articles

img

பேரிடர் காலப் பேரிடர்கள்....

கடந்த வருடத்திலிருந்து உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கோவிட் தொற்று, அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விவாதத்தை முன்னணிக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. குறிப்பாக வலதுசாரிய ஆட்சி இருக்கும் இந்தியாவில் இத்தகைய விவாதங்கள் நடக்கும் சூழலுக்கு சுவாரஸ்யமான பல அம்சங்கள் உண்டு.

புராண விஞ்ஞானம் என மாட்டுச் சிறுநீர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதிலுள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய்வதாக விவாதங்கள் அரங்கேறின. நம்மூரிலும் ஏற்கனவே ஆங்கில மருத்துவத்தை நம்பாமல் இணையக் காணொலி பார்த்து பிரசவம் பார்த்து உயிர் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. மாற்று மருத்துவ ஆதரவு – எதிர்ப்பு போன்ற விவாதங்கள் அத்தகைய மரணங்களைத் தொட்டு இங்கு தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. கோமியம், சாணம் மாடு, ஆரூடம் என சாமியார்களின் அட்டூழியங்களும் அரங்கேறி வருகிறது. இத்தகைய மூடநம்பிக்கைகள் ஏற்படுத்தும் கோபம் இன்னொரு பக்கத்தில் ஒரு தரப்பினரை தீவிரமாகவும் கண்மூடித்தனமாகவும் ‘அறிவியலை வெறும் அறிவியலாக மட்டுமே’ ஆதரிக்கும் மனநிலைக்கு தள்ளி விட்டிருக்கிறது.

இத்தகைய நிலைப்பாடுகளுக்கு இடையேயான விவாதங்கள் இன்றைய கோவிட் காலத்தில் சமூக தளங்களிலும் ஊடகங்களிலும் அதிகமாக நடக்கிறது. அவற்றில் மாட்டுச் சிறுநீர் வகையறா கட்டுப் பெட்டித் தனங்களை ஒதுக்கி வைத்து விட்டாலும் பிற தரப்புகள் எல்லாவற்றிலும் ஓரளவு நியாயங்களும் உண்மைகளும் இருக்கின்றன.

விளைவு என்ன தெரியுமா?
பாதி உண்மைகள் மேலும் மேலும் அரைகுறை தகவல்களால் காப்பாற்றப்பட்டு அழிக்கப்பட்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டும் ‘உண்மைகளைவிட உணர்ச்சிகள் மற்றும் சுயவிருப்பின் அடிப்படையில் நினைக்கிற அனைத்துமே உண்மை’ (post truth)  என்கிற ஆபத்தான நிலை உருவாக்கப்பட்டு விடுகிறது.  உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்து எடுக்கப்படும் இத்தகைய நிலைப்பாடுகளும் அவற்றை கள்ளச்சிரிப்புடன் அமைதியாக கடக்கும் அதிகாரத்தின் பாங்கும் நிச்சயமாக சமூக அறிவியல் அணுகுமுறையையும் தலையீட்டையும் இப்பிரச்சனையில் கோருகின்றன.  

இரண்டு (ஆங்கில மற்றும் மாற்று) மருத்துவ முறைகளை  ஆராய முனைகையில் எது சரி என்கிற இடத்தையே நம் மனம் தேர்ந்தெடுக்க எத்தனிக்கிறது.எது சரி என நமக்கு தெரிந்தபோதிலும் மற்ற முறையின் இருப்பை எது நம் சமூகத்தில் சாத்தியப்படுத்துகிறது என்பதை நோக்கியே நம் ஆய்வு செல்ல வேண்டியிருக்கிறது. எது சரி என்ற முடிவிலிருந்து ஆராய்கையில், நாம்சரியென நினைக்கும் மருத்துவத்துக்கு எதிரான மருத்துவத்தின் இருப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு பதிலாக, அவற்றை எதிர்க்கும் நிலையை அடைந்துவிடுகிறோம். அவை மக்களிடம் புழங்கப்படுவதற்கான காரணத்தை நம் பங்குக்கு அதிகமாக்கி விடுகிறோம்.

