articles

img

பாசிசத்தின் வரலாறும் பின்புலமும்....

பாசிசம் பற்றி சிந்திக்கும்போது, குறிப்பிட்ட சில நபர்களையும், அவர்கள் வழிநடத்திய கட்சிகளையும், அவர்கள் தலைமையேற்று நடத்தியஅரசுகளையும் பற்றி நாம் அறிந்தாகவேண்டும். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் பாசிசம் உருப்பெற்று உயர்ந்தோங்கியது. அந்தப் போரில்முக்கியப் பங்கேற்ற மூன்று பேர் இவர்கள்தான் : பெனிட்டோ முசோலினி (ஜூலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945), அடால்ஃப் ஹிட்லர் (ஏப்ரல் 20, 1889 – ஏப்ரல் 30, 1945),

ஹிடேகி டோஜோ (டிசம்பர் 30, 1884 – டிசம்பர் 23, 1948).

முறையே இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆட்சிப்பீடங்களில் வீற்றிருந்த இவர்கள், ‘அச்சு நாடுகள்’ (Axis Powers) என்கிற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து, நேச நாடுகளுக்கு (Allied Powers) எதிராகவும், மனிதகுலத்துக்கு எதிராகவும் போரிட்டார்கள். இந்த பாசிச மும்பையில் முதலாமவரும், மூத்தவரும் முசோலினிதான். அவரது அடியொற்றிதன் அரசியலை அமைத்துக்கொண்டவர் ஹிட்லர். முசோலினியும், ஹிட்லரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டாலும், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டாலும், ஹிடேகி டோஜோவை இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லை.

1883 ஜூலை 29 அன்று இத்தாலியின் போர்லி மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தோலிக்க இறைபக்திமிக்க பள்ளி ஆசிரியையான தாய்க்கும், மதவெறுப்பாளரான, சோசலிசம் பேசிய, கொல்லராக வேலைசெய்தத் தந்தைக்கும் பிறந்தார் முசோலினி. குடிகாரரும் சண்டைக்காரருமான தந்தை அலெக்சாண்ட்ரோ, கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான சிந்தனைகளையும், பல்வேறு அரசியல் விழுமியங்களையும் சிறுவன் முசோலினிக்குப் புகட்டினார். ததையைப் போலவே தகராறு, அடிதடி எனத்திரிந்த தன் மகனை நல்வழிப்படுத்த விரும்பிய தாய் ரோசா மால்தொனி பாதிரியார்கள் நடத்தும் பள்ளி ஒன்றுக்கு மகனை அனுப்பிவைத்தார். படித்து முடித்து பள்ளி ஆசிரியராக தன் வாழ்வைத் துவங்கிய முசோலினி மது, மாது, அரசியல் வேட்கை என்றே வாழ்ந்துகொண்டிருந்தார்.

முசோலினி பிறந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 20, 1889 அன்று ஆஸ்திரியா நாட்டின் ஜெர்மனிஎல்லையோரத்தில் அமைந்திருந்த பிரானோ நகரில் கத்தோலிக்க இறைபக்திமிக்க தாய்க்கும், மதவெறுப்பாளரான சுங்கத்துறை அதிகாரியாக வேலை செய்துவந்த தந்தைக்கும் பிறந்தார் ஹிட்லர். எதற்கெடுத்தாலும் அடித்துத் துன்புறுத்திய அப்பா அலாய்ஸ்-க்கும் மகனுக்கும் கிஞ்சிற்றும் ஒத்துப்போகவில்லை. அப்பாவை எதிர்ப்பதற்காகவே கல்வியில் கவனம் செலுத்தாத ஹிட்லர்,அம்மா கிளராவின் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தார். தனது 14 வயதில் அப்பா இறந்துவிடவே, மார்பகப்புற்று நோயால் நோய்வாய்ப்பட்டிருந்த அம்மாவுக்கு உதவும்பொருட்டும், தன்னுடைய ஓவியத் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகவும் வியன்னா நகருக்குச் சென்றார். பதினெட்டு வயதில் அம்மாவும் இறந்துவிடவே, அனாதையான ஹிட்லர் வியன்னா நகரின் மதவெறுப்பும், இனவாதமும் தாண்டவமாடிய வீடற்றோர் விடுதி ஒன்றில் தஞ்சம் புகுந்தார். யூதர் வெறுப்பும், வந்தேறிகளின் ஆக்கிரமிப்புப் பற்றிய அச்சமும் நிரம்பிவழிந்தசமூகத்தில் வாழ்ந்த ஹிட்லர் இனவாத கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டிருந்தார்.

