articles

img

பிற்போக்கு அரசியலால் சமூக நீதி தடுமாறுகிற சூழலில் - வே.மீனாட்சி சுந்தரம்

அம்பேத்கரும், பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக நேர்மையாக செயல்பட்டாலும், அதே இலக்கைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு துவக்கத்தில் நேசமாக இருந்து பின்னர் ஏன்  வெறுக்கத் தொடங்கினர்? இணைந்து நிற்க மறுத்தனர்? இந்த வரலாற்றைப் புரிந்துகொள்வது எப்படி? என்பதை மையமாக வைத்து ஆசிரியர் தமது கருத்தை முன்வைக்கிறார்.

மார்க்ஸ்- பெரியார்- அம்பேத்கர்- ஒற்றுமையும்- முரண்பாடும் புத்தகத்தை எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்திய மண்ணில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக வாழ்ந்த  பெரியார்- அம்பேத்கர் என்ற இரண்டு ஆளுமைகளை மார்க்சிய அளவு கோலை வைத்து ஒற்றுமை - வேற்றுமை பற்றி இப்புத்த கம் பேசுகிறது. மூவரின் வாழ்வை முதலில் சொல்லி அவர்களது பொதுவாழ்வை எளிமையாக எடுத்து வைக்கிறது. எது சரி, எங்கே முரண் என்பதை சர்ச்சை மூலம் தேடவைக்கிற கருத்துக்களைக் கொண்ட புத்தகமாக இது இருக்கிறது. இந்தியச் சூழலில் சாதி ஒழிப்பு தனி, வர்க்கப் போர் தனி என  பிரித்துப் பார்த்து கவனித்து செயல்படாமல் போனது இந்தியக்  கம்யூனிஸ்ட் இயக் கத்தின் குறை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பெரியார், அம்பேத்கரே சரியான வழிகாட்டி கள் என்ற பார்வையை இந்தப் புத்தகம் கேள்விக் குள்ளாக்குகிறது. அதே வேளையில் பெரியார், அம்பேத்கரின்  தொடக்ககால பங்களிப்பைப் பாராட்டி அங்கீகரிக்கிறது. கம்யூனிஸ்ட்கள் மீது சுமத்தப்படும்  குற்றச்சாட்டு,  சாதி அடிப்படையில் ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் முரண்பாடு  வர்க்க முரண்பாடாக மாறுகிற இயக்கவியல் எதார்த்தத்தைப்  பார்க்க மறுப்பதாகும் என்பதையும் இது விளக்கு கிறது. பெரியார், அம்பேத்கர் தொடங்கிய சாதிப் படிநிலை, தீண்டாமை இழிவு, சாதி  ஒழிப்பு இயக்கம் வெற்றிபெற  மார்க்சிச அணுகுமுறையே சரியானதா கும் என்பதை இந்த நூல் புரிகிற முறையில் கூறுகிறது. 

இன்று  அம்பேத்கரையும், பெரியாரையும் வழிபடும் சிலர்  கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களைத் தலையில் சுமந்து கொண்டிருப்பதால் மார்க்சியத்தை  ஏற்க மறுக்கிறார்கள்.

இனமானம் , சமூக நீதி இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் என்று கோரஸ்பாடுவதன் மூலம் ஒற்றுமையைக் கட்டலாம் என்ற கருத்தை இந்தப் புத்தகம் சரியாகவே கேள்விக்கு உட்படுத்துகிறது. அந்த ஒற்றுமை ஒரு பலனையும் தராது என்பதைப் புரியவைக்கிறது. இந்த ஒற்றுமை மூலம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு சாதகமான   நில உடமை யில் மாற்றம் கொண்டுவரும் அரசியல் இயக்கமாக விரிவுபடுத்தாமல்   சாதிக் கட்டமைப்பு கலையாது என்பதை இந்தப் புத்தகம் நேரடியாக சொல்லா விட்டாலும் உணரச் செய்கிறது. அம்பேத்கரும், பெரியாரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக நேர்மையாக செயல்பட்டாலும், அதே இலக்கைக்  கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட்  இயக்கத்தோடு துவக்கத்தில் நேசமாக இருந்து பின்னர் ஏன்  வெறுக்கத் தொடங்கினர்?  இணைந்து நிற்க மறுத்தனர்? இந்த  வரலாற்றைப் புரிந்துகொள்வது எப்படி? என்பதை மையமாக வைத்து ஆசிரியர் தமது கருத்தை முன்வைக்கிறார். இதன்மூலம் ஆக்கப்பூர்வ மான  சர்ச்சையை அவர் உருவாக்குகிறார் . அந்த சர்ச்சையே எது சரி, எது எதார்த்தங்களைப் பார்க்கா மல் கூறப்படுகிறது என்பதைத்  தேடவைக்கிறது.

