articles

img

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு.... உழைக்கும் மக்களுக்கான உயிரோட்டமான உறுதிப்பாடு....

‘‘உங்களோடு உங்களது தோழர்கள் இருக்கும்போது எதுவும் கசப்பானதல்ல. புரட்சிகர இளைஞர்களான நாங்கள் எந்தவொரு விஷயத்தையும் கடினமானதென்றோ, கசப்பானதென்றோ நினைப்பதில்லை; எங்கள் முன்னால் உள்ள கடமையைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம். நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எங்கே தூங்குகிறோம் என்பது முக்கியமல்ல; புரட்சி, அதுவே முக்கியமானது’’. - சீனப் புரட்சிக்கான செஞ்சேனையின் நெடும்பயணத்தில் பங்கேற்ற இளம் தோழர் ஒருவரின் உறுதியான உயிரோட்டமான வரிகளே இவை. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அர்ப்பணிப்பு நிறைந்த இத்தகைய பலரின் செயலாற்றலை அடித்தளமாகக் கொண்டதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்.

வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட கம்யூனிஸ்ட்டுகள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டை உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறது. 1921-ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் உலகப் போர் முடியும் தருவாயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், தோழர் மா சே துங் தலைமையில் 1949 ஆம் ஆண்டு புரட்சியை அது சாத்தியப்படுத்தியது. இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய புரட்சிக்கான புறச் சுழலும் அதனை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு செயலாற்றத் தகவமைக்கப்பட்டிருந்த கட்சியின் அகச்சூழலும் புரட்சிக்கான பாதையைத் துலக்கமாக்கியது.

சீனாவின் அசாத்தியமான வளர்ச்சியும் அதன் உலகளாவிய செல்வாக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கமில்லாமல் எந்தக்காலத்திலும் சாத்தியமாகியிருக்காது. ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளையும் உள்நாட்டுச் சுரண்டலையும் எதிர்த்த போராட்டத்தைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்ததன் விளைவே சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கான அடித்தளம் என்று கட்சியின் நூற்றாண்டு விழா உரையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியான ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.  

ஏழ்மை முற்றாக ஒழிக்கப்பட்டு, ‘வறுமையற்ற சீனா’ எனக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்குக் கீழாக வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழாக உள்ளவர்கள் என்று உலக வங்கி வரையறுத்திருந்தது. சீனாவில் உள்ள அனைவரும் 2020 க்குள் ஒரு நாளைக்கு 2.3 டாலர்க்கு மேல் வருமானம் ஈட்டுவதை உறுதிப்படுத்துவதென 2015-ல் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. அதை நிறைவேற்றிக்  காட்டியுள்ளது. தனிநபர் வருமானமும் உள்நாட்டு உற்பத்தியும் கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது. தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து தனது வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது. 2030 க்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட  நாடாகச் சீனா மாறும் என்று வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.

நாங்கள் முடிவெடுக்கத் தயங்குவதில்லை...
புரட்சிப் பாதையில் சீனா பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. முன்னோக்கிய ஒரு பெரிய பாய்ச்சல், கலாச்சாரப் புரட்சி போன்றவை விமர்சனங்களை உள்ளடக்கிய பல படிப்பினைகளைச் சீனக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளன. அதுவே அவர்களை அடுத்தடுத்த நிலைத்த செயல்பாட்டிற்குப் பக்குவப்படுத்தியுள்ளது எனலாம்.‘‘ஆற்றைக் கடக்கும்போது காலை தரையில் தடவிக்கொண்டே நடப்பது போலவே எங்கள் செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறோம். காலிற்குத் தரை தட்டுப்படும் போது தான் காலை ஊன்றுகிறோம், இல்லையேல் பாதுகாப்பான வழித்தடத்தை கண்டறிந்த பிறகே அடுத்த நகர்வை முன்னெடுக்கிறோம். நாங்கள் முடிவெடுக்கத் தயங்குவதில்லை, அதேநேரம் அது தரும் படிப்பினைகளிலிருந்து பின்வாங்கவும் அஞ்சுவதில்லை. தவறு எனில் திருத்திக்கொள்வதற்கும் சரியான வழிமுறையெனில் அதை மேலும் விரிவுபடுத்தி முன்னோக்கிப் பயணிப்பதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்’’ என்கிறது சீனக் கம்யூனிஸ்ட் அரசு. ‘‘தவறு எனில் திருத்திக்கொள்வோம்; திருத்த முடியாத அளவிற்கு அவை இருக்குமானால் அதைப் படிப்பினையாகக் கொள்வோம்’’ என்கிற லெனினின் வாக்கியம் இங்கு  குறிப்பிடத் தகுந்ததாகும்.

