articles

img

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறெதும் கொள்வாரோ?

வீடுதோறும் தேசியக் கொடியை மூன்று நாள் ஏற்றுக என்று ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு ஆணையிடுவது போல் அறிவித்திருக்கிறது. அரசு அலுவலகங்களில் ஏற்றச் சொல்கிறது. பாஜக அலுவலகங்களில் கொடிகள் கிடைக்கும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கு இதுவும் ஒரு வியாபாரமாகிவிட்டது. இதுவரையிலும் கதர்த்துணிகளில் செய்யப்பட்ட கொடிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இப்போதோ இவர்கள் பாலியெஸ்டர் துணிக் கொடிகளை விற்பனை செய்கிறார்கள். ஏன் இத்தனை ஆர்வம் தேசியக் கொடி ஏற்றுவதில் பாஜகவினர்க்கு? விடுதலைப் போராட்டக் காலத்தில், அவர்களது கட்சியின் தலைவர்கள், அதன் தாய் அமைப்புகளான ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் - இந்துமகா சபை ஆகியவற்றின் தலைவர்கள் யாரும் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியதில்லை. அப்படிப் போராடியதாகச் சொல்லப்படும் வி.டி.சாவர்க்காரும் சிறை வாழ்வுக்குப் பயந்து ஆறுமுறை மன்னிப்புக்கடிதம் எழுதி தண்டனையிலிருந்து தப்பியவர். அதுமட்டுமின்றி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்து கொண்டு - அதற்காக அவர்களிடமிருந்து ஊதியமும் பெற்றவர். இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வேறு யாரும் இத்தகைய துரோகத்தைச் செய்ததில்லை. ஆனாலும் அவரை வீரசாவர்க்கார் என்று வெட்கமின்றி சொல்லிக் கொள்கிறார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. அதை காட்டிக் கொடுப்பதில் ஈடுபட்டவர்கள், பிரபலமான உதாரணம் வேண்டுமென்றால் அடல்பிகாரி வாஜ்பாய் அத்தகைய வேலையைச் செய்தவர் தான். 1942 ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுத்தவர் தான் வாஜ்பாய். இவர்களைத் தவிர நல்லதாக விடுதலைப் போராட்டத்துக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இப்போது ஒன்றிய ஆட்சியில் இருப்பதால், அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதால் தேசபக்தி முற்றி பித்துப் பிடித்து அலைகிறார்கள். இதுவரை ஆகஸ்ட் 15 அன்று ஒரு நாள் மட்டுமே தேசியக் கொடியேற்றம் பெருமிதத்தோடு நடைபெற்றது. ஆனால் இன்று இவர்களால், இவர்களது நடிப்புச் சுதேசித்தனத்தால் அது மூன்று நாட்களாக ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் தான் தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்வார்கள் இந்தப் போலிகள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடியடியும், துப்பாக்கிச்சூடும், சிறைத் தண்டனையும், தூக்குத் தண்டனையும் பெற்றார்கள். ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் ஏன் சிறுவர்களும் கூட கண்ணீரும் செந்நீரும் சிந்தினார்கள். சாதி, மத வேறுபாடின்றி சுதந்திரப் போரில் தங்களை ஆகுதியாக்கினார்கள். ஆயுள் தண்டனை, தீவாந்திர தண்டனை, நாடு கடத்தல், மரண தண்டனை எல்லாம் அனுபவித்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து உயிர் பிழைக்கவில்லை. அத்தகைய அடிமை வாழ்க்கை, ஏவல் வாழ்க்கை வாழவில்லை. தமிழகத்தின் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா போன்றோர் சிறை வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. செக்கிழுத்ததும், தொழுநோய் பெற்றதும் வரலாறு. திருப்பூர்க்குமரன் கொடிகாத்த குமரனானதும் சரித்திரச் சான்று. சதி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறைத் தண்டனைகள் பெற்றவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட்டுகளே. நாடு முழுவதும் எத்தனை எத்தனை சதி வழக்குகள். தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என எத்தனை சதி வழக்குகள்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் தியாக வாழ்க்கைக்குச் சான்று. சுதந்திரத்துக்கு முதல் நாள் அதாவது விடுதலை அறிவிப்புக்குச் சற்று முன்னர் சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். சிறை வாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும் ஆஸ்துமா போன்ற நோய்களைத் தந்தது. அதனால் ஆயுட்காலம் முழுக்க அவதிப்பட்டும் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடியே வந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். நாளென் செய்யும்? கோளென் செய்யும்? -என்பது போல் சிறை என்ன செய்யும்? சித்ரவதை என்ன செய்யும்? சுதந்திரத்தின் அருமைக்காகப் போராடியவர்களை அடக்கு முறைகளும் சிறைப்படுத்தலும் அடக்கிவிடவா செய்யும்? அதைத்தான் விடுதலைக் கவிஞன் மகாகவி பாரதி.

இதந்தரு மனையின் நீங்கி     இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறி     பழிமிகுந்து இழிவுற்றாலும் விதந்தரும் கோடி இன்னல்     விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னை     தொழுதிடல் மறக்கிலேனே! - என்று பாடினார்.

தான் மக்கள் வெள்ளைப் பரங்கியரின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு விடுதலைப் போரில் ஈடுபட்டனர். அத்தகைய வீரதீரம் கொண்டவர்கள்தான் இந்தியத் தாயின் பெருமை மிகு மக்கள். இவர்கள் தங்கள் நாட்டுக்காக, விடுதலைக்காகப் போராடியதற்காக தியாகிகள் ஓய்வூதியம் வாங்குவதைக் கூட இழுக்கு எனக் கருதியவர்கள். அதனால் தான் அவர்கள் இன்றும் போற்றப்படுகிறார்கள். இன்று  101 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சங்கரய்யா போன்ற தியாகத் தலைவர்கள் அதற்குச் சான்றாகத் திகழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள்,

“தாய் நாட்டுக்காகத் தன் உடல் பொருள் ஆவியை தந்த தியாகிகளுக்கு வணக்கம்” என்று போற்றப்படுகிறார்கள்.

நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள், சுதந்திரத்துக்குப் பின் இந்திய அரசிடம் தியாகிகள் ஓய்வூதியம் வாங்குவதைக் கூட மறுத்தவர்கள் மத்தியில், நாட்டை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பிழைப்பூதியம் பெற்றவர்களை, எப்படி அழைப்பது? என்னவென்று சொல்வது?

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர் வேறெதுவும் வேண்டுவரோ?”

என்கிற பாரதியின் கேள்விதான் நம்முன் நிற்கிறது. வேறுபலன் வேண்டிய அவர்கள் தான் இன்று தேசபக்தி என்கிறார்கள். மூன்று நாள் தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்கிறார்கள். இத்தகைய போலிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவது தான் உண்மையான தேசபக்தி. இவர்களது இந்துத்துவா இப்போது சனாதனம் என்ற பெயரில் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் பேசப்படுகிறது. சனாதனம் என்றால் சமத்துவம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். சதுர்வர்ணம் என்னும் நால்வருண சாதியப் பாகுபாடு சமுதாயத்தை சமத்துவம் என்று சாதிக்கிறார். சமூகநீதி சக்திகள், சமத்துவக் கொள்கையாளர்கள் அனைவரும் இணைந்து இத்தகைய தேசவிரோத சக்திகளை முறியடிப்பதே உண்மையான சுதந்திர வாழ்வாகும்.  “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்கிற பாரதியின் வாக்கு அப்போது தான் மெய்யாகும்.

;