articles

img

அதிகார வர்க்கத்தை அதிர வைத்த சிவப்பு ரோஜா.... ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 2021 மார்ச் 5)

தோழர் ரோசா லக்ஸம்பர்க் ஒரு சிறந்த மார்க்சிய தத்துவவாதி. மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத் தகுந்த இடத்தை லக்ஸம்பர்க் வகிக்கிறார். மார்க்சியத்திற்குப் பங்களித்த பெண்களில் ரோசா முதன்மையானவர் என்றே கூற வேண்டும். ரோசா லக்ஸம்பர்க்கின் 150 வது பிறந்த தினம் இன்று. 

1871 மார்ச் 5 ஆம் தேதி போலந்து நாட்டில் பிறந்த லக்ஸம்பர்க் பின்னர் ஜெர்மனியின் புரட்சியாளராக திகழ்ந்தார். ஜாரின் ரஷ்ய ஆட்சியால் ஒடுக்கப்பட்ட போலந்து நாட்டவர் என்பதோடு அங்கும்  அம்மக்களால் கீழாக மதிக்கப்பட்ட யூத சிறுபான்மையினராக லக்ஸம்பர்க் இருந்தார்.அதோடு, அன்றைய அரசியல் என்பது மிகப் பெரிதும் ஆண்களின் களமாக இருந்த பொழுது அவர் ஒரு பெண்ணாக இருந்தார். ஆனபோதும், கம்யூனிஸ்ட் கட்சி என்று நேரடியாகச் செயல்பட முடியாத சூழலில் போலந்து நாட்டில் சமூக ஜனநாயகக் கட்சியை உருவாக்கியதில் ஒருவராகத் திகழ்ந்தார். ஜெர்மனியில் ‘ஸ்பார்ட்டகஸ் லீக்’ என்கிற அமைப்பை உருவாக்குவதிலும் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.  இவ்வமைப்பே பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்ச்சி பெற்றது. 

சமரசமற்ற உறுதி
ரஷ்ய எல்லைப் பகுதியில்தான் லக்ஸம்பர்க் வாழ்ந்து வந்த கிராமம் அமைந்திருந்தது. ஜார் மன்னனது ரஷ்யப் பேரரசின் தீவிரமான ரஷ்யமயமாக்கல் இயக்கம் போலந்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் தாக்குதலுக்குள்ளாக்கியது. ரஷ்ய மேலாதிக்கத்திற்கு எதிராகப்போராடியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவதும், நாடு கடத்தப்படுவதும் நடந்தேறியது. உயர் நிலைப்பள்ளியில் படித்த காலத்திலேயே லக்ஸம்பர்க் தலைமறைவாக பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவர் ஜூரிச் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். 

பகைமையான ஆதிக்கக் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே ஒரு புதிய நிலத்திலும் மொழியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். இருபது வயதே ஆன  நிலையில் ஒரு புதிய நாட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஒரு பெண்மணியால் ஒரு பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. அங்குதான் அவர் சட்டப் படிப்பைப் பயின்றார். அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதிகார வர்க்கத்தை எதிர்த்த அவரது கலக மனப்பாங்கின் காரணமாக அவருக்குரிய தங்கப்பதக்கம் மறுக்கப்பட்டது. எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இந்தப் போக்கு அவரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. குலைக்க முடியாத அவரின் இந்த உறுதித் தன்மைக்கு அஞ்சியவர்களே அவரைப் படுகொலை செய்தனர். 

பாட்டாளி வர்க்க அறிவாற்றல்
கோட்பாடு சார்ந்த சர்ச்சைகள் கல்வியாளர்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற வாதத்தை ரோசா லக்ஸம்பர்க் கடுமையாகச் சாடினார். கோட்பாடுகள் கல்வியாளர்களின் களம் என்று வாதிடுவது தொழிலாளியை கொச்சையாக அவமதிப்பதாகும். இதைவிட கீழ்த்தரமான அவதூறு எதுவும் இருக்க முடியாது என்றார். முதலாளித்துவ கல்வி முறையில் பெறப்படும் கல்வி (அறிவு) என்பது தனி நபர்களின் மேம்பாட்டிற்கானதாக கூறப்படுகிறது. நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், அதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்று வாழ்வில் மேம்படலாம் என்கின்றனர். உண்மையில் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதுமில்லை, வேலையில் உள்ளவர்களும் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களின் உழைப்பும் அறிவாற்றலும் கண்டுபிடிப்புகளும் முதலாளித்துவத்தின் லாபத்திற்கே உறிஞ்சப்படுகிறது என்பதே நிதர்சனமாகும். 

