articles

img

சாதாரண மக்கள் பேசும் மொழியை விரும்பிய லெனின்... ஜன. 21 லெனின் நினைவு தினம்....

காவியுடை தரித்த சுத்தானந்த பாரதியார் ரஷ்யப் புரட்சி குறித்தும் லெனின் குறித்தும் சிறப்பானதொரு நூல் படைத்துள்ளார். அந்நூலில் ரஷ்யப் புரட்சித் தலைவர் லெனினை மகாத்மா என வர்ணித்து தமது நூலுக்கு  ‘மகாத்மா லெனின்’ எனப் பெயரிட்டுப் பெருமை சேர்த்துள்ளார். அந்நூலுக்கு ‘சோவியத் லேண்ட்’ பரிசு வழங்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சமாகும். அந்நூலில் ஒரு வினோதச் செய்தியை அவர்  குறிப்பிட்டுள்ளார். அது சோவியத் நாட்டில் லெனின் மறைந்தபின் ஏற்பட்ட வதந்தி பற்றியது.

“லெனின் இறந்துவிட்டார் என்பதைப் பல நாட்களுக்கு சாதாரண ரஷ்ய மக்கள் நம்பவில்லை. தனக்குப்பின் அதிகாரத்திற்கு வருபவர்கள், அவர்களாகவே அரசாங்கப் பொறுப்புப் பணியைத் திறம்பட அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் இறந்தது போல் பாசாங்கு செய்கிறார் என்று அவர்கள் கருதினர்.”  இத்தகைய வதந்திகளில் ஒன்று லெனின் தன்னுடைய மருத்துவரை வரவழைத்து, தான் இறந்துவிட்டதாகக் கருதுமளவிற்கு ஏதாவது செய்து உதவ வேண்டுமெனக் கேட்டு வேண்டிக் கொண்டாராம். அவர் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் தங்கவேண்டுமென மருத்துவர் ஆலோசனைகளைத் தந்தார். இந்த ரகசியத்தைத் தன்மனைவியைத் தவிர யாரும் அறியக் கூடாதென்று லெனின் கூறிவிட்டார்.

ஒருநாள் லெனின் தன் கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியே வந்து பின்புறக் கதவு வழியாக வெளியேறி கிரெம்ளின் மாளிகையை அடைந்தார். அவரிடம் அட்டை இருந்ததால் காவலாளிகள் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதுடன் அவர் தனது தொப்பியைத் தலையின் முன்புறம் இழுத்து விட்டிருந்ததால்  யாரும் அடையாளம் காண முடியவில்லை. சோவியத்துக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. லெனின் சப்தமின்றி உள்ளே நுழைந்து விவாதங்களைக் கவனித்து அந்தவேலை வழக்கம்போல் நடைபெற்று வருவதைக் கண்டார். திருப்தியடைந்து அவர்தன் கண்ணாடிப் பெட்டிக்குத் திரும்பி வந்தார்.

இரண்டாவது நாளில் அவர்ஒரு தொழிற்சாலைக்குள் சென்றார். இரவு நேரத்தில் பல தொழிலாளிகள் வேலையில் ஈடுபட்டிருக்கவில்லை. லெனின் அவர்களிடம், அவர்களுடைய வாழ்க்கை நிலைமை மற்றும் சோவியத் நிர்வாகம் குறித்துக் கேட்டார்.
மூன்றாவது நாளில் லெனின் ஒரு ரயில் நிலையத்தை அடைந்து, ரயில் மூலம் தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் அனைத்தையும் கேட்டு, விவசாயிகள் நிலைமை சரியாக உள்ளது என்று திருப்தியடைந்து தனது நினைவிடத்திற்கு உரிய நேரத்தில் வந்தார்.”

சுத்தானந்த பாரதி சோவியத் மக்களின் பின்வரும் நம்பிக்கையை வெளிப்படுத்தி நூலை முடிக்கிறார்.“ஒருநாள் லெனின் தன் சக தோழர்களுடன் மீண்டும் பணியில் இறங்குவார். லெனினுடைய பேச்சு மற்றும் எழுத்துமுறை மற்றும் ஒரு சக்தி வாய்ந்த வெகுஜன சோவியத் பத்திரிகை வேண்டுமென்ற அவருடைய கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. எளிமையான, சாதாரண மக்கள் பேசுவது போன்ற மொழியையே லெனின் விரும்பினார். லெனினுடைய உவமானம், உருவணி முதலியவை சாதாரண மக்கள் பயன்படுத்துபவையே என்பதுடன் எளிமையானவை மற்றும் ஊடுருவிச் செல்லக்  கூடியவை. ஒரு விசயத்தை மேலும் தெளிவாகக் கூறப்பட்டதை மேலும் தெளிவாகக் கூறவும், ஐயத்திற்கிடமின்றிக் கூறவும் இத்தகைய வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். தன்னிடைய கூற்றை நிரூபிக்கவும், எதிராளி கூறுவதை மறுக்கவும் அவர் புள்ளி விவரங்களை ஏராளமாகப் பயன்படுத்துவார்.

ஒரு வெகுஜன கம்யூனிஸ்ட் ஏட்டிற்கான லெனினுடைய வழிகாட்டுமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.200-400 வரிகள் எழுதுவதற்குப் பதிலாக 10-20 வரிகள் போதுமானதாகும்; ஒவ்வொரு கட்டுரையும் முடிந்த அளவிற்கு சுருக்கமானதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும்; ஒரு கோட்பாட்டை விவரிப்பதென்பது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளோடு சம்மந்தப்பட்டதாக இருக்கவேண்டும்.”லெனினுடைய மின்மயமாக்கும் திட்டமானது அவருக்கே உரியதென்றும், எப்போதும் நினைவில் இருப்பதென்றும் அவருடைய ஆதரவாளர்கள் கருதுவதையும் இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். கல்வியறிவின்மையை ஒழிக்காமல் ஒரு சோஷலிச அமைப்பை உருவாக்க முடியாதென்ற லெனினுடைய கண்ணோட்டத்தை சுத்தானந்தபாரதியார் உற்சாகமாக விவரிக்கிறார்:-

“போல்ஷ்விக் அரசாங்கமானது கல்வியறிவின்மையை ஒழிப்பதற்காகக் கிளம்பிவிட்டது என்பதுடன் சோவியத் ஆட்சியில் கல்வி அறிவு குறித்து படிவங்களில் கேட்கப்படும் பகுதிகளில் காலியிடம் விடப்படுமளவிற்கு அனைவருக்கும் கல்வி புகட்டுவதை உத்தரவாதம் செய்கிறது; கல்வி அறிவின்மைக்கெதிரான போராட்டமானது, எதிர்ப்புரட்சிக் கெதிரான போராட்டத்தைப் போன்று முக்கியமானது என்று லெனின் கூறினார். கல்வி அறிவில்லாத நபரை அரசியல்
ரீதியாக உணர்வு பெற்றவராக ஆக்கமுடியாது என்றும் கல்வி அறிவில்லாதவர் அரசியல் வட்டத்திற்கு வெளியேதான் இருப்பார் என்றும் லெனின் தன் உரைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது வழக்கம். மக்களை கல்வி அறிவு பெற்றவர்களாக ஆக்காமல், கலாச்சாரத்தை நேசிக்கும் தன்மையை அவர்களுக்குள் எழுப்பிவிடாமல் கலாச்சாரம் மலர முடியாது; எனவே சோஷலிசத்தின் கீழ் ஒரு புதிய கலாச்சாரம் பிறப்பதை உத்தரவாதம் செய்ய அனைத்து மக்களையும் கல்வி பெற்றவர்களாக்குவது அவசியமானதாகும்.”

லெனினுடன் நடந்து கொண்டிருக்கும்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை மாக்சிம் கார்க்கி விவரித்திருப்பதை சுத்தானந்த பாரதி படம்பிடித்துக் காட்டுகிறார். அதில் காலை நேரத்தில் சாலையோரத்தில் மகிழ்ச்சியாக சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பற்றி லெனின் குறிப்பிடுகிறார்:

“இந்தக் குழந்தைகள் நம்மைவிட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். நாம் சந்தித்த கசப் பான அனுபவங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடாது. கொடுமையான நாட்களை அவர்கள் சந்திக்க வேண்டியிராது.அவர்களைக் குறித்து நான் பொறாமைப்படவில்லை. நாம் செய்தது வரலாற்றில் வாழும்; சூழ்நிலைமையின் நிர்ப்பந்தங்களின்கீழ் நாம் கொடூரமாக இருக்க வேண்டி யிருந்தது; ஆனால் எதிர்காலம் நம்மைக் குற்றவாளிகளாகக் கருதாது. உலகம் ஒருநாள் நம்மை சரியாகப் புரிந்து கொள்ளும்.” ஆம். அப்படித்தான் புரட்சிக்குப் பிந்தைய சோவியத் ரஷ்யாவில் ஒரு தலைமுறை பிறப்பு முதல் இறப்பு வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தது எனின் மிகையன்று.

===பெரணமல்லூர் சேகரன்==

;