மொழிச் சிக்கலைத் தீர்க்க வழி அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிப்பதே!
இந்திய நாட்டின் ஒற்றுமை குறித்து நாம் பேசும்போது இங்கு பல்வேறு மொழி களை பேசும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வாறு பல மொழிகள் பேசும் மக்கள் வேற்று நாடுகளில் ‘தேசிய இனத்தவர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பாவில் ஒரு தெளிவான தனியானதொரு மொழியைப் பேசிக்கொண்டு, தொடர்ந்தாற்போன்ற ஒரு பிரதேசத்தில் வசிக்கிறார்கள் என்றால் அந்த மக்களின் ஆட்சி, ஒரு தேசிய இன ஆட்சி என்று அழைக்கப்படுகின்றது. இதேபோன்று நம் தேசத்தில் வாழும் பல்வேறு மொழி பேசுகின்ற மக்களும், மேற்கூறிய மக்களைப் போன்றவர்களே. எனவே இந்திய நாட்டின் ஒற்றுமையை உருவாக்கு வது, இங்கு வாழும் சகல பகுதி மக்களின் உணர்வுப் பூர்வமான ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும். எந்தப்பகுதி மக்களையும் நிர்ப்பந்தப்படுத்துவதின் மூலமாக இந்த ஒற்றுமை உருவாகாது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக நாம் முயற்சி செய்யும்போது நம் தேசம் வளர்ச்சி பெற்ற பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக்கொண்ட தேசம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மொழி பேசும் மக்களையும் நான் மதிக்கிறேன். இந்தியை நான் மதிக்கிறேன். இந்தி பேசும் மக்களையும் மதிக்கிறேன். அதேபோல மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளையும் நான் மதிக்கிறேன். மொழிகள் என்பவை மக்களால் உருவாக்கப்பட்டவை தானே? ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், வாழும் மக்கள் தங்க ளுடைய சமுதாய வாழ்வின் வளர்ச்சிப் போக்கில் ஒரு மொழியை உருவாக்குகிறார்கள். ஆங்கிலேய மக்கள் ஆங்கில மொழியை உருவாக்குகிறார்கள். ஆங்கில மொழியியல் வல்லுநர் சிலரால் உருவாக்கப்பட்ட தல்ல ஆங்கில மொழி. அதேபோன்று இந்த உலகி லுள்ள ஒவ்வொரு மொழிவழி பிரிவு மக்களும் தத்தமது மொழிகளை உருவாக்குகிறார்கள். இப்படிப்பட்ட மொழிகளின் வளர்ச்சிகளைப்பற்றிப் பேசும்பொழுது அந்த மொழிகளைப் பேசும் மக்களுக்கு தம் மொழி களை வளர்த்துக்கொள்ள எத்தகைய சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றன என்பது முக்கியமான விஷயம். தேவையான சந்தர்ப்பங்களை அளித்தால் தானே ஒரு மொழி வளரும்? அந்த சந்தர்ப்பங்கள் அளிக்கப்படாத காரணத்தால் ஒரு மொழி வளர்ச்சி அடையாதிருக்குமேயானால் அதற்குக் காரணம் அந்த மொழி அல்ல; அதைப் பேசும் மக்களும் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அன்று நம்மை ஆட்சி செய்து வந்த ஏகாதிபத்திய வாதிகள் நம் நாட்டு மக்கள் பேசிய பல்வேறு மொழி களின் வளர்ச்சிக்கு எத்தகைய சந்தர்ப்பமும் அளிக்க வில்லை. அக்காலக் கட்டத்தில் நம் நாட்டு மொழிகள் எல்லாவற்றிற்கு மேல், அது தமிழாக இருந்தாலும் சரி, இந்தியாக இருந்தாலும் சரி, இந்துஸ்தானியாக இருந்தாலும் சரி அல்லது மராட்டிய மொழியாக இருந்தாலும் சரி, அவற்றின் மேல் பல்வேறு தடை களை விதித்தார்கள். அந்தத் தடைகள் என்ன? இந்த நாட்டு நிர்வாகத்தில், நிர்வாகமொழி என்ற முறை யிலும், போதனா மொழி என்ற முறையிலும், நீதி மன்றத்தின் மொழி என்ற முறையிலும் நம் நாட்டி லுள்ள மொழிகளுக்கு எந்த வித இடமுமே அளிக்கப்படவில்லை. நம் நாட்டு மொழிகளின் வளர்ச்சிக்கு அன்று இருந்த தடைகள் இவை. 