இன்று கல்விப் புலத்தில் உள்ள சமூகவியல், வரலாறு, தத்துவம் என எல்லாமும் முதலாளித்துவ தத்துவார்த்த இயலின் விளைபொருட்களே. முதலாளித்துவத்தின் வர்க்க நலன் மற்றும் தேவைகள் சார்ந்த மனப்பாங்குகளின் வெளிப்பாடாகவே அதன் கல்வி முறையும் அதன் உள்ளடக்கமும் இருக்கின்றன. ஆனால், பாட்டாளி வர்க்கமோ அதன் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அறிவாற்றல் என்பதை ஒரு சக்தியாக அங்கீகரிக்கிறது. கடின உழைப்பும்,விடா முயற்சியும் மகிழ்வைத் தரும் என்கிற உணர்ச்சியற்ற முதலாளித்துவ தனிமனித வாதத்தைப் பாட்டாளி வர்க்கம் புறம் தள்ளுகிறது. பாட்டாளி வர்க்கம், அறிவாற்றலை தனது வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு நெம்புகோலாகவும் உழைக்கும் மக்களிடம் புரட்சிகர உணர்வை ஏற்படுத்துகிற ஆயுதமாகவும் கருதுகிறது. 

விஞ்ஞான சோஷலிசத்தின் கூர்மையான நம்பிக்கைக்குரிய ஆயுதங்களை உள்ளடக்கிய கோட்பாடு சார்ந்த அறிவினை, மிகப்பெரும் பாட்டாளி வர்க்கம் தனது கையில் எடுத்துக் கொள்ளும்போதுதான் சந்தர்ப்பவாத போக்குகள் எங்கும் இல்லாமல் ஒழிந்துபோகும் என்கிறார் லக்ஸம்பர்க். 

உணர்வுப்பூர்வமான எழுத்து 
சாரமற்ற, இயந்திரத்தனமான எழுத்துக்களைச் சுவையற்ற இயக்கமற்ற அரசியலின் அடையாளமாகக் கருதிய லக்ஸம்பர்க் தனது வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் சோஷலிசத்தின் உயிருள்ள உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்கிறார் ஹெலன் ஸ்காட்.“கட்டுரைகளை வழக்கமான முறைகளில் எழுதுவதைக்கண்டு நான் அதிருப்தியடைகிறேன். அவர்கள் அந்த அளவிற்குச் சம்பிரதாயமாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் நீங்கள் அதன் பொருளை வாழ்ந்து பார்க்க வேண்டும். நான்எழுதும் பொழுது நான் என்ன எழுதுகின்றேனோ அதைப் பற்றி உற்சாகமான உணர்வுகளை எனது எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நான் உறுதியாக உள்ளேன்” என லக்ஸம்பர்க் பதிவு செய்கிறார். 

ஆடம்பரமான சொற்களையும் பாவனைகளையும் அவர் சிக்கனமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் முன்வைக்கும் கருத்தின் உள்ளடக்கத்தின் மூலமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எப்போதும் புரட்சிப்பொறி பறக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தபோதும் அதில் நிதானமான சிந்தனை கலந்தே இருக்கும் என்றும் லக்ஸம்பர்க் குறித்து ஸ்காட் பதிவு செய்துள்ளார். 

சீர்திருத்தமா? புரட்சியா?
லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல் அவரின் மிக முக்கியமான பங்களிப்பாகும். புதிய சீர்திருத்தம், சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் என அறியப்பட்டவற்றை ஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் முன்வைத்த எட்வர்ட் பெர்ன்டின் கருத்துக்களுக்குப் பதில் கூறும் வகையிலேயே இப்புத்தகம் அமைந்தது. இதில் லக்ஸம்பர்க் முன் வைக்கும் கருத்துக்கள் இன்றும் நமக்குப்பல தெளிவினை ஏற்படுத்துகின்றன. “நமது இறுதி இலக்கை சமூக சீர்திருத்தங்களுக்குச் சமமாக முன் வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. சமூக சீர்திருத்தங்களுக்கும் புரட்சிக்கும் இடையில், சமூக ஜனநாயகத்திற்கு ஒரு தவிர்க்கவியலாத பிணைப்பு இருக்கிறது” என்கிறார் லக்ஸம்பர்க். சீர்திருத்தம் பேசுபவர்கள் தங்களை மார்க்சின் சீடராக ஒப்புக் கொள்ளும் அதேநேரம் மார்க்சின் போதனைகளை நாடிச்சென்று அவர் மீதேதாக்குதல் நடத்துவர். அத்தாக்குதலையே மார்க்சியக் கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பார்கள் என்கிறார். இதை அப்படியே தற்காலத்தில் அடையாள அரசியலை முன்வைக்கும் கருத்தியலோடு பொருத்திப் பார்த்தால் லக்ஸம்பர்க்கின் கருத்தாழம் நமக்கு விளங்கும். 

