articles

img

100 கோடி தடுப்பூசி.... சீனா உலக சாதனை...

19.01.2021 அன்று சீனா 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. நவீன அறிவியல் வரலாற்றில் இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை எனில் மிகை அல்ல. இந்த சாதனைக்கு இரண்டு காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று சீனாவின் சோசலிச சமூகமுறை. இதில், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ். இரண்டாவது காரணம், சீனாவின் வியத்தகு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம். தனது அறிவியல் கட்டமைப்பு முழுவதையும் பயன்படுத்தி தடுப்பூசிகள் தயாரிப்பில் வேகமான இலக்குகளை சீனா அடைந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 34 கோடி தடுப்பூசிகளையும் இந்தியா 27.50 கோடி தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளது. அன்று சோவியத் யூனியன் யூரிககாரின் எனும் வீரரை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது. இன்று சீனா 100 கோடி தடுப்பூசிகளை போட்டு சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 40% சீனாவில் மட்டும் போடப்பட்டுள்ளன. சரியானஅணுகுமுறை இருந்தால் முதலாளித்துவத்தை விட, சோசலிசம் அறிவியலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இவை உதாரணங்கள். உலக முதலாளித்துவம் குறிப்பாக அமெரிக்கா மிகுந்த எரிச்சலுக்கும் கோபத்துக்கும் ஆளாகியிருக்க கூடும். 

தடுப்பூசிகள் உற்பத்தி
சீனா 7 தடுப்பூசிகளை பயன்படுத்துகிறது. இந்த 7 தடுப்பூசிகளும் சீனாவிலேயே ஆராய்ச்சி மூலம்உருவாக்கப்பட்டவை. இவற்றில் 6 தடுப்பூசிகள் ஊசி மூலமும், ஒன்று 1 சுவாசம் மூலம் மூக்குவழியாகவும் போடப்படுபவை. மேலும் 6 தடுப்பூசிகள் பல்வேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளன. உலக சுகாதார அமைப்பு சினாஃபோர்ம் மற்றும் சினாவோக் எனும் இரண்டு சீன தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. சீனாவின் இந்த சாதனைக்கு என்ன காரணங்கள்?

$  வேகமாக நடத்தப்பட்ட தடுப்பூசி ஆராய்ச்சிகள்.

$   தடுப்பூசி உற்பத்தி திட்டங்கள்.

$   தடுப்பூசியை மக்களிடம் செலுத்துவதற்கான நுண் திட்டங்கள்.

$   மக்களின் தடுப்பூசி தயக்கத்தை உடைக்க வலுவான பிரச்சாரங்கள்

$   சீனாவின் திறன் மிக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகள்.

$   எல்லாவற்றுக்கும் மேலாக சோசலிச சமூகமுறை உருவாக்கிய மக்களை மையமாக கொண்ட அரசியல் நிர்வாக அணுகுமுறை.

சீனாவும் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் தடுப்பூசி திட்டங்களை தொடங்கின. ஆனால் இந்தியாவின் தடுப்பூசி திட்டம் இடையில் சறுக்கியது. அதற்கு முக்கிய காரணம் மோடி அரசாங்கத்தின் தவறான திட்டமிடல்தான்! இந்தியாவில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என படாடோபமாக ஒன்றிய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் பின்னர் இது கோவிஷீல்டு/கோவாக்சின்என இரண்டாக சுருங்கியது. கோவிஷீல்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி. உரிமம் பெற்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவாக்சின் மட்டும்தான் இந்தியாவில் அதுவும் பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. தடுப்பூசிகளின் கடும் பற்றாக்குறை காரணமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்த மோடி அரசாங்கம் ‘ஆதம்நிர்பார்’ சுயசார்பு எனும் வறட்டு கவுரவத்தை கைவிட்டு வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அலைந்தது. ஆனால் அதற்குள் பணக்கார நாடுகள் ஃபைசர்/மாடர்னா/ஜான்சன் போன்ற அனைத்து தடுப்பூசிகளையும் வளைத்து கொண்டதால், இந்தியா வைரசின் மோசமான தாக்குதலுக்கு, பாதுகாப்பு கவசம் இல்லாமல் நிற்கும் நிலை உருவானது. இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியா பெற்றது. ஆனால் இன்னும் ஸ்புட்னிக் பரவலாக பயன்பாடுக்கு வரவில்லை.