1920-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சி யை எதிர்த்த நம் விடுதலைப் போராட்டம் கோடிக்கணக்கான மக்கள் பங்குகொண்ட பெரும் மக்கள் இயக்கமாக மாறிய காலத்தில், நம் தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மக்களிடையே பேசும் பொழுது தமிழ், இந்தி போன்ற பல்வேறு பிரதேச மொழிகளில் பேச ஆரம்பித்தார்கள். தத்தமது தாய்மொழியிலேயே மக்களிடத்தில் அரசியல் விஷயங்களை எடுத்துக்கூற ஆரம்பித்தபொழுது தான் பெருவாரியான மக்களை எழுச்சியுறச் செய்ய முடிந்தது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. திரு. இராஜ கோபாலாச்சாரி ஒரு பெரிய தமிழ்ப்பேச்சாளர். ஆனால் அவர் 1920-ஆம் ஆண்டுகளில் தமிழில் பேச முடியாமல் தத்தளித்தார் என்பது எனக்குத் தெரியும். திரு. சீனிவாச அய்யங்கார்கூட அக்காலத்தில் தமிழில் பேச முடியாதபடி திணறினார். நான்கூட அந்தக் காலத்தில் தமிழில் பேச முடியாத நிலைதான். 1932இல் தான் முதல் தடவையாக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேச ஆரம்பித்தேன். 1938-ஆம் ஆண்டில் நான் ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசிய பொழுது என் சகாக்களில் ஒருவரான தோழர் ஜீவானந்தம் நான் தமிழில் பேசி முடித்த பிறகு அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்பொழுது என்ன கூறினார் தெரியுமா? ‘ராம மூர்த்தி பேசியதை நான் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுகிறேன்’ என்றார். 1938-ஆம் ஆண்டில் என்னுடைய தமிழின் நிலை அது. நான் என்ன, இந்த இடத்தில் குறிப்பிட விரும்பு கிறேன் என்றால் ஒரு மொழியை மக்கள், பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்தால் தான் அந்த மொழி எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெறும் என்பதே.
எப்பொழுது வளரும்?
நவீன ஐரோப்பிய மொழிகள் என்று கூறப்படுபவை எல்லாம் எப்பொழுது வளர்ச்சி பெற்றன? அந்த நாடுகளில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருந்த காலங்களில் அல்ல. அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு ஒழித்துக்கட்டப்பெற்று ஒரு புதிய தொழில் வளர்ச்சிபெற்ற சமுதாயமாக உருவான பிறகுதான், அத்துடன் வியாபாரம் பெருகிய பிறகுதான், அந்த மொழிகள் வளர்ச்சியுற்றன. அதாவது நிர்வாகத் துறையிலும், நீதிமன்றத் துறையிலும், இலக்கியத் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், கல்வி போதிக்கும் மொழியாகவும் பயன்படுத்தப்பட்ட பிறகுதான் அந்த மொழிகள் இன்றிருக்கும் நிலையையே அடைந்தன. அதுபோன்ற சந்தர்ப்பங்களை நம் நாட்டு நிறுவனங்களுக்கும் அளித்தால் நம்மொழிகள் பெரும் வளர்ச்சியுற்றிருக்கும்.
