articles

img

பாரீஸ் கம்யூன் 150....

உலகின் முதல் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி “பாரீஸ் கம்யூன்”ஆகும். லெனின் தலைமையிலான நவம்பர் புரட்சிக்கு முன்னோட்டமாக அமைந்த இந்த புரட்சி 72 நாட்கள்தான் நீடித்தது. மிகக்கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட இந்த மகத்தான வீரம் செறிந்த பாரீஸ் தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி 1871ஆம் ஆண்டுமார்ச் 18 தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி முடிந்தது. இந்த முன்னோடி புரட்சியின் 150 ஆவது ஆண்டு இது. உலகம் முழுவதும் உள்ளஇடதுசாரி அமைப்புகள் மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் இந்த நிகழ்வையும் அதன் படிப்பினைகளையும் நினைவு கூர்கின்றன. பல இயக்கங்கள் இந்த புரட்சியின் தொடக்க நாளானமார்ச்18ஐ நினைவுகூரும் அதே சமயத்தில் “லெஃப்ட் வோர்ல்டு” /பாரதி புத்தகாலயம் உட்படபல வெளியீட்டு நிறுவனங்கள் இந்த பேரெழுச்சிமுடிவுக்கு வந்த நாளான மே 28 அன்று பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வை அதற்குஉரித்தான அளவுக்கு கடைப்பிடிக்க இயலவில்லை என்றாலும் அதன் முக்கியத்துவம் சற்றும் குறைந்தது அல்ல!

கம்யூன் புரட்சியின் பின்னணி 
1870ல் பிரான்சுக்கும் பிரஷ்யாவுக்கும் (இன்றைய ஜெர்மனியின் ஒரு பகுதி) நடந்த போரில் பிரான்சு படுதோல்வி அடைந்தது. பிரான்சு மன்னர் நெப்போலியன் சரண் அடைந்தார். இதனால் கோபமுற்ற பிரான்சு படைத்தளபதிகள் மற்றும் சிலர் பிரான்சை குடியரசாக (மூன்றாவது குடியரசு) அறிவித்தனர். பிரான்சு மக்கள் தொழிலாளி வர்க்கம் உட்பட இதனை வலுவாக ஆதரித்தனர். தங்களது தேசம் சர்வாதிகாரி பிஸ்மார்க் தலைமையிலான பிரஷ்யாவிடம் சரண் அடைவதை அவர்கள் விரும்பவில்லை. குடியரசாக அறிவித்த பிரான்சுஆளும் வர்க்கத்தினர் அதனை வலுப்படுத்த எதுவும் செய்யவில்லை. மாறாக பிரஷ்யா அரசாங்கத்திடம் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். பிரான்சின் சில பகுதிகளை பிரஷ்யாவுக்கு தாரைவார்த்துவிட்டு மீதமுள்ள பிரான்சை தமது பிடிக்குள் கொண்டு வருவது என்பது அவர்கள் திட்டம். போர்முனைக்கு உழைப்பாளிகளை அனுப்பியது முதலாளிவர்க்கம்; பிரஷ்யாவிடம் சரண் அடைந்தது முதலாளி வர்க்கம்; போருக்கு பிந்தைய நெருக்கடியின் பொருளாதார சுமைகளை உழைப்பாளிகள் மீது  சுமத்த திட்டமிடுவது முதலாளி வர்க்கம். இதனை ஏற்றுக்கொள்ளாத பாரீஸ் தொழிலாளர்கள் பாரீசை சரணடைய விடமாட்டோம் என அறிவித்தனர்.

அப்போது பாரீசில் ஏராளமான பீரங்கிகள் இருந்தன. அவற்றை கைப்பற்ற பிரான்சு இராணுவம் வெர்ஸ்லீஸ் என்ற நகரிலிருந்து பாரீஸ் வந்தது. இந்த பீரங்கிகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்வது பிரான்சு-பிரஷ்யாவின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. ஏற்கெனவே இராணுவம் பாரீஸ் நகரிலும் இருந்தது. இதனை அறிந்தபாரீஸ் தொழிலாளர்கள் தமது நகரை இராணுவத்திடம் ஒப்படைப்பது இல்லை எனவும் எக்காரணம் கொண்டும் பீரங்கிகளை ஒப்படைப்பது இல்லை எனவும் முடிவு செய்தனர். 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி பாரீஸ் தொழிலாளர்கள் பாரிஸ் நகரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இராணுவத்தை சந்திப்பது எனவும் பாரீஸ் நகரை உண்மையாக குடியரசாக மாற்றுவது எனவும் அறிவித்தனர். பாரீஸ் நகரம் முழுவதும் தடுப்பு கோட்டைகளை உருவாக்கினர்.

தொடக்கத்தில் குடியரசாக அறிவிக்க உருவான திட்டம் பின்னர் தொழிலாளி வர்க்க புரட்சியாக விரிவுபடுத்தப்பட்டது.  பாரீஸ் நகரின் அரசியல் திசைவழியை உருவாக்க ஒரு மத்திய குழு அமைக்கப்பட்டது. அந்த மத்திய குழு பாரீசின் ஒவ்வொரு வார்டிலும் வாக்கெடுப்பு மூலம் கவுன்சிலர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கம்யூன் அமைப்பை வழிநடத்த பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் புகழ்பெற்ற “டி வெல்லி”எனும் ஓட்டலில் இசை முழங்க கொண்டாட்டங்களுடன் வந்து சேர்ந்தனர். கம்யூன் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “பாரீஸ் மக்களின் பெயரால் இந்த தருணத்தில் கம்யூன் பிறந்தது” என அறிவித்தார் காப்ரியல் ரேன்வீர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கவுன்சிலர்களில் ஒருவர். முக்கியமாக அவர் பெயிண்ட்தொழிலாளி. அவர் மட்டுமல்ல; மிகப்பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள்தான். ஏனையோர் தொழிலாளர்களுக்காக செயல்படுபவர்கள். இந்த அறிவிப்புடன் உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு உருவானது.

மகத்தான திட்டங்கள்
வெறும் 72 நாட்கள்தான் நீடித்தது என்றாலும் கம்யூன் அறிவித்த திட்டங்கள் மகத்தான தாக்கத்தை உருவாக்கின. தொழிலாளி வர்க்கத்தின் முத்திரை அந்த திட்டத்தில் இருந்தது. அவற்றில் சில முக்கியமான அம்சங்கள்:

#  இராணுவம் கலைக்கப்பட்டு பாதுகாப்புப் பணி “தேசிய பாதுகாப்புப் படை” எனும் மக்கள்  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

#   அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கு.அந்த அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கம்யூன் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும்.

#   கம்யூன் பிரதிநிதிகள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் பணி சரிவர இல்லை என மக்கள் கருதினால் எப்பொழுது வேண்டுமானாலும் பதவியை இழப்பார்கள்.

#   கம்யூன் பிரதிநிதிகளின் அனைத்து உயரதிகாரிகளின் ஊதியமும் “தொழிலாளர் ஊதியம்” எவ்வளவோ அவ்வளவுதான் நிர்ணயிக்கப்படும்.

#   அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டஆலைகளும் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் கீழ் வரும். அவற்றை நடத்தும் அதிகாரம் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.

#   குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயிப்பு.

#   குழந்தை உழைப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

#   கடும் சுரண்டலுக்கு வழிவகுத்த பேக்கரி இரவுப்பணி நிறுத்தப்பட்டது.

அனைவருக்கும் இலவசக் கல்வி

#  பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம்.

#   அனைவருக்கும் வீட்டு வசதி உரிமை! காலியாக உள்ள வசதி படைத்தவர்களின் வீடுகள்பறிமுதல் செய்யப்பட்டு உழைப்பாளிகளுக்கு பகிரப்பட்டன.

#  தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள்/ஊதிய பறிப்புக்கு தடை!

#   சட்டப்பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் இலவசம். நீதிபதிகளும் தேர்தல் மூலம் தேர்வு.

#   போர் காரணமாக கணவர்களை இழந்த பெண்களுக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் முழு நிதி உதவி.

#   முக்கிய உணவான ரொட்டிக்கு விலை வரம்பு நிர்ணயம்!

#   தேவைப்படுபவர்களுக்கு உணவு வங்கியும் உணவகங்களும் திறக்கப்படும். பட்டினி ஒழிக்கப்படும்.

#   சூதாட்டத்துக்கும் விபச்சாரத்துக்கும் தடை.

#   கில்லட்டின் மூலம் தரப்படும் மரண தண்டனைஒழிப்பு.

#  அனைத்து வணிகக் கடன்களும் வட்டியும் தள்ளிவைப்பு.

#   தேவாலயங்கள் மற்றும் பாதிரியார்கள் செயல்பட தடை இல்லை; எனினும் தேவாலயங்கள் கல்வி மற்றும் அரசிடமிருந்து பிரித்துவைக்கப்படும்.