ராணுவச் சேவையிலிருந்து தப்பிக்க... 
வேலையின்றித் திரிந்த முசோலினி வேலை தேடுவதற்காகவும், இத்தாலி நாட்டின் கட்டாய இராணுவச்சேவையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குக்குடிபெயர்ந்தார். அந்த நாட்டில் இயங்கிய சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, பத்திரிகையாளராகவும் வேலைபார்த்தார். நிறையப் படித்தார், எழுதினார். அதேபோல, ஹிட்லரும் ஆஸ்திரிய நாட்டின் ராணுவத்தில் கட்டாய ராணுவச் சேவையை தவிர்ப்பதற்காக வியன்னா நகரைவிட்டு வெளியேறினார். பிற்காலத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, ராணுவத்தில் இனக்கலப்பு இருந்ததால்தான் அதில் பங்கேற்க தான் விரும்பவில்லை என்றுஅதனை நியாயப்படுத்தினார்.

முன்னர் ராணுவத்தைத் தவிர்த்த முசோலினி 1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போரின்போது இத்தாலிய ராணுவத்தில் விருப்பத்துடன் சேர்ந்து, போரில் ஈடுபட்டு, காயமடைந்தார். அதேபோல, ஹிட்லரும் முதல் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர்ந்து போரிட்டு, காயமடைந்தார் (1916-1917). “போர் தன்னுடைய வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் மிகவும்உயர்வானது” என்று புளகாங்கிதமடைந்தார் ஹிட்லர். முதல் உலகப்போரில் இத்தாலி வெற்றி பெற்றாலும், கூட்டணி நாடுகளால் தன்னாடு ஏமாற்றப்பட்டது முசோலினியை தீவிரமாக களமாடச் செய்தது. அதேபோல, ஜெர்மானிய தேசபக்தியில் ஊறித்திளைத்த ஹிட்லருக்கு 1918 நவம்பர் மாதம் அந்த நாடு எதிரிகளிடம் சரணடைந்ததை சீரணிக்க முடியவில்லை. தனது நாடு முதுகில் குத்தப்பட்டுவிட்டதாக எண்ணி பெரும் வேதனைக்குள்ளானார்.

முசோலினி 1919-ஆம் ஆண்டு பாசிஸ்ட் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கென கருஞ்சட்டைப் படை ஒன்றையும் உருவாக்கினார். பின்னர் 1921-ஆம் ஆண்டு ‘நேஷனல் பாசிஸ்ட் பார்ட்டி’ எனும் கட்சியைத் துவங்கி தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்த முசோலினி, 1922-ஆம் ஆண்டு நாற்பதாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்களுடன் தலைநகர் ரோமை நோக்கிச்செல்லும் பேரணி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி, இத்தாலியின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

