articles

img

மனித உரிமைக் காவலர் நீதி நாயகம் டி.கே.பாசு காலமானார்....

கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு மே 8, 2021 அன்று காலமானார். அவரது மறைவுக்குநாடு முழுவதும் இருந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்,மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள், நீதி நாயகம் டி.கே.பாசு இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்றுஎல்லோராலும் அழைக்கப்படுகிறது. 

பிரபல டி.கே.பாசு வழக்கு
கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.  மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” (காவல் நீதி வரையறை) உருவாக்கவும் கோரியிருந்தார். 

1987 பிப்ரவரி 9 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல்1987 ஜூலை 29 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரிபில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டமைப்பு (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ்அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

-இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா,தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்டிரா, மணிப்பூர், யூனியன்பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
இவ்வழக்கில், 1997 டிசம்பர் 18 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப்பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது. 

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முதன்மையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும். 

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவரின் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன. இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். 

நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடிதத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த நீதிநாயகம் பி.என்.பகவதி. 

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லுநர். ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை நாடு இழந்துள்ளது. அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்!

கட்டுரையாளர்:  கோ.சுகுமாரன், புதுச்சேரியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், மூத்த பத்திரிகையாளர்

;