எந்த ஒரு விஷயத்துக்குள்ளும் அதன் தன்மையையே மாற்றக்கூடிய ஒரு முரண் இருக்கும் என்பதே இயங்கியலுக்கான எளிய விளக்கம். இந்த இயங்கியலின் அடிப்படையில் பார்க்கும்போது இங்கிருக்கும் மருத்துவம், அறிவியல் கொண்டிருக்கக் கூடிய முரண் என்ன?ஒரு சாமானியருக்கு அரசு கொடுக்கும் மருத்துவம் மலிவாகவோ இலவசமாகவோ கிடைக்கக் கூடிய அரசியல் பொருளாதார சூழல் இருக்கும்போது, அரசு கொடுக்கும் மருத்துவத்தின் மீதான மக்களின் சந்தேகங்கள் கணிசமாக குறையும். எந்த உடல் குறைபாடு நேர்ந்தாலும் அரசிடம் சென்று சரி செய்துகொள்ள முடியும் என்கிற நிலை இருக்கும். ஆனால் யதார்த்தத்தில் அத்தகைய சூழல்இல்லாத நிலையிலும் மருத்துவமனைகள் பணம் பிடுங்கும்இடமாக மாற்றப்பட்டிருக்கும் சூழலிலும் மக்களின் தேர்வு அரசிடமிருந்து விலகுவதாகவே இருக்கிறது.அந்த விலகல் அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவியல் மற்றும் மருத்துவத்தை ஏற்க மறுப்பதாக மாற்றமடைகிறது.

அரசின் மீது ஏன் அவநம்பிக்கை?
கோவிட் இரண்டாம் அலை பற்றிய எச்சரிக்கை டிசம்பர் மாதமே விடுக்கப்பட்டும் மார்ச் மாதத்தில் தேர்தல் பிரசாரம், பிறகு கும்பமேளா என சுற்றிக் கொண்டிருந்த பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். மக்களை காக்க தடுப்பூசி தயாரிப்பதற்கு பதிலாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில்தடுப்பூசியை கொண்டு வந்தால் அரசியல் ஆதாயம் பெறமுடியும் என திட்டம் தீட்டியவர் அவர்.அம்முயற்சிக்குஎழுந்த எதிர்ப்புக்கு பிறகு திட்டத்தை கைவிட்டார்.அடுத்தக் கட்டமாக தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை இந்தியாவில்இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தார். அவையும் தனியார் நிறுவனங்கள். பேரிடர் சூழலையும் முதலாளி சகாக்களுக்கு லாபமாக்கிக் கொடுக்கும் கடமையை செவ்வனே செய்தார் பிரதமர்.எந்த பொறுப்புணர்வும் இன்றி லட்சக்கணக்கான மக்களை கூட்டி பிரதமர் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் கும்பமேளா நிகழ்ச்சியும், மூடி வைக்கப்பட்டிருந்த யானையை திறந்து வெளியே விட்டது.

கோவிட் இரண்டாம் அலை!
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பாதிப்புகளும் ஆயிரக்கணக்கில் மரணங்களும் நேர்கின்றன. தில்லி,உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்கள் சுகாதாரப் பேரிடரை சந்திக்கின்றன. சாரை சாரையாக ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாசல்களில் காத்திருக்கின்றன. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்களை எங்காவது சென்று ஆக்சிஜன் கொண்டு வாருங்கள் என மருத்துவமனைகள் அனுப்புகின்றன. அரசு நிர்வாகத்திடம் எப்படியேனும் ஆக்சிஜன் ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனைகள் கெஞ்சுகின்றன. மூச்சுக் காற்று கொடுக்கக் கேட்டு வரலாற்றில் இல்லாத கதையாக முதன்முதலாக மருத்துவமனைகள் நீதிமன்றத்தை நாடும் காட்சியும் நடக்கிறது.