ஆயிரம் காலத்து முள்மரமான இந்திய சாதிக்கட்டமைப்பின் நீடிப்பை மேலைநாட்டு ஆய்வா ளர்கள் பலவகையாக எழுதிக் குவித்துள்ளனர். அவர்களில், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அம்பேத்கருக்குமிடையே நிலவிய ஒவ்வாமையைப் பற்றி எழுதியவர்களில் அமெரிக்க ஆய்வாளர் கெயில் ஓம்விட் அம்மையார் இங்கே பிரபலமானவர். இவர் இந்த ஒவ்வாமைக்குக் கம்யூனிஸ்ட்டுகளே காரணம் என்கிறார். இதையே இந்திய முதலாளித்துவ இதழ்கள் பெரிதுபடுத்தி விளம்பரம் செய்தன;  செய்கின்றன. கனடா நாட்டு ஆய்வாளர் ஜுலியன் கிர்பி,  அம்பேத்க ருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நிலவிய ஒவ்வாமைக்கு அரசியலே காரணம் என்கிறார்.  இவரும் நாடாளுமன்றத் தேர்தல் அணி அரசி யலைக் காட்டியே முடிவிற்கு வருகிறார்.   அரசியலின் வர்க்கத் தன்மையைக் கணக்கில் எடுக்கவில்லை. அதேசமயம் அம்பேத்கரின் பேத்தியைத்  திருமணம் செய்த ஆனந்த் டெல்ட்டும்டே இருவரையும் விமர்சிக்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் சாதி உணர்வைக்  கணக்கில் கொள்ளவேண்டும்; தலித் இயக்கத்தின ருக்கு சாதி உணர்வைத் தாண்டிய பார்வை இருக்க வேண்டும் என்கிறார்.

அம்பேத்கரும் பெரியாரும் மேலை நாட்டு முதலா ளித்துவ தாராளவாத அரசியல் கண்ணோட்டம் உள்ள வர்கள் என்பதால், பிரிட்டிஷ்  ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை ஒதுக்கினர். இதனால் பிரிட்டிஷ் ஆட்சி யிலேயே சில சமூகநல சட்டங்களைக்   கொண்டுவரு வதற்கு அம்பேத்கரால் முடிந்தது. சாதிமறுப்புத்  திருமணம், ஆண் பெண் சமத்துவம், மூட, மதச் சடங்குகள் எதிர்ப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை இயக்கமாக்கிடப் பெரியாரால் முடிந்தது. ஆனால் சாதிக்கட்டமைப்பு குலையாமல் பிராமணியத்தை (வர்ணாஸ்ரமத்தை)ப்  பேணுகிற பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய கொள்கைகள் அவர் களின் கண்ணில்படவில்லை.சிங்கார வேலரின் தொடர் பால் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியைப் பெரி யார் தமிழில் கொண்டுவந்தார். ரகசியமாக சோவியத் நாட்டிற்கும் சென்று திரும்பினார். இதனால் சிறிது காலம்  மார்க்சிசத்தை ஆதரிக்க அவர் முன் வந்தார். பிரிட்டிஷ் காவல் துறை அவரை கண்காணித்தது. அதன்பின் சமூக சீர்திருத்தத்தில் முழுமையாக இறங்கிவிட்டார்.  

உண்மையில் மேலை நாட்டு  முதலாளித்துவ தாராளவாத கண்ணோட்டமே அம்பேத்கரையும், பெரி யாரையும்  மார்க்சிஸ்ட்களோடு முரண்பட  வைத்தது. இந்தப் புத்தகத்தின் சிறப்பே இந்த உண்மையைப்  பெரியார், அம்பேத்கர் இருவரின் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டி  உணர்த்துவதுதான். இன்று முதலாளித்துவ தாராளவாத கண்ணோட்டம் வர்க்கப் பாகுபாடின்றி உழைக்கும் மக்களையும், ஏழை விவசாயிகளையும் ஆட்கொண்டிருப்பதால் மார்க்சிசம் அந்நியமாகத் தோன்றுகிறது.  ஒவ்வொரு ஏழையும் பணக்காரனாக வாய்ப்பு இருப்பதாகக் கருது வதாலேயே முதலாளித்துவம் நீடிக்கிறது. “அறிவுச் சொத்துடைமை” என்ற புதிய தனி உடைமை கோட்பாடே அறிவுலகத்தை பங்குச் சந்தை மூல தனத்திற்கு அடிமையாக இருப்பதை கவுரவமாகக் கருத வைக்கிறது.

மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் இருவரும் முதலில் புரட்சிகரப் பத்திரிகையாளர்கள்.  இருவரும் கம்யூ னிஸ்ட் லீக்,  சர்வதேசத்  தொழிலாளர் சங்கம் ஆகிய வற்றில் ஆற்றிய பணியும், சர்வதேசப் பார்வையுடன் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டதாலும்  அவர்களின் புத்தக அறிவைக்கொண்டு புரட்சிகர சமூக அறிவி யலான மார்க்சியத்திற்கு வித்திட முடிந்தது. ஒடுக்கப் பட்ட மக்களின் போராட்டங்களிலே ஈடுபடும்போது தான் புத்தக அறிவு சமூக மாற்றத்திற்கு உதவும். இல்லை யெனில் கொழுத்த சம்பளமும், புத்தக அறிவும்  அடிமைப் புத்தியை வளர்த்துவிடும். இதனைப் பதிவு செய் யாமல்   மார்க்சையும் ஏங்கெல்சையும்  அபூர்வ ஞானி களாக இந்தப்  புத்தகம் பதிவு செய்கிறது.  அதேபோல் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் அளித்த பங்குபற்றிய தகவலும் சரியாகப் பதிவாகவில்லை.  பிரிட்டிஷ் அதிகாரியாக இருந்த பி.என். ராவ், முகர்ஜி ஆகியோர் தயார்செய்த நகலை சரிபார்த்துத்  திருத்தம்செய்ய அம்பேத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில்  இருந்த திவான் மிட்டல் தவிர  மற்றவர்கள் இந்திய சட்ட நிபுணர்களே. மிட்டல் இடையிலே மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மைசூர் மன்னருக்கு திவானாக இருந்த மாதவ் ராவ் இணைக்கப்படுகிறார். இவர்கள் அனைவரும் பங்களித்தனர் என்பதை அம்பேத்க ரின் முன்னுரையைப் படித்தால் தெரியவரும். இது அம்பேத்கரின் உழைப்பை, பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. ஜனநாயக மாண்புக ளையும் முரணற்ற மத்திய மாநில உறவுகளையும் நீடிக்க அம்பேத்கர் கொடுத்த ஆலோசனைகளை அரசி யல் நிர்ணய சபை நிராகரித்த வரலாறு மறைக்கப்படு கிறது. ஒன்றிய அமைச்சரவையிலிருந்து அவர் பதவி விலக நேர்ந்த  காரணங்களை அறிந்தால் அரச மைப்புச் சட்டத்தின் மீதான அவரது மனப்பாங்கினைப் புரிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் இணைத்துப்  புரிந்துகொண்டால் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வர்க்கச் சார்பை சரியாகக் கணிக்க முடியும். நமது அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறையை எப்படி சுரண்டும் வர்க்கத்தின் கருவியாக  ஆக்கியது என்பதை மக்க ளுக்கு சொல்ல முடியும். இத்தகைய குறைகள் இருந்தாலும், இன்றைய பிற்போக்கு அரசியலால் சமூக நீதி தடுமாறுகிற சூழலில் இத்தகைய புத்தகம் உண்மையைத் தேட உதவுகிறது. எனவே, உழைக்கும் வர்க்கக் குடும் பங்கள், இளைஞர்கள், மாணவர்கள், இளம்  உழைப் பாளிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகும்.   

கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் தத்துவ மாத 
இதழின் முன்னாள் ஆசிரியர்

;