articles

img

ஏழைகளின் மெசியா தோழர் ஏ.பி....

தோழர் ஏ.பி. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்ரமணியம்   நம்மை விட்டு பிரிந்து 39 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. இன்றைய இந்திய, தமிழக அரசியல் சூழலில்  ஏ.பி. போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கம் நமக்கு இருந்தாலும், அவர்வாழ்ந்த காலத்தில் கட்சிக்கு ஆற்றிய பணிகள், கருத்தாழமிக்க அரசியல் கருத்துக்கள் தொழிலாளி வர்க்கம், கிராமப்புற விவசாயிகள், ஏழை எளிய மக்களைத் திரட்டஅவர் காட்டிய வழிகாட்டுதல்கள், செயல்பாடுகளை இன்றைய தலைமுறை உள்வாங்கி செயல்படுவதற்கு தோழர் ஏ.பி. நினைவு தினத்தில் சில சம்பவங்களை நினைவுகூர்வது பயனுள்ளதாக இருக்கும். 

தோழர் ஏ.பி. சனாதனமான  பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது அங்கு மாணவர்கள் நடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். அதன் மூலம் அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் படிப்பு முடிந்தவுடன் வழக்கறிஞர் தொழிலை 1940ல் திண்டுக்கல்லில் துவக்கினார். ஒரு கட்டத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை விட தொழிலாளி வர்க்கத்தின் சேவையே சிறந்தது என கருதிய அவர் தனது வழக்கறிஞர் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க தொழிற்சங்கம் மற்றும் அரசியல் பணியிலும் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் சமூக நீதிக்காகபோராடினார்கள். ஆனால் தந்தை பெரியார்மற்றும் அம்பேத்கர் இருவரையும் உள்ளடக்கி ஒருங்கே அமைந்த தலைவராக தோழர் ஏ.பி. திகழ்ந்தார். திண்டுக்கல்லில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள் என தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடையே தொழிற்சங்கத்தலைவராக விளங்கினார். மூடநம்பிக்கையில் வீழ்ந்து கிடந்த தொழிலாளி வர்க்கத்திற்கு பகுத்தறிவை அவ்வப்போது போதித்த பெரியாராகவும் திகழ்ந்தார். 

மாட்டுக்கறி அரசியலுக்கு சவுக்கடி 
இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசும்,ஆர்.எஸ்.எஸ். சின் பரிவார அமைப்புகளும் மாட்டுக்கறி அரசியலை முன்னெடுத்து பசுவை புனிதமாக காட்டி கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் சாதாரண ஏழை எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை ஒரு பிராமணராக இருந்த தானும் உண்டு சனாதனத்தின் வேரறுத்தவர் ஏ.பி.என்றால் அது மிகையாகாது. தோற்றத்தில் அமைதியும், சாந்தமும் கொண்ட ஏ.பி. ஏழை எளிய மக்களின் துயரம்கண்டு எரிமலையாய் குமுறும் உள்ளம் கொண்டவராக இருந்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும்  களமாடியது  என்போன்ற பலரையும் ஈர்த்தது. 

அரசியலில் தேர்ந்த மக்கள் 
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மிகஎளிமையாகவும், பாட்டாளி வர்க்க சிந்தனைகளை, தத்துவங்களை மிக எளிமையாகவும் தோல் பதனிடும் தொழிலாளிக்கு கற்றுத்தந்த ஆசான் என்றால் அது ஏ.பி. தான்.வெறுமனே தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடுவது என்றில்லாமல் ஏ.பியிடம் அரசியலையும் கற்றுத்தேர்ந்ததொழிலாளி வர்க்கம் தான் திண்டுக்கல்லில்நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயன்ற இந்துமுன்னணி வேட்பாளரின் வெற்றியை தடுத்தது. அத்துடன்  சவேரியார் பாளையம் மக்கள்  திமுக வேட்பாளரை வெற்றி பெறவும் செய்தனர். 

