகச்சிறந்ததாக கருதப்படும் எஸ்யு30 எம்கேஐ- போர் விமானத்தை இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் (எச்ஏஎல்) நிறுவனம் ரஷ்ய உரிமத்துடன் தயாரித்து வருவதுடன்; ஏராளமான சர்ச்சைகளுக்கிடையில் இந்திய வான்படையின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கப்படும் பிரெஞ்ச் ரபேல் சண்டைவிமானங்களை தயாரிக்கும் உற்பத்தி உள்திறனையும் எச்ஏஎல் நிறுவனம் கொண்டிருக்கிறது. ஆனால் இந்நிறுவனத்திற்கு இத்தகுதிறன் (Capacity) இல்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதை எச்ஏஎல் தலைவர் டி.சுவர்ணராஜு நிராகரித்து எச்ஏஎல் நிறுவனத்திற்கு இத்திறமை உண்டு என செய்தி நிறுவனங்களுக்கு பகிரங்கமாக பேட்டியளித்தார். இதுதான் தற்காப்பு உற்பத்தி நிறுவனங்கள்மீது பாஜக அரசு கொண்டிருக்கும் நிலையாகும். 5ஆம் தலைமுறை போர் விமானங்கள் வான்பாதுகாப்பு நவீன மின்னணுக் கருவிகள் உள்பட அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் முன்னணி வடிவமைப்பு நிறுவனமான ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனங்களுடன் அதன் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பாதுகாப்புத் திட்ட பொருளாதார நிபுணர்களைக் கொண்ட மிகச்சிறந்த கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளது. ஆனால் உரிய கவனம் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் ஒவ்வொரு கட்டத்திலும் அரசின் நிர்வாக மேலாண்மைக் குளறுபடிகளால் இவற்றின் வளர்ச்சி பலவீனப்படுத்தப்படுகிறது. ரஷ்யாவின் மிக் 21 ரக போர் விமானத்திற்கு மாற்றாக முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அதிநவீன இலகுரக தேஜஸ் போர் விமானத்தை (Light Combat Aircraft) எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து முதல் பறத்தல் சோதனை 4.1.2001 அன்று நடைபெற்றது.

1980களில் சாதனை விஞ்ஞானி டாக்டர் கோடா ஹரிநாராயணா இதன் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டும் ஏர் கமாண்டர் பாலாஜி போன்ற திறமையான விஞ்ஞானிகளின் குழு இத்திட்டத்தில் திறம்பட பணியாற்றினாலும் பல நிர்வாகச் சிக்கல்களால் இத்திட்டம் முழுமையடைந்து அறிமுகம் செய்யப்பட, முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. நமது இளம் வான்படை விமானிகளின் கனவாக உள்ள ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் (Advanced Medium Combat Aircraft-AMCA) விமானத்தின் முதல் சோதனை பறத்தல் 2025 ஆம்ஆண்டும் அதன் உற்பத்தியை 2026-2028க்குள்ளும் எச்ஏஎல் துவக்கும் என கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதியாக கூறமுடியாத, தெளிவற்ற நிலை நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) போன்ற திறமையான நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றைக் கொண்ட கூட்டுக் கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் காலமுறையில் தொடர்ந்து கூட்டி மேற்கண்ட திட்டப்பணிகளை தொடர் ஆய்வு செய்து அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடுகள் உள்பட ஆதரவளிப்பதில் மோடி அரசிற்கு அக்கறையில்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்நிறுவனங்கள் பல்வேறு திட்டப்பணிகளில் மூழ்கியிருக்கும் நிலையில் கூடுதலாக விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்களை நியமித்து ‘அம்கா’ திட்ட பணிப் பிரிவுகளை வலிமையாக்கி விரைவுபடுத்துவதற்கான உதவிகளை செய்ய மோடி அரசு தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் இத்திட்டமும் பாதுகாப்பு உற்பத்தி பங்கேற்பு (Strategic Partnership) திட்டத்திற்கு இரையாகி தன் உண்மையான இந்திய சுயத்தை இழந்துவிடுமோ என்ற கவலையும் உருவாகியுள்ளது. செங்டு விமான நிறுவனம் 1990 ஆண்டுதான் சீன அரசுத் துறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரசுத்துறை நிறுவனம் செயற்கைகோள் தகவல் வழிகாட்டுதலில் இயங்கும் ஐந்தாவது தலைமுறை ஜே-20 மறைவியக்க வான் மேலாதிக்க போர் விமானங்களை (Stealth air superiority fighter) தயாரித்து தனது படையணிகளில் 2017ஆம் ஆண்டே இணைத்துவிட்டது. இது சீன அரசுத்துறை நிறுவனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. 