காற்றைப் பிடிக்க ஆசைப்பட்டு ஏங்கி ஏங்கி மூச்சு கிடைக்காமல் மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுகின்றனர். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தை, தம்பி, அண்ணன், தங்கை, அக்கா, அவர், இவர் என எங்கும் மரணங்கள். இறந்து போனவர்களை எரிக்க இடமில்லை. சாலையோரங்களிலும் குப்பை மேடுகளிலும் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. தில்லி நகர் பிண நாற்றத்தில் திணறுகிறது. பிரதமர் மோடி அனைவரையும் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்.இதுதான் இங்கு அரசு1990களுக்கு பின்னான தாராளமய காலத்தில் உருவான தீவிர முதலாளித்துவ அரசுகளின் அதிதீவிர வடிவத்தை பாஜக அரசு காட்டிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளால் கடும் விமர்சனத்துக்குள்ளானதும் மோடி வேறு வழியே இல்லாமல் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். மக்களின் மரணங்களில் அசையாத மோடியின் அரசு உலகளாவிய வகையில் கெட்ட பெயர் சம்பாதித்த பிறகு பாசாங்குக்கேனும் மக்கள் நலன் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாநில அரசுகள் நேரடியாக தனியார் நிறுவனங்களில் தடுப்பூசிகளை கொள்முதல்செய்து கொள்ளலாம் என்றது மோடி அரசு.மரணங்களிலும் வியாபாரம் எப்படி நடத்துவது என்பதை ஆலோசிக்கவே கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு பெயருமே கூட இருக்கிறது.

பேரிடர் முதலாளித்துவம்!
மக்கள் நலன் என அவ்வப்போது காட்டி வந்த பாசாங்கையும் கழற்றி எறிந்து விட்ட நவ தாராளவாத அரசிடம் கோரவும் நம்பவும் மக்களுக்கு என்ன இருக்க முடியும்?எனவே மக்களின் மனங்கள் மாற்றுவழிகளை நாடுகிறது. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவியலை ஏற்பதிலும் தயக்கம் காட்டுகிறது.

லெனின் எழுதியது...
1913 ஆம் ஆண்டில் மார்க்ஸின் நினைவு தினக் கட்டுரையாக லெனின் எழுதிய ‘மார்க்சியத்தின் மூன்று மூலங்களும்மூன்று உட்கூறுகளும்’ என்கிற கட்டுரையில் ஒரு பத்தி எழுதியிருப்பார்:‘மார்க்ஸின் போதனைகள் உலகம் முழுவதும் முதலாளித்துவ அறிவியல் (அரசு முன் வைக்கும் அறிவியலும் தாராளவாதிகள் பேசும் அறிவியலும்) மீது கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையும் உருவாக்கியிருக்கிறது. அரசும் தாராளவாதிகளும் முன் வைக்கும் அறிவியல் எல்லா வகைகளிலும் கூலி-அடிமை முறையையே நியாயப்படுத்துகிறது. மார்க்சியமோ அத்தகைய அடிமைமுறையின் மீது உக்கிரமான போரை அறிவித்திருக்கிறது. கூலி-அடிமைச் சமூகத்தில் இருக்கும் அறிவியலை நடுநிலையென நினைப்பதை காட்டிலும் முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.’

மருத்துவ முறைகளில் மக்களுக்கு இருக்கும் அதே அவநம்பிக்கை மனநிலைதான் அரசு கொண்டு வந்திருக்கும் தடுப்பு மருத்துவத்திலும் நிலவுகிறது.தடுப்பு மருத்துவத்தின் மீது அதாவது, தடுப்பூசிகள் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள், அது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தையும் தனியார் லாபத்தை அடிப்படையாக கொண்டிருப்பதையும் நோக்கியே எழுப்பப்படுகின்றன. அவற்றின் அடிநாதமாக மக்களின் ஆரோக்கியத்தை தனியாரிடம் அடகு வைக்கும் அரசின் கயமை நோக்கிய கோபம் இருக்கிறது. ஆனால் இவற்றை எதிர்கொள்ளவும் முதலாளித்துவத்துக்கு வழிகள் இருக்கின்றன.

