articles

img

செங்குருதியால் எழுதப்பட்ட விடுதலை வரலாறு - பி.ராமமூர்த்தி

1918இல் முதலாவது யுத்தம் முடிந்தவுடன் துருக்கியிலிருந்து கலிபா என்ற அரசனையும் மதகுருவையும் பீடத்திலிருந்து அகற்றிவிட்டதைப் பல முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் வாழக்கூடாது என்று இந்தியாவிலிருந்து வெளியேறி பல நாடுகளுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் சோவியத் யூனியனுக்குச் சென்றனர். அங்கு கிழக்கிந்திய நாடுகளின் உழைப்பாளி மக்களுக்குப் பயிற்சியளிக்கும் பல்கலைக்கழகத்தில் பலர் சேர்ந்தனர். அதில் லெனின் கலந்து கொண்டு மார்க்சியத்தைப் போதித்தார். இந்தியாவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் அதில் கலந்து கொண்டனர். மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினர். அவர்கள் இந்திய மண்ணில் கால் வைத்தவுடன் கைது செய்யப்பட்டு சதி வழக்கு தொடரப்பட்டு ஆயுள் தண்டனை உட்பட நீண்ட கால தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டன. இவ்வாறு இந்தியாவில் கம்யூனிச கருத்துக்கள் சதி வழக்கின் மூலம் பரவ ஆரம்பித்தன. பிறகு மார்க்சீய நூல்களை சர்க்காருக்கு தெரியாமல் வரவழைத்து பிரசுரம் செய்யப்பட்டன. இதன்பிறகு இங்குமங்கும் சில சிறுசிறு கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின. அவைகளெல்லாம் ஒருங்கிணைந்து 1925ஆவது ஆண்டு கான்பூரில் ம.சிங்காரவேலர் தலைமையில் இந்திய மண்ணில் முதல் தடவையாக கம்யூனிஸ்ட் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது.

கட்சியின் உடனடி லட்சியம் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவது; பிறகு சோசலிச அமைப்பை நிர்மாணித்து கம்யூனிச அமைப்பை நோக்கிச் செல்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கினால் தான் பூரணமாக வெற்றி அடைய முடியும் என்றும் அத்தீர்மானம் கூறியது. அதற்கேற்ப பல நகரங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள், தொழிற்சங்க அமைப்புகள் உதயமாயின. கிர்னி காம்கார் சங்கம் (பம்பாய் பஞ்சாலை தொழிலாளர் சங்கம்) வங்காளத்தின் சணல் ஆலைத் தொழிலாளர் சங்கம், ஜிஐபி (GIP) ரயில்வே தொழிலாளர் சங்கம், தென்கிழக்கு ரயில்வே தொழிலாளர் சங்கம், வடகிழக்கு ரயில்வே தொழிலாளர் சங்கம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களை நிறுவினர். முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து இரண்டு லட்சம் பஞ்சாலை தொழிலாளர்கள் பம்பாயில் எட்டு வாரம் வேலைநிறுத்தம் செய்து கோரிக்கைகளைப் பெற்று வெற்றிபெற்றனர். வேறு பல நகரங்களில் லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் பங்கு கொண்ட வேலைநிறுத்தங்கள் நடந்தன. அவற்றில் பலவற்றில் வெற்றிகளும் கிடைத்தன.

சதி வழக்குகள்

இவைகளைக் கண்டு பீதியடைந்த இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் சர்க்கார் பல தலைவர்கள் மீது சதி வழக்குகள் போட்டது. மீரட் சதி வழக்கில் ஈடுபடுத்தப்பட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்பட நீண்டகால தண்டனைகள் வழங்கப்பட்டன. தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய சிங்காரவேலர் மீதும் பல தொழிற்சங்க ஊழியர்கள் மீதும் சதி வழக்கு போடப்பட்டது. சிங்காரவேலருக்கு ஆயுள் தண்டனை (பின்னர் இது குறைக்கப்பட்டது)யும், ஏனையோருக்கு நீண்டகால தண்டனையும் வழங்கப்பட்டன. இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க ஆரம்பித்தவுடன் சதி வழக்குகளையும் ஆயுள் தண்டனைகளையும் சந்திக்க நேர்ந்தது. போலீஸ் தடியடியையும் காவல்நிலையத்தில் சித்ரவதைகளையும் சந்தித்த தோழர்கள் எண்ணற்றவர்கள். துப்பாக்கச் சூட்டில் இறந்தவர்களும், தூக்குமேடை ஏறியவர்களும் எண்ணற்றோர்! நம்முடைய கட்சி சந்தித்த அடக்குமுறையைப் போல் வேறு எந்தக் கட்சியும் சந்தித்ததில்லை.

