articles

img

கருப்பா பயங்கரமா... பயங்கரக் கருப்பா....?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்று உள்ளதே தவிர, யூனியன் கவர்ன்மெண்ட் என்று இல்லை என்பது, பாஜகவினரின் ‘அரிய’ கண்டுபிடிப்பு! அதாவது, அது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸின் கவர்ன்மெண்ட்தான், ஆனால், யூனியன் கவர்ன்மெண்ட் இல்லை...! அவ்வளவுதான்! சரியாகச் சொன்னால், ‘பில்லா பயங்கரக் கருப்பா இருப்பான், நீ கருப்பா பயங்கரமாக இருக்கே’ என்று சொன்னதன் அரசியல் வடிவம்!

எல்லாம் சரி, ஒன்றியம் என்பது அவ்வளவு மோசமான சொல்லா, இவ்வளவு கவலைப்பட? பிரச்சனை என்னவென்றால், மோடி இந்தியாவின் அரசர் என்பதைப் போலக் கற்பனை செய்துகொண்டிருந்தார்கள், அது இல்லை என்பதை தமிழகம் வெளிப்படுத்திவிட்டது!அதற்கு முதலில் அரசர் என்ற பதவியைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மையில், தற்காலத்திய உலகின் நாடுகளில் உள்ள அரசர்கள்கூட மக்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். இன்று, மூன்று விதமான முடியரசுகள் (அரசர் ஆளும் அரசுகள்) உலகில் உள்ளன.

உலகில் அதிகம் அறியப்பட்ட அரசப் பதவி என்பது இங்கிலாந்து அரசியின் பதவி. ஆனால், அவருக்கு அதிகாரங்கள் எதுவும் இல்லை. அங்கு இருப்பது அரசமைப்புச் சட்டப்படியான நாடாளுமன்ற முடியாட்சி. அதிகாரம் என்பது,நாடாளுமன்றத்திடம்தான் இருக்கும். அரசர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவியாக இருக்கும். கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட உலகின் 29 நாடுகளில் இத்தகைய ஆட்சி இருக்கிறது. ஜப்பான், தாய்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளும் இந்தப் பட்டியலில்தான் உள்ளன.

அடுத்தது, அரசமைப்புச் சட்ட முடியாட்சி. முடியரசரிடம் செயல்படுத்தும் அதிகாரம் இருக்கும். ஆனால், அவரும் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவராக இருப்பதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முடிவுகளுக்கு இணங்கிச் செயல்படவும் வேண்டும். பஹ்ரைன், கத்தார். ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 10 நாடுகளில் இத்தகைய ஆட்சிமுறை உள்ளது.இறுதியாக, முழுமையான (வரம்பற்ற!) முடியரசு - அப்சல்யூட் மொனார்க்சி! இத்தகைய ஆட்சி முறையில்தான், அனைத்து அதிகாரங்களும் அரசரிடமே இருக்கும். ப்ரூனே, சவூதி அரேபியா, ஓமன், எஸ்வாட்டீனி(தென்ஆப்பிரிக்கா) ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே இன்றைய உலகில் இத்தகைய முழுமையான முடியரசரைக் கொண்டுள்ளன. முழு அதிகாரம் கொண்ட தலைமை என்ற வகையில், வேண்டுமானால் வாட்டிகனையும் இதில் சேர்த்து ஐந்தாக்கிக் கொள்ளலாம்.

ஆறு மாதங்களைக் கடந்து போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைத் திரும்பியே பார்க்காமை, டிவிட்டரில் டூல் கிட் என்று ஒரு டெக்ஸ்ட் ஃபைலைப் பகிர்ந்தால் கைது, விமர்சித்தால் தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட மோடியின் நடவடிக்கைகள், அவர் தன்னை இந்த மூன்றாவது வகையில் உள்ளதாகக் கற்பனை செய்துகொண்டுள்ளதாகவே காட்டுகின்றன.அவருடைய பரிவாரங்களோ, அவரை அமெரிக்க அதிபரைப் போன்று இந்தியாவில் அதிகாரம் கொண்டவராகக் கற்பனை செய்துகொண்டுள்ளன. அங்கு இருக்கும் அரசு வேறொரு வகையைச் சேர்ந்தது. அது, ப்ரெசிடெண்ஷியல் சிஸ்ட்டம் என்றழைக்கப்படக் கூடிய, முழு அதிகாரமும் குடியரசுத் தலைவரிடம் உள்ள ஆட்சிமுறை. அங்கு நாடாளுமன்றம் இருக்கும். ஆனால், குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதுடன், அவர் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட வேண்டியதும் இல்லை. மோசமான நெருக்கடிகள் ஏற்பட்டால், இம்ப்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆண்ட்ரூ ஜான்சன், பில் க்ளிண்ட்டன், டொனால்ட் டிரம்ப் (இருமுறை) என்று இரண்டேகால் நூற்றாண்டில் மொத்தமே நான்கு முறைதான் அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசில், வெனிசுலா, துருக்கி, ஈரான், மெக்சிகோ உள்ளிட்ட 61 நாடுகளில் இத்தகைய ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளுள் ஒன்றில் குடியேறி, குடியுரிமை பெற்று, குடியரசுத் தலைவரானால் மோடி விரும்புகிறபடி ஆட்சி நடத்தலாம். 