சர்வாதிகாரமும் ஜனநாயகமும்
கம்யூனிஸ்ட்டுகள் மீதும் கம்யூனிஸ்ட் அரசுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வேலைகளை முதலாளித்துவ ஊடகங்கள் தொடர்ந்து செய்துவருகின்றன. லெனின் ஒரு அராஜகவாதி என்றும்; ஸ்டாலின், மா சே துங் உள்ளிட்டவர்களைச் சர்வாதிகாரிகள் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் பொய் உரைப்பது தொடர்கிறது. கொரோனா வைரஸைக்கூட சீன வைரஸ் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு பேசினார். இன்றும் சில தமிழ் அச்சு ஊடகங்கள் அச்சுப் பிசகாமல் ‘சீன வைரஸ்’ என்று எழுதுவதைப் பார்க்க முடிகிறது.  ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்யும் அட்டூழியங்களையோ, அமெரிக்க உளவுப் பிரிவுகளை கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதர நாடுகளிலும் அது நிகழ்த்தும் ஜனநாயகப் படுகொலைகளையோ, பொருளாதார சீர்திருத்தம் என்பதாக வளரும் நாடுகளை முதலாளித்துவ நாடுகள் சுரண்டிக் கொழுப்பதையோ நிச்சயம் இந்த முதலாளித்துவ ஊடகங்கள் பேசா. அவற்றின் இலக்கு எப்போதும் அதன் எதிரி வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும், அதன் அரசுகளும்தான்.

கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் இடங்களில் ஜனநாயகம் இல்லை என்று கூறும் அதே பல்லவி சீனா குறித்தும் எழுப்பப்படுகிறது. ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பது எந்தவகையிலும் ஒரு குழுவின் சர்வாதிகாரமாகவோ, சில நபர்களின் சர்வாதிகாரமாகவோ, தனிநபர் சர்வாதிகாரமாகவோ மாறுவதை அங்கீகரிப்பதில்லை என்கிற படிப்பினைகளை சோவியத் ரஷ்ய வீழ்ச்சியின் அனுபவத்திலிருந்து உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றுள்ளது. அதேநேரம் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பும் பொய்யுரைகளையும் எச்சரிகையோடே அணுகவேண்டியுள்ளது. சீனாவில் செஞ்சேனை நடத்திய நெடும்பயணத்தின்போது பல பகுதிகள் ஆளும் வர்க்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டு உழைக்கும் மக்களிடம் வழங்கப்பட்டது. மக்கள் செஞ்சேனைக்கு ஆதரவாக நின்றனர்.

மக்களை மிரட்டியே செஞ்சேனைக்கு ஆதரவாக மக்களை இணங்க வைக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு அப்போதே ஆளும் வர்க்கத்தால் முன்வைக்கப்பட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய இது குறித்த கேள்வியை ‘‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’’ எனும் நூலின் ஆசிரியர் எட்கர் ஸ்னோ, செஞ்சேனையின் தளபதி பெங்-கின் என்பவரிடம் எழுப்புகிறார். அதற்கு பெங்-கின் சொல்கிறார்: ‘‘தந்திரங்கள் முக்கியமானவைதான், ஆனால் பெரும்பான்மையான மக்கள் எங்களை ஆதரிக்கவில்லையெனில் நாங்கள் நீடித்திருக்க முடியாது. தங்களை அடக்கியாண்டு கொடுமைப் படுத்தும் ஆட்சியாளர்களைத் தாக்குகின்ற மக்களின் முஷ்டிகள்தான் நாங்களே தவிர வேறெதுவுமில்லை’’. முதலாளித்துவ உள்நோக்கம் கொண்டவர்கள் சீனா குறித்து முன்வைக்கும் விமர்சனத்திற்கு இன்றும் பொருந்தக்கூடிய பதிலாகவே இது அமைந்துள்ளது.

புதிய உலகச் சூழல்
ரஷ்யப் புரட்சிக்கு பிறகான வளர்ச்சிக் கட்டத்தில் சோஷலிச முகாம், முதலாளித்துவ முகாம் என இருந்த இரு துருவ உலக நிலைமைக்கும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றை உலக கோட்பாட்டை முன்வைத்த உலக நிலைமைகளுக்கும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்புகளைக் கொண்ட இன்றைய பன்முக உலக நிலைமைகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாறியுள்ள உலக நிலைமைகளைக் கருத்தில் கொண்டே கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான சீன அரசை அணுகவேண்டியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் சீனாவைக் குறிவைத்துத் தாக்க முனையும்போதும் தனது நிலைத்த பொருளாதார வளர்ச்சியை கொண்டு அதைச் சீனா எதிர்கொள்கிறது. சீனாவின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா திணறுகிறது. அதனால்தான்  அமெரிக்கா, சீனா மீது கடுமையான வர்த்தகப் போரை 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.1980களில் தோழர் டெங் சியோ பிங் காலத்தில் சில பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி உறவுகளுக்கிடையே ஏற்படும் மாற்றங்களே சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் சோஷலிச உற்பத்தி உறவுகள் வளரும் சீனாவில் அதற்கு ஏற்ற வகையிலான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அமையாமல் இருந்தது. உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையாவிட்டால் மக்களின் தேவைகளைப் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்படும். இந்த முரண்பாட்டைத் தீர்க்காமல் போனால் அது சோஷலிச அமைப்பு முறைக்கே அச்சுறுத்தலாகிவிடும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. எனவே உற்பத்தி சக்திகளை சோஷலிச உற்பத்தி உறவுகளுக்கு ஏற்றவகையில் விரைந்து வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவே சீனாவின் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஏகாதிபத்தியம் தனது முதலாளித்துவச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும் தொடர்ந்து தக்கவைப்பதற்கும் வளர்முக நாடுகள் மீது திணிக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு மாற்றான வழிமுறைகளைக் கொண்டதே சீனப் பொருளாதாரச் சீர்திருத்தங்களாகும்.

சீன சோஷலிசம்
‘‘சீனா சோஷலிசத்தின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. நீண்ட காலத்துக்கு அது அவ்வாறே நீடிக்கும். இது ஒரு வரலாற்றுக் கட்டம். சோஷலிசப் பொருளாதார ரீதியிலும் பண்பாட்டளவிலும் பின்தங்கிய நிலையில் உள்ள சீனாவின் நவீனமயத்தில் இதனைத் தவிர்த்துவிட்டு மேலே தாண்டிச் செல்ல முடியாது. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீடிக்கும் சோஷலிசக் கட்டுமானத்தில் நாம் நமது குறிப்பிட்ட நிலைகளிலிருந்து தொடர்ந்து மேற்சென்று சீனாவுக்குரிய தனித்தன்மை கொண்ட சோஷலிசப் பாதையில் பயணிக்க வேண்டும்’’ என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயல்திட்டம் தனது கடமையாகக் கூறியுள்ளது.

சந்தைப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவப் பொருளாதார முறை என்று மட்டும் விட்டுவிடக் கூடியதல்ல. அதை சோஷலிசப் பொருளாதார முறையிலான சந்தைப் பொருளாதாரமாக வளர்த்தெடுப்பது எனும் தத்துவார்த்தக் கோட்பாட்டையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. அதன் அடிப்படையில் சீனா மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கமுடிகிறது. அதேநேரம் சீன சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, லஞ்சம் ஊழல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் எழுவதும் நிகழ்கின்றன.

‘‘இந்த முரண்பாடுகள் எவ்வாறு வெற்றிகரமான முறையில் கையாளப்படுகின்றன என்பதும் அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்படுகின்றன என்பதுமே சீனாவின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த தீர்மானம் குறிப்பிடுகிறது. சோஷலிசத்தை கட்டியமைப்பதற்கான குறிப்பிட்ட தயார் நிலையிலான வடிவம் எதுவும் கிடையாது. அது அனுபவத்தின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்படுகிறது. திட்டமிட்ட பொருளாதார முறையில் உள்ள சிக்கல்களையும் வளர்ந்து வரும் உலக நிலைமைகளையும் கருத்தில்கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் முயற்சிகளும் அதில் அது பெறும் வெற்றிகளுமே உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கான அனுபவப் பாடமாகும்.

கட்டுரையாளர் : ச.லெனின், தென் சென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;