articles

img

மே 11: சிப்பாய் புரட்சி தின நினைவலைகள்.....

இந்தியாவின் முதல் ‘சுதந்திரப் போர்’ என மாமேதை மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட ‘சிப்பாய் புரட்சி’ ஆளும் வர்க்கத்தால் ‘சிப்பாய்க் கலகம்’ என சிறுமைப்படுத்தப்பட்டது.இது, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 11, 1857 இல் இந்தியாவில் மீரட் நகரில்தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்தியமலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர்.முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. 

1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழிற் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேய வணிகர்கள் இவற்றை விற்பனைசெய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத்தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.

அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. வாயால் கடித்துஉறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள்அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கள் பாண்டே என்ற ராணுவ வீரர் பாரக்பூரில் தனது உயரதிகாரியைத் தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

===பெரணமல்லூர் சேகரன்==== 

;