இந்தியாவில் சைகோவிட்/கோர்பாவக்ஸ் எனும் இரண்டு இந்திய தடுப்பூசிகள் பரிசோதனையின் மூன்றாவது கட்டத்தில் உள்ளன. இவை எப்பொழுது பயன்பாடுக்கு வரும் என்பது தெரியவில்லை. மேலும் இரண்டு தடுப்பூசிகள் (சுவாசம்வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி உட்பட)பரிசோதனையின் முதல் கட்டத்தை தாண்டவில்லை. உலக தடுப்பூசி உற்பத்தி மையம் எனும் புகழை பெற்ற இந்தியா, இன்று தடுப்பூசிகளுக்கு அலையும் நிலை உருவாகியுள்ளது எனில், அதற்கு அடிப்படை காரணம் மோடி அரசாங்கத்தின் சரியான திட்டமின்மைதான்! சுமார் 80 லட்சம் தொற்றுகள் ஏற்பட்டு முதல் அலை ஓய்ந்த பொழுது, இரண்டாவது அலை உண்டு என்ற எச்சரிக்கையை வல்லுநர்கள் வெளியிட்ட பொழுதும்; வைரசை இந்தியா வென்றுவிட்டது என வெற்றி முழக்கத்தை மோடி வெளியிட்டார். ஆனால், 80,000 என்ற அளவில் மட்டுமே தொற்று இருந்தும் சீனா தடுப்பூசிகளில் கவனம் செலுத்தியது. மோடியின் வெற்றி முழக்கம் வெற்று முழக்கமாக மாறியது. இதனால், உலகம் நம்மை பார்த்து எள்ளிநகையாடுகிறது.

அறிவியலை நம்பிய சீனா
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள மிகமுக்கிய வேறுபாடு என்னவெனில், சீனா அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது. அதில் மனித வள/நிதி முதலீடுகளை செய்தது. அறிவியலை பற்றி நின்றது. ஆனால், இந்தியா உள்நாட்டு ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மாறாக பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களுக்கு உற்பத்தி மையமாக மட்டுமே கவனம் செலுத்தியது. அறிவியலுக்கு மாறாக கோமியத்திலும் அப்பளத்திலும் யாகங்களிலும் கவனம் செலுத்தியது. விளைவு? தடுப்பூசி எனும் கவசத்தை மக்களுக்கு அளிப்பதில் திணறுகிறது. சீனா வைரசுக்கு முன்னே ஓடுகிறது. இந்தியாவைரசுக்கு பின்னால் ஓடுகிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட சுமார் 180 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. 2021 டிசம்பருக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கேள்வி என்னவென்றால், எங்கிருந்து இந்த தடுப்பூசிகள் கிடைக்கும்?  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தியும் திணறுகின்றன. மே மாதத்தின் இலக்குகள் ஒரு கோடியும், ஜூன் மாத இலக்குகளில் சுமார் 2.5 கோடியும் குறையும் எனும் நிலைதான் தற்பொழுது உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 180 கோடி எனும் இலக்கை அடைய வேண்டும் எனில், சைகோவிட்/கோர்பாவக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். மேலும் ஸ்புட்னிக்/ ஃபைசர்/ மாடர்னா/ ஜான்சன் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியம் எனில் மட்டுமே, ‘‘டிசம்பர் இலக்கு’’ எட்டப்படும். இதுசாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.இதற்கு மாறாக சீனா, இன்றைக்கு ஆண்டுக்கு
500 முதல் 600 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கான திறனை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்த திறனை இன்னும் அதிகமாக்கு வதற்கான முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

கீழ்மட்ட அமைப்புகளுக்கு அதிகாரங்கள்
தடுப்பூசிகள் உற்பத்தியும் கொள்முதலும் முக்கியம். அதே போல மக்களுக்கு தடுப்பூசிகள் வேகமாக எப்படி செலுத்தப்படுகின்றன என்பதும் முக்கியம். இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 29 லட்சமாக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மே மாதத்தில் 19 லட்சமாக குறைந்து மீண்டும் ஜூன் மாதத்தில் 30 லட்சமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 180 கோடி எனும் இலக்கை எட்ட வேண்டும் எனில், ஒரு நாளைக்கு 70 முதல் 75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இந்த இலக்கு எட்ட முடியாத ஒன்றல்ல!ஆனால் இன்றைய சூழலில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். உற்பத்தியையும் கொள்முதலையும் அதிகரிப்பது மட்டுமல்ல; தேவையான எண்ணிக்கையில் களப்பணியாளர்கள் மற்றும் வேகமாக மக்களுக்கு செலுத்தப்படுதல் ஆகிய தொடர் பணிகள் திட்டமிடப்பட வேண்டும்.சீனா எப்படி சாதித்தது? முதல் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்துவதற்கு 87 நாட்களை சீனா எடுத்து கொண்டது. ஒரு நாளைக்கு சுமார் 11.50 லட்சம்  தடுப்பூசிகள்தான் போடப்பட்டன.