ஆனால், இந்தியாவில் இருப்பது, நாடாளுமன்றக் குடியரசு. இங்கு குடியரசுத் தலைவர் பதவிகூட அலங்காரப் பதவிதான். ஆஸ்த்திரியா, ஃபின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், சிங்கப்பூர் உட்பட 40 நாடுகளில் இருக்கும் இந்த ஆட்சிமுறையில், நாடாளுமன்றத்தை மக்கள் தேர்ந்தெடுப்பா ர்கள், நாடாளுமன்றம் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும். அந்த நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராக பிரதமர் இருப்பார். ஆனாலும், மோடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட முடியரசரோ, நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாத குடியரசுத் தலைவரோ அல்ல என்பதை அவரும், பரிவாரங்களும் ஏற்கத் தயாராக இல்லை என்பதே பதைபதைப்புக்குக் காரணமாக இருக்கிறது.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமை, இரண்டும் கூட்டாட்சிக் குடியரசுகள் என்பதுதான். கூட்டாட்சிக் குடியரசு என்பதன் அடிப்படைக் கூறே, அதிகாரப் பகிர்வுதான். அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பிரச்சனைகள் குறித்த அதிகாரத்தை மட்டும் கூட்டரசு வைத்துக்கொண்டு, பிற நிர்வாக அதிகாரங்கள் ‘அனைத்தையும்’ அந்தந்த உட்பிரிவுகளிடம் வழங்குவதுதான் கூட்டாட்சிக் குடியரசு. உள்ளாட்சி அமைப்புகள்கூட அமெரிக்காவில் முனிசிப்பல் கவர்ன்மெண்ட் என்றுதான் அழைக்கப்படுவதுடன், அவ்வளவு அதிகாரங்களும் அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நாடு சீனா. 1979இல் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கிய சீனா, கால் நூற்றாண்டில் அடைந்த வளர்ச்சியை, உலக வரலாற்றில் எந்த நாடும் இதுவரை அடைந்ததில்லை. அந்த வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்தது, மாநில அரசுகள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்பு களுக்கும் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் என்பது, சீனப் பொருளாதாரத்தை ஆய்வு செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதைப் போல, எல்லா அதிகாரங்களும் மோடிக்கே என்பதான நடவடிக்கைகள்தான், இன்றை இந்தியாவின் பொருளாதார நிலைக்குக் காரணமாகியுள்ளன.

உலகின் முதல் கூட்டாட்சிக் குடியரசான அமெரிக்காவில், கூட்டரசின் அனைத்து அதிகாரங்களும் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது என்பதையே பரிவாரங்கள் பல்லவியாகப் பாடினாலும், உண்மையில், அமெரிக்காவின் மாநிலங்கள் தனித்தனியாக உச்ச நீதிமன்றங்கள் வைத்துக் கொள்ளுமளவுக்கு அதிகாரங்களைக் கொண்டுள்ளன. (இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் மாநில அரசால் உருவாக்கப்படுபவை அல்ல!) அமெரிக்க உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியாகக் காவல்துறை வைத்துக் கொள்ளுமளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளன.முக்கியமாக, இன்றுவரை ஜிஎஸ்டி என்பதைக் கொண்டுவராத அமெரிக்கா, அதற்குச் சொல்லும் காரணம், மாநிலங்களின் வருவாயில் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா செய்யாது என்பதுதான். ஆனால், ஜிஎஸ்டி, எக்சைசுக்கு பதிலாக செஸ் என்றெல்லாம் மாநில வருவாய்கள் அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டு, மாநிலங்களைக் கடன் வாங்கிக்கொள்ளச் சொல்லும் இந்த அரசுக்கு, ஒன்றிய அரசு என்ற சொல்லே, அந்த அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. பயம் அந்தச் சொல்லின் மீது அல்ல, இதுவரை செயல்படுத்திக் கொண்டுள்ள - ஆனால் உண்மையில் இல்லாத - அதிகாரம் பறிபோய்விடுமோ என்பதுதான். மாநிலங்களின் உண்மையான அதிகாரங்களை மீட்டெடுப்பது, மாநிலங்களின் நலன்களுக்கு மட்டுமானதல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் நன்மைக்கும், முக்கிய நடவடிக்கையே!

கட்டுரையாளர் : அறிவுக்கடல்

;