articles

img

வேட்பாளரை தீர்மானிப்பதும் அமைச்சரவை உருவாக்கமும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு..

கேரளாவில் வேட்பாளர்களை தீர்மானிக்கும் விசயத்திலும், அமைச்சரவை உருவாக்கம் விசயத்திலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவை இயக்கிய கண்ணோட்டங்கள் எவையெல்லாம் இருந்தன என்பதைத் தெளிவாக்குவதற்காக இந்தக் கட்டுரையில் நான் முயன்றுள்ளேன். 

தொடர்ச்சியாக இரண்டுமுறை வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாகத் தொடர்கிறவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டியதில்லை என்றும், அவர்களுக்குக் கட்சியில் மற்ற பொறுப்புகள் வழங்குவது என்றும் கேரள மாநிலக்குழு முடிவுசெய்தது. வேட்பாளர்கள் குறித்து விவாதித்த மாநிலக் குழுதான்இந்த முடிவை எடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, வேட்பாளர்களை நிச்சயித்த விசயத்தில் எடுத்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக அமைச்சரவை உருவாக்கம் குறித்து விவாதித்த மாநிலக் குழு, அமைச்சர்களில் முதலமைச்சர் பினராயி விஜயனைத் தவிர மற்ற யாரும் அமைச்சரவையில் தொடர வேண்டியதில்லையென்றும், புதிய தோழர்களை அமைச்சர்களாக நிச்சயிக்க வேண்டுமென்றும் ஒருமனதாக முடிவுசெய்தது.மார்க்சிஸ்ட் கட்சியின் நடப்பில் இருந்த 59 எம்.எல்.ஏ.க்களில் 26 பேர் இரண்டுமுறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகத் தொடர்ந்தவர்களாக இருந்தனர். மீண்டும்வேட்பாளராக  நிச்சயிக்கப்படாத இந்த 26 பேரில் 5 பேர் அமைச்சர்களாக இருந்தவர்கள். ஒருவர் சபாநாயகர். அமைச்சர்களாக இருந்த தாமஸ் ஐசக், இ.பி.ஜெயராஜன், ஏ.கே.பாலன்ஆகியோர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள்; ஜி.சுதாகரன் மாநிலக் குழு உறுப்பினர்; சி.ரவீந்திரநாத் மாநிலக் குழுசிறப்பு அழைப்பாளர்; மற்றொரு மாநிலக் குழு உறுப்பினர் சபாநாயகராக இருந்த பி.ஸ்ரீராமகிருஷ்ணன். மத்தியக் குழுஉறுப்பினராகிய கே.கே.ஷைலஜா, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களாகிய டி.பி.ராமகிருஷ்ணன், எம்.எம்.மணி,மாநிலக்குழுஉறுப்பினர்களாகிய ஏ.சி.மொய்தீன், கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரும் புதிய அமைச்சரவையில்தொடரவேண்டியதில்லை என்று முடிவுசெய்யப்பட்டது. மற்றொருவர் கே.டி.ஜலீல்.இவ்வாறு, வேட்பாளர்களை நிச்சயித்த கட்டத்திலும்,அமைச்சரவை உருவாக்கம் கட்டத்திலும் அமைச்சரவையில் இருந்த13 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்களுக்கு மாற்றம் உண்டானது. இவர்களில் நான்குபேர் மத்தியக் குழு உறுப்பினர்கள்;இரண்டு பேர் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள்; மூவர் மாநிலக் குழு உறுப்பினர்கள்; ஒருவர் மாநிலக் குழு சிறப்பு அழைப்பாளர். மற்றொருவர் கே.டி.ஜலீல். அமைச்சராக இருந்த ஜே.மேர்ஸிகுட்டியம்மா கண்டறா தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெறவில்லை.

