articles

img

வங்கமும் தாகூரும்... (சிறப்புக் கட்டுரை )

வங்கத்தில் தற்போது மிக மோசமான சூழல் நிலவுகிறது. இன்று  தேர்தல் மோதல்களாக இருப்பது நாளை மதமோதலாக மாறும் என்கிற செய்திகள் வருத்தமளிக்கின்றன. இத்தகைய சூழலுக்காக சங்பரிவார், பாஜக சக்திகள் ஒரு திட்டத்தின்படி கொஞ்ச காலமாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் சதித் திட்டத்தை வலுவாகத்தடுத்துத் திருப்பியடிக்காமல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசு பொறுப்பற்ற - உறுதியற்ற அணுகுமுறையினால் மதவெறிச் சக்திகள் ஊக்கம் பெற்றுள்ளன. மக்களிடையே பாஜக மதத் துவேஷக் கலவரத்தைத் தூண்டிவிட்டு அதில் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது.

உண்மையில் வங்க மக்களை மதரீதியாகப்பிளவு செய்வதென்ற சதிமுயற்சி இன்றல்ல, நம் தேசத்தின் சுதந்திரத்தைப் பறித்து தேசத்தைத் தனக்கு அடிமையாகவே வைத்திருக்க பிரிட்டிஷ் துரைமார்கள் பின்பற்றிய தீய முயற்சியே அது. பிரிவினை செய்து ஆளுவதற்கு பகைமூட்டும் வியூகத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முதன்முறையாக அத்தகையஅடிமைப்படுத்தும் முறையைக் கையாண்டனர்.  வங்க மக்களின் ஒற்றுமையை மதப்பகைமை மூலம் உடைப்பதற்குக் கையாண்டமுதல்முயற்சி அது. 1905-ல் மதப்பகைமை மூட்டும் விதமாக கிழக்கு, மேற்கு வங்காளமாகப் பிரிவினை செய்வதை வங்க மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்தனர். ஆறு ஆண்டுகள் வரை மக்கள் வீரதீரத்துடன் போராடினர். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் பிரித்தாளும் சூழ்ச்சியைதேச சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எதிர்த்தது. இடதுசாரி சக்திகள் போராடும் மக்களுக்குப் பக்கத்துணையாக இருந்தனர். சுதந்திரப் போராட்டத்தின் பங்கேற்பாளரான மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “அமர் ஸோனார் பங்க்ளா...” என்கிற கீதம் வங்க மக்களின் மனதைக் கவர்ந்து எழுச்சியூட்டியது. (வங்காள தேசம் உருவான பிறகுஇந்த கீதம் அந்த நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.) மக்களின் தீரமிக்கப் போராட்டத்தினால் பிரிட்டிஷ் அரசு பணிந்துபோகும் நிலை ஏற்பட்டது. 1911-ல் வங்கப் பிரிவினையை ரத்துசெய்வதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

சுதந்திரப் போராட்டத்தில் துளியளவும் பங்கேற்காத காவிக்கூட்டம் வெள்ளை துரைமார்களிடமிருந்து அந்த துவேஷ வியூகத்தைமட்டும் உடைமையாகப் பெற்றுக் கொண்டனர்.1947-ல் தேசப் பிரிவினை சமயம். இந்த முயற்சியை மீண்டும் ஒருமுறை வங்க மக்கள் எதிர்த்தனர். காந்திஜி மனவேதனையுடன் வங்கத்தில் கிராமம் கிராமமாக அமைதி யாத்திரை சென்றார். கம்யூனிஸ்ட்டுகள் மக்களின் ஒற்றுமைக்காக உறுதியுடன் பாடுபட்டனர். அதற்குப் பிறகு நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு அதிகரித்தது. 

வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுமுன்னணி ஆட்சி அமைந்த பிறகு அந்த மாநிலத்தில் மதவாத சக்திகளின் ஆபத்துத் தொடரவில்லை. மக்களின் ஒற்றுமைக்கும், வாழ்க்கைத்தரம் உயர்வுக்கும் இடதுமுன்னணி அரசு முக்கியத்துவம் அளித்தது. பல பத்தாண்டுகளாக நீடித்த மதப்பகைமை வங்கத்தில் தொடரவில்லை. இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வங்கத்தில் நடைபெறாததற்கும், பாபர் மசூதிஇடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த மதமோதலின் தாக்கம் வங்கத்தில் சிறிதளவுகூட இல்லாததற்கும் இடதுமுன்னணி அரசு பின்பற்றிய அமைதி காக்கும் அறிவார்ந்த வாழ்வியல் நிலைபாடே காரணமாகும்.சதிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தி இடதுமுன்னணி அரசைக் கவிழ்ப்பதையே இலட்சியமாகக் கொண்ட  திரிணாமுல் அரசுக்கு எவ்வித நல்ல கொள்கையும் இல்லை. இது பாஜக-வுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

தற்போது நடைபெறுகிற தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டம் முதலான மக்களின் பிரச்சனைகள் முடிந்தளவு விவாதப் பொருளாகாமல்பார்த்துக் கொள்வதற்கு பாஜக முயற்சி செய்கிறது. தொழிற்சாலைகள் நிறுவுவது,  அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது முதலான அம்சங்கள் குறித்துப் பேசுவதற்கு மாறாக மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், அவர்களில் ஒருவரை மற்றொருவர் பகையாளியாகப் பார்ப்பதற்கும் பாஜக தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. வங்கத்தில் அடிப்படையான சணல் ஆலை முதலான தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதுடன், கல்வி, மருத்துவத் துறைகளை மேம்படுத்துவது பற்றிக்கூட எண்ணாமல் மக்களைப் பிளவுப்படுத்துவதே பாஜகவின் வேலையாக உள்ளது. மதப் பகைமை மூலம்மக்களைப் பிளவுப்படுத்துகிற சி.ஏ.ஏ.சட்டத்தை தாங்கள் மாநில அதிகாரத்திற்கு வந்தால் உடனே அமல்படுத்துவோமென மீண்டும்மீண்டும் கூறுவதன் மூலம் பிரதமரும்,உள்துறை அமைச்சரும்  வாக்காளர்களிடையே மதப்பகைமையை மூட்டுகிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

வன்முறைச் சூழல் உள்ளது என்பதன் பேரால் வங்க மாநிலத்தில் மட்டும் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதன் பின்னால் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது என்றே எல்லோரும் கருதுகிறார்கள். வங்கத்தில் தற்போது நிலவுகிற சூழலுக்கு இந்த துவேஷத் திட்டமே காரணம். இதைத் திருப்பியடிப்பதற்கு வங்கத்தின் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் சொன்ன வங்க ‘ஆத்மா’வைப் புத்துயிர் பெறச்செய்வதே நலம் விரும்பும் அனைவரின் இன்றைய கடமையாக உள்ளது. 

நன்றி : நவதெலுங்கானா, 

தெலுங்கு நாளிதழ் 16.4.2021, 

தமிழில்: தி.வரதராசன்

;