சதி வழக்கில் தண்டிக்கப்பட்ட தோழர்களின் தண்டனை ஹைகோர்ட்டால் பெருமளவு குறைக்கப்பட்டது. அத்தோழர்கள் சிறையிலிருந்து வெளிவந்து கட்சி அலுவல்களை துவக்கினார். ஆனால் 1934இல் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆவது உலகயுத்தம் ஆரம்பித்த உடனே, கட்சி அந்தக் கட்டத்தை ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக கணித்தது. அதை எதிர்த்து அந்தந்த நாட்டிலிருந்த அரசுகளை வீழ்த்தி அரசு மாற்றத்திற்கான உள்நாட்டு யுத்தமாக மாற்ற வேண்டுமென்று பாட்டாளி மக்களுக்கு செப்டம்பர் மாதத்திலேயே அறைகூவல் விடுத்தது. உடனே நாடெங்கிலுமிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டு பலர் சிறைகளில் காவல் கைதிகளாக வைக்கப்பட்டனர். பிரிட்டன் இந்த யுத்தத்தை தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்துகிறது என்று நான்கு மாதங்களுக்குப் பிறகு கூடிய காங்கிரஸ் நிர்ணயித்தது.

1942ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் தேதியன்று ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்த பிறகு ஆறு மாதங்கள் கட்சி அணிகளுக்குள்ளே விவாதம் நடந்தது. யுத்தத்தின் தன்மை மாறிவிட்டது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கட்சித் தலைவர்களும் ஊழியர்களும் பெரும்பான்மையோர் சிறையில் இருந்ததனாலும் வெளியில் இருந்த தோழர்கள் தலைமறைவாக இருந்து பணியாற்றியதாலும் தஸ்தாவேஜுகளை சிறையிலிருந்த தோழர்களிடமும் வெளியிலிருந்த தோழர்களிடமும் பரிமாறிக் கொண்டு இந்த முடிவுக்கு வருவதற்கு ஆறுமாதங்கள் ஆயின. சோவியத் யூனியன் வெற்றிக்கும், நேசநாடுகளின் வெற்றிக்கும் உதவி செய்யக்கூடிய முறையில் பாசிச எதிர்ப்பு யுத்த முயற்சிகள் இந்தியாவில் தொடர்ந்து நடப்பதற்கும், அதேநேரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான புதிய தந்திரோபாயத்தை உருவாக்க வேண்டிய கடமை இக்கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் இந்திய மக்களின் பாசிச எதிர்ப்பு யுத்த முயற்சிகளை உறுதிப்படுத்தவும், பயனுள்ளதாக்கவும், தேசிய சர்க்காரின் கையில் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இதன் பிறகு நம் கட்சியின் மேலிருந்த தடையை பிரிட்டிஷ் சர்க்கார் நீக்கியது. அதற்கு பிறகு பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் இந்திய மக்கள் பெரும் உற்சாகமாக பங்கு கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்; உடனடியாக ஒரு இடைக்கால தேசிய சர்க்கார் நிறுவப்பட வேண்டும் என்று கோரியது. இந்தக் கோரிக்கையை மறுப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் அன்று உபயோகித்த துருப்புச் சீட்டு காங்கிரஸ் - லீக் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியது. காங்கிரஸ் ஊழியர்களுக்கு தூக்கு தண்டனை உள்பட பல தண்டனைகள் கீழ்க்கோர்ட்டுகளால் வழங்கப்பட்டதை எதிர்த்து இங்கிலாந்திலுள்ள பிரிவீ கவுன்சில் வரையில் (அன்று ஹைகோர்ட்டுக்கு மேல் அப்பீல் செய்து கொள்ள இங்கே சுப்ரீம் கோர்ட் கிடையாது). அப்பீல் செய்து பலரது தூக்கு தண்டனைகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன. நீண்டகாலத் தண்டனைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன.