முசோலினி போல முயன்ற ஹிட்லர்
அதேபோல, 1919-ஆம் ஆண்டுராணுவ உளவாளியாக வேலை செய்துகொண்டிருந்த ஹிட்லருக்கு ஜெர்மன் தொழிலாளர் கட்சியை (German Workers’ Party) வேவுபார்க்கும் பணி வழங்கப்பட்டது. நாளடைவில் அந்தக் கட்சியில் 55-வதுஉறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் ஹிட்லர். முசோலினியின் பன்மொழி ஆளுமை,துணிச்சல், அரசியல் சாதுர்யம் போன்றவற்றால் கவரப்பட்ட ஹிட்லர், முசோலினியின் பாசிஸ்ட் கட்சியையே தனது நாசிக் கட்சிக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொண்டார். முசோலினியின் ரோம் நோக்கியப் பேரணியைப் போன்றே, பெர்லின் நகரை நோக்கிச்செல்லும் ஒரு பேரணியைத் திட்டமிட்டு, பவேரியா மாநிலத்தில் புரட்சி நடத்த முனைந்து, அதில் தோல்வியுற்று, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்.

தொடர் பல்முனைப் பிரச்சாரங்களின் மூலம் இத்தாலிய மக்களின் மனங்களை ஆட்கொள்ளவேண்டும் என்று எண்ணினார் முசோலினி. தன்னைச் சுற்றிய ஒரு மாபெரும் தனிநபர் வழிபாட்டுக் கலாச்சாரத்தை, பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கினார். ‘முசோலினியின் பாசிச அரசைப் பாதுகாப்போம்’ என்று ஒவ்வொரு பள்ளி, கல்லூரி ஆசிரியரும் உறுதிமொழி ஏற்க வற்புறுத்தப்பட்டனர். பத்திரிகைகளின் ஆசிரியர்கள் முசோலினியால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்டனர். பாசிஸ்ட் கட்சியால் இரகசியமாக வழங்கப்பட்டச் சான்றிதழ் இல்லாமல்அவர்களால் தங்கள் தொழிலைச் செய்ய இயலாது எனும் நிலைமை உருவாக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் சுயமாக இயங்க முடியாத நிலையும் எழுந்தது.ஹிட்லருக்கு 1929-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சரிவு ஓர் அரசியல் வாய்ப்பை வழங்கியது. பின்னர் 1932-ஆம் ஆண்டில் ஜெர்மன்நாட்டு குடியுரிமையைப் பெற்று, ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்றது அவரை ஓர் அரசியல் சக்தியாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor), 1934-ஆம் ஆண்டு சர்வாதிகாரியாகவும் ஆனார் ஹிட்லர்.உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் தடைவிதித்தார். அடுத்ததாக தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. யூதர்கள் யாரும் இராணுவத்தில் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.

கைப்பாவையான ஆதர்ச நாயகன்
ஹிட்லரும் முசோலினியும் 1934-ஆம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தனர். அடுத்த ஆண்டே முசோலினி அபிசீனியா (தற்போதைய எத்தியோப்பியா) மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வெற்றிகண்டார். இதன் காரணமாக உலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் முசோலினியை ஹிட்லரை நோக்கி இன்னும் உந்தித்தள்ளின. ஹிட்லர் 1935-ஆம் ஆண்டு நூரம்பர்க் சட்டங்களை (Nuremberg Laws) இயற்றி, ‘அறிவியல் பூர்வமாக’ இனப் பின்புலத்தை ஆய்வுசெய்யும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட்டார். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களின் நான்குதலைமுறை முன்னோரும் ஜெர்மானியர்கள்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பணித்தார். இப்படியாக ஹிட்லரின் யூத ஒழிப்புச் சிந்தனை சட்டவடிவம் பெற்று, முழுமுனைப்புடன் செயல்படுத்தப்பட்டது. நாஜிப்படையினர் யூதர்களைப் பிடித்துக்கொண்டு போய் வதைமுகாம்களில் அடைத்து அழித்தொழிக்க ஆரம்பித்தனர்.

