articles

img

பொய் மட்டுமே உண்மை! -

“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால் மக்கள் நிச்சயமாக அதனை உண்மை என்று நம்பி விடுவார்கள். ஒரு கட்டத்தில் அப்பொய்யைச் சொன்ன நீயே கூட நம்பத் துவங்கி விடுவாய்” (ஜோசப் கோயபெல்ஸ்) மனித குலத்தை நர வேட்டையாடிய நாஜிகளின் தலைவன் அடால்ஃப் ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸின் இந்த வார்த்தைகள், சங் பரிவாரங்களுக்கு அப்படியே பொருந்துவதாக உள்ளன. மோடி,மோகன்பகவத் துவங்கி சங் பரிவாரங்கள் ஏன் மீண்டும் மீண்டும் பொய்களைப் பேசுகிறார்கள் என்று எண்ணத் தோன்றும். அவர்கள் முதலில் பொய்களைப் பேசிப் பேசி, பிறகு அவர்களே அதை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. 

உலகில் அதிகமாக தடுப்பூசி செலுத்திய நாடு, உலகுக்கு வழிகாட்டியாக இருக்கும் நாடு, மனித உரிமை பாதுகாப்பில் சிறந்த நாடு; இந்திய மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள், உத்தரப்பிரதேசம் தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம், பெரும் தொற்று காலத்தில் இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சாகவில்லை, பொருளாதாரம் வேகமாக வளருகிறது - என்று நடக்காத விஷயங்களை நடந்ததாக மீண்டும் மீண்டும் பொய்  சொல்லி அவர்களே நம்பத்துவங்கி விட்டனர். இவர்களின் பொய் நம்பிக்கைக்கு  இதோ   சிறந்த உதாரணம்: இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2, 2021 குஜராத்தில் பேசுகின்ற பொழுது “எந்த ஒரு பயங்கரவாத நோக்கமும் வெற்றி பெற இந்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. நரேந்திர மோடி பிரதமராக வந்ததிலிருந்து ஜம்மு-காஷ்மீர் தவிர இந்தியாவின் இதர இடங்களில் எந்த பெரிய பயங்கரவாத செயல்கள் நடைபெறவில்லை” என்று பேசியிருக்கிறார்.  இவரின் நம்பிக்கை இப்படி என்றால் பிரதமர் மோடியின் பொய் நம்பிக்கை இதைவிட அபாரம். ஏப்ரல் 13, 2019 ல் பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் “காங்கிரசின்   மிகவும் போலித்தனமான, நீண்டகால அரசாங்கம் மத்தியில் இருந்த போது, பெங்களூரில் குண்டு வெடிப்பு ஏற்படவில்லையா? பயங்கரவாத தாக்குதலுக்கு பயந்து இந்த நாடு வாழவில்லையா? உங்கள் காவலாளியின் காவல் காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய குண்டு வெடிப்பு நடந்ததா?  உங்கள் ஒரு வாக்கின்   பலம்தான் அதை சாத்தியமாக்கியது”  என்று தனக்குதானே ‘சவுக்கிதார்’ என புதிய பட்டம் சூட்டிக்கொண்டு மோடி பேசினார்.

மோடி பேசியதற்கு சில மாதங்கள் முன்பு, பிப்ரவரி 25ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பெங்களூரில் பயங்கரவாதம் பற்றி புள்ளி விவரங்களோடு பேசுவதாக நினைத்து கீழ்க்கண்டவாறு பேசினார்: “2014 முதல் இன்று வரை-  2004 முதல் 2013 வரை அனைத்து உண்மைகளையும் விபரங்களையும் எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். காஷ்மீரைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் அல்லது சிறிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. நாம் உண்மையைப் பேசுவோம்”  என்று பொய்மை பேசினார். பாஜகவில், சங்பரிவாரங்களில் பலரும் இப்படி தொலைக்காட்சிகளில், மேடைகளில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏழாவது மாதத்தில் 2014 டிசம்பர் 18 அன்று  பெங்களூரில் சர்ச் தெருவில் வெடிகுண்டு வெடித்து ஒருவர் இறந்துவிடுகிறார். 2 பேர் படுகாயம் அடைகிறார்கள். ஆனால் நமது பிரதமர் அதே பெங்களூரில் பொதுக் கூட்டத்தில் இந்த  சவுகிதாரின்(காவல்காரனின்) காவலில் ஒரு வெடிகுண்டு சத்தம் கேட்டது உண்டா? சவடால் விடுகிறார். 2016 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 406 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் 118 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 55 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவரங்களை  தேசிய பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவாக  இருக்கக்கூடிய வெடிகுண்டு தரவு மையத்தின் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 11, 2017 அன்று அறிக்கையாக அளித்துள்ளது. 

இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன்,  2019 பிப்ரவரி 25, மோடி ஆட்சியில் பயங்கரவாதம் வெடிகுண்டு எதுவும் நடக்கவில்லை என்று பேசினார்.  அவர் பேசுவதற்கு 18 நாட்களுக்கு முன்பாக 2019 பிப்ரவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை கீழ்கண்ட வாறு தெரிவிக்கிறது; 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 9125 பயங்கரவாத, தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 1708 ஜம்மு - காஷ்மீரிலும், 2442 வட கிழக்கு மாநிலங்களிலும், 4969 இடது அதி தீவிரவாத பகுதிகளிலும், ஆறு முக்கிய தாக்குதல்கள் நாட்டின் இதர பகுதிகளிலும், நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஜம்மு - காஷ்மீருக்கு வெளியே 81% தாக்குதல் அல்லது 7417 தாக்குதல் நடைபெற்றுள்ளன.  இவற்றில் கூறப்பட்டுள்ள ஆறு பிரதானமான தாக்குதல்களில் பதினொரு பொதுமக்களும் 11 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் தனது அரசால் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களுக்கு மாறாக மற்றோரிடத்தில் பேசுகிறார் என்று சொன்னால் இந்த பொய்நம்பிக்கை எவ்வளவு வலுவாக அவர்களிடம் உள்ளது என்பதை அறிய முடியும். 

2018 -ஆம் ஆண்டு இந்தியாவில் 174 செறிவுமிக்க வெடிபொருட்களை கொண்ட குண்டுவெடிப்புகளில் 108 பேர் இறந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டில் 244 குண்டுவெடிப்புகளில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய வெடிகுண்டு தகவல் மையத்தின் விவரங்களை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 17, 2019-ஆம் ஆண்டு இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இவையெல்லாம் நடந்த உண்மைச் சம்பவங்கள். ஆனால் மோடியின் ஆட்சியில் காஷ்மீரைத் தவிர எங்குமே குண்டு வெடிக்கவில்லை என்று அவர்கள் பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி பெங்களூருவில் குண்டு வெடித்து ஒருவர் இறந்துவிட இருவர் படுகாயமடைந்தனர். 2015-இல் ஜனவரி 23 பீகார் மாநிலம் போஜ்பூர் சிவில் நீதிமன்றத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 பேர் மரணம், 18 பேர் காயமடைந்தனர். இதே ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி மணிப்பூரில் ஒரு ராணுவ படையினர் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் குழு தாக்குதல் நடத்தி 18 இந்திய ஆயுதப் படை வீரர்களைக் கொன்றது. மேலும் 11 பேரை காயப்படுத்தியது. இது கடந்த பத்தாண்டுகளில் இந்திய ராணுவத்தின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலில் ஒன்றாகும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்தது.

2016- ஆம் ஆண்டு ஜனவரி 2 பதான்கோட் விமானப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 2017-ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வடமேற்கு மத்தியப் பிரதேசத்தில் ஜப்டி என்ற ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குண்டு வெடித்ததில் 11 பேர் காயமடைந்தார்கள் என்பதை மார்ச் 24ஆம் தேதி அரசு அறிவித்தது. 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி சத்தீஸ்கரின் சுக்மாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். பதிலடி தாக்குதலில் 10 முதல் 12 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். 2018-ஆம் ஆண்டு மார்ச் 13 சத்தீஸ்கரின் சுக்மாவில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவி கொண்டு நடத்திய குண்டுவெடிப்பில் 9 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டில் இதுவரை இந்தியாவில் 75 குண்டுவெடிப்புகளில் 26 பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; 99 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். எனவே கோயபல்ஸ் வாரிசுகள், இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் தவிர இதர இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் குண்டுவெடிப்புகள் இல்லை என்று பேசி வருவது அப்பட்டமான பொய். 

ஜம்மு - காஷ்மீரின் நிலைமை என்ன?

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்புகளும் தீவிரவாதி தாக்கங்களும் அதிகமாய் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2018 -ல் மட்டும் 57% குண்டுவெடிப்புகள் அதிகரித்து உள்ளது. 2014 செப்டம்பர் 18 ஜம்மு-காஷ்மீரில் உரி என்ற இடத்தில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 19 பாதுகாப்புப் படை வீரர்களை கொன்றனர். 2014 டிசம்பர் 5 உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவ வீரர்கள், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2016 அக்டோபர் 3 ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டார். 2016 நவம்பர் 29 இல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகுடா ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் போலீசாரின் உடையை அணிந்து தாக்குதலை நடத்தினர். 12 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த மோதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2019 பிப்ரவரி 11 ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா என்ற இடத்திற்கு அருகே தற்கொலை குழுக்களால் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியபோது 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எனவே நமது நாட்டின் பிரதமரும் முன்னாள், இந்நாள் பாதுகாப்பு அமைச்சர்களும் “தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று பிரச்சாரம் செய்வது உண்மைக்கு மாறானது. இதேபோன்று ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துவிட்டது என்று வாதிடுவதும் அபத்தமானது. தொடர்ந்து இவர்கள் சங் பரிவாரங்களின் பொய் பிரச்சாரங்களை  நடத்திய பழக்கத்தினால் அவர்களால் புனையப்பட்ட பொய்களை அவர்களே நம்பி மீண்டும் மீண்டும் அதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பேசுவதில் பொய்கள் என்பது தவிர வேறு எதுவும் உண்மை இல்லை.

கட்டுரையாளர் : சிபிஎம் தென்சென்னை 
மாவட்டச் செயலாளர்
 

;