articles

img

இந்தியாவின் ஒலிம்பிக் தேடுதலில் நழுவும் தங்கம்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது வாரத்தில் நுழைந்து விட்டன. ஆனால் இந்திய தேசம் இன்னும் தங்கப் பதக்கத்தை தேடி வருகிறது.ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை எப்பொழுதும் பரபரப்பான நம்பிக்கைகள், வேதனைமிக்க அங்கலாய்ப்புகள், கடைசியாக சில பதக்கங்கள் என்பதாகத்தான் உள்ளது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானதிலிருந்து பதக்கஎண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் தான் முடிவடைந்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கிய ஒரு வாரத்திற்குப்பிறகும் அதே வழக்கமான கதைதான். 

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு கைக்கு வந்துவிட்டன. 49 கிலோ பிரிவில் பளு தூக்கும் மீராபாய் சானு வென்ற ஒரு வெள்ளி. மற்றொன்று பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து வென்ற வெண்கலம். குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவும் போர்கோஹெய்ன் வெல்டர்-வெயிட் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் குறைந்தபட்சம் ஒரு வெண்கலம் நிச்சயமாக கிடைக்கும்.   வங்கதேச நாட்டிற்கு மேலே உள்ள கோழியின் கழுத்து அமைப்பைப் போன்ற பகுதியில் இருக்கும்  நாட்டின் வடகிழக்கு பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியான  மணிப்பூர் மாநிலத்திலிருந்து மீராபாய் சானுவும், அசாம் மாநிலத்தின் லவ்லினாவும் தங்களின்உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டு பேருமே குடும்பம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் வெளிப்படையான ஆதரவை இழந்து, தங்களின் உள்ளார்ந்த வலிமை மற்றும் கடின உழைப்பால் ஒலிம்பிக் தொடரில் சாதித்துள்ளனர். 

ஹாக்கி பிரிவுகளில் இந்திய ஆடவர் அணி 41 ஆண்டுகளுக்கு பிறகும், மகளிர் அணி 49 ஆண்டுகளுக்கு பின்னரும்  அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது. ஆனால் 1980-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஹாக்கியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது.   பேட்மிண்டன் வீராங்கனை சிந்து தன்பங்கிற்கு பெண்களுக்கும் தனி சக்தி இருக்கிறது என்பதை வெளிக்காட்டியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த முந்தையஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, நடப்பு சீசன் ஒலிம்பிக் தொடரில் சீன தைபே வீராங்கனையும் அதிரடிக்கு பெயர் பெற்றவருமான டாய் ட்சூ யிங்கிடம் போராடி வீழ்ந்து, அதன் பின் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலத்துடன் பரிகாரம் தேடிக்கொண்டார்.  வட்டு எறிதல் நிகழ்வில் இந்திய தேசத்திற்கு புதிய உந்து சக்தியாக கமல்பிரீத் கவுர் என்ற வீராங்கனை 64 மீட்டர் தூரம்எறிந்து புதிய தீப்பொறியை உருவாக்கியுள்ளார். துப்பாக்கிச்சூடுதல் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் எதிர்பார்த்தபடி நல்ல வடிவங்கள் கிடைக்காமல் துன்பங்கள்தான் கிடைத்தன. சவுரப் சவுத்ரி மற்றும் மனுபாக்கர் ஆகியோரின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை.  

குத்துச்சண்டையில் மேரி கோமின் இழப்பால் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துவிட்டது. 38 வயதான அவரின் அவசரத் தோல்வியை இன்னும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட திறமையுடன் தேசியப் பெருமிதம் என்பதையும் வலுக்கட்டாயமாக இணைப்பது வழக்கமாக இருப்பதால் அது மிகுந்த அழுத்தத்தை அளிக்கிறது. டென்னிஸ் சாம்பியன் நோவக் ஜோகோவிச் ஒரு வெண்கலத்தை கூட வெல்ல முடியவில்லை, ஜிம்னாஸ்டிக் சிமோன் பைல்ஸ் தீவிர மனஅழுத்தம் காரணமாக இறுதிச் சுற்றில் இருந்து விலகினார். இத்தகைய பின்னணியில் இரண்டாவது வாரத்தில் இந்திய விளையாட்டுக்குழு ஏதேனும் கொண்டு வரும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. 

தி இந்து/(ஆங்கிலம்) தலையங்கம், 2.8.2021

தமிழில் : எம்.சதீஸ்குமார்

;