ஹிட்லரும் முசோலினியும் 1936  அக்டோபர் 25அன்று ரோம்-பெர்லின் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கினர். முசோலினியின் உதவியுடன் ஹிட்லர்1938-ஆம் ஆண்டு ஆஸ்திரியாவைஜெர்மனியோடு இணைத்துக்கொண்டார். 1939 மே 22  அன்று இருவரின் அரசுகளும் ‘இரும்பு ஒப்பந்தம்’ எனும்ஓர் இராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.போரில் பின்னடைவுகளை சந்தித்த முசோலினி 1943-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஹிட்லர் அவரை இராணுவரீதியாக மீட்டு மீண்டும் பதவியில் அமர்த்தினார். ஹிட்லரின் ஆதர்சநாயகனாக இருந்த முசோலினி அவரது கைப்பாவையாக மாறிப்போனார். போரில் வெற்றி மேல் வெற்றி பெற்று, ஏறத்தாழ ஐரோப்பியக் கண்டத்தையே தன்நாட்டோடு இணைத்துக்கொண்டிருந்த ஹிட்லர், இறுதியாக சோவியத் யூனியன் மீது போர் தொடுத்தார். அப்போதிருந்தே ஹிட்லருக்கு சறுக்கல்கள் துவங்கின. நாலாபுறங்களில் இருந்தும் தோல்விச் செய்திகள் தொடர்ந்து வந்தன. ஒரு பக்கத்திலிருந்து பிரிட்டனும், அமெரிக்காவும் முன்னேறி வர, இன்னொரு பக்கத்திலிருந்து சோவியத் படைகள் துரத்திக்கொண்டு வந்தன.

வாளெடுத்தவர்கள் வாளாளேயே... 
இந்த மூன்று நாட்டுப் படைகளும் இத்தாலியை நோக்கியும் வருகிறார்கள் என்று கேள்விப்பட்ட முசோலினி, மூன்று பெட்டிகளில் 65 கிலோ தங்கம் மற்றும் சில ஆவணங்களோடு மனைவி கிளாராவையும், ஒரு சில உதவியாளர்களையும் அழைத்துக்கொண்டு, இரண்டு லாரிகளில் சுவிட்சர்லாந்து நாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றார். வழியில் இடைமறித்த புரட்சிப்படையினர் இவர்களைக்கைதுசெய்து, 1945 ஏப்ரல் 28  அன்று சுட்டுக்கொன்றனர். அந்தச் சடலங்களின்மீது பொதுமக்கள் கற்களை வீசி எறிந்தனர், காறி உமிழ்ந்தனர், கால்களால் எட்டி உதைத்தனர். பின்னர் மிலான் நகரிலிருந்த ஓர் எரிவாயு நிலையத்தின் முன்னால் இவர்களின் உடல்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டன.

ஹிட்லரின் கூட்டாளிகள் அவரை எங்காவது தப்பியோடிவிடும்படி அறிவுரைத்தும், பெர்லின் நகரைவிட்டு வேறெங்கும் போகமாட்டேன் என்று விடாப்பிடியாய் நின்றார் ஹிட்லர். தனக்கும் தன் காதலி ஈவா பிரானுக்கும் திருமணம் நடத்திவைக்க தனது தோழரும் பிரச்சார அமைச்சருமான ஜோசப் கோயபெல்ஸிடம் கேட்டுக்கொண்டார். முசோலினி கொல்லப்பட்டஇரண்டு நாட்கள் கழித்து, அதாவது, 1945 ஏப்ரல் 30, அன்று மதியம் மூன்றரை மணிக்கு, வழக்கமாக மதிய

உறக்கம் முடிந்து தேநீர் அருந்தும்வேளையில், ஒரு சயனைடு மாத்திரையால் தனது புதிய மனைவியைக் கொன்றுவிட்டு, கைத்துப்பாக்கியால் தன்னைத்தானேச் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர். வாளெடுத்தவர்கள் இருவரும் வாளாலேயே மாண்டுபோனார்கள்.

கட்டுரையாளர் : சுப.உதயகுமாரன்,சமூக, அரசியல் செயற்பாட்டாளர்.

;