உள்நாட்டில் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பண்டங்கள் கள்ள மார்க்கெட்டிற்குச் சென்றுவிட்டதால் மக்களுக்கு யுத்தத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டதை உணர்ந்து கள்ள மார்க்கெட்காரர்களுக்கும் பதுக்கல் காரர்களுக்கும் எதிராக மக்களை திரட்டியது. ஓரளவு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்தது. பல கள்ளமார்க்கெட்காரர்கள் தண்டிக்கப்பட்டனர். மூன்றாண்டுகளுக்கு பிறகு அன்றைய பிரிட்டிஷ் இந்திய மாகாண அரசுகள் பல கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை ஆதரிப்பதாகக் கூறி மக்களை பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராக கிளப்பிவிட்டிருக்கின்றனர் என்று கூறி மீண்டும் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சர்க்காரை கோரின. அன்றைய மத்திய சர்க்கார் இந்தப்  பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை, 1934இல் கட்சியை தடை செய்த பிறகு பிரிட்டிஷ் ஆட்சியால் அதை முடமாக்க முடியவில்லை. மாறாக, அது வளர்ந்தது. இந்த நாட்டில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராக இயங்கும் ஒரு கட்சியை தடை செய்தால் மக்களிடையே அதற்கு செல்வாக்கு பெருகுகிறது என்று மத்திய சர்க்கார் அதன் மாநிலப் பிரிவுகளுக்குக் கூறியது. இந்த விபரங்கள் எல்லாம் வைஸ்ராய் உள்ளிட்டு மத்திய சர்க்காரை வற்புறுத்திய உயர்தர அதிகாரிகளின் தஸ்தாவேஜுகளில் எழுதிய குறிப்புக்களில் காணலாம்.

இந்திய தேசிய ராணுவம்

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக, யுத்தம் முடிந்த பிறகு 1946இல் இதற்கு முன் என்றும் கண்டிராத அளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவிலிருந்து மறைமுகமாகச் சென்று சிங்கப்பூரில் ஜப்பானியப் படைகளால் பிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்ய வைத்து அவர்களைக் கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரை ஆயுதந் தாங்கி எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற பெயரில் ஒரு படையை திரட்டினார். இவர்களையெல்லாம் ஜப்பான் சரணாகதி அடைந்து யுத்தம் முடிந்தவுடன் பிரிட்டிஷ் சர்க்கார் கைது செய்தது. தில்லியில் செங்கோட்டையில் “சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட சர்க்காரை” ஒழிப்பதற்காகப் போராடிய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிப்பதற்கு ஒரு ராணுவ கோர்ட்டை பிரிட்டிஷ் சர்க்கார் நியமித்தது.

கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள்

இதை எதிர்த்து, இந்த ஐஎன்ஏ தேசபக்தர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை நாடெங்கிலும் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால்களை கம்யூனிஸ்ட்டுகள் கட்சி தலைமை தாங்கி நடத்தியது. இவைகளில் கோடிக்கணக்கான மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளிகள் பங்கெடுத்துக் கொண்டனர். கல்கத்தா நகரிலும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களிலும் பத்து நாள் நீடித்து நடந்த வேலைநிறுத்தத்தையும் ஹர்த்தாலையும் கண்டு பீதியுற்ற பிரிட்டிஷ் சர்க்கார், இந்திய தேசிய ராணுவ வீரர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்தது.

பண்டித ஜவஹர்லால்நேரு ஜம்மு-காஷ்மீரில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்திடச் சென்றார். அங்கு காலடி வைத்தவுடன் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து நாடெங்கிலும் வேலைநிறுத்தங்களையும், ஹர்த்தால்களையும் நடத்தியதில் முன்னின்றது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் விளைவாக நேரு விடுதலை செய்யப்பட்டார். இதற்குப் பிறகு நாடெங்கிலும் பல கோரிக்கைகளை முன்வைத்து காவல்துறையினர் வேலைநிறுத்தங்கள் செய்தனர். அதையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இதனையொட்டி, ராணுவ வீரர்கள் தங்கும் கண்டோன்மெண்டுகளில் இருந்த இந்திய சிப்பாய்கள் பலர் கண்டோன்மெண்டுகளை விட்டு நகரங்களுக்கு வந்து காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை கையிலேந்தி “பிரிட்டிஷ் சர்க்கார் ஒழிக! ஏகாதிபத்தியம் ஒழிக! இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மகத்தான கப்பற்படைப் போர்