போலியான பாதுகாப்பு உற்பத்தி தர்க்கங்கள் 
1965 - 1971 இந்தோ - பாக். சண்டையில் நார்த் அமெரிக்கன் ஏவியேஷன் எப்-66 போர் விமானங்கள், பாகிஸ்தான் விமானிகளின் கர்வத்திற்குரிய நவீன விமானங்களாக கருதப்பட்டன. இந்தியப்படையில் பிரிட்டன் தயாரிப்புகளான வாம்பையர் ஹண்டர் விமானங்கள் இருந்தன. பெங்களூரு எச்ஏஎல் நிறுவன தயாரிப்பான சின்னஞ்சிறு நாட் போர் விமானங்கள் பாகிஸ்தானின் எப்.86 சோபர்ஜெட் விமானங்களை ஒவ்வொரு நடவடிக்கையிலும் விண்ணில் தகர்தெறிந்தன. எச்ஏஎல்லின் நாட் விமானம் பின்னர் சோபர் ஸ்லேயர் (சோபர் அழிப்பான்) என்று பெயர் பெற்றது. 1974-இல் வியட்நாமின் கம்யூனிஸ்ட் படைகளிடம் போரிட முடியாமல் அமெரிக்க படைகள் தோற்றுக்கொண்டிருந்தன. உலகின் நவீன ராணுவத்தின் ஜாம்பவான் என கருதப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் மனஉறுதி குலைந்தது. வெளிச்சத்தை கண்ட இரவு எலிகளைப் போல தப்பித்து இங்கும் அங்குமாக தெறித்து ஓடினார்கள். பிரெஞ்சு, ஜப்பான், இந்தோ-சீன யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பழைய துப்பாக்கியை ஏந்திய ஒரு வியட்காங் இளம் மங்கையின் முன்பு தனது நவீன எம்.16 துப்பாக்கியை தரையில் போட்டு மண்டியிட்டு உயிர்ப் பிச்சை கோரி அழுத அமெரிக்க ராணுவ வீரர்களை வியட்நாம் காடுகள் கண்டன. மின்னணுவியல் யுத்த காலத்தில் மரபுவழி யுத்த முறைகள், அதன் கருவிகள் பயனற்றவை; தனியார் ஆயுத உற்பத்தி மட்டும் சர்வதேச தர நவீனத்தை அளிக்க முடியும் என்ற தங்கள் தாராளமய கோட்பாட்டிற்கு முட்டுக்கொடுக்கும் சாதுர்ய சொல்லாடலை சந்தை மேதாவிகள் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பகுதி உண்மை இருந்தாலும் எந்தக் காலத்திலும் வெற்றியை உயர் ராணுவ - துல்லிய மின்னணுவியல் நவீனம் மட்டுமே தீர்மானிக்க முடியாது என்பதற்கு ஏராளமான கள அனுபவங்கள் உள்ளன.

பொதுத்துறை ஆயுதச் சாலைகள் நாட்டுப்பற்றின் சின்னங்கள்
பொதுத்துறை ஆயுதசாலைகள் நாட்டுப்பற்றின் நம்பிக்கைச் சின்னங்கள். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் வடிவமைத்து உருவாக்கிய யுத்தக்கருவிகள் பெருமிதம் அளிக்கும் திறமையான பயன்பாட்டை அளிக்கும் என்ற உண்மையை படையணிகளுக்கும் இன்னும் விரிவாக கொண்டு செல்லவேண்டும். சர்வதேசச் சந்தையில் விலைக்கு வாங்கிய அந்நிய விமானங்களின் நவீனத்தைப் பற்றிய மிதமிஞ்சிய பெருமைப் பிரச்சாரங்கள், அடிப்படையில் நமது விமானிகளின் போரிடும் திறமைக்கு எதிரானவை. சுயசார்பு தன்னிறைவை அடையக்கூடாது என்பதற்காக சதி செய்யும் நமது உண்மையான எதிரிகள் கடல் கடந்து பல ஆயிரம் கிமீ தொலையில் நம்மை கண்காணித்த வண்ணம் உள்ளனர். ஒரு பாதுகாப்புக் கருவியை - அது மேம்படுத்தப்பட்ட 4ஆம் தலைமுறை போர் விமானமாக இருந்தாலும், எல்லையோரத்தில் நிலைநிறுத்தப்பட்ட கனரக நெடுந்துர பீரங்கியாக இருந்தாலும், முப்படைகளுக்கான துல்லிய மின்னணு ஆயுதங்களாக ( Smart Weapons) இருந்தாலும் கொள்முதல் செய்து படையணிகளில் சேர்க்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அவைகளுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப புதிய பதிப்பு வந்துவிடுகிறது. அவற்றை மேம்படுத்த, புதிதாக நம்மிடம் விற்க, தொழில்நுட்ப பரிமாற்றமளிக்க என்ற பெயரில் நமது மக்களுக்கான சமூக முன்னுரிமை நிதி ஒதுக்கீடுகளை பறிக்க அந்த எதிரிகள் காத்திருக்கின்றனர். அவர்களுடன் உள்நாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேரவே விரும்புகிறார்கள். தாராளமய நரேந்திர மோடியின் அரசு இதற்கு சேவை செய்யவே விரும்புகிறது. இதற்காகவே ஆயுதக் கண்காட்சிகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. இதற்காகவே கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. நிச்சயமான நிரந்தர எதிரியோடு எதற்கு கூட்டு ராணுவப்பயிற்சி? யார் எதிரி எனத் தீர்மானிப்பதில் நமக்கும் நமது ஆசிய நாடுகளின் அரசியல் தலைமை சகாக்களுக்கும் நிதானம் வர வேண்டும். யுத்தம் பற்றிய கோட்பாடு மாறவேண்டும். தொடர்ந்து நாம் ஏராளமான தொகையை தனியாருக்கும் அந்நிய நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா?

