articles

img

கியூபா மீது கை வைக்காதே...

முதலாளித்துவம் சோசலிச சமூகங்களை ஏற்றுக்கொண்டதே கிடையாது. எப்படியாவது சோசலிசத்தை அழித்தே தீருவது என்பது முதலாளித்துவத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி நிரலாகவே இருந்து வருகிறது. ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு சோவியத் புரட்சிக்கு பின்பு தொடங்கிய இத்தகைய முயற்சிகள் இன்றுவரை தொடர்கின்றன. சீனாவின் பொருளாதார முன்னேற்றம் அமெரிக்காவுக்கு சவால் விடுவதால் ஜி7 நாடுகளின் விவாதம் மற்றும் தீர்மானங்கள் சீனாவுக்கு எதிராக கட்டமைக்கப்படுகின்றன. கியூபா இத்தகைய பொருளாதார சவாலாக எந்த முதலாளித்துவ தேசத்துக்கும் இல்லை. ஆனால் லத்தீன் அமெரிக்க தேசங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாலும் தனது மூக்குக்கு கீழேயே ஒரு தேசம் பல நெருக்கடிகளுக்கு இடையே சோசலிசத்தை விடாப்பிடியாக நடைமுறைப் படுத்துவதாலும் கியூபாவில் சோசலிசத்தை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க செய்துவருகிறது. இதன் விளைவாக கடந்த 11.07.2021 அன்று கியூபாவில் சில ஆர்ப்பாட்டங்களும் குழப்பங்களும் நடைபெற்றன. ஆனால் கியூபா மக்கள் தமது சோசலிசத்தை பாதுகாக்க வீதிகளில் இறங்கி கலகக்காரர்களை நேருக்கு நேர் சந்தித்தனர். மீண்டும் ஒரு தடவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா சுமத்திய துன்பங்கள்

கியூபா மீது அமெரிக்கா 60 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக தடையை விதித்துள்ளது.உலகிலேயே வேறு எந்த தேசமும் இத்தகைய வர்த்தக தடைகளை சந்திக்கவில்லை. சீனா/ஈரான்/வெனிசுலா ஆகிய தேசங்கள் மீதும் தடை உள்ளது. ஆனால் கியூபா மீது உள்ள வர்த்தகதடை பன்மடங்கு கொடூரமானது. கியூபாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த ஒரு தேசம் அல்லது தனிப்பட்ட நிறுவனமும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இயலாது. எனவே மிகப்பெரும்பாலான தேசங்கள் கியூபாவுடன் வர்த்தகம் செய்ய இயலவில்லை. கியூபாவின் உற்பத்தி பொருட்கள் வேறு தேசங்களுக்கு விற்க இயலாது; வேறு தேசங்களிலிருந்து கியூபா தனக்கு தேவையான உயிர்காக் கும் மருந்துகளை கூட இறக்குமதி செய்ய இயலாது.

ஒபாமா காலத்தில் சற்றே தளர்த்தப்பட்ட இந்த தடைகள் மீண்டும் டிரம்ப் காலத்தில் மிக அதிகமாக கடுமையாக்கப்பட்டன. தொடர்ந்து 29 ஆண்டுகளாக ஐ.நா.சபையில் அனைத்து தேசங்களும் கியூபா மீதான தடைநீக்க வேண்டும் என தீர்மானம் இயற்றுகின்றன.இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் 184 நாடுகள் தடையை நீக்க ஆதரவு தெரிவித்தன. இந்ததீர்மானத்தை எதிர்த்த தேசங்கள் அமெரிக்காவும் இஸ்ரேல் மட்டுமே! இந்த தடைகள் காரணமாக கியூபா கடந்த 29 ஆண்டுகளில் மட்டும்சுமார் 150 பில்லியன் டாலர்கள் அதாவது11,25,000 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளது.வேறு எந்த தேசமாக இருந்தாலும் இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்கும். ஆனால் சோசலிச கியூபாஎதிர்த்து நிற்கிறது. இதன் விளைவாக சமீப காலத்தில் கியூபாகடும் பற்றாக்குறைகளை சந்தித்து வருகிறது. உணவுப் பொருட்கள் தேவையான அளவு கிடைக்கவில்லை. மின்சாரம் தட்டுப்பாடாக உள்ளது. இதற்கிடையே கோவிட் வைரசின்முதல் அலையை மிக மிக திறமையாக கட்டுப் படுத்திய கியூபா, இரண்டாவது அலையில் நெருக்கடியை சந்திக்கிறது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் மூன்று சிறந்த தடுப்பூசிகளை கியூபா உருவாக்கியுள்ளது. மக்களுக்கு வேகமாக தடுப்பூசிகள் செலுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் கொடுமை என்னவெனில் தடுப்பூசி போட தேவையான ஊசிகள்பற்றாக்குறையாக உள்ளன. சீனா போன்றதேசங்கள் ஊசிகளை கொடுக்க முன்வந்தாலும் அமெரிக்கா தடை காரணமாக போதுமானஊசிகள் கியூபாவுக்கு அனுப்ப இயலவில்லை. “கியூபாவுக்கு ஊசிகளை கொடு” என்ற இயக்கம் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்திலும் அமெரிக்கா தற்காலிகமாக கூட தனது தடைகளை தளர்த்தமுன்வரவில்லை. இத்தகைய மனிதத்தன்மையற்ற முறையில் செயல்படும் அமெரிக்காதான்மனித உரிமைகள் குறித்து வாய் கிழிய பேசுகிறது.