அத்தகைய அணுகுமுறை சரியல்ல!
எம்.எல்.ஏ.க்களிலும் அமைச்சர்களிலும் யாரேனும் ஒருவருக்கோ, சிலருக்கோ மட்டும் மாநிலக் குழு நிச்சயித்த விதிமுறைகளிலிருந்து சலுகை அளிக்க வேண்டியதில்லை என்றும் மாநிலக்குழு ஒரு மனதாகத் தீர்மானித்தது. எம்.எல்.ஏ.க்களாக இரண்டுமுறை தொடர்ந்து இருந்தவர்களும், எல்லா அமைச்சர்களும் தங்களின் பொறுப்புகளை மிகச்சிறப்பாக நிர்வகித்தவர்கள்தான். பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றியவர்களுக்குச் சலுகை வழங்கினால் 26 எம்.எல்.ஏ.க்களுக்கும் 11 அமைச்சர்களுக்கும் சலுகை வழங்கவேண்டிவரும். ஒரு அமைச்சரையும் புதிய அமைச்சரவையில் சேர்ப்பதற்கு இயலும் நிலை இல்லை. செயல்திறன்என்பதன் பேரில் எம்.எல்.ஏ.க்களிலோ, அமைச்சர்களிலோ ஒருவரையோ, சிலரையோ மட்டும் மற்ற உறுப்பினர்களிலிருந்து வேறுபடுத்திப் பரிசீலிக்க இயலாது. அவ்வாறு செய்தால் சிலரின் செயல்பாடுகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதுவதற்கு இடமுண்டு. அனைவரும் ஒரேமாதிரி திறனாளர்களாகச் செயல்பட்ட சூழலில் கட்சிக்குள்ளும் மக்களிடையிலும் தவறான புரிதலும் ஒற்றுமையின்மையும் வளர்வதற்கு அத்தகைய அணுகுமுறை இடமளிக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நடப்பிலிருந்த தனது அனைத்து அமைச்சர்களுக்குப் பதிலாகப் புதிய அமைச்சர்களை நிச்சயித்தது.

மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண...
மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவுகிற புரட்சிகரமான மாற்றங்களை இந்திய சமூகத்தில் ஏற்படுத்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம். வலுவானவெகுஜன இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமே சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். அத்தகைய வெகுஜனப் புரட்சிகர இயக்கத்தைத் தொடர்ச்சியாக வளர்ப்பதற்கு கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகளையும், அவை அல்லாத நடவடிக்கைகளையும் பயன்படுத்துகிறது. கட்சித் திட்டம் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது: ‘‘(பாரா 7. 18) மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதும் அமைதியான வழிகள் மூலம் சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்வதுமான இலட்சியத்தை நிறைவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயலாற்றுகிறது. வலுவான ஒரு வெகுஜன இயக்கத்தை வளர்த்துக் கொண்டும், நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்றம் அல்லாத போராட்ட வடிவங்களை ஒன்றுடன்ஒன்று இணைத்தும், பிற்போக்குச் சக்திகளின் எதிர்ப்பைத் தோல்வியுறச் செய்தும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை அமைதியான வழிகளில் நிறைவேற்றவும் தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டுச்சக்திகளும் பெருமளவில் பாடுபடுவதாக இருக்கும். ஆனால், ஆளும் வர்க்கம் ஒருபோதும் தனது அதிகாரத்தைத் தானாக விட்டுக்கொடுக்காது என்கிற விசயத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.”