இது மிகவும் குறைவு என்பதை கூறத்தேவை இல்லை. அடுத்த 10 கோடி 25 நாட்களிலும்(சாரசரி-40 லட்சம்) அதற்கடுத்த 10 கோடி 17 நாட்களிலும் (சராசரி-58 லட்சம்) செலுத்தப்பட்டன. அதற்கு பின்னர்தான் இமாலய சாதனையை சீனா எட்டியது. ஆம்! அடுத்த 70 கோடி தடுப்பூசிகளை 44 நாட்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 1.60 கோடி வீதம் செலுத்தப்பட்டன. சில குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி செலுத்துதல் தினசரி 2 கோடியை தாண்டியது. சீனாவின் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் உற்பத்தி/ மருத்துவ கட்டமைப்பு/ வேகமாக முடிவுகள் எடுக்கும் நிர்வாக திறன்/ முறையான விநியோகம்/ கீழ்மட்ட நிர்வாக அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் ஆகியவைதான் இந்த சாதனைக்கு முக்கிய காரணம். 

தடுப்பூசி உற்பத்தியும் விநியோகமும் மட்டுமே மையப்படுத்தப்பட்டன. ஆனால் மற்ற அனைத்து பணிகளுக்கான அதிகாரங்களும் கீழ்மட்ட நிர்வாக அமைப்புகளுக்கு தரப்பட்டன. எனவேகீழ்மட்ட நிர்வாக அமைப்புகளும் களப்பணி யாளர்களும் ஈடுபாட்டுடன் பணியாற்றுவது உத்தரவாதப்படுத்தப்பட்டது. எங்கும் எப்பொழுதும் ஒருநாள் கூட தடுப்பூசி பற்றாக்குறை உருவாகவே இல்லை. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுதொடக்கத்தில் 80% மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்க சீனா வேகமாக செயல்படுகிறது.

மற்ற தேசங்களுக்கு உதவி
சீனா 80 ஏழை தேசங்களுக்கு தடுப்பூசி உதவிகளை செய்துள்ளது. சுமார் 40 தேசங்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35 கோடியாகும். இந்தியாவும் சுமார் 60 தேசங்களுக்கு 6 கோடி தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது. இரண்டாவது அலை செங்குத்தாக உயர்ந்த பொழுது ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவை நம்பி கொள்முதல் ஆணைகள் போட்டிருந்த வங்கதேசம்/நேபாளம் போன்ற பல அண்டை நாடுகள் நெருக்கடியில் சிக்கின. இந்த தேசங்கள் சீனாவின் தடுப்பூசிகளை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் சொதப்பல்கள் காரணமாக, நமது அண்டை நாடுகள் சீனா பக்கம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொண்டன. இந்தியாவின் நம்பகத்தன்மை சரிந்தது. 

சீனாவின் தடுப்பூசிகளை பிலிப்பைன்ஸ் / தாய்லாந்து / சிங்கப்பூர் / இந்தோனேஷியா / கம்போடியா / லாவோஸ் / வியட்நாம் என  பல ஆசிய தேசங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் ஈரான் / பக்ரைன் / குவைத் / அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளும் பயன்படுத்துகின்றன. தென் ஆப்பிரிக்கா/ எத்தியோப்பியா/ நைஜீரியா/ கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் சீன தடுப்பூசி களை பெற்றுள்ளன. ஹங்கேரி போன்ற ஐரோப்பியநாடுகளும் இதில் அடக்கம்.பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும்திறன் பெற்றிருப்பதால், சீனா தனது 140 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மற்ற தேசங்களுக்கு உதவி செய்திடவும் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பொன்னான வாய்ப்பை  எந்த ஒரு தேசமும் நழுவவிடாது. சர்வதேச அரசியலை நன்கு புரிந்து வைத்துள்ள சீனா, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதில் ஆச்சரியம் இல்லை. எனவேதான் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகள் கிலி கண்டுள்ளன. தனது தேச மக்களை மட்டுமே காப்பதில் கவனம் கொண்ட முதலாளித்துவ தேசங்கள், இதுவரை ஏழை நாடுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதே சமயம் சீனா முந்திக்கொண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எனவே சீன தடுப்பூசிகள் குறித்து அவதூறு பிரச்சாரத்தில் இறங்கின. இது எடுபடவில்லை. வைரசின் தோற்றம்/ ஜனநாயகம் இல்லை எனும் பழைய பல்லவிகளை ஜி7 நாடுகள் மீண்டும் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளன.

சீனாவின் தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சில குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்கு பிறகு இத்தகைய வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்விக்குறிதான்! சீனாவின் தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்றாலும் அந்த தேசம் எப்படி தடுப்பூசி திட்டத்தில்சாதனை படைத்துள்ளது எனும் படிப்பினையை உள்வாங்கிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தற்பெருமையில் மூழ்கி அறிவியலுக்கு புறம்பான பாதையில் பயணிக்கும் ஒரு அரசாங்கம்இதனை செய்யுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!

கட்டுரையாளர் : அ. அன்வர் உசேன்

 

;