இவைகளுக்கு சிகரம் வைத்தாற்போல் 1946 பிப்ரவரி மாதம் பம்பாயிலிருந்த தல்வார் என்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த கப்பற்படையினர் வேலைநிறுத்தம் செய்தனர். அதை ஒடுக்க கராச்சியிலிருந்து ஹிந்துஸ்தான் என்ற யுத்த கப்பல் அனுப்பப்பட்டது. அந்தக் கப்பல் பம்பாய்க்கு வந்தவுடன் அதிலிருந்த இந்திய கப்பற்படையினர் தங்கள் சகோதரர்கள் மீது துப்பாக்கியால் சுட மறுத்துவிட்டனர். பிறகு முழுவதும் பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கொண்ட ஒரு கப்பல் பம்பாய்க்கு அனுப்பப்பட்டது. மூன்று நாள் ஆயுதந் தாங்கிய போர் நடந்தது.  கப்பற்படை வீரர்களின் போராட்டம் தல்வார் என்ற யுத்தக் கப்பலில் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த மூன்றாவது நாள் இரவு அவசர அவசரமாக பிரிட்டிஷ் மந்திரிசபை லண்டனில் கூடியது. உடனடியாக இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதாக முடிவு செய்தது. அதை மறுநாள் காமன்ஸ் சபையில் அறிவித்தது. அதை எதிர்த்த முன்னாள் பிரதமர் சர்ச்சிலுக்கும் ஏனைய கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் பதிலளித்து அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அந்த முடிவை நியாயப்படுத்தினார். இந்தியாவிலுள்ள இப்பொழுதுள்ள நிலைமையானது, 1930 முதல் சட்டமறுப்பு இயக்கம் நடந்த சமயம், 1932ஆம் ஆண்டு இருந்த நிலைமை 1942ஆம் ஆண்டு குவிட் இந்தியா என்ற வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் போன்ற நிலைமை அல்ல. இப்பொழுது இந்தியாவிலும் ஆசியாக் கண்டத்திலும் தேசிய விடுதலை அலைகள் ஓங்கி கற்களிலும் பாறைகளிலும் மோதி உடைத்துக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

ஸ்டாப்போர்டு கிரிப்ஸ்

விவாதத்தில் கலந்து கொண்ட சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் என்ற பிரிட்டிஷ் காபினெட் மந்திரி, “இந்தியாவில் 200 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சி நீடித்ததென்றால் பிரிட்டிஷ் சிப்பாய்களின் படை பலத்தால் அல்ல. இந்திய ராணுவத்தில் சாதாரண சிப்பாய்கள் அனைவரும் இந்தியர்கள், அதிகாரிகள் மட்டும்தான் பிரிட்டிஷார்கள். இதுவரையில் இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றினர். இப்பொழுது அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிவதில்லை. அதற்கு மாறாக அதிகாரிகளுக்கெதிராக கலகம் செய்கின்றனர். யுத்தக் காலத்தில் ராணுவத்திற்கு சேர்த்த நம்முடைய (பிரிட்டிஷ்) தொழிலாளர்கள்  ஹிட்லருடைய குண்டுவீச்சுகளினால் சேதமடைந்த தொழிற்சாலைகளை பழுதுபார்க்க தேவைப்படுகின்றனர்.

மேலும் ஐந்தரை ஆண்டுகள் யுத்த முகாம்களில் இருந்து போராடி சோர்வடைந்துள்ள அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழவே விரும்பினர். அந்தக் குடும்பத்தினரும் 40 கோடி மக்களைக் கெண்ட இந்த பிறந்த நாட்டை (அன்றைய இந்திய மக்கள் தொகை) ஆள வேண்டுமானால் ஒரு பெரிய பிரிட்டிஷ் ராணுவத்தை இந்தியாவில் நீண்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். அப்படிப்பட்ட ராணுவம் இப்போது நம்மிடத்தில் கிடையாது. எனவே இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதை தவிர வேறு வழியில்லை” என்று ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் கூறினார். இந்தியாவில் அன்றிருந்த நிலைமையை ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் இவ்வாறு படம் பிடித்துக் காட்டினர்.  இதுதான் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததின் பின்னணி. உலகெங்கும் அடக்குமுறைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும், தூக்கு மேடைகளையும் சந்தித்து விடுதலைப் போராட்டத்திலும் சமூகப் புரட்சிப் போராட்டத்திலும் லட்சக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து வளர்ந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்தியா அதற்கு விதி விலக்கல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு மகத்தானது.  செங்குருதியால் எழுதப்பட்டதாகும்.



 

;