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வெகுஜனப் புரட்சி இயக்கத்தை வளர்ப்பதற்கு நாடாளுமன்றம் மற்றும்நாடாளுமன்றம் அல்லாத முறைகளைச் சார்ந்த செயல்பாடுகளுக்குக் கட்சி ஊழியர்களை மாறி மாறிப் பங்கேற்கச் செய்யவேண்டிவரும். இன்றைய சமுதாயத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடுகளில் பங்கேற்கிற கட்சி ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊடகக் கவனமும் பிரபலமும் கிடைக்கிறது. நாடாளுமன்ற அல்லது சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் என்ற நிலையிலும், அரசாங்கத்தை இயக்குகிற அமைச்சர்கள்என்ற நிலையிலும், அரசாங்க நிர்வாகத்தில் தலையீடு செய்கிறஉரிமையும் அதிகாரமும் கிடைக்கிறது என்பதாலும்தான் இதுநிகழ்கிறது. இத்தகைய பிரபலமும் ஊடகக் கவனமும் வெகுஜனப் புரட்சி இயக்கத்தை வளர்ப்பதற்கான கட்சியின் பெருமுயற்சிகளுக்கு உதவும். அதற்காக அதை கட்சி பயன்படுத்துகிறது. நாடாளுமன்ற/சட்டமன்றப் பதவிகளில் பொறுப்பு வகிக்கும்போது மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறார்கள் என்றும், அவ்வாறு இல்லையென்றால் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கட்சியின் எந்தவொரு ஊழியரும்கருதினால் அது அவரது கட்சி உணர்வின் தாழ்ந்த நிலையையே காட்டுகிறது. இது முதலாளித்துவ நாடாளுமன்றவாத ஆசைகளுக்கு அடிபணிவதால் ஏற்படுவதாகும். இன்றைய முதலாளித்துவ சமூகமும்-முக்கியமாக முதலாளித்துவ ஊடகங்களும் அத்தகைய உணர்வை வளர்த்துக் கொண்டுவரஉணர்வுப்பூர்வமாகவே செயல்படுகின்றன. முதலாளித்துவக் கட்சிகளின் ஊழியர்களை இயக்குவதும் இந்த உணர்வுதான்.கட்சிக்குள் கோஷ்டி குணம் வளர்வதற்கும் முதலாளித்துவ நாடாளுமன்றவாத ஆசை காரணமாகிறது. இந்த விசயத்தை கட்சியின்  அகில இந்திய மாநில மாநாடுகளும், கட்சியின் சிறப்புமாநாடுகளும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. 1995-ல் சண்டிகரில் நடைபெற்ற 15-வது கட்சி மாநாட்டு அறிக்கை இதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்சியை வலுப்படுத்தும்
பொறுப்புகளைப் பெறுவதிலும் அதை உறுதி செய்வதிலும் கட்சிக்குள் முயற்சிகள் உண்டாகலாம். இது கட்சிக்குள் ஸ்தாபனப் பொறுப்புகளுக்கும் நாடாளுமன்ற/சட்டமன்ற பொறுப்புகளுக்கும் ஒரேமாதிரி பொருந்தும். அதனால்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கிளைச் செயலாளர்கள் முதல் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்புவரை அவரவர் பொறுப்புகளில் தொடர்வதற்கான காலவரம்புநிர்ணயிக்கப்பட்டது. மூன்று முறை செயலாளராகத் தொடர்கிறவர்கள் மாறி புதிய செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று கட்சி தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், கோஷ்டிப் போக்குகள் வளர்ந்து வருவதைத் தடுப்பதற்கும் உதவியது. முக்கியமான கட்சிப் பொறுப்புகளுக்கும் நாடாளுமன்ற/சட்டமன்றப் பொறுப்புகளுக்கும் திறமையானவர்கள் வருவதற்குப் புதியவாய்ப்பு கிடைக்கும். கட்சி தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படுவதற்கு இத்தகைய மாற்றம் உதவும்.  

தொடர்ச்சியாக இரண்டுமுறை எம்.எல்.ஏ.ஆகியிருந்தவரை தேர்தல் போட்டியிலிருந்து தவிர்த்தால் அது கட்சியின்தேர்தல் வெற்றி வாய்ப்புகளை மோசமாகப் பாதிக்குமென்று சிலர் கருதினர். பெரும் வெற்றி பெறுவோம் என்று சொன்ன யுடிஎப் கூட்டணியின் நம்பிக்கை இந்த அடிப்படையில்தான் இருந்தது. ஒருசில வலதுசாரி ஊடகங்களும் இத்தகைய நம்பிக்கையில்தான் பிரச்சாரம் செய்தன. ஆனால், கேரளத்தின் அரசியல் அறிவுபெற்ற மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடுகளுக்கும், இடதுஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவு அளித்தனர். இரண்டுமுறை வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களைப் போட்டியிலிருந்து  தவிர்த்துவிட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியின் புதிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ச்சியாக இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களை மாற்றுவது என்பதற்குப் பதில் வெற்றி வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதை அளவுகோளாக ஏற்க வேண்டுமென்று கேரளத்திற்குள்ளும், வெளியிலும் உள்ள கட்சி நண்பர்களில் சிலர் கருத்துத் தெரிவித்தனர். கேரள கட்சிக்குள் வெற்றி வாய்ப்புள்ள செல்வாக்கு பெற்ற வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக்கின.