ஏ.பி. பன்முகத்தன்மையுடன் கூடிய அறிவுஜீவியாக இருந்தாலும் அதை ஒரு போதும் காட்டிக்கொண்டவர் அல்ல. எளிமையான வாழ்க்கையை சாதாரண கட்சித்தொண்டரைப் போல தன்னுடைய இறுதிக்காலம் வரை வாழ்ந்தார். பெரிய தலைவர்என்ற செருக்கில்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகியதால்  அனைவராலும் நேசிக்கப்பட்டார். மார்க்சிய - லெனினியக் கொள்கையில் ஆழமான பிடிப்பு கொண்டவராக இருந்ததால் கட்சித் தோழர்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதில் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டார். கட்சி நடைமுறைப் பணிகளில் ஈடுபடும் போது அதில்அரசியல் ஆதிக்கம் தேவை என்பதை சுட்டிக்காட்டுவார்.  லெனின் வகுத்துக்கொடுத்த ஸ்தாபன மரபுகளை கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார்.  வர்க்கப் போராட்டங்களிலும் அடக்குமுறையின் போதும்தோழர்களுக்கு வர்க்க அரசியலை புகட்டிவிட்டால் அவர்களை எந்த சக்தியாலும்  அசைக்க முடியாது என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டினார். 

உட்கட்சி போராட்டத்தில் லியூஜோசி 
1964க்கு முன் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிக்குள் 10 ஆண்டுகள் நடந்த உட்கட்சி போராட்டத்தில் சீன தலைவர் லியூஜோசியைப் போல ஏ.பி.யின் பங்களிப்புபிரதானமானது. திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்கள் மத்தியில் தன் அரசியல் பணியை துவக்கினாலும் மதுரை பஞ்சாலை, கைநெசவு, மோட்டார் சங்க பணிகளிலும் தலைமையேற்று வழிகாட்டினார். அப்போது தான் விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற மில் தொழிலாளர்களின் போராட்டம், துப்பாக்கிச்சூட்டில்  4 பேர்உயிரிழப்பு, மதுரையில் டி.வி.எஸ் தொழிலாளர்கள் போராட்டம், பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு. கோவையில் ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இது போன்ற எழுச்சிமிகு போராட்டங்கள் 1946 மற்றும் 47 காலங்களில் நடைபெற்றது. இதை ஒடுக்குவதற்காகவே சென்னை மாகாண அரசு தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா உள்ளிட்ட தலைவர்களோடு தோழர். ஏ.பியையும்   கைது செய்து மதுரை சதி வழக்கில் சேர்த்தது. 

சிறைப்பறவை ஏ.பி.  
சென்னை, வேலூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய மத்திய சிறைகளில் தண்டனை பெற்றிருந்த காலங்களில் கட்சியின் சார்பாக மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள், 20 நாட்கள், 40 நாட்கள் என நீண்டகால உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் தோழர் ஏ.பி.யும் பங்கெடுத்துள்ளார். அப்படி சிறையில் நடந்த போராட்டத்தில் தான் 24ஆவது நாள் அன்னை லட்சுமி உயிரிழந்தார். அதே போல மதுரை தோழர் ஐ.வி.சுப்பையா இறந்தார். 1948ல் கல்கத்தாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் மத்திய அரசு பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அப்போது  கட்சி தடைசெய்யப்பட்டது. தமிழகத்தில் அப்போது மாநிலச்செயலாளராக இருந்த  எம். கல்யாணசுந்தரம் மற்றும்  ஆர். உமாநாத், பி.எம்.சுப்ரமணியம், பாப்பா, அன்னை லட்சுமி, நெல்லை மாவட்டச்செயலாளராக இருந்த  மா.பாண்டியன்,  ஆளவந்தார் போன்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சியை வழி நடத்த மாநில அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அப்போது  ஏ.பி. செயலாளராக பொறுப்பேற்று திறம்படச்  செயல்பட்டார். 