ஆதிக்க வர்க்கத்துக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே பல இடைநிலை வர்க்கங்களை முதலாளித்துவம் இத்தகைய காரணங்களுக்காகவே உருவாக்கியிருக்கிறது.அரசின் உபகாரத்தில் உருவாகி ஆதிக்க வர்க்கத்துக்கும்உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே இருக்கும் இடைநிலை வர்க்கங்களில் ஒன்றாக மாறிய சில மருத்துவர்களும் அறிவியலாளர்களும் அரசின் அறிவியல் மற்றும்மருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறார்கள்.அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையை அறிவியல் மீதான அவநம்பிக்கையாக இவர்கள் சித்தரிப்பார்கள். மக்களின் கேள்விகளை அறிவுள்ளோருக்கும்அறிவில்லாதோருக்கும் இடையே நிகழும் உரையாடலாக மாற்றிக் காட்டுவார்கள். அறிவியலுக்குள் இருக்கும் வர்க்க நலனை மறுப்பார்கள்.

இவர்களின் அறிவு மேட்டிமைத்தனம் அடிப்படை மருத்துவத்தையே வணிக நலனாக பார்க்கும் கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராக என்றுமே திரும்பியதில்லை என்பதைமக்கள் கவனிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாமானியரிடமிருந்து, பணத்தை கறக்க முயற்சிக்கும் மருத்துவமனையின் முயற்சிகளை கேள்வி கேட்காமல் இவர்கள் அனுமதிப்பதையும் மக்கள் பார்க்கிறார்கள்.பிறகொரு பேரிடர் நாளில் வந்து மக்களின் நலனென பேசுவதை நம்பச் சொல்வதில் இவர்களுக்கு என்ன நியாயம் இருந்திட முடியும்?அரசுக்கு ஆதரவான, வர்க்கப் பார்வையற்ற அறிவியல்மற்றும் மருத்துவம் போதிக்கும் இடைநிலை வர்க்கங்களுக்கு அடித்தளமாக ஒரு முக்கியமான கருத்துநிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அறிவியல் வாதம்!
அறிவியல் வாதம் என்பதை ‘Scientism’ என மேற்குலகில் குறிப்பிடுகிறார்கள். அறிவியலும் அறிவியல் வாதமும் ஒன்றல்ல. அறிவியல் வாதம் என்பது எந்தவித ஆய்வும் அரசியலறிவும் இன்றி அறிவியலாளர்களின் கருத்துகளை அப்படியே கண்மூடித்தனமாக ஏற்பது. அறிவியல் அப்பழுக்கற்றது, தூய்மையானது, நல்லதை மட்டுமே அறிவியலால் செய்ய முடியும் போன்ற அதீத கற்பனைகளைக் கொண்டு அணுகப்படுவது.அறிவியல் வாதம் என்ற வார்த்தையை முதலாளித்துவம் உருவாக்கியதே மார்க்சியத்தை எதிர்க்கத்தான்.மார்க்சியவாதிகள் அறிவியல் என்றதுமே கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள் என்கிற கருத்தை உருவாக்கவே அறிவியல் வாதம் என்கிற  வார்த்தையை பயன்படுத்தியது முதலாளித்துவம். சோகம் என்னவெனில் முதலாளித்துவத்தின் இந்த திரிபுவாதத்தை எதிர்க்கத் தொடங்கிய சில மார்க்சியவாதிகள் அவர்களையும் அறியாமல் அறிவியல் வாதத்துக்கான பிரச்சாரகர்களாக மாறிப் போனார்கள் என்பதே.  ஆளும் வர்க்க மருத்துவ அறிவியல் கொண்டிருக்கும் லாபவெறியின் காரணமாகவே எளிய வழிகளில் கிடைக்கும்மாற்று மருத்துவங்களை மக்கள் நாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் மேற்படி சிலர் பேசும் அறிவியல் வாதத்தால் வர்க்கப் பார்வை காணாமல் போகும் சோகம் ஏற்பட்டு விடுகிறது.