சமூக ஊடகங்கள் வழியாக புதுவித போர்
இத்தகைய நெருக்கடிகள் மக்களின் ஒரு பிரிவினரிடையே அதிருப்தி விளைவிப்பது இயற்கையான ஒன்றுதான்! இந்த நெருக்கடிகளுக்கு அடிப்படை காரணம் அமெரிக்காவின் வர்த்தக தடைதான் என்பதை பெரும்பாலான கியூபா மக்கள் உணர்ந்திருந்தாலும் ஒரு சிறுபகுதியினர் நெருக்கடி காலத்தில் அந்த கோணத் தில் சிந்திக்க தவறுகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கியூபாவில் குழப்பம் விளைவிக்க அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் முயன்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் சமூக ஊடகங்கள் ஆகும்.கடந்த சில நாட்களாக டுவிட்டர் எப்படிசோசலிச கியூபாவுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டது என்பதை ஸ்பெயின் தொழில்நுட்ப வல்லுநர் ஜூலியன் டோவர் மிக ஆழமாக ஆய்வு செய்து சதியின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். “கியூபாவை காப்பாற்றுங் கள்” (SOS CUBA) எனும் ஹேஷ்டேக்குடன் பல்லாயிரக்கணக்கான டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு மூலம் பல லட்சக்கணக்கான டுவிட்டர் பதிவுகள் உருவாக்கப்பட்டன. இதற்கு மூளையாக செயல்பட்டவர் அர்ஜெண்டினா தேசத்தின் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் அகஸ்டின் அந்தோணிட்டி என்பவர்தான் என்பதையும் டோவர் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த நபர்ஏற்கெனவே பிரேசிலின் லூலா/ பொலிவியாவின் மொரேல்ஸ் ஆகிய இடதுசாரி தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் டுவிட்டர்பிரச்சாரம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக் கது. 

இதே நேரத்தில் கியூபாவின் சான் அன்டோனியோ எனும் இடத்தில் கியூபா அரசுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த செய்தியை வெளி உலகுக்கு முதலில் அறிவித்தது yusnaby எனும் டுவிட்டர் கணக்குதான்! இதுஅமெரிக்க கடற்படையின் டுவிட்டர் கணக்கு என அம்பலப்படுத்துகிறார் டோவர். இந்தஆர்ப்பாட்டம் குறித்து அமெரிக்க கடற்படையின் டுவிட்டர் கணக்கு சுமார் 20 லட்சம் பதிவுகளை உருவாக்கியது. இதன் விளைவாக பல நாடுகளில் இந்த செய்தி முதனமையானதாக மாறியது. இதன் அடிப்படையில் பல முதலாளித்துவ மிகப்பெரிய ஊடகங்கள் கியூபாவில்கம்யூனிஸ்டு அரசுக்கு எதிராக பெரும் பேரணிகள் என செய்திகளை வெளியிட்டன. இந்திய பத்திரிகைகளும் இதனை அப்படியே வாந்தி எடுத்தன.

கியூபாவின் நிலை சிலரிடம் இயற்கையாக அதிருப்தியை உருவாக்கியிருந்தாலும் அந்த அதிருப்தியை சோசலிசத்துக்கு எதிராக பயன்பத்த சில விஷமிகள் முயன்றனர். நியாயமான அதிருப்தி கொண்டவர்கள் ஏன் உணவு பற்றாக்குறை? ஏன் மின் தடை? ஏன் வைரஸ் பரவுகிறது? எனும் கேள்விகளை எழுப்பினர். ஆனால் விஷமிகளோ கம்யூனிஸ்டு அரசாங்கம் பதவிவிலக வேண்டும்; கியூபாவுக்கு சோசலிசம் தேவை இல்லை என இந்த அதிருப்தியை திசைதிருப்ப முயன்றனர். சில இடங்களில் கலவரங்களும் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. சில காவல் நிலையங்களை கைப்பற்றவும் முயற்சிகள் நடந்தன.

