articles

img

பாபாக்கள் உருவான வரலாறு - சூர்யா சேவியர்

அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. உத்தேசமாக அவரது பக்தர்களால் 1838 செப்டம்பர் 28 என்று சொல்லப்படுகிறது.

1868 ல் ஷீரடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு பக்கீராக இருந்து பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். அங்கு வருவோரை "அல்லா மாலீக்" என்று ஆசீர்வதித்துள்ளார்.

ஒரு முனிவராக, ஞானியாக வாழ்ந்து இந்து, இஸ்லாம் என இரண்டு மத மக்களும் போற்றுபவராக வாழ்ந்துள்ளார்.

1917ம் ஆண்டு திலகர் நேரடியாக வந்து சந்தித்து இவரிடம் ஆசி பெற்றுள்ளார். அதன் பிறகு இவரின் புகழ் பெருகியது.1918 அக்டோபர் 15 இறந்தார்.

ஷீரடி சாய்பாபா இந்துவா, இஸ்லாமியரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இருவருக்குமானவராகவே மக்களால் கருதப்படுகிறார். சாயிபாபா என்பது வேறொன்றுமல்ல. சாய்பு பாபா என்பதன் மறுவிய பெயரே. இவரது அவதாரம் என்று சொல்லி தான் புட்டபர்த்தியில் சீட்டிங் வேலை நடந்தது.

இந்திய விடுதலையால் தேனாறும், பாலாறும் ஓடுமென மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். முதலாளித்துவ சமூக அமைப்பில் அதற்கு வாய்ப்பில்லை. 

உணவு, உடை, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசியச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டது. மக்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டது. இதற்கு எதிரான கோப அலைகள் உருவாகத் தொடங்கியது.  

மக்களின் கோபத்தை மடைமாற்றும் ஏற்பாடாக 1960 க்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு  உருவாக்கப்பட்டவர்களே ஆனந்தாக்கள்,
அம்மாக்கள், 
ஜத்குருக்கள், 
பாபாக்கள்
மாதாக்கள்
அம்மைகள்
அடிகள்
சாமிகள்
சாமியார்கள்
மகிரிஷிகள்
பகவான்கள்
கருணாமூர்த்திகள்
ஜீசஸ் கால்ஸ்கள் என்ற அடைமொழிகளோடு உருவாக்கப்பட்டவர்கள்.

இவர்களைப் பிரபலமாக்க ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என வரிசை கட்டி நின்றார்கள். காலில் விழுந்து வணங்கினார்கள். இவர்களிலிருந்து விலகி நின்றவர்கள் மார்க்சிய- அம்பேத்கரிய- பெரியாரிய வாதிகள் மட்டுமே.

மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத போது ஏற்படும் மன அழுத்தத்திற்கு இவர்கள் சொன்ன தீர்வுகளே கண்ணை மூடு, வாயை மூடு, மேல பார், கீழே குனி , தியானம் செய், யோகா செய் என்பதெல்லாம். பிரச்சனைக்கான அரசியலை இவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். அதை மறைப்பதற்காக உருவானவர்களால் எப்படி பேச இயலும்?

இவர்களால் வருடம் ஒருமுறை நடத்தப்படும் பிரமாண்ட விழாக்களுக்கு,  ஏழைகள் அனுமதிக்கப்பட்டு, ஒருநாள் ஓசிச்சோறு மூலம் தங்களின் உணர்வாளர்களாக அவர்களை மாற்றிக் கொண்டார்கள். கடவுளுக்கும், பக்தர்களுக்குமான இடைப்பட்ட தனிமனிதக் கடவுளர்களாக இவர்கள் கட்டமைக்கப்பட்டார்கள். இவர்களை விமர்சிப்பது கடவுள் குற்றம் என்ற கதைகள் இவர்களின் போதனைகளில் முக்கியமானது.

ஆட்சியாளர்களால் ஆட்சியாளர்களின் தேவைக்காக உருவாக்கப்படும் இவர்கள், ஆட்சியாளர்களையே மிரட்ட முயலும் போது, அவர்களால் சிக்க வைக்கப்பட்டு சிதைந்தும் போவார்கள். 

காவிரி காப்போம், இயற்கையை மீட்போம் என்று கிளம்பும் இந்த கஞ்சாக்குடிக்களின் செயல்பாடுகளின் உள்ளடக்கம் யாதெனில், தங்களிடம் சேர்ந்து போன கள்ளப்பணங்களை வெள்ளையாக்கும் ஏற்பாடே.

தமிழகமெங்கும் தற்போது சாய்பாபா கோவில்கள் உருவாக்கப்படும் காரணங்களில் முக்கியமானது எதுவென்றால், அந்தக் கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராது என்பதால் தான். 

அறமற்ற செய்கைகள் எதுவும் அறநிலையத்திற்குள் அடங்க மறுக்கும். இவர்கள் குறித்து ஏராளமான விபரங்கள் இருக்கு. விரைவில் காணொளி மூலம் பகிர்கிறேன்.

- சூர்யா சேவியர்
 

;