articles

img

உலகம் உற்று நோக்கும் காலநிலை உச்சி மாநாடு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலநிலை மாற்றம் என்பது நம் கண் ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரபாயமாக மாறியுள்ளது. புவி வெப்ப உயர்வு, கடல் சீற்றங்கள், புயல்கள், காட்டுத்தீ, பெருமழை, வெள்ளப்பெருக்கு, மேகவெடிப்பு என்று மனிதன் ஏற்படுத்தும் சீரழிவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இத்தருணத்தில் சூழல் பாது காப்பை மையமாகக் கொண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை யு கே ஸ்காட்லாந்தில் க்ளாஸ்கோ நகரில் மிக முக்கிய உச்சிமாநாடு நடைபெறுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், நிர்வாகிகள், ராஜ தந்திரிகள் மற்றும் சூழல் போராளிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட 20,000 பேர்  இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரியை எரிப்ப தால், எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றை எரிப்ப தால் பூமியின் வெப்பம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் க்ளாஸ்கோவில் பங் கேற்பாளர்கள் ஒருவரையொருவர் நேருக்குநேர் சந்திக்கவுள்ளனர். இது ஆண்டுதோறும் நடைபெறும் மாநாடு என்றாலும் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாநாட்டின் குறிக்கோள்

இப்போது நிகழ்வதைவிட வரும் நாட்களில் சூழல்  சீரழிவால் புவியில் பேரழிவு நிகழாமல் இருக்க இப்போதே இந்த மாநாட்டில் தலைவர்கள் உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். புவி வெப்ப உயர்வை தொழிற் புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் 1.5 டிகிரிகளுக்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே மாநாட்டின் முக்கி யக்குறிக்கோள். காலநிலை மாற்றத்தினால் நிகழவிருக்கும் உயிர் பறிக்கும் வெப்பத்தாக்குதல், நீர்த் தட்டுப்பாடு, விளைச்சல் குறைவு, உயிரினங்களின் வாழிட இழப்பு போன்ற பேரழிவை ஏற்படுத்தும் அபாயத்தைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகியவை இது வரை தங்கள் பங்கிற்கு கார்பன் குறைப்பு பற்றிய எந்த உறுதிமொழியையும் தரவில்லை. இந்நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தும் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் ஒரு சில நாடுகள் மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு சிறிதளவே காரணமாக இருக்கும் ஏழை நாடுகளுக்கு உதவ முன்வந்துள்ளன. காலநிலை மாற்றம் குறித்து, இந்த மாநாடு பற்றி  உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

காப்26 (COP26) என்றால் என்ன?

காப்26 கான்பரன்ஸ் ஆப் பார்ட்டிஸ் (Conference of partids) என்பதைக் குறிக்கிறது. இதில் பார்ட்டீஸ் (partids) என்பது 197 உலக நாடுகளைக் குறிக்கிறது. இவை ஐக்கியநாடுகளின் 1992இல் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை (U N Framework Convention on Climate change) ஏற்றுக்கொண்ட நாடுகள். அமெரிக்கா உட்பட பல நாடுகள் இதன் மூலம் புவி வெப்பமயமாவதைக் குறைக்க பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒத்துக்கொண்டன.

இப்போது நடைபெறுவது 26ஆவது மாநாடு. முதல் காப் மாநாடு 1995இல் பெர்லினில் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கியோட்டோ மாநாட்டில் உடன்படிக்கைகள் ஏற்பட இந்த மாநாடு வழிவகுத்தது.  பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உடன்படிக்கையை அமெ ரிக்கா ஏற்க மறுத்து இது இந்தியா போன்ற பெருமள வில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடு களே காரணம் காட்டியது. பல ஆண்டுகள் தொடர்ந்த கருத்துவேறுபாடுக ளுக்குப் பிறகு 2015 பாரிஸ் மாநாட்டில் 200 நாடுகள் ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு கார்பன் வெளி யேற்றத்தைக் குறைக்கும் உடன்படிக்கையில் கையெ ழுத்திட்டன. பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்த முதல்முறையாக ஒத்துக்கொண்டன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் இந்த உடன்படிக்கை யை ஏற்றுக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டார்.

ஏட்டுக்காய் கறிக்கு உதவாது

பாரிஸ் மாநாட்டில் ஏற்றுக்கொண்டபடி பல நாடு கள் எதையும் செய்யவில்லை. இந்தியா உட்பட பல நாடுகள் வெட்டிப்பேச்சுகள் மூலம் வாய்ச்சொல்லில் வீரம் காட்டின. இந்தப் போக்கை கண்டித்து கிரெட்டா தன்பர்க் உட்பட பல சூழல் போராளிகளும் கடுமையாக விமரிசித்தனர். ஸ்காட்லாந்து நாட்டில் மிகப்பெரிய கண்காட்சி அரங்கமான ஸ்காட்டிஷ் நிகழ்வுக ளுக்கான வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 20,000 பேர் கலந்து கொள்கின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் வெற்றுப் பேச்சுகளை விட்டுவிட்டு பூமியைக் காக்க உருப்படி யாக முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தி பல போராட்ட ஊர்வலங்களை நடத்த சூழல் போராளிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஊர்வலங்க ளில் 100,000 போராளிகள் கலந்துகொள்வர் என்று கரு தப்படுகிறது. நவம்பர் 6 சூழல் நீதிக்கான நாளாக (Climate Justice day) கடைப்பிடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. மாநாடு நடைபெறும் ஒவ்வொருநாளும் சுமார் 10,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர்.

பங்கேற்பாளர்கள் யார்?

அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், எலிசபெத் ராணி உட்பட நூறு நாடு களின் தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தர வுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலை வர்கள் உட்பட பல நாடுகளின் தலைவர்களும் இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. 200 நாடுகளின் ராஜதந்திரிகள் மாநாட்டின் போக்கை வழிநடத்த உள்ளனர். வணிகத்துறையை சேர்ந்த தலைவர்கள், கல்வியாளர்கள், கிரெட்டா தன்பர்க் உட்பட சூழல் போராளிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். மாநாட்டின் முடிவில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக ளுக்குள் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐக்கியநாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இப்போது செய்வதை விட பல மடங்கு செயல்களை புவி வெப்பம் உயராமல் இருக்க உலக நாடுகள் நடை முறைப்படுத்தவேண்டும் என்று போராளிகள் வலி யுறுத்துகின்றனர். சூழல் பாதுகாப்பிற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவுவது தொடர்பான உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று நம்பப்படு கிறது.

இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர புயற்காற்றுகள், காட்டுத்தீ, பெருமழை, பேரிடர் அழிவு கள் வரும் நாட்களில் பல மடங்கு நிகழும் என்று விஞ்ஞா னிகள் எச்சரிக்கின்றனர். மனிதகுலம் ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததை விட பூமியை 1.1 டிகிரிகள் சூடுபடுத்தியுள்ளது. வரும் பத்தாண்டுகளுக்குள் உலகத் தலைவர்கள் துணிச்ச லாக முடிவுகள் எதையும் எடுக்காவிட்டால் இன்று உள்ள தைவிட பேரழிவுகள் ஏற்பட்டு பூமி அழியும் அபாயம் உள்ளது என்று அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மாநாட்டில் அரசுகளை ஆளும் தலைவர்கள் தங்கள் தனிமனித சுயலாபத்தை மனதில் வைத்து பொருளற்ற வீரவசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு உருப்படியாக எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே பூமியின் எதிர்கா லம் உள்ளது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை யுடன் காத்திருப்போம்.



 

;