இந்த நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடன் “பல ஆண்டுகளாக அடக்குமுறைக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் ஆட்பட்டு இப்பொழுது விடுதலைக்காக போராடும் கியூப மக்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்” என அறிக்கைவிட்டார். ஆனால் கியூபா மக்களின் பொருளாதார துன்பங்களுக்கு அமெரிக்காவின் தடைகள்தான் காரணம் என்பதை “ஜனநாயக அரசியல்வாதி” பைடன் வசதியாகமறைத்துவிட்டார். சோசலிச தேசங்களில் ஜனநாயகம் இல்லை என பக்கம் பக்கமாக எழுதும்
மிகப்பெரிய ஏடுகளான வாஷிங்டன் போஸ்ட்/நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளும் இந்த அம்சத்தை மறைத்துவிட்டன.

அமெரிக்க நிர்வாகமும் டுவிட்டரும் பதில் கூறுவார்களா?

அமெரிக்க அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் எந்த அளவுக்கு கியூபா சோசலிசத்தை வெறுக்கின்றனர் என்பதை குடியரசு கட்சியை சேர்ந்த ஃபுளோரிடா நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி சபாட்டினி கூறியதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அவர் கூறினார்:

“கியூபா கம்யூனிச அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும். கியூபா கம்யூனிஸ்டு தலைவர்களை கொல்ல வேண்டும்.” இப்படி அமெரிக்கா பற்றி வேறு எந்ததேசத்தின் நாடாளுமன்ற தலைவர் பேசினால்அமெரிக்க நிர்வாகம் பொறுத்துக் கொள்ளுமா?

இதுவரை அந்தோணி சபாட்டினி கூற்றுக்கு ஜோபைடனோ அல்லது அமெரிக்க நிர்வாகமோமறுப்பு தெரிவிக்கவில்லை. ஃபுளோரிடாவுக்கும் கியூபாவுக்கும் இடையே உள்ள தூரம்90 மைல்கள்தான்!

கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிஜஸ் சதியின் கீழ்கண்ட அம்சங்களை அம்பலப்படுத்தியுள்ளார்:

•    சூன் 15ஆம் தேதியிலிருந்து கியூபாவில் குழப்பங்களை விளைவிக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. 

•    ஐ.நா. சபையில் கியூபாவுக்கு ஆதரவானதீர்மானத்தை சீர்குலைக்க திட்டமிடப் பட்டது.

•    கியூபாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பிய தொழில்நுட்பநிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கத் தின் நிதி உதவி கிடைக்கிறது.

•    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலஅரசாங்கம் கியூபாவுக்கு எதிராக பிரச்சாரமும் உள்நாட்டு குழப்பங்களுக்கும் ஏற்பாடு செய்கின்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கிறது.

•    கியூபாவுக்கு எதிரான சதி திட்டங்களின் தலைமையகமாக ஃபுளோரிடா மாநிலத் தின் மியாமி நகரம் உள்ளது.

•    கியூபாவுக்குள் குழப்பம் செய்ய முயற்சி செய்பவர்கள்தான் அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தின் மீதும் குண்டுவீசினர். ஆனால் இதுவரை அமெரிக்க நிர்வாகம் இதனை கண்டிக்கவில்லை.

•    சதியாளர்கள் கியூபாவுக்கு எதிராக வன்முறையை முன்வைத்து லட்சக்கணக்கான பதிவுகளை வெளியிட்ட பின்னரும் டுவிட்டர் நிர்வாகம் அதனை தடுக்கமுன்வரவில்லை.

•    கியூபாவுக்கு எதிரான டுவிட்டர் பதிவுகள் கியூபாவிலிருந்து வெளியிடப்படுவது போல அதன் பூகோள இருப்பிடங்கள் மாற்றப்பட்டன. ஆனால் உண்மையில் அவை கியூபாவுக்கு வெளியே இருந்துதான் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட எந்த குற்றச்சாட்டுக்கும் அமெரிக்க நிர்வாகமோ அல்லது டுவிட்டர் நிறுவனமோ இதுவரை பதில் அளிக்கவில்லை.

