articles

img

ஹிரோஷிமா, நாகசாகி தினம்....

ஜப்பான் நாட்டில் உள்ள ஆஷிமா நகரத்தில் ஆகஸ்ட் 6 1945 அன்று ‘‘சின்னப் பையன்’’ (லிட்டில் பாய்) என்ற அணுகுண்டு போடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆகஸ்டு 9 ‘‘குண்டு பையன்’’ என்ற அணுகுண்டு நாகசாகியில் போடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஆகஸ்டு 9 அன்று தன்னுடைய வானொலி பேச்சில் ஹிரோஷிமாவை ஒரு ராணுவ தளமாகவே குறிப்பிடுகிறார். ஹிரோஷிமா ஒரு ராணுவ தளம் அல்ல; ஆனால் அங்கு ராணுவக் குழு இருந்தது. அந்நகரம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டதாகும். விஞ்ஞானிகள் அதற்காகவே அந்த நகரத்தை தேர்ந்தெடுத்தார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். மனித குலத்தை அழிக்கும் அணுகுண்டு சோதனையை நடத்த வேண்டாம் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டும் அமெரிக்க ஜனாதிபதி தாக்குதலை நிறுத்தவில்லை. குண்டு வெடித்த பின்பு ஜனாதிபதி ட்ரூமன் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு ஆகஸ்டு 7 ஆம் தேதி, நாம் சரித்திரத்தில் மிகப்பெரிய அறிவியல் சூதாட்டத்தில் இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்து வென்றோம் என்று கூறினார். 

ஆகஸ்ட் 6 1945 அன்று காலை இனிமையாக அமைதியாக உதயமாகியது. காலை 8 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில், வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்கள். பெரியோர்கள் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒலித்தது, சைரன். எதிரி விமானம் எங்கு குண்டு போடும். யார் யார் மடிவார்கள் என்ற அச்சமும் பீதியும் அனைவரையும் வாட்டியது. வானத்தில் மூன்று விமானங்கள் பறந்தன. ஒரு விமானத்தில் அணுகுண்டும் மற்ற இரண்டு விமானங்கள் குண்டு வெடிப்பதை புகைப்படம் எடுப்பதற்கும் பறந்தன. விமானத்திலிருந்து பூசணிக்காய் கீழே விழுவதைப் போல் இருந்தது. அணுகுண்டு வெடிக்கவில்லை. சப்தம் ஏதும் எழுப்பவில்லை.

ஆனால் எங்கும் ஒளி கண்ணைக் கூசியது. அதற்குப் பிறகு 20,000 அடி உயர்ந்த புகையாலும் தூசி மண்டலத்தாலும் வானம் இருண்டது. ஒளி வீச்சில் மனிதர்கள் எரிந்து பஸ்பம் ஆயினர். கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. கண்ணாடிகள் உடைந்து சிதறியதால் மனிதர்கள் காயமடைந்தனர். குண்டுவீச்சின் மையப்பகுதியில் மனிதர்கள் பஸ்பம் ஆனதால் எலும்பு கூட மிஞ்சவில்லை. இறந்தவர்கள் வேதனையும் வலியும் இல்லாமல் இறந்தனர். ஹிரோஷிமா நகரின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம். சுமார் 70 ஆயிரம் பேர் அந்த நிமிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 70 ஆயிரம் பேர் சில நாட்களில் உயிரிழந்தனர். 

நாகசாகியில் சுமார் ஒரு லட்சம் பேர்
ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்தில் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் உள்ள மண்ணும் கல்லும் உருகி சாம்பலாயின. வெளியான வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ். 250 மீட்டர் சுற்றளவிற்கு வெப்பம் பரவியது. ஹிரோஷிமா நகரத்தில் இரண்டு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் வெப்பத்தின் அளவை குறைப்பதற்காக நீரில் இறங்கும் பொழுது 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தண்ணீர் கொதித்துக் கொண்டு இருந்தது. மூழ்கியவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். தீச் சுவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுப்புகை மேகங்களில் படிய, சற்று நேரத்தில் மழை பொழியத் துவங்கியது. வெப்பத்தை தணிக்க மழையில் நனைய மக்கள் சென்றார்கள். அமில மழையால் தோல் வெந்து துடிதுடித்து ஓடினர். ஒன்பது மணிக்கு துவங்கிய மழை மாலை வரை பெய்தது. 

வினோதமான வானிலையால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நான்கு மணி நேரம் நகரை மேலும் தாக்கியது. குண்டு வெடித்த பிறகு நகரம் சுடுகாடு போன்று காட்சியளித்தது. பெற்றோர்கள் குழந்தையை தேடி அலைகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள். எங்கு பார்த்தாலும் அவலங்களே. ஒரு தாய் இறந்து கிடந்ததை பார்த்த குழந்தை அருகிலுள்ள குவளையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியது. குழந்தை இறந்தது தெரியாத நிலை. ஒரு தாய் குழந்தையைக் காணாமல் பைத்தியம் பிடித்தது போல் அலைந்து குழந்தையை பார்க்கிறாள். குழந்தை ஆக்டோபஸ் மாதிரி சிதைந்து காணப்பட்டது அணுகுண்டு வீச்சால் கதிரியக்கத் தாக்கத்தால் புற்றுநோய் உருவானது. குண்டு விழுந்து சில வாரங்களில் பிழைத்தவர்களின் தோலில் ரத்தக் கசிவும் சிறு புண்களும் தோன்றின. ரத்தம் வடிகிறது. உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலரும் பல நோய்களுக்கு உள்ளானார்கள். கருவுற்ற தாய், பெற்றோர், குழந்தைகள், கை கால் மூக்கு உடல் பாகங்கள் ஊனமாக பிறந்தன. பல வருடங்கள் இந்த நிலை தொடர்ந்தது. 

அணுகுண்டின் அரசியல் 
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நேச நாடுகள் வெற்றி வாகை சூடிய நேரம். ஜெர்மனி தோல்வியுற்ற நிலையில், ஜப்பான் மட்டும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளாததால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே நாங்கள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளை வீசினோம் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை, தன்னுடைய வலிமையை நிலைநிறுத்துவதற்காக திட்டமிட்டே குண்டு வீசியது. அது சர்வதேச அரங்கில் அச்சுறுத்த இன்றும் பயன்பட்டு வருகிறது. 

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளரும் நாடுகளை அச்சுறுத்தவும் அணு ஆயுதங்களை விற்பதற்கும் அமெரிக்கா தயாரானது. உலகில் அணு ஆயுதங்களில் முதலாவது நாடாக உள்ளது. ஆனால், மற்ற நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி தாக்குதல் நடத்தி வருகிறது.இராக் மீது படையெடுத்து தாக்கியது. அதில் உள்ள வளங்களை கொள்ளையடித்தது. ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் மேலாதிக்கத்தை இந்தியா மீது செலுத்துவது அமெரிக்காவின் குறிக்கோளாகும். உலக நாடுகளில் அணு ஆயுதங்களை குறைத்துக்கொள்ள கூறியும் நடைமுறையில் புதுப்புது ஆயுதங்களை தயாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உலக சமாதானம், சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி முதலியவைகளை வலியுறுத்தி போராடுவதே ஹிரோஷிமா, நாகசாகி தினத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய சபதம் ஆகும்.

கட்டுரையாளர் : அ.மணவாளன், மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

;