அரசியல் சட்டத்திலுள்ள தவறுகள்
அரசியல் சட்ட நூல் என் கையில் இருக்கிறது. மொழிகளைப் பற்றிய பகுதிகளை நான் குறிப்பிடு கிறேன். அரசியல் சட்ட ஷரத்துக்கள் 343-லிருந்து 350 பி வரையில் உள்ளவை மொழி சம்பந்தப்பட்டவை. இவற்றில் என்ன கூறப்படுகின்றது? 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழி அரசாங்க மொழியாக ஆகும் என்றிருக்கிறது. ஆனால் ஏனைய மொழிகளைப்பற்றி என்ன கூறப்படு கின்றது? இந்தி மொழியுடன் சம அந்தஸ்து உடையவை தாம் ஏனைய எல்லா இந்திய மொழிகளும் என்று கூறப்படுகின்றதா? நிச்சயமாக இல்லை. 346, 347 ஷரத்துக்களில் கூறப்பட்டுள்ளதற்கு உட்பட்டு, ஒரு ராஜ்ய (மாநில) சட்டசபை தங்கள் ராஜ்யத்திலுள்ள (மாநிலத்தில் உள்ள) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளையோ அல்லது இந்தியையோ, அந்த ராஜ்ய நிர்வாக காரியங்களுக் கான மொழி அல்லது மொழிகளாக பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான சட்டம் இயற்றிக் கொள்ளலாம். அரசியல் சட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருப்பது ஒரு ராஜ்யம் (மாநிலம்) சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஒரு ராஜ்யம் (மாநிலம்) தன்னுடைய மொழி இந்தி மொழியாக இல்லாதிருந்தபோதிலும் இந்த இந்தி மொழியை தன்னுடைய ராஜ்ய அர சாங்க நிர்வாகத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் இவ்வாறு குறிப்பிட முன்வந்ததின் அவசியம் என்ன வென்று கேட்கிறேன். அதுமட்டுமல்ல; அரசியல் சட்டத்தில் இந்தப் பிரிவிலுள்ள கடைசி ஷரத்தில் ‘இந்தி மொழியை வளர்ப்பதென்பது ஒன்றிய அர சாங்கத்தின் பிரத்யேகமான பொறுப்பு’ என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசாங்கம் என்பது இந்தி பேசும் மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும், குஜராத்தி பேசும் மக்களுக்கும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் பொதுவானது. இங்கு பேசப்படும் எல்லா மொழி களையும் வளர்ப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்று ஏன் குறிப்பிடப்படவில்லை? அப்பொழுதுதானே நாட்டிலுள்ள எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டி ருக்கிறது என்பதை மக்கள் அறிய முடியும்? துரதிரு ஷ்டவசமாக இன்றைய அரசியல் சட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிலுள்ள எல்லா மொழிகளும் வளர்ச்சி பெற வேண்டுமானால் ஆரம்பத்தில் இருந்தே மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பன்மொழி ராஜ்ய அமைப்பில் எவ்வாறு ஒரு மக்களது மொழி மட்டும் அரசாங்க மொழி ஆகமுடியும்?
செயற்கையான மொழி
சமஸ்கிருதம் என்பது நல்ல மொழிதான். எனக்கு சமஸ்கிருத மொழி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. சமஸ்கிருதம் என்பது ஓர் இயற்கையான மொழி அல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி (குறுக்கீடுகள்) எவ்வளவு செயற்கையாக உருவாக்கப் பட்டது என்பது எனக்குத் தெரியும். அதன் இலக்கணம் படுபயங்கரமாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லையும் எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கியிருக்கிறார்கள்? ‘தந்ரத்ய விசித்ர தர்ஷா தக் மனஸ்மாக்ர பிரத்யக்ர பிரயும்தஸ் டிகாடிலாசா லம்பஜிக்புஞ் கர்ததக் லிதக் நககல் சுமுகாத்’ என்று சம்பூரண ராமாயணத்தில் வரும் இந்த வார்த்தை களை கற்றுக்கொள்வதற்கு என் தாத்தாவிடமிருந்து நான் வாங்கிய அடிகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றது. பெரும் அறிவுச் செல்வம் சமஸ்கிருத மொழியில் இருந்த போதிலுங்கூட இந்த நாடு ஏன் முன்னேற முடியவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பூமி உருண்டையானது என்பதை கலிலியோவுக்கு முன்பே இந்த நாட்டில் இருந்த பாஸ்கரா என்ற ஒருவர் கண்டுபிடித்தார். கணித முறையில் பூஜ்யம் என்ற ஒரு அம்சத்தை கண்டு பிடித்தவர்கள் இந்திய கணித விஞ்ஞானிகள். இத்தனை சாதனைகள் இருந்தும் நம் நாடு ஏன் முன்னேறவில்லை? முக்கியமான காரணங்களில் ஒன்று என்னவென்றால் அறிவுப் பொக்கிஷங்களை பெற்றிருந்த மொழி, விரல்விட்டு ஒரு சிலரே கற்றுக்கொள்ளக் கூடிய சமஸ்கிருத மொழியாகும். அவர்களுடைய ஏகபோக சொத்தாகத்தான் இருந்தது. பத்தாண்டுகள் அந்த மொழியை கற்க செலவழிக்க வேண்டும். அதன்பிறகுதான் அதிலுள்ள விஷயங் களைக் கற்க முடியும். இந்த தேசத்தின் சாதாரணக் குடிமக்கள் இந்த மொழியை படிப்பதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
மொழிகளுக்கு சம அந்தஸ்து அவசியம்!