தனியார்மய உற்பத்தியின் பேராபத்து
நமது படையணிகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் கருவிகளை அளிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரியே. ஆனால் நமது பொதுத்துறை ஆயுத உற்பத்தி நிறுவனங்களை நவீனமாக்காமல் திட்டமிட்டு கட்டங்கட்டமாக ஒழித்துக்கட்டுவதும், இவற்றின் ஆயுத உற்பத்தியை கட்டங்கட்டமாக தனியார் வசம் ஒப்படைப்பதும் எதிர் விளைவுகளையே உருவாக்கும். பாதுகாப்பு உற்பத்தியை தனியார்மயமாக்குவது ஆசிய பிராந்தியத்தில் ஆயுத போட்டியை, பதற்றங்களை உருவாக்கும். நாட்டின் எதிர்கால அமைதிக்கு கேடு விளைவிக்கும். நமது சமூக முன்னுரிமைகளை பின்னுக்குத்தள்ளும். உலகின் ராணுவ பேர சதிகள், ஊழல்கள் எல்லாம் தனியார்மய ஆயுத உற்பத்தியோடு தொடர்புடையதாகவே உள்ளன. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் போயிங் போன்ற பகாசுர நிறுவனங்களிலிருந்து போபர்ஸ் டிசால்ட் நிறுவனம்வரை ஆயுத ஊழல்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இப்படிப்பட்டவைதான். எந்தவொரு தனியார் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர் தீவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் பேர்ரட் கே தீவுகள், பாரீஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் வெர்மாண்ட், மொரிஷியஸ், சிங்கப்பூர் போன்ற இடங்களின் சொகுசு விடுதிகளில் நடைபெறும் பல நாடுகளின் மேல் மட்ட அதிகாரிகள், ராணுவ ஜெனரல்கள், தனியார் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆயுத இடைத்தரகர்கள் பங்கேற்கும் அந்தரங்க கூட்டங்களில் நடைபெறும் ஆயுத பேர ஊழல்களைப் பற்றி தெரிந்திருந்தும் தனியார்தாசர்கள் அதுபற்றி பேச மறுக்கின்றனர்.

தனியார்மயமாக்கப்படும் பாதுகாப்பு உற்பத்தியின் ஊழல்கள் இந்திய படையணிகளுக்கிடையே சோர்வையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி போர்த் திறன் உறுதியைச் சிதைக்கும் பேராபத்து கொண்டவை. பாதுகாப்பு உற்பத்தியை தனியார்மயமாக்கும் மோடிஅரசின் முயற்சிகளை முறியடிக்கபோராடும் பாதுகாப்பு உற்பத்தி தொழிலாளர்களின் போராட்டம் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவை. இப்போராட்டத்தை நசுக்க கொண்டு வரப்படும் எந்த அவசரச்சட்டத்தையும் இந்திய தொழிலாளர்களுடன் அமைப்பு ரீதியில் திரட்டப்பட்டஅனைத்து பிரிவு தொழிலாளர்களும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இது நமது மாபெரும் வரலாற்று கடமையாகும்.

கட்டுரையாளர் : சுஜித் அச்சுக்குட்டன்

 

;