articles

img

தேசியத் தேர்வு முகமையை வெளியேற்றுக! - கோ.அரவிந்தசாமி

நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஒன்றிய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்து ள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் என்.டி.ஏ-வோடு  நீட் பயிற்சி மையங்களும் இணைந்து ஏராளமான முறைகேடுகளை  நடத்தியுள்ளனர்.  இப்போது மட்டுமல்ல; நீட் தேர்வு துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முறைகேடு என்பது அதன் பிரிக்க முடியாத அங்கமாக மாறி இருக்கிறது என்பதே உண்மை. 

அதிகரிக்கும் முறைகேடு

கடந்த 2017-ல் தமிழகத்தில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த எண்ணிக்கையானது ஆண்டு தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு, நீட் வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது, ஆள்மாறாட்டம் செய்தது என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் வட மாநிலங்களில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பதும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மருத்துவ மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  2019ல் 5பேர், 2020-ல் 5 பேர், 2021-ல் 15 பேர், 2022ல் 20 பேர், 2023ல் 20க்கும் மேற்பட்டோர் என எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு முறை கேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரியது.

சந்தைப் பொருளான கல்வியும், பயிற்சி மையங்களின் கொள்ளையும்

தேசிய கல்விக்கொள்கை 2020ன் மிக முக்கியமான சாராம்சம் கல்வியை வணிகமயப்படுத்துவது. இதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சிக்கு வந்ததும் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங் களை செய்து தேசிய தேர்வு முகமை மூலம் பொது நுழைவுத் தேர்வை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பயிற்சி மையங்களுடன்  ஒப்பந்தம் போட்டுக் கொண்டு பல்வேறு ஊழல்களை இன்று வரை செய்து வருகிறது. பயிற்சி மையங்களை வைத்து சம்பாதிப்பதற்கும், பணம் இருப்ப வர்களுக்கான படிப்பாக மருத்துவக் கல்வியை மாற்றுவதற் காகவும் கொண்டு வரப்பட்டதே  நீட் தேர்வு என்னும்சூதாட்டம். நீட் பயிற்சி மையத்தில் மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படிக்கத் தவறி னாலும் நீட் தேர்வுக்கு தயாராகும் நிலையில் அதற்கும் சேர்த்தே படித்து கொள்ளலாம்; இரண்டுக்குமான கட்டணத்தை பயிற்சி மையம் வசூல் செய்து கொள்ளும், அதே சமயத்தில் தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு களான 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சேர்ந்துவிட்டு பள்ளிப்பாடங்களுக்கு பதிலாக நீட் தேர்வு பயிற்சி மையத்திலிருந்து நீட் தேர்வுக்கு தயாராகும் போக்கு அதிக மாகிக்கொண்டே இருக்கிறது. தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் நீட் தேர்வு மாணவர்களை பள்ளிகளிலேயே முறை கேடுகளில் ஈடுபட வழி செய்வதோடு தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களின் லாப வேட்டைக்கு தடைகளற்ற வழிகளை திறந்து வைத்துள்ளது. 

லட்சக்கணக்கில் பேரம்

குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த துஷார் பட், நீட் தேர்வில் தேர்வு மைய துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி பெற்றோர்களிடம் அவர் பேரம் பேசியதாகத் தெரி கிறது. மாணவர்களிடம் தெரியாத கேள்விகளுக்கு விடை எழு தாமல் விட்டுவிட்டுச் செல்லும்படியும், அதற்கு பதிலாக தானே பதிலை எழுதி தருவதாகவும் கூறி 6 மாணவர்களின் பெற்றோர்களிடம் தலா ரூ. 10 லட்சம் பேரம் பேசி பெற்றுள்ள தாகத் தெரியவந்துள்ளது. துஷாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரும், அவருக்கு உறுதுணையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  கோத்ராவில் உள்ள ராய்  ஓவர்சீஸ் நீட் தேர்வு பயிற்சி மையத்தில்  பயிற்சி மையத்தின் நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டவர்களுக்கிடையே  சுமார் ரூ.2.68 கோடி வரையில் பணப்பரிமாற்றம் நடந்ததாக  காவல்துறை  விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பல மாநிலங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு களுக்கு இது ஒரு சான்று.  நீட் தேர்வு மட்டுமின்றி NET(நெட்), CUTE(கியூட்) போன்ற நுழைவுத் தேர்வுகளையும் தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது கடந்த 17 ஜுன் 2024 அன்று நடைபெற்ற நெட் தேர்வை முறைகேடு நடந்திருப்பதாக கூறி திடீரென ரத்து செய்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 9,08,570 பேர் நெட் தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது, தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித தேர்வுகளை நடத்தவும் தேசிய முகமை தகுதியற்றது என்பதை மீண்டும் மீண்டும் அதன் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன.

மாணவர்களை காவு வாங்கும் கோட்டா நகரம்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் தேசிய நுழைவுத் தேர்வுகளான ஜேஇஇ (JEE)மற்றும் நீட் போன்ற பயிற்சி மையங்களுக்கு பிரபலமான நகரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் கோட்டாவுக்கு வருகிறார்கள்.  இந்நகரின் பயிற்சி மையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 61.3% அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கை குறிப்பிட்டு ள்ளது. கோட்டாவில் உள்ள பத்து மாணவர்களில் நான்கு பேர் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு சுட்டிக்காட்டு கிறது. ராஜஸ்தான் மாநில காவல்துறையின் தரவுகளின்படி,  2015 இல்18, 2016 இல்17, 2017இல்7, 2018இல்-20,  2019இல்-18, கொரோனா நோய்தொற்றுக்கு பிறகு 2022இல்-15,  கடந்த ஆண்டு 2023 மட்டும்-26 இந்த  2024ஆம் ஆண்டில் இதுவரை 10 மாணவர்கள் தற்கொலை  செய்துகொண்டுள்ளனர். அதிகபட்சமாக 2023 ஆம் ஆண்டில் கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுகளின் அழுத்தத் தால் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

என்னே வேடிக்கை..!

இவ்வளவு குளறுபடிகள், சர்ச்சைகள் எழுந்த நிலையில்  நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதீப் குமார் ஜோஷி என்பவர் நியமிக்கப்பட்டார். இதில் வேடிக்கை என்னவெனில், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான தேசிய தேர்வு முகமையின் தலைவரே பிரதீப் குமார் ஜோஷிதான். குற்றவாளியே விசாரணைக்குழுவின் தலைவராகும் அவல மெல்லாம் மோடியின் பாசிச  ஆட்சியில் மட்டுமேஅரங்கேறும். நீட் தேர்வு பணம் படைத்தவர்களுக்கான வாய்ப்பு களையே அதிகமாக்கி உள்ளது, மேலும் அதில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளிலும் லட்சக்கணக்கில் பணம் புழங்கி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம். எனவேதான்  இந்திய மாணவர் சங்கம் ஒன்றிய பாஜக அரசால் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று அதற்கு எதிராக களத்தில் போராடிக்கொண்டு இருக்கிறது.