நம் வருங்காலத்தின் வளர்ச்சி குறித்துப் பேசும்போது, நாம் சென்ற காலத்தில் செய்த இதே தவறை மீண்டும் செய்யாமலிருக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள பிரச்சனைக்குப் பரிகாரம்தான் என்ன? இந்தி பேசும் என்னுடைய நண்பர்கள் ஒரு விஷ யத்தை உணர்வது மிக மிக அவசியம். நம் நாட்டிலுள்ள எல்லா மொழிகளின் சமத்துவத்தை அவர்கள் அங்கீ கரித்தாக வேண்டும். பிரச்சனைகளை உணர்ச்சி வயப்பட்டு அணுகாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்படும் வகையில் இந்த நிலைமை இருக்க வேண்டும். அது வரை ஆங்கிலம் நீடிப்பது அவசியம். இது தற்காலிகப் பரிகாரம்தான். இந்தி பேசும் நண்பர்களுக்கு இந்தப் பிரச்சனையில் ஒரு பிரத்யேகமான பொறுப்பு ஒன்று இருக்கின்றது. இந்தி மொழி பேசும் அவர்கள் இந்த நாட்டின் மக்களின் கணிசமானதொரு பகுதி யாவர். நாளை ஒருக்கால் இயற்கையான வளர்ச்சிப் போக்கில், அமைதியான சூழ்நிலையில், நடைமுறை அத்தியாவசியத்தை முன்னிட்டு மத்திய நிர்வாகத் திற்குத் தேவையான ஒரு மொழியைப்பற்றிய சுமுக மான ஒரு முடிவுக்கு வரமுடியும். ஆகவே இன்று அதற்குத் தேவையான ஒரு சூழ்நிலையை உருவாக்கு வது அவசியம். அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, உணர்ச்சிகளை கிளறிவிட வேண்டாம் என வேண்டுகிறேன். இது இந்தி பேசும் பிரதேசத்தில் உள்ளவர்களின் பொறுப்பு.
ஆங்கிலம் நீடிக்க வேண்டும்
இந்தி பேசும் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களுடைய மொழியை எப்படியாவது ஓர் ஆட்சி மொழியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ப தற்காக இத்தனை விருப்பு வெறுப்புகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஏனைய மக்கள் கூறமுடியும். சென்ற 20 ஆண்டுகளில் இந்தப் பிரச்சனைகளில் பல குளறுபடிகள் செய்யப்பட்டி ருப்பதின் காரணமாக இந்த நிலைமை எழுந்துள் ளது. ஆகவே, நாம் இன்று ஒரு சமரசத்திற்கு வர வேண்டும். தற்காலிகமாக ஆங்கிலத்தையே தொடர்ந்து நீடிக்க எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதை ஒப்புக்கொண்டு ஒவ்வொரு ராஜ்யத்திலும் (மாநிலத்திலும்), அந்த ராஜ்ய மொழியை மிக உயர்ந்த மட்டத்திற்கு வளர்க்க சகல முயற்சிகளும் செய்யவேண்டும்.
பிரதேச மொழிகளை மத்திய நிர்வாகத்திற்கு பயன்படுத்துக!
நான் கூறியது ஒரு தற்காலிகத் தீர்வுக்கான ஆலோசனை தான். அடிப்படையான தீர்வு என்ன வென்றால் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிப்பதுதான். ஒன்றிய அரசாங்கத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழில் தொடர்புகொள்ளுவதற்கு தடங்கலாக இருப்பது எது என்று கேட்கிறேன்? மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டுமானால் ஒரு சில கோடி ரூபாய் செலவிட்டா லும் தவறில்லை. இந்நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க இது ஒரு பெரிய செலவாக ஆகிவிடாது.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிக்கும் விதமாக புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலாக்க நிர்ப்பந்திக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. தமிழ்நாட்டில் இது கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தித் திணிப்பு என்பது பல்லாண்டு காலமாக ஒரு பெரும் பிரச்சனையாக நீடித்து வருகிறது. இது உள்பட இந்தியாவின் மொழிச்சிக்கலை தீர்ப்பதற்கான அடிப்படையான வழி, இந்தி, தமிழ் உள்பட அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளுக்கும் ஒன்றிய அரசு சம அந்தஸ்து அளித்து சமமாகவும் கவுரவமாகவும் நடத்துவதே என்று 1967லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்க்கமாக வாதிட்டது. நாடாளுமன்றத்தில் 1967இல் நடைபெற்ற அலுவலக மொழிகள் (திருத்த) மசோதா மீதான விவாதத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதிகள் தரப்படுகின்றன.
இந்த உரை இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது.