articles

img

‘சங்கம் சேர நாங்கள் ஏன் முடிவெடுத்தோம்?’ - சி. பி. கிருஷ்ணன்

சாம்சங் தொழிலாளர் களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் செப்டம்பர் 9 அன்று தொடங்கி 18 நாட் களுக்கும் மேலாக தொடர்கிறது. அடிப் படை உரிமைகளைக் கேட்டு நடை பெறும் 1500க்கும் மேற்பட்ட தொழி லாளர்களின் அறப்போராட்டத்திற்கு 18 நாட்களுக்கு மேலாகியும் நீதி கிடைக்க வில்லை.

என்னதான் கேட்கிறார்கள் தொழிலாளர்கள்? 

“தனித்தனியாக நாங்கள் பட்ட அவ மானமும், அவமரியாதையும் போதும். ஒன்றாய் சேர்ந்து எங்கள் குரலை எடுத்துச் சொல்ல எங்களுக்கென்று ஒரு ஜனநாயக அமைப்பு வேண்டும். அதுதான் எங்கள் சங்கம். அதை அமைத்துக் கொள்வது எங்கள் அடிப்படை உரிமை” என்கிறார்கள் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள். சங்கம் அமைப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உரிமை. இந்திய தொழிற்சங்க சட்டம் சுமார் 100 ஆண்டு களுக்கு முன்பு 1926 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலேயே உருவாக்கப்பட்ட சட்டம். அதன்படி சங்கம் அமைக்கும் உரிமை தொழி லாளர்களுக்கு உண்டு.

சர்வதேச உரிமை

சர்வதேச தொழிலாளர் அமைப்பு  (International Labour Organisation) 1919ல் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே நமது நாடு அதன் உறுப்பினர். 1922 முதல் அதன் முடிவெடுக்கும் அமைப்பில் நமது நாடு நிரந்தர உறுப்பி னர். ஐஎல்ஓவில் 187 நாடுகள் உறுப்பி னர்களாக உள்ளன. இந்த அமைப் பில் இதுவரை நூற்றுக்கணக் கான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இவை தொழிற் சங்கங்கள், நிர்வாகத்தின் அமைப்பு கள், அரசு ஆகிய முத்தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தி கருத்தொற்று மையால் உருவாக்கப்பட்டவை. இத்தீர்மானங்களை ஏராளமான நாடுகள் ஏற்றுக்கொண்டு அமுல் படுத்தி வருகின்றன. இத்தீர்மானங்கள் சர்வதேச தொழிலாளர் தரம் வாய்ந்தவை என்று அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டவை. 1998ல் 4 அடிப்படை உரிமை கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவை 1) சங்கமாக ஒன்று சேர்தல், 2) கூட்டு பேர உரிமை 3) சம வேலைக்கு சம ஊதியம் 4) பாரபட்சமான போக்கிலிருந்து விடுதலை. இதில் முதல் உரிமை சங்கமாக சேர்வது, அதைத் தொடர்ந்து கூட்டு பேர உரிமை. இவைதாம் இன்று சாம்சங் தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கைகள். தென் கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்தில் தொழிற்சங்கம் உண்டு. நமது அரசமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவு சங்கம் சேரும் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது.

ஏன் சங்கம் தேவைப்பட்டது?

இருந்தும் சங்கம் சேரும் உரிமையை பிடிவாதமாக எதிர்க்கிறது சாம்சங் நிர்வாகம். இந்த அடிப்படை உரிமையை ஏன் நிர்வாகம் மறுக் கிறது? இதுதான் போராடும் தொழி லாளர்களின் கேள்வி. ஏன் நாங்கள் சங்கம் அமைக்க வேண்டும் என்று எண்ணினோம் என்பதை அந்த தொழி லாளர்களே கூறுகிறார்கள்:  “எனக்கு வாஷிங் மெஷின், ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற வீட்டு உபயோக பொருட் களுக்கு ஆணி பொருத்தும் வேலை. இரண்டு ஆணி பொருத்துவதற்கு ஒரு ரோபோ கூட 9.3 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் எங்களை 9 வினாடிக்குள் பொருத்த வேண்டும் என்று சொல்கிறது நிர்வாகம். இது எப்படி சாத்தியம்?” என்று கேட்கிறார்

ஒரு சாம்சங் நிறுவன ஊழியர். “ஒன்பது வினாடிகளுக்குப் பிறகு அந்த மெஷின் அங்கே நிற்காது. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து விடும். ஒன்பது வினாடிக்குள் முடிக்கவில்லை என்றால் எங்களுக்கு சர்வீஸ் ரெக்கார்ட்டில் நெகடிவ் மார்க் போட்டு, அதனால் சம்பள வெட்டு, ஊதிய உயர்வு குறைப்பு உள்ளிட்ட பல ஒழுங்கு நட வடிக்கைகளை சந்திக்க நேரிடும்” என்று தொடர்ந்தார் அந்த தொழிலாளி. மேலும் “ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமும் இப்படியே வேலை செய்தால் எங்கள் உடல்நிலை என்னா கும்? நானும் எங்கள் பகுதியில் வேலை  செய்யும் மற்றோர் ஊழியரும் ஹெச்.ஆர்.மேனேஜரிடம் சென்று “கை ரொம்ப  வலிக்கிறது ஒருநாள் லீவு வேண்டும்” என்று கேட்டோம். அதற்கு ஹெச்.ஆர்.மேனேஜர் நீங்கள் எப்படி கூட்டமாக வரலாம். எது வேண்டுமானாலும் தனித்தனியாக வாருங்கள் என்று கூறினார்” என்றார் அவர். ”இரண்டு பேர் வந்தாலே கூட்டம் என்கிறது சாம்சங் நிர்வாகம்! நாங்கள் ஒன்று சேர்வதையே அவர்கள் விரும்ப வில்லை. ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் பேசுவதை கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்கள் குறைகளை நிர்வாகம் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றாலே நாங்கள் சங்கமாக ஒன்று சேர்வதுதான் ஒரே வழி” என்று எங்களுக்கு தோன்றியது என்கிறார்கள் தொழிலாளர்கள். இப்படி ஒவ்வோர் ஊழியரிடமும் ஒவ் வோர் அனுபவம் உள்ளது பகிர்வதற்கு. ஒருமுறை கேண்டீன் சாப்பாட்டில் இருந்த ஸ்டாப்லர் பின் ஓர் ஊழியரின் தொண்டையில் சிக்கிவிட்டது. மருத்துவ மனையில் “வீட்டு சாப்பாட்டில் தான் ஸ்டேப்லர் பின் இருந்தது என்று சொல்ல வேண்டும். கேண்டீன் சாப்பாடு என்று சொல்லக்கூடாது” என்று அந்த ஊழியர் மிரட்டப்பட்டாராம்.

நான்கு மணி நேரம் கூட  தூங்க முடியாது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், ஆவடி, வேலூர், கண்ணமங்கலம் என்று ஒவ் வொருவரும் ஒவ்வோர் ஊரிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். சராசரியாக ஒவ்வொரு தொழிலாளியும் மூன்று மணி நேரம் காலையும், மாலையும் கம்பெனி பேருந்தில் பயணம் செய்தால் தான் வேலைக்கு சென்று திரும்ப முடி யும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜென்ரல் ஷிப்ட். காலை 5 மணிக்கு புறப்பட்டால் தான் வேலைக்கு நேரத்தில் வர முடியும். “பல நாட்கள் எங்களிடம் கூறாமலேயே ஓவர் டைம் போட்டு விடுவார்கள். அப்படியானால் இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் பேருந்தை இரவு 8 மணிக்கு தான் எடுப்பார்கள். வீடு போய் சேர இரவு 11 மணி ஆகிவிடும். மீண்டும் காலை 5 மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும். இரவில் நான்கு மணி நேரம் கூட தூங்க முடியாது. வாரம் ஆறு நாட்களும் இப்படி வேலை. ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தால், எங்கே இருக்கிறாய்? வீடியோ காலில் வா? இன்று ஹெச்.ஆர்.மேனேஜர் மிரட்டுவார்” என்று ஒரு சேர கூறுகிறார்கள் பல தொழிலாளர்கள். “இப்படி பத்து வருடங்களாக எங்களுக்குள்ளேயே குமுறி புகைந்து கொண்டு இருந்த நாங்கள் ‘இனி பொறுப்பதில்லை’ என்று முடிவெடுத்து தான் சங்கம் சேர்வது என்று முடிவெ டுத்தோம்” என்று கூறுகிறார்கள் தொழி லாளர்கள்.

ஒரே சங்கம் இதுதான்...