சமரசமற்ற தலைவன் 
1952ல் நடைபெற்ற சென்னை மாகாண பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள்  90 பேர் வெற்றி பெற்றார்கள். அந்த தேர்தலில்  திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டதோழர்  ஏ.பியை ஆதரித்து தந்தை பெரியார்பிரச்சாரம் செய்தார்.  திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் சாதிய பாகுபாடு காரணமாக இறந்துபோன தலித் தொழிலாளி உடலை சாதிஇந்துக்கள் வாழும் தெரு வழியாக எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தடுத்து சுவர் எழுப்பினர். தோழர் ஏ.பி.அன்றைய சப் கலெக்டரை அழைத்துச்சென்று அங்கு சென்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முயற்சி எடுத்தார்.ஆனால் பூதிபுரம் சாதிஆதிக்க சமூகத்தினர் ஒப்புக்கொள்ள மறுத்தனர். இதனையடுத்து கோபமுற்ற ஏ.பி. தானே கடப்பாறையை எடுத்து அந்த தடுப்புச்சுவரை இடித்து தரைமட்டமாக்கினார். இறந்து போன தலித் உடலை தானும்  சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தார். 

 சொந்த தாய், தந்தையர் இறந்தால் கூடஆச்சாரம் பார்க்கும் சமூகத்தில் பிறந்தஏ.பி. இறந்து போன தலித் தொழிலாளியின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்ததுதிண்டுக்கல் நகர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புரட்சிகரமான  சம்பவமாகும். அதற்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தோழர் ஏ.பி. பிரச்சாரத்திற்காக பூதிபுரம் கிராமத்திற்குச் சென்ற போது ஏற்கனவே நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தால் எங்களது வாக்குகள் முழுவதையும் உங்களுக்கு போடத்தயார் என அந்த கிராமத்தின் சாதிஆதிக்கசமூகத்தார் கூறினர். தலித் மக்களுக்கு எதிராக சாதிய இந்துக்கள் செய்த  தீண்டாமைக் கொடுமையை தட்டிக்கேட்டேன். எதிர்த்துநின்றேன். அந்தச் சுவரை இடித்து தரைமட்டமாக்கினேன். அது சரியானது தான் என நான் கருதுகிறேன். அந்த சம்பவத்திற்காக நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் நான்கவலைப்படமாட்டேன். அதன் மூலம்கிடைக்கும் எம்.எல்ஏ. பதவி எனக்கு தேவையில்லை என அன்று மாலையில் பூதிபுரத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏ.பி வீரமுழக்கமிட்டார். வாக்குகளுக்காக எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாகாதவர் ஏ.பி. என்பதை இந்த சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு பின் 1967 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று  சட்டமன்ற உறுப்பினராகி  மக்கள் சேவையாற்றினார்.

எழுத்தாளர், பேச்சாளர் 
தோழர் ஏ.பி. சிறந்த எழுத்தாளர், சிறந்தபேச்சாளர். கட்சியை வழிநடத்தும் நிர்வாகத்திறமை கொண்டவர் என பன்முகத்தன்மையுடன் விளங்கியவர். அவர் எழுதியகடவுள் உண்டா இல்லையா? , இந்தியாவா? திராவிடமா?  தமிழகமா? , காவேரிநம்ம காவேரி, நாம் புரட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களே  போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றை நாம் வாசித்தால் இன்றைய அரசியல் பிரச்சனைகளைக் கூட எளிமையாகச் சொல்லும் ஆற்றல் படைத்தவர் என்பது புரியும். 

ஏ.பிக்காக கொதித்தெழுந்த மக்கள் 
தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட போது ஏ.பி.  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீயாக திண்டுக்கல் நகர் முழுவதும் பரவியது. தோல் பதனிடும் தொழிலாளர்களும், நகரசுத்தி தொழிலாளர்களும் இதர தொழிலாளர்களும் திரண்டு போராடுவார்கள் என்று கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவையும் மீறி ஏ.பியை விடுதலை செய்யக் கோரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மக்களும்  திரண்டு  ஏ.பி.யை சிறை வைத்த  காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராடினர். திண்டுக்கல் நகர் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் நகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையொட்டி தோல் பதனிடும் தொழிலாளர்கள் வாழும் பகுதியான சவேரியார்பாளையத்தில் போலீஸ் நுழைத்து தொழிலாளர்களையும், அப்பகுதி மக்களையும் தாக்கி நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்து மத்தியச் சிறையில் அடைத்தது.  