அமைச்சரவை உருவாக்கத்தில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டதாகச் சில முதலாளித்துவ ஊடகங்களும்  சமூக ஊடகங்களும் செய்த பிரச்சாரத்தில் சில இடதுசாரி நண்பர்கள் உள்பட  பலர் உட்பட்டனர். இத்தகைய பிரச்சார வேலைக்கு ஒரு அடிப்படையும் இல்லை. கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த அமைச்சரவையில் இரண்டு பெண்கள் இருந்தனர். இப்போது புதிய உறுப்பினர்களை நிச்சயித்தது என்பது பெண்களைப் புறக்கணித்ததற்குக் காரணமாக எடுத்துக் கூறுவது  உண்மைக்குப் பொருந்தாததாகும். இடது ஜனநாயக முன்னணி அரசில் கடந்த காலத்தில் இருந்த இரண்டு பெண்களுக்குப் பதில் இப்போது மூன்று பெண்கள் உள்ளனர். தனிப்பட்ட முறையில் யாருக்காவது முக்கியத்துவம் அளித்தோ, அல்லாமலோ என்கிற நிலையில் அல்ல; மாறாக,கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்கிற அடிப்படையில்தான் கட்சியின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

முதலாளித்துவ ஊடகங்களின் திரிப்பு வேலைகள்
ஒருபகுதி முதலாளித்துவ ஊடகங்கள் பல சமயங்களில் கூட்டுச்சேர்ந்து பிரச்சார வேலைகளை ஏற்பாடு செய்து மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானங்களைத் தவறாகத் திரித்துக் கூற முயன்றது உண்டு. சிலரை உயர்த்திக் காட்டியும், மற்ற சிலரை இகழ்ந்தும் கருத்துக் குழப்பத்தை உருவாக்க முதலாளித்துவ ஊடகங்கள் முயன்று வருகின்றன. வலதுசாரி அரசியல் நோக்கங்களும், சில ஊடக ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் பகையும் இத்தகைய பிரச்சார வேலைகளின் பின்னணியில் உண்டு. தங்கள் நலனைப் பாதுகாக்க முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்கிறஇத்தகைய பிரச்சார வேலைகளை கட்சி ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. முதலாளித்துவ ஊடகங்களின் கருத்துகளுக்குப் பதிலடியாக சரியான நிலைப்பாட்டின் அடிப்படையிலான பொதுசிந்தனையை உருவாக்குவதற்கு கட்சி தொய்வின்றி இடைவிடாமல் போராடுகிறது. கட்சியின் நிகழ்ச்சிநிரலை கட்சியே தீர்மானிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்களுக்குக் கட்சி விட்டுத்தராது.

மிகச் சரியான அணுகுமுறை
தேர்தலில் வேட்பாளர்களை நிச்சயிப்பதிலும், அமைச்சரவையை உருவாக்குவதிலும் கேரள மாநிலக்குழு பின்பற்றிய மிகவும் சரியான அணுகுமுறையின் அடிப்படையில்தான் புதிய அமைச்சரவையில் கட்சியின் பிரதிநிதிகளாகப் பதினொரு புதிய ஊழியர்களும், முதலமைச்சராக பினராயி விஜயனும் நிச்சயிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்களிலும் புதுமுகங்கள் வந்துள்ளனர். திரிபுராவின், வங்கத்தின் அனுபவங்களும் கட்சியின்முன் உள்ளது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தீரமான முடிவுகளை மேற்கொண்டு மட்டுமே எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும், முன்னேறுவதற்கான வலிமையைப்பெறவும் கட்சியினால் இயலும்.

நன்றி  : தேசாபிமானி (27-5-2021)

தமிழில் : தி.வரதராசன்

;