“சங்கத்தில் சேர்வது என்று முடிவெடுத்தவுடன் நாங்கள் யோசித்த ஒரே சங்கம் சிஐடியு மட்டுமே. நிர்வா கத்திடம் விலை போகாமல், தொழி லாளர் உரிமைகளுக்காக போராடும் சங்கம் எது என்று எங்களுக்குள் நாங்கள் பேசும்போது, பெரிய அளவில் விவாதம் தேவைப்படவே இல்லை.  எல்லோருமே ஒரே குரலில் சிஐடியு சங்கம் மட்டும் தான் என்ற முடிவுக்கு எங்களால் மிக சுலபமாக வர முடிந்தது” என்று கூறுகிறார் ஒரு பொறுப்பாளர். இப்படி தொழிற்சாலையில் ஏற்பட்ட  அனுபவம்தான் சாம்சங் தொழி லாளர்களை ஒன்றிணைத்து சங்கமாக சேர வைத்தது. இதை ஏற்க மறுக்கும் நிர்வாகத்தினர், அவர்களாக “ஒர்க்ஸ் கமிட்டி” என்ற பெயரில் நிர்வாகத்திற்கு வேண்டியவர்கள் சிலரை நியமித்து, அவர்களுடன் தான் பேசுவோம்; தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதியாகிய சிஐடியு வுடன் இணைந்த  சாம்சங் தொழிலாளர் சங்கத்துடன் பேச மாட்டோம் என்கிறது. தொழி லாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தின் அடிப்படை கோரிக்கை” சங்கம் அமைப்பதும், கூட்டுப்பேர உரிமையும்” தான்.

நியாயமான ஊதியம் இல்லை

நிர்வாகம் “நாங்கள் தரும் ஊதியமே அதிகம்; இது மற்ற தொழிற் சாலைகளில் உள்ள சராசரி ஊதியத்தை விட 1.8 மடங்கு உள்ளது” என்று கூறுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் 10 வருடம் பணி முடித்தவர்களுக்கு மாத சம்பளம் சுமார் 20 லிருந்து 25 ஆயிரம் ரூபாய். ஓவர் டைம் சுமார் 2000 ரூபாய். “இதை வைத்துக் கொண்டு எப்படி நாங்கள் குடும்பம் நடத்துவது? அதுவும் கூட சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்காமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஊதியம், இன்கிரிமெண்ட் என்று வழங்குகிறது நிர்வாகம். தொழிலாளர்களிடையே பாரபட்சம் காட்டி பிரிக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறுகிறார்கள் அந்த தொழிலாளர்கள். அனைவருக்கும் நியாயமான ஊதிய உயர்வு வேண்டும் என்பது அவர்களின் அடுத்த கோரிக்கை. ”சம வேலைக்கு சம ஊதியம், பாரபட்ச போக்கிலிருந்து விடுதலை” என்பது ஐஎல்ஓ வின் அடிப்படை தீர்மானங்கள். இதனை அப்பட்டமாக மீறுகிறது சாம்சங் நிர்வாகம்.  

மாநில அரசின் பொறுப்பு

இந்த போராட்டத்தை முன் நின்று தீர்த்து வைக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. ஆனால் மாநில அரசின் தொழிலாளர் துறை இதில் பாராமுகமாக உள்ளது. தொழிலாளர் நல ஆணையர் சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் நிர்வாகம் வர மறுக்கிறது. அவர்களை வரவழைக்க அனைத்து அதிகாரங்களையும் கொண்ட தொழிலாளர் துறை இந்தப் போராட்டத்தை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. 45 நாட்களுக்குள் சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் 90 நாட்களை கடந்த பின்னும் பதிவு செய்து தர தயாராக இல்லை பதிவுத் துறை. தற்போது மத்திய தொழிலாளர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சரை சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி உள்ளார். தொழிலாளர்களின் மிகவும் நியாயமான கோரிக்கைகளான ”சங்கம் அமைக்கும் உரிமை, அனைத்து தொழிலாளர்களுக்கும் பாரபட்சமற்ற நியாயமான சமமான ஊதியம்”  போன்றவற்றை சாம்சங் நிர்வாகம் நிறைவேற்றித் தர முன் வர வேண்டும். மாநில அரசு தலையிட்டு நிர்வாகத்தை நியாயமான இக்கோரிக்கைகளை ஏற்க வைக்க வேண்டும்.