‘சீர்திருத்தம்’ பேசுபவர்கள், ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான வீழ்ச்சியை மட்டும் நிராகரிக்கவில்லை; மாறாக வீழ்ச்சியின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர். அதாவது சமூகஎதார்த்தங்களை கணக்கில் கொண்டு மார்க்சியத்தை முன்னெடுப்பதே முதலாளித்துவத்தை வீழ்த்திட உதவும்என்பதை விமர்சனமாக கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் விவாதமோ, இத்தகைய எதார்த்தங்கள் உள்ள நிலையில் மார்க்சியம் ஏற்புடையதல்ல என்கின்றனர். அது வேறுவகையில் அனைத்து விதமானசுரண்டலுக்கும் அடிப்படையாக உள்ள முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளதாக அமைந்து விடுகிறது. 

மெய்யான இயக்கவியல்வாதி
ஸ்தாபன அமைப்பு, ஜனநாயகம், தேசியம், ரஷ்யப் புரட்சிக்கு பிறகான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் தோழர் லெனினுடைய கருத்துகளுடன் லக்ஸம்பர்க் முரண்பட்டே நின்றார். அவை கருத்து ரீதியான முரண்பாடாகவே பார்க்கப்பட வேண்டியவையாகும். மாறாக, லக்ஸம்பர்க் லெனினிய விரோதியாக சிலரால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் உண்மையில், லக்ஸம்பர்க்கும் லெனினும் பல ஆண்டுகள் நெருங்கிய சகாக்களாக இருந்தார்கள். லக்ஸம்பர்க் குறித்து லெனின் கூறுகையில், “உலககம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் அவரின் நூல்களும் கம்யூனிஸ்ட்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக அமையும்” என்றார். 

லெனினியத்தின் முக்கியமான கூறான ஸ்தாபனம் மற்றும் கட்சி அமைப்பின் அவசியத்தை லக்ஸம்பர்க் மறுதலித்தவர் அல்ல. “சோஷலிஸ்டுகள்தான் பாட்டாளி வர்க்கத்தின் மிகுந்த அறிவொளி பெற்ற மிகமிக வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படையினராவர். விதிவிட்ட வழியில் ‘புரட்சிகரச் சூழ்நிலை வருவதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களால் காத்திருக்கவியலாது; காத்திருக்கத் துணியவும் முடியாது” என்று தனது எழுத்துக்களில் லக்ஸம்பர்க் குறிப்பிடுகிறார். ஜார்ஜ் லூக்காஸ் கூறியது போல், “கூர்மையானதும் சிக்கலானதுமான ‘அடிக்கடி எதிரெதிர் யதார்த்தங்களை ஒன்று சேர்த்துப் பிடித்திருந்த’ ஒரு ஆளுமையைக் கொண்டமெய்யான இயக்கவியல்வாதியாக” லக்ஸம்பர்க் இருந்தார். லக்ஸம்பர்க்கிடம் உடன்படுவதற்கும் முரண்படுவதற்கும் பல அம்சங்கள் உள்ளன. வரலாற்றுப் படிப்பினைகள் அவற்றை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. மார்க்சியத்தின் வளர்ச்சி இவ்வாறான கருத்துப் போராட்டங்களின் வழியேதான் சாத்தியமாகிறது.

படக்குறிப்பு : “சோஷலிஸ்டுகள்தான் பாட்டாளி வர்க்கத்தின் மிகுந்த அறிவொளி பெற்ற மிகமிக வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படையினராவர். விதிவிட்ட வழியில் புரட்சிகரச் சூழ்நிலை வருவதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களால் காத்திருக்கவியலாது; காத்திருக்கத் துணியவும் முடியாது.”

கட்டுரையாளர் : ச.லெனின், சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்

;