articles

img

உணர்ச்சிகளைத் தட்டிவிடுவது பிரச்சனைகளை மறைக்கிறது...

மார்க்சிய நோக்கில் தேசிய இனப்பிரச்சனைகளுக்கான தீர்வினைதோழர் லெனின் வரைமுறைப்படுத்தினார். அதை தோழர் ஸ்டாலின் அனுபவங்களின் வாயிலாக மேலும் செழுமைப்படுத்தி செயல்படுத்தினார். தேசிய இனங்களின் உரிமைகள் குறித்து லெனின் முன்மொழிந்த எல்லா இடங்களிலும் அவர் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் முன்வைத்தார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

தேசிய இனங்களும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்
“தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காததை எதிர்த்துப் போராடாத ஒருவர், அனைத்துவிதமான தேசிய இன ஒடுக்கு முறையையும், சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடாத ஒருவர் மார்க்சியவாதி அல்ல; ஜனநாயகவாதியும் அல்ல.” என்று லெனின் கூறுகிறார். அதேநேரம் பாட்டாளி வர்க்கசர்வதேசியவாதத்திற்காகவும் முதலாளித்துவ தேசியத்தால்பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்தும் சமரசமின்றிப் போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்.

தேசிய இனப் பகைமைகள் குறித்து மார்க்சிய நிலைகளை விமர்சிப்பவர்கள் அதற்கு மாற்றாக “தெளிவான, திட்டவட்டமான ஆட்சேபங்களைச் சொல்வதில்லை. மாறாக, சொற்கூளங்களுக்கு நடுவே இங்குமங்கும் அறிவில்லாத ஏளனச் சொற்களை சிதறவிடுவதை மட்டுமேபார்க்கிறோம்.” வெறும் உணர்ச்சிப்பூர்வமான சொற்றொடர்கள் உண்மையில் காத்திரமான பிரச்சனைகளை மக்களிடமிருந்து மறைக்கிறது.“கம்யூனிஸ்ட்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னணிக்கு வருகின்றனர்” என்று மார்க்சும் ஏங்கெல்சும் “கம்யூனிஸ்ட் அறிக்கை” –யில் குறிப்பிட்டவற்றை மேலும் செழுமைப்படுத்தி லெனின் முன்னகர்த்தினார். சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்கிற முரண்பாட்டிற்கு முடிவு கட்டாமல் சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு முழுமையாக முடிவுகட்ட முடியாது. எனினும், மொழி, இனம், சாதி உள்ளிட்ட முரண்களால் சிதறடிக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை குறித்த அம்சங்களுக்கு முகங்கொடுக்காமல், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கான ஒன்றிணைப்பை சாத்தியப்படுத்த முடியாது.

தொழிலாளி வர்க்க அரசியல் என்பது வர்க்க அரசியலைமுன்னெடுப்பதோடு, அந்தந்த சமூகத்தில் நிலவும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் களமாடுவதாகும். தனக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்தை சிதறடிக்கும் வேலையை ஆளும் வர்க்கம் எப்போதும் மிக நுணுக்கமாகச் செய்துவருகிறது. சாதி, மதம், இனம், மொழி என உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை அது செய்து வந்துள்ளதை வரலாற்று நெடுகிலும் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் ரஷ்ய வீழ்ச்சிக்குப் பிறகான உலகமய காலகட்டத்தில் அடையாள அரசியல் அந்த வேலையைச் செய்து வருகிறது.சமூக ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள், பல நேரங்களில் ஒடுக்குமுறைக்கு எதிராக தங்களின் அடையாளங்களை முன்வைத்து எழும்போதும் அதை ஜனநாயகத்திற்கான போராட்டம் என்கிற வகையிலேயே கம்யூனிஸ்ட்டுகள் செயலாற்றுகின்றனர். ஆனால், அது தெளிவான அரசியல் வழியில் பயணிக்காதபோது, அப்போராட்டத்தின் வளர்ச்சி எவ்வாறு தேங்கிப் போகிறது என்பதையும் அது எப்படி ஆளும் வர்க்கத்திற்கு வலு சேர்க்கிறது என்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதாலேயே அது விமர்சனத்திற்கோ, மாற்றுக் கருத்திற்கோ அப்பாற்பட்டதல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ தேசியமும் பாட்டாளி வர்க்க வரம்பெல்லையும்
அனைத்து விதமான தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதும், மக்களின் அரசுரிமைக்காகவும் தேசிய இனத்தின் அரசுரிமைக்காகவும் போராடுவதும் முற்போக்கானதே. “முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். ஆனால், தேசியவாதத்திற்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்குமேல் செல்வது சாத்தியமில்லை”. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்களை மற்றொரு தேசிய இனத்தின் தொழிலாளர்களிடமிருந்து தனியே பிரித்து ஒதுக்கி வைப்பது முதலாளித்துவ தேசியமாகும். அத்தகைய தேசியத்தை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டத்தையே நடத்த வேண்டும் என்கிறார் லெனின்.