ஜனநாயகம் காக்க அறைகூவல் 

26.8.1981 அன்று தோழர் ஏ.பி. கலந்துகொள்ளக்கூடிய பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் தோழர் ஏ.பி பேசியதாவது:

 நான் கூட்டத்தில் பேசக்கூடாது என்பது டாக்டர்கள் உத்தரவு. நேற்று எதிர்பாராத விதமாக ராஜபாளையத்தில் தங்கியிருந்த விடுதியில் நான் வழுக்கி விழுந்து விட்டதால் என் முதுகில் பலமான அடி. விலாஎலும்பு முறிந்திருக்கிறது. ஆகவே மூச்சுவிடுவதே கஷ்டமான நிலை. இருந்த போதிலும் விளம்பரப்படுத்தியிருப்பார்கள் ஆஜராகாமல் இருந்தால் மரியாதையாக இருக்காது என்ற காரணத்தினால் தான் நான் இங்கே மேடையில் உங்கள் முன்பாக காட்சியளிக்கிறேன். நான் ஒன்றும்நீண்ட பிரச்சங்கம் செய்யக்கூடிய நிலையில்இல்லை. பேச வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன. நாட்டு மக்களுக்கு கட்சியின் சார்பாக சொல்ல வேண்டிய விசயங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றைசொல்வதற்கு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து நான் வந்து பேசும் போது தான் அது சாத்தியமாகும். சுருக்கமாக ஓரிரண்டு விசயங்கள் மட்டும் நாட்டிலிருக்கக்கூடிய தேசபக்தர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயங்களை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அன்றைய அரசியல் நிலையை சுருக்கமாக எடுத்துச்சொன்னார்.இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த நாடு சுதந்திர நாடாக இருக்காது. ஆகவே நாட்டின் சுதந்திரம் காக்க, நாட்டின் ஒற்றுமை காக்க, நாட்டின்ஜனநாயகத்தைக் காக்க, நாட்டு மக்களின்வாழ்கைத்தரத்தை உயர்த்த முதலாளிவர்க்கத்தின் கையில் ஆட்சி இருக்கலாகாது. பாட்டாளி வர்க்கத்தின் கையில் ஆட்சிமாறியாக வேண்டும். அதற்கு பாட்டாளி மக்கள் ஒன்றுபட்டு நாட்டில் உள்ள உண்மையான தேச பக்தர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு ஒரு இடதுசாரிப் போக்கில் உள்ள ஜனநாயக அணியை நிறுவ வேண்டும். அப்படிப்பட்ட பெரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நம்மைப் போன்ற பல்வேறு இடதுசாரிக்கட்சிகளை இணைத்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று உங்களை மன்றாடிக்கேட்டுக்கொண்டு நீங்கள் வழக்கம் போல் நான் வந்த இடத்தில் எனக்களித்த இந்த மரியாதைக்கு எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடை
பெறுகிறேன் என்று பேச்சை நிறைவு செய்தார். 

தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய திண்டுக்கல் நகரிலேயே தனது இறுதி பொதுக்கூட்டப் பேச்சையும் பேசிச் சென்றவர் மீண்டும் வராமல் நிரந்தரமாக பிரிந்து சென்றார். தோழர் ஏ.பி. கடைசிவரை மார்க்சியத்திற்காகவே  வாழ்ந்தார். அவரது எளிமையான தன்னலமற்ற வாழ்க்கையும் உழைப்பும் கட்சியின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் அவர் செயல்பட்ட விதத்தை இன்றைய தலைமுறையினர் உள்வாங்கிக்கொண்டு தமிழகத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவானகட்சியாக உருவாக்க அவரது நினைவு நாளில் சபதமேற்போம்.

கட்டுரையாளர் : என்.பாண்டி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர், திண்டுக்கல் 

;