இப்படி பல அதிரடியான தொழிலாளி வர்க்கத்துக்கே உரித்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை அமலாக்கப்பட்டன. சாதாரண தொழிலாளர்கள் பலரும் முதலாளித்துவ அதிகாரிகளைவிட சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்திக் காட்டினர். கம்யூன் அறிவித்த பல திட்டங்கள் இன்றளவும் தேவைப்படுவது என்பதும் வளர்ந்த முதலாளித்துவ தேசங்களில் கூடஇன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக இந்த பெருந்தொற்று கம்யூன் திட்டங்களின் முக்கியத்துவத்தை மேலும் கூடுதலாக்கியுள்ளன எனில் மிகை அல்ல.

ஏன் தோல்வி?
பாரீஸ் நகரை மீட்க பிரான்சு முதலாளித்துவமும் பிரஷ்யாவும் சேர்ந்து செயல்பட்டன. ஒரு முனையில் பிரஷ்யப் படைகள் முற்றுகையிட மற்றொரு முனையில் பிரான்சு படைகள் பாரீசில்நுழைந்தன. ஒவ்வொரு தெருவாக ஒவ்வொரு வார்டாக தொழிலாளி வர்க்கப் படை போரிட்டது. எனினும் வீழ்ந்தது. போராளிகளை இராணுவம் கொன்று குவித்தது. சுமார் 1 லட்சம் பேர் பெண்கள் உட்பட கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை அடக்கம் செய்ய பாரீசில் இடம்இல்லை. முழுவதுமாக எரிக்கவும் முடியவில்லை.இந்த போராளிகளின் உடல்கள் மீதுதான் “Sacred Heart” எனும் புகழ்பெற்ற தேவாலயம் கட்டப்பட்டது. பலர் நாடு கடத்தப்பட்டனர். ஒருஇலட்சத்துக்கும் அதிகமானோர் வேறு நாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் தஞ்சம் புகுந்தனர். பிரிட்டனில் தஞ்சம் புகுந்தவர்களை மார்க்சும் அவரது குடும்பத்தினரும் ஏங்கெல்சும் ஏனைய பொதுவுடமை ஆதரவாளர்களும் பாதுகாத்தனர். 

இந்த தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன?
கம்யூன் அதிகாரத்தில் இருந்தவர்களில் மார்க்ஸ்/ஏங்கெல்ஸ் ஆதரவாளர்கள் சிறியஎண்ணிக்கைதான்! குட்டி முதலாளித்துவ சோசலிச தலைவர் புருதான் மற்றும் அராஜகவாதம் மூலம் சோசலிசத்தை நிலைநாட்ட வேண்டும் என கருத்து கொண்ட லூயிஸ் பிளான்க்கி ஆகியோரின் ஆதரவாளர்கள் மற்றும் பல சிந்தனையோட்டங்கள் கொண்டவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். சோசலிசம் குறித்து கனவுகள் இருந்த அளவுக்கு அதனை அமலாக்க ஒரு ஒருங்கிணைந்த அரசியல்- சமூகத் திட்டம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. அரசு அதிகாரத்தை கைப்பற்றும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ அரசு கட்டமைப்பை பயன்படுத்த இயலாது; மாறாக அதனை முற்றிலுமாக சுக்கு நூறாகஉடைத்தெறிந்துவிட்டு புதிய அரசு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதனை கம்யூன் தலைமை முழுமையாகச் செய்யவில்லை. சில முக்கிய மாற்றங்களை அரசு கட்டமைப்பில் செய்தாலும் அவை பாதிக் கிணறு தாண்டியதாகவே அமைந்தன.பாரீசை கைப்பற்றிய கம்யூன் தலைமை வெர்ஸலீஸ் மீது படையெடுத்து அங்கு வீற்றிருந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களை வீழ்த்த எதுவும் செய்யவில்லை. மாறாக பாரீசில் சிக்கியிருந்த இராணுவத்தினரை இரக்கப்பட்டு வெளியேற அனுமதித்தனர். இது மிகப்பெரிய தவறாகஅமைந்தது. தப்பிய இராணுவத்தினர் வெர்ஸலீஸ் சென்று ஏனைய இராணுவத்தினருடன் இணைந்து பாரீசை தாக்கினர். வெர்ஸலீசில் முதலாளித்துவ ஆட்சியாளர்களை தாக்காமல் அவர்கள் தொடர்ந்து இயங்க அனுமதித்ததன் மூலம் தனது வீழ்ச்சிக்கு தானே வழியை உருவாக்கிக்கொண்டது கம்யூன்!