தங்கள் இனத்தை ஒடுக்கும் மற்றொரு இனத்தின் ஒடுக்குமுறையாளர்கள் மீது எழும் வெறுப்பு நியாயமானதும் இயற்கையானதுமாகும். ஆனால், அங்குள்ள ‘பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தின் மீதும் பாட்டாளி வர்க்க லட்சியத்திற்கும் இம்மியளவு மனத்தாங்கல் ஏற்படும்படி அந்த வெறுப்பை அனுமதிப்பவரும்’ முதலாளித்துவ தேசியவாதத்திற்குள் சிக்கிக் கொண்டவராவர். “மார்க்சியவாதிகள் தம்மை முதலாளித்துவ தேசியவாத கண்ணோட்டத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்வோர் அல்லர்.”
“முதலாளித்துவ தேசியவாதத்திற்கு ஆதரவளிப்பதில், வரலாற்று வழியில் அமைந்த இந்த திட்டவட்டமான எல்லைகளைக் கடந்து, கண்டிப்பான இந்த வரம்புகளை மீறுவது பாட்டாளி வர்க்கத்திற்குத் துரோகம் புரிந்து முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும். பல சமயங்களில் இந்த இடைவெளி மிக மெல்லியதாய் இருக்கக்கூடும்.” என்று லெனின் எச்சரிக்கிறார்.

“ஒவ்வொரு தேசிய இனத்திலும் முதலாளித்துவ கலாச்சாரம் இருக்கிறது.” அதுவே அங்கு ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. தேசியவாதம் பேசுபவர்கள் அங்கு நிலவும் வர்க்கப் பிளவை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக இருட்டடிப்பு செய்கின்றனர். அவர்களுடைய “வெற்று சொல்வீச்சுக்கள் மக்களின் கவனத்தைக் குலைத்து பிரச்சனைகளை மேலும் குழப்ப முயல்கிறது.” அவர்கள் முன்வைக்கும் அடையாளங்கள் பொதுவாக இனத்தின் நலன் என்று கூறப்படுகிற போதும் அதில் உள்ள சிறு பகுதியினரின் (சமூக பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களின்) நலனே பிரதானமாகிறது.“முதலாளித்துவ தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமைகொண்ட இருவேறு முழக்கங்களாகும்.” “பாட்டாளி வர்க்கத்திற்கு பணிபுரிய விரும்புவோர் எல்லா தேசிய இனங்களில் உள்ள தொழிலாளர்களையும் ஒன்றுபடச்செய்ய வேண்டும்.”

அடையாள அரசியலும் அகநிலைவாதமும்
சமூக வளர்ச்சிப் போக்கின் பகுதியாக எழும் முதலாளித்துவத்தின் பொருளாதார நடைமுறைகள், தவிர்க்க இயலாதவகையில் எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உழைப்பாளி மக்களையும் நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விரட்டுகிறது. உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல் இங்கு எல்லாத் தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவாக்கப்படுகிறது. இந்த சுரண்டலை எதிர்த்த போராட்டத்திற்கு பல்வேறு தேசிய இனங்களையும், சாதியையும், மதத்தையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒரே குடையின் கீழ் அணிதிரட்ட வேண்டியுள்ளது. அப்போதுதான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை வலுவாகக் கட்டியமைக்க முடியும்.

அடையாள அரசியல் என்பவையெல்லாம் முதலாளித்துவ ஏமாற்றுகளே. அவற்றோடு தேங்கிப்போகும் சில கம்யூனிஸ்ட்டுகள் சிறுபிள்ளைத்தனமான அகநிலை நோக்கம் கொண்டவர்களே என்பதை லெனினின் எழுத்துக்கள் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களோடு இணைந்து நின்று களமாடுவதோடு அதன் வரம்பெல்லைகளையும் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும், பாட்டாளி வர்க்கத்தின் இறுதி லட்சியமான ஒட்டுமொத்த சமூக பொருளாதார விடுதலைக்கான போராட்டத்தின் அடிப்படைகளையும், சோஷலிச புரட்சியையும் லெனினியம் முன்மொழிகிறது.

“பாட்டாளி வர்க்க இலட்சியமே நமது முதன்மையான லட்சியம். ஏனெனில், தொழிலாளர்களின் நீடித்த நலன்,ஜனநாயகத்தின் நலனையும் மட்டுமின்றி மனித குலத்தின்நலனையும் அதுவே பாதுகாக்கவல்லது” என்கிறார் லெனின்.கூலி உயர்வுக்கான போராட்டத்தோடு நிற்காமல், ஒடுக்கப்பட்ட மக்களின் துண்டு அவர்களின் கக்கத்தில் இருப்பதற்கானதல்ல என்ற தோழர் சீனிவாசராவின் போர்க்குரலே தஞ்சையில் உழைக்கும் மக்களின் தோள்களில் சிவப்பு துண்டாக மிளிர்கின்றன.ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அடிப்படையாக உள்ள ஆளும் வர்க்கசித்தாந்தத்தைக் கட்டுடைக்கும் தத்துவமாக மார்க்சியலெனினியமே உள்ளது என்பதை கீழத்தஞ்சை எழுச்சிமுதல் தற்போது வரை நடைபெற்று வரும் கம்யூனிஸ்டுகளின் எண்ணற்ற களப்போராட்டங்கள் எடுத்துரைக்கின்றன. 

கட்டுரையாளர்: ச.லெனின், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;