சோசலிசத்தை காக்க வீதிக்கு வந்த மக்கள்!

மக்களில் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை அறிந்த கியூபா ஜனாதிபதிமிகுவேல் டியாஸ் கேனல் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்றார். மக்களிடம் பிரச்சனைகளின் தன்மை என்ன என்பதை விளக்கினார். இயற்கையான அதிருப்தி அடைந்த மக்களையும் குழப்பத்தை விளைவிக்க எண்ணும் சோசலிச எதிரிகளையும் ஒரே தட்டில் வைத்து கியூபா அரசாங்கம் பார்க்கவில்லை. எனவே சோசலிசஎதிரிகளை தனிமைப்படுத்த முடிந்தது. கியூபா சந்திக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளக்கி மிகுவேல் டியாஸ் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் உரையாற்றினார். புரட்சி மற்றும் சோசலிசத்தை பாதுகாக்க கியூபாகம்யூனிஸ்டு கட்சி மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.தமது புரட்சியையும் சோசலிசத்தையும் உயிரென மதிக்கும் கியூபா மக்கள் வீதிகளில் இறங்கினர். சோசலிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்கு நேர் சந்தித்தனர். “கியூபாவின் வீதிகள் புரட்சிக்கு சொந்தமானவை! ஃபிடலுக்கு சொந்தமானவை! எதிரிகளுக்கு தாரைவார்க்க மாட்டோம்” என முழங்கினர்.
“தாய் மண்! அல்லது வீரமரணம்! நாம் வெல்வோம்” என கர்ஜித்தனர். 

“புரட்சிக்காக வாழ்கிறேன்! புரட்சிக்காக உயிர்விட தயாராக உள்ளேன்” என உணர்ச்சிமிகு சங்கநாதம் செய்தனர்.

கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு ஊழியர் கூறினார்:

“என்னை தலையில் தாக்கினார்கள். 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் நான் வீதியில் புரட்சிக்காக நிற்கிறேன். எங்கே அந்தகோழைகள்? கியூபாவின் புரட்சிக்காக என் உயிரையும் என் நிழலையும் கூட தியாகம் செய்வேன்”
இத்தகைய உறுதிமிக்க ஊழியர்கள் இருப்பதால்தான் உலகையே மிரட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு கியூபாவை சிதைக்க இயலவில்லை.

உலகில் உள்ள பல தேசங்களும் அமைப்புகளும் கியூபாவில் குழப்பத்தை விளைவிக்க செய்யும் அமெரிக்காவின் சூழ்ச்சிகளை கண்டித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி/இந்திய கம்யூனிஸ்டு கட்சி/கிரீஸ்/துருக்கி/ஆஸ்திரேலியா/மெக்சிகோ/வெனிசுலா/போர்ச்சுகல்/பிரேசில்/ இத்தாலி/ யூகோஸ்லேவியா/ /அயர்லாந்து/பிரிட்டன்/ அமெரிக்க கம்யூனிஸ்டு கட்சி உட்பட உலகெங்கும் உள்ள கட்சிகள் அமெரிக்காவின் சூழ்ச்சிகளை கண்டித்தன. சீனா/வியட்நாம் ஆகிய அரசாங்கங்களும் கியூபாவுக்கு ஆதரவாக நின்றன. வெனிசுலா/மெக்சிகோ/நிகரகுவா/ அர்ஜெண்டினா/ பொலிவியா மற்றும் பல லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க தேசங்கள் கியூபாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 10 தேசங்கள் உள்ளடக்கிய அமெரிக்க பொலிவிய கூட்டமைப்பும் வலுவாக கியூபாவை ஆதரித்தது. அமெரிக்காவில் கியூபாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இத்தகைய வலுவான எதிர்ப்பை அமெரிக்க நிர்வாகமோ அல்லது ஜோ பைடனோஎதிர்ப்பார்த்திருக்கமாட்டார்ள். பொருளாதார துன்பங்களினால் இன்னல்படும் கியூபா மக்களை மிக எளிதாக தூண்டிவிட்டுவிடலாம் எனும் அவர்களின் கணக்கு மீண்டும் ஒரு முறை பொய்த்து போனது. எனினும் கியூபாவை சீர்குலைக்க அமெரிக்கா செய்யும் கடைசிசூழ்ச்சியாக இது இருக்காது. அந்த சூழ்ச்சியைமுறியடிக்கும் கியூபா மக்களின் கடைசி போராட்டமாகவும் இது இருக்கப் போவது இல்லை.

கட்டுரையாளர் : அ.அன்வர் உசேன்

;