மருத்துவ சேவைகளின் வழியே!
ஒரு காலம் இருந்தது. 1960களுக்கு பிந்தைய லட்சியவாத காலம்!மார்க்சியவாதிகள் கிராமங்கள்தோறும் சென்று மக்களை மார்க்சியத்துக்குள் கொண்டு வர மருத்துவத்தை பயன்படுத்தினார்கள். மிக அடிப்படையான நோய்களுக்கும் உபாதைகளுக்கும் தேவையான எளிய மருந்துகளைக் கொடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றார்கள்.அந்த நம்பிக்கையிலிருந்து மார்க்சியக் கல்விக்கு மக்களைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர்களிடம் அறிவியல் வாதமெல்லாம் இருக்கவில்லை. மாற்றுமருத்துவம், ஆங்கில மருத்துவம் என்கிற பற்றுகளும் இருக்கவில்லை. குறைந்த கட்டணத்தில் எளிய மருத்துவம் அளித்தார்கள். மக்களின் ஆதரவும் மார்க்சியவாதிகளுக்கு கிடைத்தது. அரசு தோற்ற இடத்தில் மார்க்சியம் வெல்லும் வாய்ப்பை உருவாக்க முடிந்தது.

நவ தாராளவாத உலகில் மார்க்சியவாதிகளுக்கு ஒருமுக்கியமான கடமை உண்டு. நவதாராளமயம் நமக்குள்உருவாக்கும் சிந்தனைமுறையை கண்டறியும் நேர்மையை, அது கடினமாக இருந்தாலும் உருவாக்கிட வேண்டும். அந்த நேர்மையை கொண்டு அச்சிந்தனையை எத்தகையஇழப்பு நேர்ந்தாலும் கவலைப்படாது களையெடுத்திட வேண்டும்.  அப்போதுதான் மக்களை புரிந்து கொள்ள முடியும்.இல்லையெனில் நவ தாராளவாத அரசும் சமூகமும்தொடுக்கும் எண்ணற்ற மாயவலைகளுக்குள் சிக்கி அவதியுற்றுக் கொண்டிருப்போம்.

மாற்று மருத்துவ முறைகளை எதிரெதிர் நிலைகளில்  நிறுத்தாமல் ஒருங்கிணைந்த மருத்துவத் திட்டத்துக்குள் கொண்டு வந்து முறையான ஆய்வுகளுக்குட்படுத்தி மக்களுக்கு அளித்து பலன் பெற முடியும் என்பதற்கான உதாரணமும் கூட  மார்க்சியத்துக்குள் இருக்கிறது. கியூபா அதை செய்தும்காட்டியிருக்கிறது.  நவீன அறிவியல் விடும் இடைவெளிகளை அரசின் பாதுகாப்பு வளையங்களை கொண்டு நிரப்ப முடியும் என்பதற்கும் உதாரணங்கள் இருக்கின்றன.
சோசலிசத்தை மருத்துவத்தின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்தி வெற்றியடைந்த  மருத்துவன் இப்படிச் சொன்னான்:‘‘மக்களிடம் செல்கையில் ‘உங்களிடம் கருணை காட்ட வந்திருக்கிறோம். அறிவியல் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறோம். உங்களின் தவறுகளையும் நாகரிகமற்ற தன்மையையும் சிறுவிஷயங்கள் கூட அறியாமல் இருக்கும் தன்மையையும் சுட்டிக் காட்டவே வந்துள்ளோம்’ என அவர்களிடம் சொல்லக் கூடாது. ஆராயும் மனதுடனும் பணிவான பண்புடனும் சென்று மக்கள் என்கிற பேரறிவிடமிருந்து நாம் கற்க வேண்டும்’’.‘‘பிறகு நாம் கொண்ட கருத்துகள் எத்தனை தவறாகஇருந்திருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். அவ்வப்போது நாம் நம் கருத்துகளை மாற்றவேண்டும். பொதுக் கருத்துகள் மட்டுமென இன்றி, சமூக, தத்துவக் கருத்துகளையும் மாற்ற வேண்டும். நம் மருத்துவ கருதுகோள்களையும் கூட மாற்ற வேண்டும்.’’

 சொன்னவன் சே குவேரா!

கட்டுரையாளர் : ராஜ சங்கீதன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம். மத்திய சென்னை

;