பாரீஸ் நகரை தமது நிர்வாகத்துக்குள் கொண்டு வந்த தொழிலாளி வர்க்கம் பிரான்சின் மத்திய வங்கியை கையகப்படுத்த தவறியது.வங்கியின் சொத்து தேவாலயத்தின் சொத்தைவிட புனிதமானது; அதனை கம்யூன் பறிக்கக்கூடாது; ஆனால் அதனை புரட்சிக்குப் பயன்படுத்த நான் அனுமதிக்கிறேன் என அதன் நிர்வாகி சொன்னதை நம்பினர். அது மிகப்பெரிய கேடாக அமைந்தது. புரட்சிக்குப் பின்னர் நிதி அமைப்புகள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயகத்துக்கு கீழ்ப்படிய வேண்டும் எனும் அரசியல் பொருளாதார அரிச்சுவடியை உள்வாங்க தவறியது கம்யூன் தலைமை. “கம்யூன் தோல்வி அடைந்தால் அதற்கு முக்கியக் காரணம் கம்யூன் தலைவர்களின் இரக்க குணமாகத்தான் இருக்கும்” என மார்க்ஸ் விமர்சித்தார். 

இன்னொரு முக்கிய பலவீனம் தொழிலாளி- விவசாய வர்க்கங்களின் ஒற்றுமை உருவாகவில்லை என்பதாகும். பாரீஸ் நகரில்தொழிலாளர்கள் அதிகமாக இருந்தாலும் பிரான்சின் கிராமப்புறங்களில் விவசாயிகள்தான் அதிகமாக இருந்தனர். விவசாயிகளை புரட்சிக்கு ஆதரவாக திரட்ட கம்யூன் கடுமையாக முயன்றது. “உங்களது விடுதலைதான் எங்களது விடுதலையும்” எனவும் “உங்கள் கோரிக்கையும் எங்கள் கோரிக்கையும் ஒன்றுதான்” எனவும் விவசாயிகளை கம்யூன் அழைத்தது. ஆனால் இந்த மகத்தான ஒற்றுமையை உருவாக்க நேரம் இருக்கவில்லை. எதிரி வர்க்கம்அதற்கான வாய்ப்பும் தரவில்லை. கம்யூனின் தகவல்கள் எதுவும் விவசாயிகளை சென்றுஅடையாதவண்ணம் தடைகள் உருவாக்கப்பட்டன.

இத்தகைய சில முக்கிய பலவீனங்களால் கம்யூன் தோல்வியை சந்தித்தது. எனினும் இது பல படிப்பினைகளை தந்தது. முதலாளித்துவஅரசு இயந்திரத்தை சுக்கு நூறாக உடைத்துஉழைப்பாளி மக்களின் அரசு கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவம் / புரட்சியை பாதுகாக்க மக்கள் இராணுவத்தின் அவசியத்தேவை/ தொழிலாளி - விவசாய வர்க்க ஒற்றுமை/ எதிரி வர்க்கங்கள் மீது தீர்மானகரமான தாக்குதல்/ நிதிமேலாண்மையை அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல் போன்ற பல படிப்பினைகள் இதில் அடங்கும்.“பாரீசின் தொழிலாளி வர்க்கமும் கம்யூன் அமைப்பும் புதிய சமூகம் படைப்புக்கான மகத்தான கலங்கரை விளக்கமாக போற்றப்படுவார்கள்” எனவும் “கம்யூனின் தியாகிகளின் பெயர்கள் என்றென்றும் உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் மகத்தான இதயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்” எனவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பில் மார்க்ஸ் கூறினார்.  

“பாரீஸ் கம்யூனின் போராட்டம் பாரீஸ் தொழிலாளி வர்க்கத்துக்காக மட்டுமல்ல; அது உலகதொழிலாளி வர்க்கத்துக்கானது. அந்த பொருளில் கம்யூன் சாகா வரம் பெற்றது” என்றார் லெனின்.ஆம்! சாகா வரம் பெற்ற பாரீஸ் கம்யூன் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் உத்வேகத்தையும் படிப்பினைகளையும் கொண்டுள்ளது எனில் மிகை அல்ல!

கட்டுரையாளர் :அ.அன்வர் உசேன்

;